கீதாஞ்சலி (80) கடும் புயலில் பயணம்!

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

pதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



இலையுதிர் காலத்து வானில்
பயனின்றி
அலையும் மேகத்தில்,
முறிந்து போன துண்டு போல்
திரிபவன் நான்!
என் ஆதவன் எப்போதும்
பொன்னொளி வீசுவான் உன்னதமாய்!
உன் ஒளிமயத்தில் என்னை
ஒன்றாக்கி,
உன் வெப்பத் தொடுகையால்
என் மழை மேகம்
இன்னும் உருகிப் பொழிய வில்லை!
ஆதலால் எண்ணி வருகிறேன்,
உன்னைப் பிரிந்த மாதங்களையும்
ஆண்டுகளையும்!
உன் விருப்பம் அதுவானால்,
உன்திரு விளையாட்டும் அதுவானால்,
வேகமாய்ப் போகும்
எந்தன் வெற்றிடப் படகை
உந்தன் தூரிகையால்
ஓவியத்தில் தீட்டு பன்னிறத்தில்
பொன்முலாம் பூசி!
கடலில் கடும் புயலடிக்கும் போதென்
படகை மிதக்க விட்டு,
பயணம் பண்ண வை,
பல்வேறு விந்தைகளில் பங்கெடுத்து!
உறங்கும் வேளையில்
மறுபடியும்
எந்தன் வாழ்வெனும் நாடகத்தை
அந்தமாக்குவது
உந்தன் விருப்ப மானால்,
அந்தி யிருளில் ஊனுருகி நான்
மாய்ந்து விடுவேன்!
அல்லாவிடில்,
குளிரும் அதிகாலைப்
பளிச்சென வெளுத்துப் புலர்ந்ததும்,
தூய மனத்துடன்,
முறுவல் ஒன்றை உதிர்த்து
மறைந்து விடுவேன்
மாயமாக!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 2, 2006)]

Series Navigation