குடும்பதின வாழ்த்துக்கள்

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

புகாரி


இந்த ஆண்டு 2008ல் முதன் முதலாக கனடாவின் ஒண்டோரியோ மாநில அரசு ஒரு புதிய விடுமுறையை அறிவித்திருக்கிறது.

பிப்ரவரி மாதத்தின் ஒவ்வொரு மூன்றாவது திங்கள் கிழமையும் குடும்பதினம்.

பிப்ரவரி மாதத்தில் வரும் வாலண்டைன்ஸ் / அன்பர்கள் / காதலர் தினத்திற்கு கனடாவில் எப்போதுமே விடுமுறை கிடையாது. அட இது எவ்வளவு சந்தோசம் எனக்கு. ஏனோ எனக்கு இந்தக் வாலண்டைன்ஸ் தினம் பிடிப்பதில்லை.

வாலண்டைன்ஸ் தினத்திற்கு ஏகப்பட்ட கதைகள், ஏகப்பட்ட எதிர்ப்புகள். அது முதலில் காதலர் தினமா, அன்பர்கள் தினமா என்று எக்கச்சக்க சர்ச்சைகள்.

காதலர் தினமென்றே பலரும் முடிவுகட்டி, வணிகர்கள் கழுத்துப் பட்டிகளை (அதாங்க கழுத்தில் கட்டும் கோவணம் – ஆங்கிலத்தில் டை என்பார்களே) ஆட்டோ ஆட்டென்று ஆட்டி வெட்டிப்பொருட்களின் விற்பனைகள், தகாதவர்களின் கூத்தடிப்புகள், கும்மாளங்கள், கெட்ட உறவுகளின் அரங்கேற்றங்கள், நாள்குறித்தச் சோரங்கள்… அட போதுங்க மீதம் உங்கள் கற்பனைக்கும் அடுத்தநாள் வரும் அவசரச் செய்திகளுக்குமாய் விட்டுவிடுகிறேன்.

இருபத்தியோராம் நூற்றாண்டில் நிச்சயம் குடும்பதினம் அறிவிக்கப்படத்தான் வேண்டும்.

ஆளுக்கொரு திசையில் படிப்பு, வேலை, புலம்பெயர்வு என்று ஒவ்வொரு குடும்பமும் சிதறிக்கிடக்கிறது. அதுதானே இந்த நூற்றாண்டின் வாழ்க்கை முறை. அவர்களெல்லாம் ஓர் நாள் ஒன்றுகூடி மகிழவேண்டும் என்பதே விடுமுறையின் வெளி நோக்கம். அட எவ்வளவு நல்ல நோக்கம்.

சரி உள்நோக்கம் என்னவென்று கேட்கிறீர்களா? கொடுங்குளிர் காலத்திலும் ஒரு நீள்வாரயிறுதி தந்து தொலைங்கப்பா என்ற பணியாளர்களின் நீண்டநாள் முறையீடு.

ஒண்டாரியோ முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார், நம்மூர் அரசியல்வாதிகளைப் போல் ஆட்சிக்கு வந்ததும் அல்வா கொடுத்துவிடாமல், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றினார்.

கனடாவில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களும் வாரயிறுதி விடுமுறை நாட்கள். அதுமட்டுமல்லாமல் சில மாதங்களைத் தவிர எல்லா மாதங்களிலும் தொடர்ந்து ஒரு நீள்வாரயிறுதியும் வரும்.

நீள்வாரயிறுதி என்றால் தொடர்ந்து சனி-ஞாயிறு-திங்கள் ஆகிய மூன்று தினங்களும் விடுமுறை.

இந்த மூன்று தினங்களை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு கனடியர்கள் கேம்பிங்-கூடாரம், காட்டேஜ்-உல்லாசக்குடில், நண்பர்கள் சந்திப்பு, உறவினர்கள் சந்திப்பு, அமெரிக்கப் பயணம், மெக்சிகோ சுற்றுலா, கரீபியன் தீவுகள் என்று கிளம்பிவிடுவார்கள்.

இந்தப் புதிய குடும்பதின விடுமுறை அறிவிப்பால் இதுவரை நீள்வாரயிறுதி இல்லாதிருந்த பிப்ரவரி மாதமும் அந்த யோகத்தைப் பெற்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கொள்கிறது.

கனடாவின் குளிர் கொடுமையாக இருக்கும் என்பது பலரும் அறிந்த விசயம்தான். அதிலும் பிப்ரவரிதான் குளிரின் உச்சம். சும்மா சொல்லக்கூடாது, வெண்பனிப் புயல்கள் படுமோசமாய் வீசும், குளிர்காற்று நாம் குப்புறக்கிடந்தாலும் எழுப்பியெழுப்பி குதறியெடுக்கும்.

அப்படியான பிப்ரவரி மாதத்தில் ஒரு நீள்வாரயிறுதி கிடைத்திருப்பது என்பது கனடியர்களுக்கு எப்படியிருக்கும்?

பெரும்பாலானவர்கள் கரீபியன் தீவுகள் போல் நம்மூர் சீதோஷ்ணநிலை உள்ள இடங்களுக்குச் சென்று பெர்முடாக்கள் அணிந்து சட்டையில்லாமல் இருதினங்களாவது அலைவார்கள்.

மீதமுள்ளவர்கள் இறுக போத்திக்கொண்டு தொடர் உறக்கம் போட்டு, பாதி எழுந்த நிலையில் பீட்சா வரவழைத்து ஒரு போடுபோட்டு, கூடவே தொட்டுக்கொள்ள பியர் போத்தல்களில் தலையைக் கவிழ்த்து எடை ஏற்றிக்கொள்வார்கள்.

எப்படியோ எனக்கு இந்தக் குடும்பதின அறிவிப்பு மிகவும் பிடித்திருக்கிறது. குடும்பங்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதை எந்த ரூபத்தில் வந்தாலும் அது தேவதை தந்த வரம்தான்!

எல்லோருக்கும் என் இனிய குடும்பதின வாழ்த்துக்கள். அட என் இனிய மட்டும் இல்லீங்க, உங்கள் இனிய குடும்பதின வாழ்த்துக்களும்தான் 🙂

பிப்ரவரிப் பனிப்பொழிவில் பிரியங்களின் கதகதப்பு முத்தங்களின் சத்தங்களில் மூன்றுநாள் சிறகசைப்பு உறவுகளின் அணைப்புகளில் உற்சாகக் கொண்டாட்டம் கடுங்குளிர்க் கனடாவில் குடும்பதின வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி


anbudanbuhari@gmail.com

Series Navigation

புகாரி

புகாரி