குரல்வளம்

This entry is part [part not set] of 19 in the series 20011210_Issue

பசுபதி


திருவருள் தேடினேன் சிம்மக்
. . குரலென்னைச் சேர்ந்திடவே;
வருடங்கள் ஓடி மறைந்தன;
. . வல்லோசை வாய்க்கவில்லை.
மருந்தொன்(று) அறிந்தேன்; மறைக்கா(து)
. . உரைப்பேனம் மர்மமதை !
குரல்வளம் கோடை இடியாய்க்
. . குமுறும் குளிக்கையிலே ! (1)

மறுவற்ற சங்கீத மன்னன்
. . மதுரை மணிநினைவில்
சரமாரி போல்வரும் சர்வ
. . லகுவான சங்கதிகள்
சிரமமே யின்றிச் திரிகாலப்
. . போக்கில் சிறந்திடும்;என்
குரல்வளம் கோலக் குயிலெனக்
. . கொஞ்சும் குளிக்கையிலே ! (2)

சுருதிபோல் வெந்நீர் சுகமாய்த்
. . தலைமேல் சொரியுமொலி ;
தெறிக்கும் பிடிகளோ ஜீ.என்.பி
. . சார்போல் செவிக்குணவாய்
பிருகாக்கள் கூடிப் பிசிறின்றி
. . அங்கே பிறக்கும்;என்றன்
குரல்வளம் கேட்டால் குலாம்அலி
. . என்பீர் குளிக்கையிலே ! (3)

இன்னிசை மன்னவன் எம்.கே.டி
. . போல எழுச்சியுடன்
பண்ணிசை பொங்கிடப் பைந்தமிழ்ப்
. . பாடலைப் பாடிடுவேன் !
அன்றாடக் கச்சேரி என்றன்
. . அகமதில் ஆவதனால்
சென்னை இசைவிழா செல்லுமோர்
. . வெட்டிச் செலவிலையே ! (4)

Series Navigation

பசுபதி

பசுபதி