காலர் (கழுத்துப்பட்டி)

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

அப்துல் கையூம்


யாருமே தொடாத சப்ஜெக்ட்டை பத்தி எழுதுனா, ‘காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாமே’ன்னு நான் நெனச்சபோது, எனக்கு ‘சட்டைக் காலரு’தான் சட்டுன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. சுத்தியுள்ள எட்டுப்பட்டிக்கும் இந்த கழுத்துப்பட்டி விஷயம் போயி எட்டுனா நல்லதுன்னு முடிவு செஞ்சிட்டேன்.

வேற சப்ஜெக்ட்டே கெடக்கலியா? போயும் போயும் சட்டைக் காலருதான் கெடச்சுதா? அடுத்தாப்புலே என்ன? காஜா, பொத்தான், ஜோப்புன்னு எழுதிக் கிட்டே போவீங்களான்னு கேக்கலாம்.

இத்துனூண்டு காலருலே இவ்ளோ மேட்டர் அடங்கியிருக்கிற விஷயம் தெரிஞ்சா, காதலைப் பத்தி எழுதற கவிஞருங்க எல்லோருமா சேர்ந்து கண்டிப்பா காலரைப் பத்தி எழுத ஆரம்பிச்சுடுவாங்க.

மணிபர்ஸ் வைக்கிறதுனாலே ஜோப்பு/ ஜேப்புக்குத்தான் கூடுதல் மரியாதேன்னு இதுநாள்வரை நெனச்சுக்கிட்டு இருந்தது தப்பாப் போச்சு. (இத ‘ஜேப்’புன்னு சொல்லுறதுதான் கரெக்ட்டுனு நெனக்கிறேன். ஜேப்படி திருடன்னுதானே சொல்றாங்க. ஜோப்படி திருடன்னு சொல்லுறதில்லையே?) காலரை வச்சுதான் மரியாதைங்குற விஷயத்தெ அப்புறமாதான் புரிஞ்சுக்கிட்டேன்.

மீன் எப்படின்னு தெரிஞ்சுக்குறதுக்கு அதோட செதிலை தூக்கிப் பார்ப்பாங்க. Man எப்படின்னு தெரிஞ்சுக்க அவனோட காலரை தூக்கிப் பார்த்தா போதும்.

ஒரு மனுஷனை எடை போட Weighing machine தேவையில்லே. காலரை வச்சு ஒரு மனுஷனை எடை போட்டுடலாம். ஒருத்தனோட தகுதி, தராதரம் அவனோட காலரை வச்சு கணிச்சுடலாம்.

ஆச்சரியப்பட வேண்டாம். காலரை வச்சு ஒருத்தரை ஈஸியா identify பண்ணிடலாம். (ஓஹோ.. இதத்தான் Caller-id ன்னு சொல்லுறாங்களோ?)

இந்த இரண்டு இஞ்ச் சமாச்சாரம் ஒருத்தனோட பொருளாதார நெலமையை புட்டு புட்டு வச்சிடுதுன்னு சொன்னா அது ஆச்சரியம் இல்லீங்களா? அதனாலேதான் காலருக்கு ‘டை’கட்டி (ஆங்கிலக் கோவணம்) அழகு பாக்குறாங்களோ? (கோவணத்தை Indian Tie –ன்னு கிண்டல் செய்யும்போது English Tie-யை ஆங்கிலக் கோவணும்னு வருணிச்சா என்னங்க தப்பு?)

“பையன் White collar Job பாக்குறான்னு” சொன்னா அவனுக்கு ஒசத்தியான உத்தியோகம்னு அர்த்தம். காலருலே அழுக்கே படியாத அளவுக்கு ஆபிஸ்லே ஏசி காத்து வாங்கிக்கிட்டு, ஜாலியா சீட்டுலே உக்காந்து ஜோலி பாக்குறான்னு நாம புரிஞ்சுக்கணும்.

“Blue Collar Job”-ன்னு சொன்னா நெத்தி வேர்வை நெலத்துலே ஒழுக, உப்பு வேர்வை காலருலே படிய, உழைச்சு ஓடா தேயுறான்னு உள்ளர்த்தம்.

இதையே கொஞ்சம் தத்துவம் மாதிரி சொல்லனும்னா “கைகட்டி சேவகம் புரியுறவங்களோட காலரு அழுக்கா இருக்கும். டைகட்டி சேவகம் புரியுறவங்களோட காலரு அழகா இருக்கும்”

Blue Collar-ன்னு ஏன் சொல்றாங்கன்னுதான் புரியலே. உழைப்பாளிங்களோட காலரை செக் பண்ணி பார்த்தோம்னா வேர்வை பட்டு அழுக்காகி பழுப்பு நெறமா மாறிப் போயிருக்கும். Brown collar அல்லது Black Collar-ன்னு சொன்னாலாவது பொருத்தமா இருக்கும். ஒருக்கால் வெள்ளைக்காரங்களுக்கு நீல நிறத்துலேதான் வேர்வை வெளியாவுதோ என்னமோ தெரியாது.

(இந்த வெள்ளைகாரங்களே இப்படித்தான்! புளு சிப்ஸ், புளு மூன், புளு டூத், புளு பிலிம் – னு சொல்லுவாங்க. ஆனா நீலக் கலருக்கும் இதுக்கும் எந்தவித சம்பந்தமும் இருக்காது)

தன்னோட பொண்ணுக்கு ‘வொயிட் காலர் ஜாப்’ பாக்குறவன்தான் மாப்பிள்ளையா வரணும்னு ஒவ்வொரு தகப்பனும் ஆசைப்படறது என்னவோ நியாயந்தாங்க.

ஒரு சிலபேரு காலருலே அழுக்கு படியாம இருக்குறதுக்காக கைக்குட்டையை சுருட்டி, கழுத்துப்பட்டிக்கு அடியிலே ஸ்பாஞ்ச் மாதிரி வச்சுக்குவாங்க. வேற எதுக்கு? சட்டையை துவைக்காம இன்னும் கொஞ்ச நாளு போடலாம்னுதான். பாக்கியராஜ் கூட ஒரு படத்துலே இந்த கர்‘சீப்’ சமாச்சாரத்தை கச்சிதமா காட்டுவாரு.

இந்த மாதிரி வினோதமான யுக்தியெல்லாம் நாமதான் கண்டு புடிச்சு வச்சிருக்கோம். சிம்கார்டை அமெரிக்காகாரன் கண்டு புடிச்சான்; செல்லுலார் போனை ஜப்பான்காரன் கண்டு புடிச்சான்; Missed Call-யை நம்ம ஆளுதான் கண்டுபுடிச்சான்னு பெருமையா சொல்லுறதில்லையா? அதுமாதிரிதான் இதுவும்.

சட்டைக்கு ஒரு தனி மரியாதை கொடுக்கறதே இந்த காலருதான். ‘கோயில் இல்லா ஊரிலே குடியிருக்க வேண்டாம்’ங்குற பழமொழி மாதிரி “காலர் இல்லா சட்டையை கழுத்தில் அணிய வேண்டாம்”ன்னு யாராச்சும் பழமொழி எழுதி வச்சிட்டு போயிருந்தா தேவலை.

‘கவிதைக்கு பொய்யழகு’, ‘தமிழுக்கு “ழ” அழகு’, ‘ஒளவைக்கு கூன் அழகு’ன்னு எழுதுன கவிஞர் வைரமுத்து ‘சட்டைக்கு காலர் அழகு’ன்னு எழுத மறந்ததற்கு காரணம், அவரே காலர் இல்லாத சட்டை போட்டுக்கிட்டு அலையுறதுனாலேதான்னு திட்டவட்டமா நம்புறேன்.

காலர் இல்லாத சட்டையைப் பார்க்கும்போது Map-லே காஷ்மீர் மாநிலம் இல்லாத இந்திய தேசம் மாதிரி மொழுக்குனு இருக்கும். தாடி வைக்காத மன்மோகன் சிங் மாதிரி, தலைமுடியில்லாத அப்துல் கலாம் மாதிரின்னுகூடச் சொல்லலாம்.

மா.பொ.சி.யோட மீசை மாதிரி தொங்கிப் போகாம, பாரதியோட மீசை மாதிரி காலர் வெறப்பா நின்னுச்சுன்னா, அந்த டிரஸ்ஸுக்கு சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்ட மாதிரி ஒரு Manliness கூடிடுது.

ஒரு மனுஷன் குண்டா இருந்தாலும் சரி, ஒல்லியா இருந்தாலும் சரி, அவன் உடுத்துற உடையோட அளவை இந்த காலர் சைஸ்தான் நிர்ணயிக்குது. லாஜிக்படி பார்த்தா ஒரு மனுஷனோட அந்தஸ்தை மாத்திரம் அல்ல, உடல் பருமனையும் இந்த காலர்தான் Deciding Factor-ஆ இருந்து முடிவு பண்ணுது. நம்மளோட கைமுட்டு அளவுதான் இதயத்தோட சைஸ். அதுபோல காலரு சைஸ்க்கு தகுந்த மாதிரிதான் நம்ம உடம்போட சைஸும் அமைஞ்சிருக்கு. சூசகமா சொல்லனும்னா ‘காலர் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்’.

நான் காலேஜ்லே படிக்கறப்போ “அறிவு ஜீவி”ங்கன்னு சொல்லிக்கிட்டு ஒரு கோஷ்டி அலைஞ்சாங்க. குஞ்சு தாடி, ஜோல்னா பை சகிதம் காணப்படுவாங்க. (இப்பவும் இருக்காங்க. ஆனா வேற கெட்டப்புலே). கையிலே ஹெரால்ட் ராபின்ஸன் நாவல் வச்சிருப்பாங்க. வசனக் கவிதை எழுதுவாங்க. இந்தி கஜல் பாட்டை (புரியுதோ இல்லியோ) ரசிச்சு கேப்பாங்க. ஆர்ட் பிலிம், மாடர்ன் ஆர்ட் இதுதான் புடிக்கும்னு சத்தியம் செய்வாங்க. சர்ரியலிஸத்தை பத்தி விளக்குவாங்க. (எனக்கு புரிஞ்சது மாதிரியும் இருக்கும், புரியாத மாதிரியும் இருக்கும்). எல்லாத்துக்கும் மேலாக, காலர் இல்லாத சட்டைதான் (ஜிப்பாதாங்க) போட்டுக்கிட்டு அலைவாங்க. நம்மள விட வித்தியாசமா ஏதாவது செய்துக் காட்டணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலைவாங்க.

ஒருத்தன் பெருசா பீத்திக்கினும்னு சொன்னா வளவளான்னு பெருமைகளை வாய்க்கிழிய அடுக்கி, எனர்ஜியை வேஸ்ட் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. அசல்ட்டா காலரை தூக்கி விட்டுக் கொண்டாலே போதும். இந்த சைகை யூனிவர்சல் லாங்குவேஜ். காலர் இல்லாத சட்டை போடுற அறிவுஜீவிங்க பாடு பெரும் திண்டாட்டம்தான்.

எத்தனையோ சிதம்பர ரகசியம் இந்த ரெண்டு இஞ்ச் காலருக்குள்ளே ஒளிஞ்சிருக்கு.

சட்டைக்காலரை பின்னுக்குத் தள்ளிவிட்டு நெஞ்சை நிமிர்த்தி நடந்தா, அவன் திமிறு புடிச்சவன்னு கண்டுபுடிச்சிடலாம்.

“யூ ஸ்டுப்பிட். கெட்-அவுட் ஆப் மை ரூம்”- ன்னு ஆபிசர் கத்தித் தொலைக்க வேண்டியதில்லை. பியூன்கிட்ட சொன்னா போதும். அவன் காலரை புடிச்சு தரதரன்னு இழுத்துக்கிட்டு போயிடுவான். காலருக்குள்ள disadvantage இது.

‘சாம, தான, பேத, தண்டம்’ உபாயத்தில் கடைசி முறையைக் கையாளுறவங்க கடனை வசூலிக்க காலரைத்தான் ‘பிடி’வாரண்ட்டாக பயன்படுத்துறாங்க. சினிமாவில் ஈட்டிக்காரன் (பெரும்பாலும் ஆப்கானிஸ்தான்காரனாகத்தான் இருக்கும்) “ஹே ஷைத்தான்கி பச்சா!”ன்னு சொல்லி காலரைப் பிடித்து அலக்காகத் தூக்கி வசனம் பேச இந்த காலர் பயன்படுது.

(வாத்தை கழுத்தைப் புடிச்சு தூக்கனும்; கோழியை காலை புடிச்சு தூக்கனும்; பூனையை பிடறியைப் புடிச்சு தூக்கனும்; முலை காதைப் புடிச்சு தூக்கனும். கடன் வாங்கி கொடுக்காதவனை காலரை புடிச்சுதான் தூக்கனும் போல)

“The Police man collared the pick pocket thief” ன்னு இங்கிலீஷ்லே சொன்னா ‘ஜேப்படி திருடனை போலீஸ்காரர் கையும் களவுமா புடிச்சுட்டாரு’ன்னு அர்த்தம். காவலருக்கு பிரமோஷன் கிடைச்சா மொதல்லெ காலருக்குத்தான் அவர் நன்றி சொல்லனும்.

‘காலர்’ போட்ட நாய் மேலே கார்ப்பரேஷன்காரங்க கை வைக்கிறதில்லேன்னா காலரோட மகிமையை நல்லா புரிஞ்சிக்குங்க.

அன்னிக்கு உடம்புக்கு முடியலேன்னு வந்த நண்பர் காதர்பாயை பார்த்தப்போ, எனக்கு ‘குபுக்’குன்னு சிரிப்புதான் வந்துச்சு. கழுத்துலே நரம்பு பிரச்சினைன்னு சொல்லி அவருக்கு இந்த ‘செர்விக்கல் காலரை’ மாட்டி விட்டுட்டாரு டாக்டரு. ‘காதர்பாய்’ன்னு கூப்பிடுறதுக்கு பதிலா ஆசையா அவரை ‘காலர்பாய்’ன்னு கூப்பிடனும்னு தோணிச்சு. கழுத்துலே அடுக்கடுக்கா வளையம் அணிஞ்ச ஆப்பிரிக்க பழங்குடியினர் மாதிரி அட்டகாசமா இருந்தாரு. என் கையிலே மாத்திரம் அப்போ காங்கோ ட்ரம் இருந்திருந்தா ஓசிபிஸா பாணியிலே ஒலியெழுப்பி அவரை ஆப்பிரிக்கா நடனம் ஆட வச்சு பார்த்திருப்பேன். கஷ்டப்பட்டு அவரு தலையைத் திருப்பியதை பார்த்தப்போ எனக்கே கழுத்துவலி வந்துடற மாதிரு இருந்துச்சு.

நான் சின்னப் பையனா இருந்தப்போ அந்த “Stiff Collar” பேஷன் வந்துச்சு. காலருக்கு அடிப்பகுதியிலே ஒடுக்கமா ஒரு ரகசிய பாக்கெட் இருக்கும். அதுக்குள்ளார ஐஸ்கிரிம் சாப்பிடுற குச்சி மாதிரி ஒரு பிளாஸ்டிக் பட்டை இருக்கும். தேவைப்பட்டா பட்டாக்கத்தியை உருவுற மாதிரி, எடுத்து உருவி நாக்கு வழிச்சுக்கலாம். அதுலே அப்படி ஒரு சவுகரியம்.

36”, 40” அகலத்திலே பெல்ஸ் மாட்டிக்கொண்டு திரிஞ்ச வாலிப வயசுலே எந்த அளவுக்கு அகலமான காலர் வச்சிருக்கோமோ அந்த அளவுக்கு அல்ட்ரா மாடர்ன்னு அர்த்தம். கமல், ரஜினி, சுதாகர், சுமன், பாக்யராஜ் போன்றவங்க ‘கழுதைக் காது’ மாதிரி பெரிய்ய்ய்ய.. காலர் வச்ச சட்டையை போட்டுக்கிட்டு பந்தா செஞ்ச காலம் அது.

கழுதைக்காது காலரு வச்ச சட்டை அணிஞ்சுக்கிட்டு, நாக்கைத் தொங்க போட்டுக்கிட்டு ஜொள்ளுவிடும் ஆசாமிகளைப் பார்க்கறப்போ ரெண்டு எக்ஸ்ட்ரா நாக்கு தொங்குற மாதிரி இருக்கும்.

இப்ப என்னடான்னா 18-ஆம் நூற்றாண்டுலே பேஷனாட இருந்த டபுள் காலரு மறுபடியும் பேஷனா வந்திருச்சு.

காலம் எப்படியெல்லாம் காலரை பரிணாமம் எடுக்க வச்சுச்சுன்னு யோசிச்சு பாருங்களேன். கூர்மையான காலர், மொழுக்கென்ற காலர், குட்டை காலர், நீளமான காலர், பொத்தான் வச்ச காலர், பொத்தான் வைக்காத காலர், இப்படி எத்தனையோ ரூபத்துலே அவதாரம் எடுத்துச்சு. சிங்கப்பூருலேந்து வந்த ஒரு குறிப்பிட்ட மாடல் எங்க ஊருலே ரொம்ப பிரபல்யமா இருந்துச்சு. சட்டை வேற நெறத்துலே இருக்கும் ஆனா காலர் மட்டும் வெள்ளை நெறத்துலே இருக்கும்.

17-ஆம் நூற்றாண்டுலே ஷேக்ஸ்பியர் அணிஞ்சிருந்த காலர் பயங்கர அகலமா இருக்கும். ‘ஹை நெக் காலர்’, ‘பட்டர் ப்ளை காலர்’, ‘விங் காலர்’, ‘பிக்கடில்லி காலர்’, ‘பிரின்ஸ் ஆப் வேல்ஸ் காலர்’, ‘பீட்டர் பேன் காலர்’ன்னு எவ்வளவோ பேஷன் வந்து ரிபீட்டும் ஆயிடுச்சு. ஜவஹர்லால் நேரு அணிஞ்சிருந்த காலர் இதுவரைக்கும் ‘நேரு காலர்’ன்னு அறியப்படுது.

18-ஆம் நூற்றாண்டுலே இங்கிலாந்துலே பிரபல்யமா இருந்த காலரைப் பார்த்தா ஒவ்வொன்னும் விசிறி சைஸுலே இருந்துச்சு. கழுத்துலே பெரிய கவசத்தை மாட்டிக்கிட்டு அலைஞ்சிருக்காங்க.

வளைகுடா நாட்டுலே Thobe –ன்னு சொல்லக்கூடிய நீண்ட வெள்ளை அங்கியை அரபிங்க அணியுறது வழக்கம். அந்த உடை தைக்கப் பட்டிருக்கிற அமைப்பை வச்சு அவுங்க எந்த நாடுன்னு ஈஸியா கண்டு புடிச்சுடலாம். அங்கியிலே காலர் இருந்துச்சுன்னா கத்தார்; அரைகாலர் இருந்துச்சுன்ன பஹ்ரைன் அல்லது குவைத், காலரே இல்லாம குஞ்சம் தொக்கிக்கிட்டு இருந்தா துபாய், காலரே இல்லாம இருந்தா ஒமான் – இப்படி காலரை வச்சே கணிச்சிடலாம். இதுவும் ஒரு விதத்துலே Caller-id மாதிரிதான்.

அன்னிக்கு நான் அவசரமாக ஆபிஸ் புறப்படும்போது “இப்படி ட்ராகுலா மாதிரியா ஆபிஸுக்கு போறது?”ன்னு டோஸ் விட்டா என் வூட்டுக்காரி. வாயிலே ஏதாச்சும் ரத்தக்கறை இருக்குதான்னு தடவிப் பார்த்தேன். அப்படி ஒண்ணுமே இல்லை. தெத்துப்பல்லுகூட எனக்கு கெடையாது. காலரை சரி செய்யாம கிளம்பியதை அப்புறமாத்தான் கவனிச்சேன். அது 90 டிகிரி கோணத்துலே வானத்தை பார்த்துக்கிட்டு துறுத்திக்கிட்டு நின்னுச்சு.

ஒரு சாதாரண காலர் – கொஞ்ச நேரத்துலே நல்ல மனுஷனை கெட்ட ஷைத்தானா ஆக்கிடுச்சேன்னு அப்படியே உறைச்சு போயிட்டேன். ஸ்ட்ரா போட்டு கொக்கோ கோலா குடிக்கிற ஒரு அப்பாவியை ஸ்ட்ரா இல்லாமலே ரத்தம் குடிக்கிற ட்ராகுலாவா மாத்திடுச்சு பாருங்க. மீன் Eater–ஆ இருந்த என்னை Man Eater – ஆ ஆக்கிடுச்சு. பசும்பால் குடிக்கிற என்னை “Cannibal” ஆக்கிடுச்சேன்னு ஆடியே போயிட்டேன்.

“ஓ! காலர் ! துஸி கிரேட் ஹோ!!”-ன்னு பஞ்சாபி பாஷையிலே உரக்கமா கத்தணும் போல இருந்துச்சு மனசு.

vapuchi@gmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்