கீதாஞ்சலி (16) – குழந்தைக்குப் போடும் கால்கட்டு! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


சிறுவனை
இளவரசனைப் போல் ஆடையில்
சிங்காரித்து
தங்கச் சங்கிலி
கழுத்தில் அணிவித்து
வெளியில்
விளையாட விட்டால்
களிப்பு விளையாமல் போகும்!
ஒவ்வொரு படியில் ஏறும் போதும்
தடையாய் நிறுத்தும்,
சிறுவன்
உடையின் பகட்டு!
பயந்து
பட்டாடை கிழிந்திடும் என்று
தயங்கி நிற்பான்,
பையன்!
புழுதிக் கறை படிந்து
அழுக்காகும் என்று
உலகப் பழக்கத்தை ஒதுங்கி
விலகிச் செல்வான்,
குழந்தை!
வீட்டை விட்டு
வெளியே நகரவும் அஞ்சி
கூட்டில்
அடைபட்டுக் கிடப்பான்!

இது நெறியன்று!
உடல்நலம் அளிக்கும்
பூதள வெளியில் ஓடியாடும்
சிறுவன்
விளையாட்டைத் தடுப்பது,
முறையன்று!
தினமும் நடமிடும்
மாபெரும்
மனிதச் சந்தையில் இணைந்து
கூடிக் குலவி
ஆடிப் பழகும் உரிமையை
அபகரிப்பது,
செல்வனுக்கு
எப்பலனும் அளிக்காது!
தாயே!
நீ குழந்தைக்குப் பூட்டியுள்ள
அடிமைத் தளை,
நிரந்தர
வளர்ச்சியைத் தடுக்கும்
கால்கட்டு விலங்கு!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 14, 2005)]

Series Navigation