குரங்கிலிருந்து …

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

பத்ரிநாத்


நயினாவோட மெய்யான பேரு இந்த ஏரியாக்காரங்க ஆருக்கும் தெரியாது. அல்லாரும் நயினா நயினான்னே கூப்புட்டு பளகிட்டாங்க . ஆனால் அவரு கஞ்சத்தனம் இருக்குதே ரொம்ப ஃபேமசு.. எவ்வளவு ஃபேமசுன்னா . ‘ ‘அய்யே.. நயினா மாரியே இருக்கியே.. கொஞ்சம் போட்டுத்தான் கொடேன்.. ‘ ‘,ன்னு எரியாவை கூட்டி சுத்தமாக்குற பாக்கியத்தம்மா இருக்குதே .. அதான் ஒவ்வொரு வூட்லயும் போயி ஒத்த ரூவா வாங்குமே அதுகூட அவரு காதுபட சொல்லும்… அவ்வளது ஃபேமஸ்….

நயினாவா அதைப் பத்தி கவலப்படுவாரு.. ம் ?மே¢.. மாறா தான் அப்படி இருக்கறதாலதான் இந்த ஏரியாவுல இம்மாம் பெரிய வூட்டக் கட்ட முடிஞ்சுதுன்னு சொல்லுவாரு.. ‘ ‘எம் பசங்களுக்கு நெறய சொத்து சேத்து வச்சுருக்கன்ல ‘ ‘, ன்னும் சொல்லுவாரு… பசங்களுக்கு ஏதோ பெர்சா சேத்துட்டதா நெனப்புதான்.. ஆனா பசங்கள காயத்தான் போடுவாரு..அதுங்க என்னிக்காச்சும் நல்ல துணிமணிகள போட்டுருக்குதான்னா.. ம் ?மே¢.. கெடயவே கெடயாது.. நயினா வேற எந்த விசயத்துக்கும் கோவிக்க மாட்டாரு.. காசு விசயத்துல தவிர… வூரு கோடியில கொஞ்ச நிலம் வாங்கிப் போட்ருக்காரு. அப்பப்ப பருத்தி போட்டு அதுல கூட காசு பாப்பாரு.. கூடவே காய்கறித் தோட்டம் வேற இருக்கு.. எல்லா எடத்தலயும் பணமாத்தான் காய்க்குது. வெவசாயக்கூலிகள ஓட்ட கசக்கிப் புளுஞ்சி வேலை வாங்கிருவாரு…இவரு வயல்ல இல்லைன்னா தோட்டத்தில வேற செய்யிற கூலிக்காரங்கள கேட்டுப் பாருங்க.. வவுத்தெரிச்சல கதகதயா சொல்லுவாங்க.. வேல வாங்குற போது அய்சு வக்கிறது மாரிப் பேசறது .. கூலி வாங்கற போது பெரிய பண்ணையாரு கெட்டது கணக்கா நடந்துக்கறது..

ஒன்றை சதுரம் வீட்டை ஒம்பது சதுரமா கூறு போட்டுப் பிரிச்சு எத்தனை சின்ன சின்னதா ஆக்கி கொடக்கூலிக்கு விட்ருக்காரு.. மாசம் ஆனா சொள சொளயா வாடகை வசூல் பண்ணிருவாரு.. குடுத்தனம் இருக்கறவங்க என்ன செளகரியமாவா இருக்கறாங்க.. ம்க்கும்….தண்ணி விசயத்துல கர்நாடகா காரனே தேவலாம்னு தோணவச்சுருவாரு பொதுக் கொழா ஒண்ணு அத்தினி வூடுங்களுக்கு இருக்கு.. ஒரு நாஅது ரிப்பேரு ஆயிட்டுது..ஒருத்தன் காசு லேட்டாக் குடுத்ததனால. அவன் குடுக்கற வரைக்கும் ரிப்பேரு பண்ணாம வச்சுருந்தாரு.. எல்லாரும் சாவுங்கடான்னு.. தண்ணிய ஒரு பக்கிட்டு கூடுதலா புடிக்க வுடமாட்டாரு..புடிச்சா கத்துவாரு.. ‘ ‘நயினா.. இன்னிக்கி வீட்டுக்கு சொந்தக் காரங்க வந்துருக்காங்க..ஒரு தபா மட்டும் வுடுங்களேன்.. ‘ ‘, ன்னு கெஞ்சினாலும்..ம்ம்… தண்ணித் தொட்டியில காவாசி தண்ணிக்கு மேல ஏத்தவுட மாட்டாரு.. இங்க தோய்க்காத.. அங்க ஒணத்தாத..இங்கக் கொடிய கட்டாதன்னு ஆயிரம் கண்டிசனு… எந்தக் குடுத்தனக்காரனாது வாடகைய லேட்டு பண்ணானோ கண்டி, அவன் செத்தான்னு நெனச்சிக்க வேண்டியதுதான்..ஒரு தபா ரெண்டு தபா அவங்கிட்ட மெதுவா பேச்ச ஆரம்பிப்பாரு.. ரெண்டாவது நா மருவாதி கொறயும்.. அப்பவே புரிஞ்சிக்கணும்.. இல்லை மவனே..அவன் காலிதான்..அடுத்த நா அவரு வாயில அப்படி எப்படித்தான் வார்த்த வருமோ.. அப்பாடி..

சில மானஸ்தங்க அதுக்குக் கேவலப்பட்டே வூட்ட காலி பண்ணிருக்காங்க.. சில கேசுங்க தலைவிதிய நொந்துகிட்டு பேசாம இருக்குங்க..அவரு வூட்டுக் குடுத்தனக்காரன் ஒருத்தன் கட்ட கேசு.. அவன அடிச்சு வெறட்டாத கொறய அனுப்பிட்டாரு.. அதே மாரி ஏதாச்சும் நல்ல பார்ட்டிங்க வூட்டக் காலிபண்ணி வேற நல்ல எடம் பாத்துப் போனா..சும்மா வுட மாட்டாரு.. போய் அசிங்கமா கெஞ்சுவாரு.. அதையும் மீறி அடப் போய்யான்னு போறவங்கள கன்னாபின்னான்னு பேசிருவாரு.. அவங்க தலைமுறைகளையெல்லாம் இளுத்துகிட்டு திட்டுவாரு பாருங்க..அம்மாடியோவ்.. மண்ண வாரி வேற அவங்க மேல எறப்பாரு.. ‘ ‘ ‘எலேய்ி.. எவ்வளவு நா வாடகை லேட்டா கொடுத்தா ஒண்ணும் பேசாம வாங்கிருக்கேன்..தேவடியா வூடு மாரி எத்தினி நேரம் லேட்டா வந்தாலும் ராத்திரி கேட்டத் தொறந்து வூட்ருக்கோம்.. வூட்டுக்காரன்ங்கற மொறயில ஏதாச்சும் சொன்னனா..இப்ப திடார்னு வூட்டக் காலி பண்றியே.. ‘ ‘, ஒரு மொற பெரிய சண்டை வந்து கைகலப்பா ஆயிருச்சு.. அப்படிச் சண்டை போட்ட அந்த எதிராளியே நயினா பண்ணறதப் பாக்க பொறுக்காம சண்டைய நிறுத்திட்டு அவரு திட்டுனத எல்லாத்தையும் வாங்கிக்கட்டிக்கிட்டுப் போனா.. ‘ ‘அட..இந்த ஆளுகிட்ட சண்டை போட்டா நமக்குத் தான் கேவலம் ‘ ‘,ன்னு சொன்னான்.. அவனுக்குக் குடுக்க வேண்டிய வாடகை முன்பணத்தக்கூட ஒளுங்கா தர்றாம இளுத்தடிச்சாரு..

ஒரு மொற எவனோ ஒருத்தன் நயினாவ பஸ் ஸ்டான்டில நல்ல அடிச்சுப் போட்டுட்டான்.. யாருன்னு தெரியல.. ஆமா நயினா பணத்த மட்டுமா சம்பாரிச்சாரு.. எத்தனையோ விரோதிங்களையும் சேத்துல்ல சம்பாரிச்சுருக்காரு..அதுல எவனோ.. யாரு கண்டா.. ? அப்படி அடிபட்டு ஆஸ்பத்திரியல ஒரு மாசம் கெடந்தாரு.. பணஞ்செலவாகுமேன்னு தர்மாஸ்பத்திரியில போயி படுத்துட்டாரு.. அப்படியும் பாதியில வந்துட்டாரு.. கையில ஒரு செரங்கு ஆறாம ரெண்டு மூணு மாசம் இருந்துச்சு.. அவரு கிட்டப் போனாலே ஒரே நாத்தம் அடிக்கும் ..பலரு சொல்லிப்பாத்தாங்க.. ‘ ‘நயினா..புண்ணு பொறயோடிப் போயிருப்வோவுது..ஒடனே நல்ல டாக்டராப் பாருங்க.. ‘ ‘,ன்னு சொன்னாங்க.. நயினாவா கேப்பாரு.. ‘ ‘அட.. நாட்டு வைத்தியம் பண்றன்ல்ல.. ‘ ‘,ன்னு தட்டிக் களிச்சுட்டாரு.. ஆனா நயினாவுக்கு ஆண்டவன் அருளு நெறய உண்டு போலருக்கு.. ஆறு மாசத்துல அந்தப் புண்ணு ஆறிப்போயிருச்சு.. ஒரு வேள நயினாவுக்குப் பயந்தே ஆறிப்போயிருச்சுப் போல..ரொம்ப அதிசயம்தான்..

நயினாவுக்கு ரொம்பப் படிச்சவங்கள கண்டாலே எளக்காரம்தான்..ஏதாச்சும் கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்பாரு.. எட்டாங்கிளாசுக்கு மேல எவன்டா படிப்பான்னு சொல்லுவாரு..அது என்னாது எட்டாங்கிளாசுன்னா.. நயினா படிச்சது அவ்வளதான்..அதான் அப்படி..

நாடாரு கடை பக்கத்தில சாயங்காலம் ஒரு கையேந்தி பவன் கடைய போடுவாங்க அங்க அவரப் பாக்கலாம்.. பீடிய புடிச்சுக்கிட்டு அரட்டை அடிச்சிட்டு கெடப்பாரு.. ‘ ‘என்னய்யா பெர்ய படிப்பு.. புடலங்கா..படிச்சி கிளிச்சுட்டா எல்லாந் தெரியுமாக்கும்.. ‘ ‘, ன்னு சொல்லுவாரு.. ‘ ‘அப்ப ஏன் .. ஒம்ம புள்ளைங்கள படிக்க வைக்கிறீரு.. ‘ ‘,ன்னு ஒருத்தன் கேட்டாரு.. ‘ ‘நா சொல்லிட்டேனே.. எலேய்.. படிப்பு கிடிப்புன்னு காச கேட்ட வெறட்டி விட்ருவேன்னு.. சும்மா சொல்லிக்குடுத்தா படி.. இல்லை..என்னய மாரி இருந்துக்கோ.. ‘ ‘,ன்னு சொல்லுவாரு.. ஆனா நயினா பொண்டாட்டி ரொம்ப வெவரமானவங்க.. நயினாவுக்குத் தெரியாம பசங்க படிக்க காசு கொடுக்கும்.. இதுவரைக்கும் நயினாவுக்குத் தெரியாம அந்தம்மா இதுமாரி நெறய பண்ணிக்கிட்டு இருக்காங்க..ஒரு நா இல்லை ஒரு நா தெரியப் போவுது.. அப்ப என்ன நடக்கப் போவுதோ….

ஒரு நா நயினா அப்படித்தான் ராத்திரி நேரம் போறது தெரியாம கடத் தெருவுல பேசிக்கிட்டே இருந்தாரு.. அப்ப ஒருத்தன் நயினா கிட்ட வந்தான்.. அட.. அவன எங்கையோ பாத்த மாரி இருந்துச்சி நயினாவுக்கு.. ‘ ‘நயினா.. என்னத் தெரியுதா.. நான்தான் தொரை.. ‘ ‘,ன்னான். ‘ ‘அட.. தொரை பயலா.. வாடா.. வா..வா.. ‘ ‘, தொரை பத்து வருசத்துக்கு முன்னேயே அவருக்குத் தோஸ்து..வடக்க எங்கையோ போனான்.. இப்பத்தான் மறுபடியும் பாக்கறாரு.. ‘ ‘என்னடா.. இவ்வளவு நாளு எங்க போயிருந்தே.. எங்கடா இருக்கே.. ‘ ‘,ன்னு கேட்டாரு நயினா..

நயினாவ தனியா தள்ளிக்கிட்டு வந்தான் தொரை.. ‘ ‘நயினா..ஒங்கக்கிட்ட சொல்றதுக்கு என்ன..வடக்க இமயமலை சாமியாருகிட்ட கொஞ்ச நாளு இருந்தேன்.. அவரு பித்தளைய தங்க மாக்கற திராவகம் எங்கிட்ட கொடுத்தாரு..அத வச்சு எங்க கிட்ட இருந்த பித்தளைய எல்லாத்தையும் தங்கமாக்கிட்டேன்..இந்தப் பொட்டியில வச்சுருக்கேன்..அந்தத் திராவகம் கொஞ்சூண்டும் இந்தப் பொட்டியில ஒரு பாட்டில்ல வச்சுருக்கேன்..அமாவாசை அன்னிக்குத்தான் திராவகம் வேல செய்யும்.. மேக்கொண்டு திராவகம் தயார் பண்ணிக்கிட்டு இருக்கோம்.. அதையும் கொண்டாந்துடப் போறேன்.. அதுக்கு இன்னிக்கே வூருக்குப் போறேன்.. அதுவரை இந்தப் பொட்டி ஒங்க வூட்டுல இருக்கட்டும்..அடுத்த அமாவசை வந்து வாங்கிட்டுப் போறேன்.. ‘ ‘,ன்னான்..

நயினாவுக்கு ஒடம்பெல்லாம் மின்சாரம் பாஞ்ச மாரி இருந்துச்சி.. ‘ ‘அதுக்கென்ன தொர.. நம்மவூட்டுல இருக்கட்டும்.. பத்திரமா பாத்துக்கிடறேன்.. நீ கவலப்படாம போய்ட்டு வா..அப்படியே.. இந்தக் கிளவனுக்கும் கொஞ்சம் அந்தத் திராவகத்தக் கொடு.. ‘ ‘,ன்னார்..

‘ ‘அட என்ன நயினா.. தராம போயிருவேனா..நிச்சியம் அடுத்த அமாவசை அன்னிக்கி ஒங்கிட்ட இருக்கற பித்தனைய தங்கமாக்கிட்டுப் போறேன்.. ‘ ‘,ன்னான்.. தொரய வூட்டுக் அளச்சிட்டு வந்து சோறு போட்டு அனுப்புனாரு நயினா.. அவரு சம்சாரத்துக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு.. மொத மொறயா வெளியாளு ஒருத்தனுக்கு இத்தன ஆசையா சோறு போட்டு அனுப்புறாருன்னு அதிசயமா பாத்துச்சி..

அடுத்த அமாவாசைக்காவ நயினா ரொம்ப ஆசையா காத்துக்கிட்டு இருந்தாரு.. அமாவாசை வர்றதுக்கு முன்னாடி, போலீசுதான் வந்துச்சு.. நாலஞ்சு போலீசு காரங்க நயினாவ ஸ்டேசனுக்கு இளுத்துக்கிட்டுப் போனாங்க..அரண்டு போயிட்டாரு நயினா.. ‘ ‘ அய்யா.. எனக்கு ஒண்ணையும் தெரியாதுய்யா.. வுட்ருங்கய்யா.. ‘ ‘,ன்னு கெஞ்சுறாரு.. ‘ ‘ஏண்டா.. ஒண்ணும் தெரியாதுன்னு பொய்யா சொல்ற.. அந்தத் தொரை வடக்க போய் திருடி தருவான்.. அத நீய்யிதான் வித்துக் கொடுக்கிறியா..எத்தன நாள நடக்குதுன்னு,, ‘ ‘, ஒரு ஏட்டு முதுகுல வச்சாரு.. துடிச்சுப் போயிட்டாரு நயினா.. ‘ ‘அய்யோ.. திருட்டு நகையா.. ஏதோ திராவகம் வூத்தி தங்கமா மாத்தனதுன்னு சொன்னான்.. நா அவனப் பாத்தே பல வருசம் ஆச்சுங்க..எனக்கும் அவனுக்கு எந்த சம்பந்தமும் இல்லிங்க.. எசமான் பெரிய மனசு பண்ணுங்க..வூட்ருங்க..புள்ளக் குட்டிக்காரன். ‘ ‘, சின்ன புள்ள கணக்கா அளுவுறாரு..

‘ ‘வயசாச்சு..கூசாம பொய் புளுகுறியே..சம்பந்தமில்லாமலா ஒரு திருடன வூட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்து தங்க வச்சு சாப்பாடு போட்டு அனுப்பினியாம்… கேட்டா திராவகம் அது இதுன்னு புதுசா கரடிய வுடுற.. ‘ ‘,ன்னு இன்ஸ்பெக்டரு அய்யா நாக்க துருத்தி காட்டினாரு.. பக்கத்தில இருந்த ஏட்டுங்க எல்லாரும் கொல்லுன்னு சிரிச்சாங்க..ரொம்ப அவமானம் தாங்க முடியாம போயிருச்சு, நயினாவுக்கு..ரெண்டு நாளு ஸ்டேசன்ல ஜட்டியோட லாக்கப்புல கெடந்தாரு.. வக்கீலு வச்சு..கச்சிக்காரங்கள கொண்டாந்து பஞ்சாயத்துப் பேசவச்சி, கோர்ட்டுல வேற மாரி கேச ஜோடிச்சு..ரொம்ப செலவுதான் போங்க.. ஒரு வளியா வெளியில வந்தாரு..

மொத்தச் செலவு இருபதாயிரம் ஆயிருச்சு..வூட்ல ஒரு மூலைக்கிப் போயி வாய்ல துணிய சொருகிக்கிட்டு கோன்னு பொம்பளப்புள்ள மாரி அளுதாரு.. அன்னிக்கி முச்சுடூம் எந்திரிக்கவேயில்லை.. கண்ணு கிண்ணு செவந்து போச்சு.. மூஞ்செல்லாம் வீங்கிப் போயி நாளு நா கெடந்தாரு..ஏதோ பணமெல்லாம் போயி பிச்சைக்காரன் போல ஆயிட்டதா நெனப்பு வாட்டியெடுத்துக்கிட்டு இருந்துச்சி…. ஏதாச்சும் ஆறு கிணறுன்னு தேடிப் போயிருவேன்னு சொல்லிக்கிட்டு இருந்ததப் பாத்து, சம்சாரம்கூட ரொம்ப பயந்து போச்சு..

‘ ‘இப்பல்லாம் நயினா ஒத்த ரூவாய முளுசா ஒண்ணும் சொல்லாம எடுத்துக் குடுத்துடறாரு.. ‘ ‘,ன்னு வெத்தல சீவ போட்ட காவிபல்லோட காசக் காட்டிச் சிரிக்குது அந்தப் பாக்கியத்தம்மா..

prabhabadri@yahoo.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்