காஷ்மீர் நிலவரம் – புத்தியே வராதா?

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

பிறைநதிபுரத்தான்



கடந்த 150 ஆண்டுகளாக நடந்துவரும் காஷ்மீரிகளின் வீரமிக்க விடுதலைப் போராட்டத்தை – பிரிவினைவாதமாக சித்தரித்து இந்திய ஹிந்து மதவாத அமைப்புக்கள் பிரச்சாரம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. காஷ்மீரின் வரலாறு தெரியாத இந்திய இந்து – முஸ்லிம்களிடையே பிரிவினையை வளர்க்க, காஷ்மீரிகளின் போராட்டத்தை இந்திய முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி, அவர்களையும் தேசதுரோகிகளாக சித்தரித்து வருகின்றனர் சிலர்.

ஹிந்துத்வ இயக்கங்களும், இந்தியாவும் தோன்றுவதற்கு முன்பே காஷ்மீர் விடுதலை போராட்டம் தொடங்கி விட்டது என்கிறது வரலாறு, டோக்ரா மஹாராஜாவின் ஆடம்பர-அடக்குமுறை வாழ்க்கை, அவரின் மத ரீதியான பாரபடச ஆட்சிமுறையால், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மை காஷ்மீரி முஸ்லிம்களே. அரசு வேலைகளுக்கு அவர்களை அனுமதிக்கவில்லை, சொந்த நிலம் வைத்துக் கொள்வதிலிருந்து தடுக்கப்படனர், முஸ்லிம் உழவர்களுக்கும், தொழிற்சாலை பணியாளர்களுக்கும் – இந்துக்களுக்கு விதிக்கப்பட்ட வரியை விட மிக அதிகமாக வரி விதிக்கப்பட்டது. அதனால் பெரும்பாலான முஸ்லிம்கள் அன்றாடங் காய்ச்சிகளாகவே வாழ்ந்து வந்தனர். அதே சமயத்தில், அரசரின் ஆதரவோடு தொழில் துறை, வணிகம் மற்றும் வங்கித் தொழில் ஆகிய லாபம் தரும் தொழில்களை சிறுபானமை பஞ்சாபிகள் மற்றும் டோக்ரா இந்துக்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து பொருளாதாரத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கினர்.
மன்னரின் அடக்குமுறை-அத்துமீறல்-பாரபடசத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் 1931-ல் தங்களின் குறைகளை முன்வைத்து கலகம் செய்தனர். அரசரின் செல்லப்பிள்ளைகளாக விள்ங்கிய காஷ்மீர் பண்டிட்களும் – டோக்ரா ஹிந்துக்களும் மன்னருக்கு ஆதரவாக அக் கலகத்தை எதிர்த்தனர். பிரிட்டிஷாரின் ஆதரவுடன் இரும்புக்கரம் கொண்டு காஷ்மீரி முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் மன்னர் ஹரிசிங்கால் நசுக்கப்பட்டது. கிளர்ச்சியை தொடர்ந்து உஷாரான மன்னர், Glancy Commission அமைத்து காஷ்மீர் முஸ்லிம்களின் ‘குறைகளை கண்டறிய ஆவண செய்ததை சுயநலவாத காஷ்மீர் பண்டிட்கள் தீவிரமாக எதிர்த்தனர். இதனால் வெகுண்டெழுந்த பெரும்பான்மை காஷ்மீரிகள், தங்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக விளங்கிய மன்னரை- ‘மூட்டை கட்டி’ அனுப்புவதற்காக, ‘காஷ்மீர் சிங்கம்’ என்று பின்னாளில் அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா தலைமையில் 1932-ல், ‘ஜம்மு கஷ்மீர் முஸ்லிம் மாநாட்டு கட்சி’ தொடங்கினர். காஷ்மீரிளின் முக்கிய கோரிக்கைகளான அரசு பணியில் மற்றும் இரானுவத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, நில வரி குறைப்பு, போன்றவைகளை முன்வைத்தனர்.
1938-ல் தேசிய மாநாட்டு கட்சி என்ற பெயர்மாற்றத்துக்கான தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டு, காஷ்மீரிகளின் அடிப்படை தேவைகளை-உரிமைகளை வலியுறுத்தும் கோரிக்கைகளின் முன்வரைவை உருவாக்குவதில் ஜாதி மதம் பாராது அனைத்து காஷ்மீரிகளின் பிரதிநிதிகளும் ஈடுபட்டனர். இந்த முயற்சியை, சுதந்திரத்திற்கு பிறகு உருவாகப்பொகும் ‘நயா காஷ்மீருக்கான முன்னோட்டமாக அமைந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட கோரிக்கைகள் – மன்னர் ஹரிசிங்கால் நிராகரிக்கப்பட்டு, இம்முயற்சியை முன்னெடுத்து சென்ற ஷேக் அப்துல்லாவும் அவரின் சகாக்காளும் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து ஆயிரக்கணக்கான் காஷ்மீரிகள் சிறைச் சென்றார்கள். – இந்த நிகழ்வுகள், காஷ்மீரிகள் தங்களை இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ ஒருபோதும் இணைத்து பார்த்ததே இல்லை என்பதையே மிகத் தெளிவாக்குகிறது, மன்னராட்சி காலத்திலேயே காஷ்மீரிகளிடம் இருந்த் சுதந்திர உணர்வை மறைத்து, இந்திய சுதந்திரத்திற்கு பிறகு எழுந்ததாக கூறுவது இந்துத்வவாதிகள் கூறுவது இன்னுமொரு அப்பட்டமான பொய்.
காஷ்மீரிகளின் வீரமிக்க போராட்டம், சுயநலமிக்க அரசர் மூலம் – இந்திய ஹிந்துத்வ சார்பு அரசியல்வாதிகள், சுயநலமிக்க காஷ்மீர் அரசியவாதிகளின் உதவியோடு திரிககப்பட்டது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 562 ராஜாக்களும் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ தங்கள் நிலப்பரப்பை இணைத்துக்கொள்ளவோ அல்லது தனித்திருக்கவோ அவரவர் விருப்பம்போல முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றனர் ஆங்கிலேயர். தனித்திருக்க விரும்பிய ஹைதராபாத் நிஜாமை (முஸ்லிம்) பிரிவினைவாதியாக சித்தரிக்கும் ஹிந்துத்வ சக்திகள், நிஜாமைப்போலவே தனித்திருக்க விரும்பிய காஷ்மீரின் உயர் சாதி இந்து ஹரி சிங் பற்றி வாயை திறப்பதே இல்லையே அது ஏன்?.
1947 -ல் இந்திய-பாகிஸ்தான் சுதந்திரத்திற்கு பிறகு காஷ்மீரை ‘சனி’ வேறு ரூபத்தில் பிடித்து கொண்டது. சுதந்திரத்தை தொடர்ந்து மதக்கலவரத்தின் தாக்கம் காஷ்மீரிலும் பரவியது. மன்னருக்கெதிராக அங்கு கலவரம் வெடித்தது. காஷ்மீர் பிரச்சனைக்கு மூல கர்த்தாவாக இருவரை கூறலாம். முதலமவர் காஷ்மீர் மன்னர ஹரி சிங், இரண்டாமவர் காஷ்மீர் பண்டிட்டான ஜவகர்லால் நேரு. இந்து அரசனான ஹரி சிங் தன் ஆட்சியையும் பதவியையும் துறக்க மனமில்லாததால், முதலில் பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ளப் பேரம் பேசினார். தன் அரசப் பதவியையும் அதிகாரத்தையும் இழக்காத வகையில் அந்த இணைப்பு இருக்க வேண்டும் என்பதே அவரது நிபந்தனை. 1947 ஆகஸ்டில், பாகிஸ்தானுடன் அதற்கான ஒப்பந்தமும் செய்துகொண்டார். ஆனால், அரசனின் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமான இந்து அதிகாரிகள் (முஸ்லிம்களுக்கு அரசு பணி அப்பொழுதிலிருந்தே அம்பேல்) பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டால், பதவி-பவிசு போய்விடுமே என்று அதை எதிர்த்தனர் அதனால் காஷ்மீர் சுதந்திர நாடாக இருப்பதே மேல் என்ற நிலைப்பாடை எடுத்தனர். ஹரி சிங் இவ்வாறு முடிவு எடுப்பதை காலவரையற்று ஒத்திப்போட்டது பாகிஸ்தான் கைக்கூலிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ காரணமாயிற்று..
இரண்டாமவர் காஷ்மீர் பண்டிட்டான ஜவகர்லால் நேருவைக் கூறலாம். நேரு தன்னுடைய பூர்வீக பூமியான இந்தியாவில் இருக்க வேண்டும் என நினைத்தார். இந்த இருவரின் தனிபட்ட விருப்பையும்-வெறுப்பையும் அடைப்படையாகக்கொண்டு இயங்கிய இந்திய அரசுகளும் மற்றும் இந்துத்வ சார்பு சக்திகளும்தான் இன்று வரை தொடரும் காஷ்மீர் பிரச்சனைகளுக்கும், காஷ்மீரிகளின் இன்னல்களுக்கும் காரணமாக அமைந்து – இன்று காஷ்மீரிகளின் விடுதலை போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்திருக்கிறது.
பெரும்பான்மை காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு முரனாக அதை ஆக்ரமித்தது பாகிஸ்தான் மட்டுமல்ல, ந்மது இந்தியாவும்தான், ஆனால் இந்த உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட்டதன் விளைவாக காஷ்மீரின் பின்னணி தெரியாத நமது இன்றைய தலைமுறையினருக்கும், வெளிநாட்டினருக்கும் ‘ஆக்ரமிப்பு’ சக்திகளை எதிர்த்து காஷ்மீரிகள் நடத்தும் விடுதலை போராட்டம் பிரிவினைவாத போராட்டாமாக தெரிகிறது. காஷ்மீரின் தற்போதைய கட்டுப்பாட்டு கோடு (LoC) என்பது காஷ்மீர் மக்களால் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்ல அது இந்திய, பாகிஸ்தானிய, ஆக்ரமிப்பு சக்திகளால் வலிந்து திணிக்கப்பட்டது.
காஷ்மீர் பெரும்பான்மையான இஸ்லாமியர்களை கொண்டிருந்தாலும், அதன் மன்னர் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தாக கூறி ஒட்டு மொத்த காஷ்மீரும் தனக்கு தான் என இந்தியா வாதிடுகிறது. ஆனால், பாக்கிஸ்தானோ, இந்திய பிரிவினையின் பொழுது, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி பாக்கிஸ்தானுக்கும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி இந்தியாவுக்கும் என பிரிந்த நிலையில் பெரும்பான்மையாக முஸ்லீம்களை (80%) உள்ளடக்கிய காஷ்மீரை இந்தியாவுடன் மன்னர் இணைத்தது தவறு, அதனால் காஷ்மீர் தனக்கு சொந்தம் என கூறுகிறது. இந்த பிரச்சினை சம்பந்தமாக, 1948 -ல், ஐக்கிய நாட்டு பாதுகாப்பு கவுன்சில், காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் சேர்வதா அல்லது பாகிஸ்தானுடன் சேர்வதா அல்லது சுதந்திர நாடாக இயங்குவதா என்று சுயமாக நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற தீர்மானம் இரண்டு நாடுகளாலும் கிடப்பில் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து 1951 ல் நடைப்பெற்ற தேர்தலில் சேக் அப்துல்லா தலைமையில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டு கட்சி இந்தியாவுடன் இணைவதாக அறிவித்தது, அதற்கு உபகாரமாக, இந்திய அரசு 1954ல் அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் மூலம் காஷ்மீருக்கு சிறப்பு சலுகை வழங்கியது. அன்றிலிருந்து, இந்தியா காஷ்மீரில் ‘பொம்மை’ அரசுகளை நிறுவி ஆக்ரமித்து வருவதுபோலவே, பாகிஸ்தானும் தான் ஆக்ரமித்த பகுதிக்கு ‘சுதந்திர காஷ்மீர்’ என்று பெயரிட்டு தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது, உண்மை நிலைமை இவ்வாறிருக்க, காஷ்மீரை ஆக்ரமித்ததாக இந்தியா – பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தான் இந்தியா மீதும் குற்றம்சாட்டி காலம் கழித்தே, காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை போட்டி போட்டுக்கொண்டு இரண்டு நாடுகளும் குழி தோண்டி புதைத்து விட்டது, காஷ்மீரிகளை பொறுத்தவரை தங்களது தாய் மண்ணை, இந்திய ஆக்ரமிப்பிலுள்ள காஷ்மீர் – பாகிஸ்தான் ஆக்ரமிப்பிலுள்ள காஷ்மீர் என்றே அழைக்கின்றனர்.
அரசியல்வாதிகளின் சுயநலன் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக இந்திய ஐக்கியத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவைக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு ஒரே நம்பிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது இந்த 370வது சட்டப் பிரிவுதான். அந்தப்பிரிவின் மூல கொடுக்கப்பட்ட சலுகைகள் ஒவ்வொன்றாக – திட்டமிட்டு பறிக்கப்பட்டு, காஷ்மீர் அரசை இந்தியா கலைக்காலாம் என்ற சட்டமும் 1964-65 ல் இயற்றப்பட்டுவிட்டது.
இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிகளின் விடுதலை உணர்வு நீர்த்துப்போகாமல் கவனமாக பார்த்துக்கொண்டது இந்திய ஹிந்துத்வா கும்பல்தான். காஷ்மீரிகளின் தனித்தன்மையை பாதுகாக்க வகை செய்யும் இந்திய அரசியல் சாசனம் 370ம் பிரிவை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது. மேலும், காஷ்மீரிகள் பாகிஸ்தானின் கைக்கூலிகள், மத அடிப்படைவாதிகள், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், இந்தியாவில் முஸ்லிம் மதக் கலவரங்களுக்கு வித்திட்டு வருபவர்கள், பல்லாயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர்கள், இந்திய ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்கள், இவர்களை நல்வழிப்படு஢த்த இந்திய அரசு கோடி கோடியாகச் செலவழிக்கிறது என்று தவறான தகவல்களை தந்து குழப்பியோதோடு மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி திரைப்படங்களின் மூலமும் காஷ்மீரிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து மக்களை பயமுறுத்தி வரும் சுயநலவாத சுயம்சேவக் கும்பலுக்கு உறுதுனையாக இருந்து வந்தது இந்திய அரசு..
370வது சட்டம் அளித்த சலுகைகளில் எஞ்சியிருப்பது, இந்தியாவின் பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் குடியேறுவது மற்றும் நிலம் வாங்குவது தடுக்கப்பட்டிருப்பதுதான். பிற மாநிலத்தினரின் குடியேற்றம் நிகழ்ந்தால் தங்களுடைய பெரும்பான்மையை குறைக்கப்படுமோ என்ற நியாயமான அச்சம் காஷ்மீரிகளில் பலருக்கும் உண்டு. அது மட்டுமல்லாது,. விடுதலையை முன்னெடுக்கும் இனங்களின் பெரும்பான்மையை குறைக்க கீழ்த்தரமான முறையில், ஏதாவது சாக்கு-போக்கு சொல்லி, ஆதிக்க-அதிகார மையங்கள் முன்வைத்த இலங்கை, பாலஸ்தீன குடியேற்றத்தைப்பற்றியும் காஷ்மீரிகள் அறிந்திருப்பதால் அன்னியர்களுக்கு தங்களது மண்ணில் இடம் கொடு’க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
காஷ்மீரிகளின் தனித்தன்மையை அழிக்க இந்திய இந்துத்வ கும்பலின் ஒரு ‘தொ(ல்)லைநோக்குள்ள’ மறைமுகமான முயற்சியாகவே – அமர்நாத் கோவிலுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை காஷ்மீரிகள் பார்க்கிறார்கள். உருகும் பனி லிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக கொடுக்கப்படும் இடத்தில் நிர்வகிப்பவர்கள் என்ற போர்வையில், சங்பரிவாரிகளை, காஷ்மீர் மண்ணில் குடியேற்றம் செய்யும் வாய்ப்பிருப்பதாக காஷ்மீரிகள் அஞ்சுகிறார்கள். காஷ்மீரிகளின் அச்சத்தை மேலும் பற்றியெரிய வைத்தவர் ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியத்தின் நிர்வாக அதிகாரி அருண்குமார், ‘நிரந்தரமாக எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை, நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வதை யாராலும் தடுக்க முடியாது’ என திமிர்த்தனமாகப் பேசியதுதான் காஷ்மீரிகளை கொந்தளிக்க வைத்து. தங்களின் சந்தேகம் சரியானது என அவர்களை போராட்டத்தில் குதிகக வைத்தது.
1950லிருந்து, காஷ்மீரிகளின் அடையாளத்தை அழித்து, அவர்களை சிறுபான்மையாக்க, இந்திய இந்துத்வ கும்பலின் கைப்பாவையாக செயல்பட்ட கவர்னர்கள், காஷ்மீரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் விருப்பத்திற்கெதிராக திணிக்கப்பட்டனர். அம்மாநிலத்தின் ஆளுநரை அதன் சட்டமன்றம் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்ட வழிகாட்டலை மீறி முன்னாள் பிரதமர் நேரு, அப்துல்லாவை நிர்ப்பந்தித்து, எந்த அரச வம்சத்தின் கொடூர ஆட்சியை எதிர்த்துக் காஷ்மீர் மக்கள் போராடினார்களோ அதன் வாரிசான, கரண் சிங்கை கவர்னராக்கினார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட காஷ்மிர் அரசு இந்தியாவின் நிர்பந்தத்திற்கு அடங்க மறுத்தபோதெல்லாம் கலைக்கப்பட்டிருக்கிறது. குழந்தையையும் கிள்ளிவிட்டு – தொட்டிலையும் ஆட்டுவதுபோல, காஷ்மீரிகளை உணர்வுகளை தூண்டி – அடக்குமுறைகளை ஏவி, காஷ்மீரி சூஃபிககளின் மனதில் மத அடிப்படையிலான எண்ணம் வளர்க்கப்பட்டது.
கடந்த 60 வருடங்களாக, காஷ்மீரிகளின் முன்னேற்றத்திற்கு, இந்திய அரசு நியாயமான பங்களிப்பை செய்யவில்லை. கோடிக்கணக்கான ரூபாய்களை செல்வு செய்து – ஆறு காஷ்மீரிக்கு ஒரு இரானுவ வீரர் என்ற விகிதத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் இரானுவத்தை மட்டும் குவித்து, காஷ்மீரின் முன்னாள் மன்னர் ஹரி சிங்கை போல, முஸ்லிம்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் புறக்கணித்து வருகிறது இந்தியா. பெரும்பான்மை மண்ணின் மைந்தர்களை ‘முஸ்லிம்கள்’ என்ற ஒரே காரணத்திற்காக அரசு பணிகளில் திட்டமிட்டு புறக்கணித்து, உயர் சாதி ஹிந்துக்களுக்கு மட்டும் வழங்கி – சொந்த மண்ணிலேயே அவர்களை அனாதைகளாக ஆக்கியிருக்கிறது இந்தியா. ஒதுக்கல் காரணமாகத்தான் சிலர் பாகிஸ்தானின் ‘கைக்கூலிகளாக’ மாறினர் என்பதை இந்தியா இன்னும் உணராமல் உணரவிடாமல் பார்த்துக்கொள்கின்றன இந்திய ஹிந்துத்வ அமைப்புக்களும்.
இந்திய இரானுவமும் – போலிசும் நடத்திய மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டது காஷ்மீர் முஸ்லிம்கள்தான், இந்திய அரசாங்கத்திற்கும் – பாகிஸ்தான் ஆதரவு, பயங்கரவாதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல்களில் படுகொலைகள் செய்யப்பட்டது காஷ்மீர் முஸ்லிம்கள்தான், பதவி உயர்வுக்காக தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்டு இரானுவ-போலீஸ் அதிகாரிகளால் போலி என்கவுண்டர்கள் மூலம் தீர்த்துக்கட்டப்பட்டதும் காஷ்மீர் முஸ்லிம்கள்கள்தான், காணாமல் போய்விட்டதாக கணக்கு எழுதிவிட்டு – கதை முடிக்கப்பட்டதும் காஷ்மீர் முஸ்லிம்கள்தான், உண்மை இவ்வாறிருக்க பிரச்சினையை திசை திருப்பும் விதமாக ‘ஜம்மு’ வில் வசிக்கும் உயர்சாதி இந்துக்கள் பாதிக்கப்பட்டதாக மதவாத சக்திகள் மிகைப்படுத்தி அவதூறு செய்கின்றன,
வகுப்பு வாதத்தை வளர்த்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் எப்படியவது மதவாத சக்திகள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக, அமர்நாத் நில ஒதுக்கீடு பிரச்சினையை ஊதி பெரிதாக்கி வருவதோடு. காஷ்மீரிகளின் பொருளாதரத்தை நசுக்கி – ‘ஹிந்துஸ்தானத்தின்’ வழிக்கு கொண்டு வரலாம் என்ற எண்ணம்தான் காஷ்மீரிகளை – பல ‘ஸ்தான்களாக’ சிதறப்பொகும், பாக்கிஸ்தானை நோக்கி மீண்டும் திருப்பியிருக்கிறது. இந்த சுழ்நிலையை சாதகமாக்கி, காஷ்மீரில் தனது கொடியை பறக்க விட பாகிஸ்தான் முயல்வது முட்டாள்தனம். மதத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்பட்ட அதன் பிடியிலிருந்து – மொழி அடிப்படையில் போராடி, சுதந்திரமடைந்த கிழக்கு பாகிஸ்தான் நிகழ்விலிருந்து புத்தி கற்றுக்கொள்ள மறந்துவிட்டதையே இது காட்டுகிறது. அகண்ட பாரதம் அமைக்க – இந்தியாவை ‘ஹிந்துஸ்தானாக்க’ விரும்பும் மதவாத சக்திகளும், பல் இன மொழி வேறுபாடுகளைக் கொண்ட மக்களை – மதத்தை மட்டும் கொண்டு இணைக்க இயலாது என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும்.
காஷ்மீரிகள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடலாம் – புறக்கணித்து பணிய வைக்கலாம் என்ற ஹிந்துத்வ சிந்தனையோடு இந்திய அரசு முயற்சித்ததன் விளைவுதான் இந்தியா – இன்று காஷ்மீரிகளிடமிருந்து இன்று அன்னியப்பட்டு கிடக்கிறது. காஷ்மீர் பிரச்சினைக்கு நமது நாடு சுமூக தீர்வு விரும்பினால், அதை இந்தியாவாக அனுகினால் மட்டுமே வாய்ப்புள்ளது – அதை விட்டு வகுப்புவாதக் கும்பல் கூப்பாடு போடுவதுபோல் ‘ஹிந்துஸ்தானாக’ அனுகினால், காஷ்மீர் மட்டுமல்ல இந்தியாவின் மற்றப் பகுதிகளும் மீண்டும் சமஸ்தானங்களாக சிதறுவதை எத்தனை ‘இரும்பு மனிதர்கள்’ வந்தாலும் தடுக்க முடியாது.
Demystifying Kashmir (2006) by Navnita Chadha Behera,
http://en.wikipedia.org/wiki/History_of_the_Kashmir_conflict
http://news.bbc.co.uk/2/hi/south_asia/2739993.stm
http://www.kalachuvadu.com/issue-92/page14.asp
http://www.un.org/Depts/dpko/missions/unmogip/background.html
http://www.kashmirobserver.com/
http://blog.tamilsasi.com/2008/08/kashmir-independence-amarnath.html

Series Navigation

author

பிறைநதிபுரத்தான்

பிறைநதிபுரத்தான்

Similar Posts