கிஷன் பட்நாயக் – 1930 – 2004

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

கே ரவி ஸ்ரீநிவாஸ்


கிஷன் பட்நாயக் சுதந்திர இந்தியாவில் சோசலிஸ்ட் இயக்கத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவராகவும், மக்கள் இயக்கங்கள் பலவற்றின் மதிப்பினைப் பெற்றவராகவும் இருந்தார். இவரைப் பற்றி

நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இவர் எழுதியதில் எனக்குப் படிக்கக்கிடைத்தவை சிலவே. இவரது

முக்கியமான எழுத்துக்கள் இந்தியிலும், ஒரிய மொழியிலும் இருப்பதாக அறிகிறேன். சில மாதங்கள் முன்பு இவர் எழுதிய கட்டுரை# ஒன்றை Futures என்ற ஜர்னலில் படித்தேன். பெயரைப் பார்த்ததும் அவர் எழுதிய கட்டுரைதானா என்று ஐயம் எழுந்தது, அப்புறம் இவர்தான் என்று உறுதி செய்துகொண்டேன்.

இக்கட்டுரை சிறிய கட்டுரை.இதை அவர் விரிவாக எழுதியிருக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போது தோன்றியது.அப்துல் கலாமின் இந்தியா குறித்த எதிர்காலக் கனவுகளை இவர் விமர்சிக்கிறார்.அப்துல் கலாமின் தொலை நோக்கு கண்ணோட்டம் குறித்து பாராட்டுகள் அதிகம், ஒரு சிலரே விமர்சித்துள்ளனர். இப்போது அப்துல் கலாம் ஒரு demi god என்ற அளவிற்கு மதிக்கப்படுபவர். அவரை விமர்சித்தால் இன்று தேசத் துரோகி என்று கூட சொல்லக்கூடும். பட்நாயக் இன்று இல்லை. அண்மையில் மரணமடைந்தார். அவர் குறித்த ஒரு இரங்கல் குறிப்பினை http://groups.yahoo.com/group/PUCL/message/1196 ல் காண்க.

காங்கிரசுக்கு ஒரு பெரிய எதிர்ப்பு சக்தியாய், அகில இந்திய அரசியலில் ஒரு முக்கியமான கட்சியாக உருவாகியிருந்த சோசலிஸ்ட் கட்சி ராம் மனோகர் லோகியாவின் மறைவுக்குப் பின் பிளவு பட்டு சிதறியது..பெரும்பாலோர் 1977 ல் ஜனதா கட்சி உருவான போது அதில் சேர்ந்தனர்.ஆனால் ஜனதாக் கட்சி பின் பிளவுபட்ட போது , மீண்டும் ஒரு வலுவான சோசலிஸ்ட் கட்சி உருவாகவில்லை. ஆனால் எல்லோரும் லோகியாவின் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டனர். கட்சி அரசியலில் வெறுப்புற்ற சில சோசலிஸ்ட்கள் மக்கள் இயக்கங்கள், மாற்று அரசியல் முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்களில் முக்கியமானவர் கிஷன். சிலர் லோகாயன் என்ற அமைப்புடன் சேர்ந்து மக்கள் இயக்கங்கள், போராட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வேறொரு அரசியலை உருவாக்குவதில் அக்கறைக் காட்டினர்.ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒரு முன்னாள் சோசலிஸ்ட். வட இந்தியாவில் ஒரு பெரிய அரசியல் எழுச்சிக்கு வித்திட்டவர் லோகியா. 1967 ல் பல மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது, சோசலிஸ்ட் கட்சி பெரும் பலம் பெற்றிருந்தது. ஆனால் 1970 களில் பின் பகுதியில் நிலைமை மாறிவிட்டது. 1980களில் சோசலிஸ்ட் கட்சி இல்லை என்ற நிலை உருவானது. மது லிமயி, சுரேந்திர மோகன், ஜார்ஜ் பெர்ணாண்டஸ் – 1960 களிலும், 1970 களிலும் செல்வாக்குடன் விளங்கிய சோசலிஸ்ட் தலைவர்களில் சிலர். 70 களில் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஒரு எழுச்சியை உருவாக்கினார். அதில் சோசலிஸ்ட்கள் பெரும்பங்காற்றினர். அன்று குஜராத், பீகாரில் ஏற்பட்ட மாணவர் எழுச்சியில் பங்கெடுத்த பலர் பின்னர் பிரபல அரசியல்வாதிகளானார்கள். லாலுவையும், பஸ்வானையும் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். ஆனால் இவர்கள் பிற அரசியல்வாதிகள் போல் மாறிவிட்டனர். சோசலிஸ்ட்கள் முன்னர் பெற்றிருந்த பலத்துடன் 1980களில் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்திருந்தால் ஹிந்த்துவ சக்திகள் அரசியலில் இந்த அளவு பலம் பெற்றிருக்கமாட்டா. ஆனால் வரட்டு காங்கிரஸ் எதிர்ப்புவாதம் மட்டுமே ஜார்ஜ் போன்ற சோசலிஸ்டகளின் அடையாளமாகிவிட்டது. ஒரு வேளை கர்பூரி தாக்கூர் உயிருடனிருந்தாலும் வேறு சில நல்ல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். பீகார் அரசியலில் லாலு பெரும் சக்தியாய் உருவாகியிருந்திருக்க மாட்டார், சோசலிஸ்ட்கள் ஒரு அணியில் இருந்திருப்பர்

என்றே தோன்றுகிறது.

சில வாரங்கள் முன்பு ராமச்சந்திர குஹா, நேருவின் அழைப்பினை ஏற்று ஜெயப்பிரகாஷ் நாராயண் அரசில் சேர்ந்திருந்தால் சில நல்ல விளைவுகள் ஏற்பட்டிருக்குமென்று கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். அது உண்மை என்றே தோன்றுகிறது. இன்று பல அரசியல்வாதிகள் தாங்கள் சோசலிஸ்ட்கள், லோகியாவின் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டாலும், கட்சி அரசியலிலும், அதற்கு அப்பாலும் ஒரு சிலரையே சோசலிஸ்ட்கள் என்று கருத இயலும்.அப்படிப்பட்ட உண்மையான சோசலிஸ்டகளில் ஒருவர் கிஷன்.

# Visions of development: the inevitable need for alternatives August-September 2004, Pages 671-678

—-http://ravisrinivas.blogspot.com

Series Navigation

கே ரவி ஸ்ரீநிவாஸ்

கே ரவி ஸ்ரீநிவாஸ்