கால நதிக்கரையில்……(நாவல்)-26

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

வே.சபாநாயகம்


தெருவின் நடுப்பகுதிக்கு வந்ததும் சிதம்பரம் வாழ்ந்த வீட்டின் முன்னே சற்று நின்றார்கள். குறட்டில் அப்பா எப்போதும் மாலையில் உட்காரும் சிமிண்ட் திண்ணை அப்படியே இருந்தது. வீடு பூட்டி இருந்தது.

“வெளியிலே ஒண்ணும் மாற்றம் செய்யில. உள்ள மட்டும் கொஞ்சம் மராமத்து செஞ்சிருக்காங்க. வீட்ட நல்லா வச்சிருக்காங்க” என்றான் மருது. குறடேறி தெருத் திண்ணை மீது அமர்ந்தார்கள். திண்ணை மீது அமர்ந்ததும் சிதம்பரத்துக்கு அப்பா
எதிர்த் திண்ணையில் அமர்ந்து தன்னிடம் பேசியதெல்லாம் நினவுக்கு வந்தது.

வேலைக்குப் போன பிறகு மாதா மாதம் அப்பாவையும் அம்மாவையும் பார்க்க ஊருக்கு வருவார். காலையில் சாப்பிட்டபின் பெரிய திண்ணையில் அமர்ந்து சிதம்பரம் ஏதாவது படித்துக் கொண்டோ எழுதிக் கொண்டோ இருக்கையில் எதிர்த் திண்ணயில் உட்கார்ந்திருக்கும் அப்பா அரவம் கேட்டு “ஆரு சிதம்பரமா?” என்பார்கள்.

அப்போது அப்பாவுக்குக் கண்பார்வை முழுதுமாய்ப் போய்விட்டிருந்த நேரம். பத்து வருஷத்திற்கு முன்னால் மாமாவின் காரில் ஒருமுறை போய்க் கொண்டிருந்த போது அந்தக் கார் விபத்துக்கு உள்ளானது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த அப்பாவின் முகம் முன்னால் மோதியதில் கண்ணுக்கருகில் மூக்குத் தண்டில் அடிபட்டு பார்வை நரம்பு பாதிக்கப் பட்டது. உடனே வைத்தியம் பார்த்தும், கொஞ்சம் கொஞ்சமாகப் பத்து ஆண்டுகளில் பார்வை குறைந்து கொண்டே வந்து அப்போது முற்ற்¢லுமாகப்
போய்விட்டிருந்தது. அப்பாவின் பெரிய பூஜையையும், தெய்வபக்தியையும், அவர்களது தர்மசிந்தையையும், பாம்புக்கடிக்குப் பச்சிலை கொடுத்துப் பலரது உயிரைக் காப்பாற்றிதையும் அறிந்தவர்கள் அப்பாவிடம், “இவ்வளவு புண்ணியம் செஞ்சீங்களே உங்குளுக்கு ஏன் கடவுள் பார்வையைப் பறிச்சாரு?” என்று மனம் உருகக் கேட்கும்போது அப்பா சொல்வார்கள்: “இந்த ஜன்மத்துலே எனக்குத் தெரிஞ்சு எந்தப் பாவமும் நா பண்ணல. இது ஏதோ பூர்வஜென்ம பாவத்தின் பலன்”.

புலனுணர்வால் சிதம்பரம்தான் என்று அறிந்துதான் கேட்பார்கள். “ஆமாம்ப்பா” என்றதும், கண்களை மூடியபடியே, “இதப்பார் சிதம்பரம், இனிமேயெல்லாம் எங்காலத் துக்குக்கப்புறம் நீங்க யாரும் இந்த ஊர்ல விவசாயம் பண்ணிடலாம்னு நெனைக்காதீங்க. காலம் மாறிப் போச்சு! அதிகாரமும் அந்தஸ்தும் இனிமே எடுபடாது. தெரியாமியா நா உங்கள எல்லாம் படிக்க வச்சேன்….” என்று நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போவார்கள். சிதம்பரத்துக்கு அப்போது பொறுமையற்ற, துடியான வயது. தான் படிப்பதற்கு அது இடைஞ்சலாக இருப்பது போலத் தோன்றி, ‘விடுங்கப்பா! எத்தினி தடவை இதியே சொல்லுவிங்க?’ என்று மனதுக்குள் அலுத்துக் கொள்வார். பின்னாட்களில், அப்பா இறந்த பிறகு பல தடவை அந்த தனது அடாத செயலை, குரூரமான முணுமுணுப்பை எண்ணி மனம் நொந்திருக்கிறார். அப்பாவுக்குக் கண் பார்வை தெரிந்திருந்தால் தான் படித்துக் கொண்டிருப்பது தெரிந்திருக்கும். படிப்ப தற்கு இடைஞ்சலாகப் பேசி இருக்க மாட்டார்கள். கண் பார்வையற்றவர்களுக்குப் பிறரிடம் பேசுவதில் நிம்மதி கிட்டும் என்று அறியாமல் எவ்வளவு குரூரமாய் உதாசீனம் செய்தோம் என்று இன்றும் இப்போதும் மனம் அழுகிறது. இனி அப்படிச் சொல்ல அப்பா இல்லை. அதோடு ‘அப்பாவுக்கு நாம் என்ன செய்து விட்டோம்? பத்திரிகை படிப்பதில் அப்பாவுக்கு ஆர்வம் அதிகம். கண்பார்வை போன பிறகு ரேடியோ ஒன்று தான் அவர்களுக்குத் தகவல் சாதனம். எப்போதாவது ஊருக்கு வருகிறபோது அப்பாவுக்குப் பேப்பரையாவது படித்துச் சொன்னோமா?’ என்ற சுய கழிவிரக்கம் மேலிட சிதம்பரம் அப்பாவை நினைத்து உருகினார்.

அதோ அந்தக் குறட்டின் திண்ணை மீது அமர்ந்துதான் இரவில் சாப்பிட்ட பிறகு சிதம்பரத்துக்கும், இந்த மருதுவுக்கும், எதிர் வீட்டு ஆறுமுகத்துக்கும் அப்பாஆங்கில பாலபாடம் கற்றுத் தருவார்கள். அந்தக் காலத்து ‘ஹரிஹர அய்யர் பிரை மர்’ என்ற பிரபல பாலபாட நூலை வாங்கி வைத்துக் கொண்டு, அண்ணன் காலத்திலிருந்து தம்பி வரை அலுக்காமல் பாடம் சொன்னார்கள். இப்பொழுது அப்படிப் பட்ட ஆரம்பப் பாட ஆங்கிலப் புத்தகத்தையும் காணோம், அப்பா மாதிரி பொறுமை யாய்ப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் பெற்றோரையும் காணோம்.

அந்தத் திண்ணைமீது அமர்ந்துதான் மாலை வேலைகளில் அப்பா அடுத்த வீட்டு ரத்தினப் படையாச்சிக்கு தனக்கு வரும் தினமணி பேப்பரைப் படித்துக் காட்டி உலக நடப்புகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வடக்குத் தெருவில் தான் படையாச்சிகள் குடி இருந்தார்கள். இந்தத் தெருவில் இரண்டு குடும்பங்கள் – ரத்தினப் படையாச்சியும் அவரது அண்ணனும் அடுத்தடுத்த வீடுகளில் இருந்தார்கள். இவர்கள் மற்றவர் களைப் போல இல்லாமல் கொஞ்சம் வசதியோடும் நாகரீகமாகவும் தெருப் பிள்ளைமார்கள் போல பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தார்கள்.

ரத்தினப் படையாச்சி அப்பாவுடன் சிறுவயது முதலே பழகி வந்ததால் அப்பாவைப்போல் ஆசாரமாகவும், திருத்தமாகவும் இருப்பார். அப்பா எப்போதும் நெற்றியில் திருநீற்றுப் பூச்சுடன் இருப்பது போல அவரும் தம் குடும்ப வழக்கப்படி நெற்றியில் பளிச்சென்ற பாதம் வைத்த நாமத்துடனும் இருப்பார். உடையும் எப்போதும் சுத்தமாக இருக்கும். இடுப்பில் வெள்ளை வேட்டியும், தோளில் வெள்ளைத் துண்டு மாகக் காணப்படுவார். மாமிசம் சாப்பிடுவதில்லை. எல்லா வகையிலும் அப்பாவைப் போல் இருக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வந்தவர். அப்பாவை அண்ணன் என்றே அழைப்பார். அவரªவு அப்பாவுடன் நெருக்கமாகவும் எதிரே அமர்ந்தும், வேறு யாரும் பேசுவதில்லை. அவர்தான் அப்பாவின் சிந்தனைப் பகிர்தலுக்கு உகந்த சகா. அப்பா அவருக்குப் பேப்பர் செய்திகள் மட்டுமல்லாமல் பெரிய புராணம், திருவிளையாடல் புராணக்கதைகளை எல்லாம் சொல்லுவார்கள். அவர்தான் அப்பாவிடம், ‘ஏன் எல்லாப் பிள்ளையும் படிக்கப் போட்டீங்க? உங்குளுக்குப் பின்னாலே நெலத்தை பார்க்க யாரும் வேணாமா? ஏன் கடவுள் உங்களுக்கு இந்தப் பார்வைக் கஷ்டத்தைக் கொடுத்தான்?’ என்றெல்லாம் கேட்பவர். பிள்ளைகள் எல்லாம் படித்து வேலைக்குப் போன பிறகு அவர்தான் முதுமையில், அப்பா காலமாகிறவரை பேச்சுத் துணைக்கு உடனிருந்தவர்.

அந்தத் திண்ணை மீதிருந்து தான் அப்பா பாம்பு கடித்து எமன் பிடிக்குள் போக இருந்த பலரது உயிரை மீட்டார்கள். ஊரில் காலரா பரவியபோது தம் சொந்தச் செலவில் காலரா மருந்து பாட்டில்களை வரவழைத்துத் தானே சர்க்கரை அல்லது தேனில் கலந்து கொடுத்துப் பலரை மரணவாயிலில் இருந்து மீட்டிருக்கிறார்கள். டிஞ்சர் அயோடினும், மின்சார ரசமும் வாங்கி வைத்துக் கொண்டு காயம் பட்டவர்களூக்கும், வயிற்றுக் கோளறால் அவதிப் பட்டவர்களூக்கும் கொடுத்து உதவி இருக்கிறார்கள். இன்னும்கூட அந்தக் காலரா மருந்தின் வாசம் சிதம்பரத்துக்கு உணர்வில் நிற்கிறது.

அப்பாவின் பாம்புக்கடி வைத்தியம் அப்போது வெகு பிரபலம். தூரத்துக் காட்டுப் பகுதிலிருந்து தன் பண்ணை ஆட்களை அனுப்பி சக்தி வாய்ந்த அந்த விஷக் கடி பச்சிலையை வேரோடு பிடுங்கி வரச் செய்து காயவைத்துப் பொடி பண்ணி வைத்துக் கொண்டு பாம்புக் கடிக்கும் விஷக் கடியால் உடல் முழுதும் தினவும் அரிப்புமாய் தூக்கமின்றித் துன்பப் பட்டவர்களுக்கும் பரிவோடு தந்து அவர்க¨ளைக் குணப்படுத்தினார்கள். எத்தனையோ பேர் அந்த பச்சிலையை அடயாளம் கண்டு பிடுங்கி வந்து அப்பா மாதிரியே கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அப்பாவின் கைராசியும், பொறுமையாய் நடு இரவிலும் முகம் கோணாது எழுந்து பச்சிலைப் பொடியை குழைத்து மணிக்கொரு தடவை மீண்டும் மீண்டும் கொடுத்து மயக்க முற்றவர் கண்விழிக்கும் வரை மணிக்கணக்கில் தூங்காமல் விழித்திருந்து செய்த சேவையும் அவர்களிடம் இல்லை. அதனால் அப்பாவிடம் அண்டை அயல் ஊரிலும் ஒரு மரியாதையும் பக்தியும் கூட இருந்தது.

இந்தக் குறட்டில், வாய் நுரை தள்ள நினைவிழந்து கயிற்றுக் கட்டிலில் கிடத்தி தூக்கி வரப் பட்டவர்க¨ள் எத்தனை பேர்களைக் காப்பாற்றினார்கள் என்பதற்குக் கணக்கே இல்லை. நேரம் காலம் இல்லை; ஜாதி பேதம் பார்த்ததில்லை. உயிர்காக்கும் இந்த சேவையை அப்பா ஒரு தவமாகவே செய்தார்கள்.அதற்காக ஒரு பைசாவும் யாரிடமும் பெற்றதில்லை. எந்தப் பிரதிபலனையும் எதிர் பார்த்ததில்லை. அப்பாவால் மறு பிறவி எடுத்தவர்கள் விசுவாசத்தோடு அப்பாவையும் அவர் வம்சத்தையும் வாழ்த்திப் போற்றியதுதான் இதனால் கிட்டிய பேறாக இருந்தது. சந்தர்ப்பம் வாய்த்தால் எப்படியாவது அந்தக் கடனைத் தீர்க்க அவர்கள் துடித்தார்கள்.

அப்படி ஒரு கடன் தீர்க்கும் வாய்ப்பு ஒரு ஏழை விவசாயிக்குக் கிடைத்தது. விழுதுடையான் என்ற பக்கத்துக் கிராமத்து விவசாயி அவன். வயலில் அண்டை வெட்டும்போது நல்ல பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளி கட்டை போல ஆகிவிட்ட வனை, கட்டைவண்டியில் கிடத்தி, ஐந்து மைல் போலப் பயணித்து அப்பாவிடம் இருட்டும் வேளைக்குக் கொண்டு வந்தார்கள். அப்பா நான்கு மணி நேரத்துக்கும் மேலாக அருகிருந்து மணிக்கொரு தடவை பச்சிலைப் பொடியைக் கரைத்துப் புகட்டச் செய்து, பாதிக்கப் பட்டவனுக்குத் துக்கம் வந்துவிடாதபடி பார்த்துக் கொள்ளச் செய்தார்கள். நள்ளிரவு நேரத்துக்குத்தான் அவன் எழுந்து உட்கார்ந்தான். மாண்டவனாகக் கருதப் பட்டவன் மீண்டெழுந்து கண்களில் நீர் பெருக அப்பாவை விழுந்து வணங்கி, தானே வண்டிஏறிச் சென்றதை ஊரே அதிசயமாய்ப் பார்த்தது. அந்த விவாசாயி அப்பபாவுக்கு எப்படித் தன் நன்ற்¢க் கடனைத் தீர்ப்பது என்று காத்திருந்திருக்கிறான்.

வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் லால்குடியில் வாழ்க்கைப் பட்டிருந்த சிதம்பரத்தின் அக்கா ஒரு விடுமுறையின் போது தன் மூன்று சிறு குழந்தைகளுடன் பிறந்த ஊருக்கு வந்தார். அப்போதெல்லாம் வெள்ளாற்றில் பாலம் கட்டியிருக்க வில்லை. அதனால் திருச்சியிலிருந்து லால்குடி வழியே விருத்தாசலம் நோக்கி வரும் பஸ் மூன்று மைலுக்கு அப்பால் ஒரு கிராமத்துடன் நின்று விடும். அக்கா வழக்கமாய் அப்பாவுக்கு, பஸ் நிற்கும் ஊருக்கு வண்டி அனுப்பச் சொல்லி முன்னெச்சரிகையாய்க் கடிதம் எழுதிவிட்டே வருவது வழக்கம். இம்முறை கடிதம் போட்டும் உரியநேரத்தில் அப்பாவுக்குக் கிடைக்காததால் வண்டி வரவில்லை. மாலை இருட்டும் வேளையில் குழந்தைகளுடன் பஸ்ஸிலிருந்து இறங்கிய அக்காவுக்கு வண்டியைக் காணாமல் பகீரென்று ஆகி விட்டது. அது அத்துவானக் காடு. ஊர் என்கிற பெயரில் ஓரிரு குடிசைகளே அங்கு இருந்தன. அங்கு இரவு தங்கி மறுநாள் போக எந்த நாதியும் இல்லை. திகைத்துப் போன அக்காவுக்கு அழுகை வந்து விட்டது.

அப்போது தெய்வமே அனுப்பியதுபோல ஒரு கட்டை வண்டி அந்த வழியே வந்தது. வண்டியோட்டி குழந்தைகளுடனும் மூட்டை முடிச்சுகளுடனும் ஒரு பெண் அநாதரவாய் நிற்பதைப் பார்த்துப் பரிதாபப்பட்டு வண்டியை நிறுத்தி இறங்கி அருகில் வந்தான். ”ஆரும்மா அது? தனியா அத்துவானக் காட்டுலே இருட்டு நேரத்துக்கு வந்து நிக்கிறியே?” என்று அனுதாபத்துடன் கேட்டான். அக்கா ஆதரவான வார்த்தைகளால் நெகிழ்ந்து அழுதபடியே, வண்டி அனுப்பச் சொல்லி அப்பாவுக்கு எழுதிவிட்டே வந்தும் எதனாலோ இப்படி நிற்கும்படி ஆகி விட்டது என்று சொல்ல, அவன் மேலும் எந்த ஊர், யார் வீடு என்றெல்லாம் கேட்டிருக்கிறான். அக்கா ஊரையும் அப்பாவின் பெயரையும் சொன்னதைக் கேட்டதும் அவன், ”ஆ! எங்க சாமியின் பொண்ணா? ஆண்டவன் சரியான நேத்துலே எங் கடனைத் தீக்க அனுப்பிச்ச மாதிரி இருக்கு” என்று உருகி இருக்கிறான். பிறகு தான்தான் அப்பாவால் உயிர் மீட்கப்பட்ட விழுதுடையான் விவசாயி என்று சொல்லி, ”கவலப் படாதம்மா! அப்பா பண்ணிய புண்ணியம் தான் என்னக் கொண்டாந்து விட்டுருக்கு. வண்டியிலே ஏறு. நா கொண்டு போயி சேக்கிறேன்” என்று சொன்னான். சொன்ன படியே வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பினான்.

அப்பா இருந்தவரை இந்தப் பிராந்தியமே பாம்புக்கடி பயமே இல்லாமல் நிம்மதியுடன் இருந்தது. இன்னும் சொல்வதானால் அப்பா இருக்கும் தைரியத்தில் ஒரே பாம்பால் மூன்று முறை கடிபட்டு அப்பாவிடம் ஓடி வந்து பச்சிலை விழுங்கிஅந்தப் பாம்பை விடாமல் துரத்தி மண் வெட்டியால் வெட்டிக் கொன்று வீரசாகசம் புரிந்தவனும் அடுத்த ஊரில் இருந்தான்.

தெருக்குறடும் திண்ணையும் நினைவூட்டிய அப்பாவின் பெருமை மிக்க அந்தக் நிகழ்ச்சிகளை, சிதம்பரம் மருதுவுக்குச் சொல்லும் சாக்கில் தனக்குள்ளும் ஓடவிட்டு லயித்து நின்றார்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்