கீதாஞ்சலி (31) ஏற்று அன்புச்சுடர் விளக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


ஒளி!
எங்கே உள்ளது ஒளி ?
ஏற்று அந்த ஒளி விளக்கை,
ஆசைச் சுடர்விட்டு எரிந்திட!
விளக்கு மட்டும்
உள்ளது அங்கே தீப்பொறி
துள்ளாமல்!
அதே போல்
ஒளியில்லா விளக்காய்
நெஞ்சே, நீயும் இருக்கிறாய்!
மரணமே,
உனக்குச் சால உகந்தது!
உன் வீட்டுக் கதவை
அவலம் தட்டுகிறது!
அதன் தகவல் இது:
விழிப்புடன்
உன்னைக் கவனித்து
வருபவன் உன் அதிபன்!
இருண்டு செல்லும் இரவின் போக்கில்
உன்னை அழைக்கிறான்
அன்புச் சந்திப்புக்கு!

கருமேகங்கள் கூடி
மப்பு மந்தாராமாய்
வான மண்டலம் இருண்டு,
மழை பெய்து
ஓய்வதாய்த் தெரிய வில்லை!
என் நெஞ்சைக் கலக்குவது
என்ன வென்று அறியேன்!
உட்பொருளும்
எட்ட வில்லை எனக்கு!
கண்ணிமைப் பொழுதில்
மின்னல் வெட்டி
கண்ணொளி பறித்து
துக்க மூட்டி
மிக்க இடர் விளைவிக்கும்!
எழுந்திடும் இரவின் இன்னிசை
எப்பாதைக்கு என்னை
அழைக்கிற தென்று
ஐயமுற்று
திணரும் என் இதயம்!

ஒளி!
எங்கே உள்ளது ஒளி ?
ஏற்று அந்த ஒளி விளக்கை,
ஆசைச் சுடர்விட்டு எரிந்திட!
வெளியே பேரிடி
முழக்கும்!
வெற்றிடம் நோக்கி
வேகமாய்ப் பாயும் காற்று,
அலறிக் கொண்டு!
கருங்கல் குன்று போல்
சுருண்டு போனது இரவுப் பொழுது!
காரிருளின் கைப் பிடியில்
வீணாய்க்
காலம் கடக்க வேண்டாம்!
உன்னரிய
வாழ்க்கை மூலம்
தூண்டி ஏற்றி விடு,
அன்பெனும்
சுடர் விளக்கை!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 10, 2005)]

Series Navigation