கார்டோசாட் -1 : தொலையுணர்வு செயற்கைக்கோள்

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

நேசகுமார்


இக்கட்டுரை வெளியாகும் நேரம் கார்டோசாட்-1 (CARTOSAT1)ம் ஹாம்சாட்டும்(HAMSAT) விண்ணில் ஏவப் பட்டிருக்கும். இந்தியா விண்ணில் ஏவியுள்ள தொலையுணர்வு செயற்கைக் கோள்களில் கார்டோசாட் பதினொன்றாவது செயற்கைக் கோள் என்றாலும், பல விதங்களில் இது வித்தியாசமானது.

தொலையுணர்வு செயற்கைக்கோள்கள்(Remote Sensing Satellites) சம்பந்தமாக நாம் கால்பதித்து பதினேழு ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலாக IRS-1A விண்ணில் ஏவப்பட்ட போது ஏற்பட்ட பெருமிதம் இன்னமும் நினைவில் இருக்கிறது. இன்று, உலகிலேயே சிவில் உபயோகத்தில் இருக்கிற பெரிய செயற்கைக்கோள் குழுமம் இந்த ஐஆர்எஸ் வகை செயற்கைக்கோள்கள் தாம். இவ்வரிசையில் புதிய சேர்க்கையே இந்த கார்டோசாட்-1.

கார்டோகிராபி என்பது பூமியின் பரப்பை மேப், சார்ட் ஆக வரைதலைக் குறிக்கும். இந்த கார்டோசாட்டின் பெரிய உபயோகமாக இதுதான் கருதப் படுகிறது. இரண்டரை மீட்டர் விட்டத்தில்(spatial resolution) இருக்கும் எந்த ஒரு பொருளையும் விண்ணிலிருந்து முப்பரிமானத்தில் முப்பது கிலோமீட்டர் பரப்பளவில் கறுப்பு வெள்ளைப் படங்களாக எடுக்கும் இதன் இரு காமிராக்கள். இந்த காமிராக்களை செயற்கைக்கோளின் சுழற்சியையொட்டி கோணங்களை மாற்றி ஒரே பொருளை இரு வேறு கோணங்களில் படமெடுத்து 3D படங்களை தரக்கட்டுப் பாட்டு அறைக்கு பெற்றுக் கொள்ளலாம். சூரிய சுழற்சியையொட்டி இந்த செயற்கைக் கோள் சுழலும் என்பதால், தரக்கட்டுப் பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள முடியாத நேரங்களில் இப்படங்களை 120GB அளவில் சேமிக்கவும் வசதி இருக்கிறது.

உலகிலேயே முதன் முறையாக ஓடுதளத்தில் ஸ்டாரியோ இமேஜிங் வசதியுள்ள செயற்கைக்கோள் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தரமான படங்களை அமெரிக்காவிலிருந்து ஏகப்பட்ட விலைகொடுத்து வாங்கி வந்த நாம், இதன் மூலம் மிகக் குறைந்த விலையிலேயே இவற்றைப் பெற முடியும். நிறையவே முன்னேறியிருக்கின்றோம் என்றாலும், இன்னமும் முன்னேற வேண்டியது இருக்கிறது. உதாரணமாக இந்த கார்டோசாட்டின் இரண்டரை மீட்டர் ரெஸல்யூஷனில் ஒரு வீட்டை படமெடுக்கலாம், வீட்டின் வெளியே நிறுத்தப் பட்டிருக்கும் காரைப் படமெடுக்கலாம். ஆனால் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டோர் பைக் தெளிவாகத்தெரியாது. இது சம்பந்தமாகவும் இஸ்ரோ(ISRO) தொடர்ந்து முனைந்து வருகிறது. அடுத்து ஏவப்படவிருக்கும் கார்டோசாட்2 ஆனது, ஒரு மீட்டர் ரெஸல்யூஷனைக் கொண்டிருக்கும். அதே போன்று ராடார் இமேஜிங் சாடிலைட்(RISAT) அடுத்த ஆண்டு வாக்கில் ஏவப்படவிருக்கிறது.

இவ்விஷயங்களில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வந்தாலும், இவற்றைப் பயன்படுத்துதல் எதிர்பார்த்தாற்போல் இல்லை என்பது வருத்தமளிக்கும் விஷயமே. முன்பு இஸ்ரோவில் பணிபுரிந்து தற்போது அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில் பணிபுரிந்து வரும் நன்பர் ஒருவரிடம் இரண்டாண்டுகளுக்கு முன்பு செயற்கைக்கோள் படங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்த போது, இந்தியாவில் தொழில் நுட்பம் வெகுவாக முன்னேறிக் கொண்டிருப்பது உண்மைதான் ஆனால் இந்த தொழில்நுட்பங்களைப் புரிந்து கொண்டு பயன்படுத்துதல் தொடர்பாக நாம் இன்னமும் பின் தங்கியே இருக்கிறோம் என்றார். ஆனால், ஆறுதலிக்கும் ஒரே விஷயம், இது தொடர்பாக மேலை நாடுகள் கூட தட்டுத் தடுமாறியே முன்னேறின என்பதுதான். உதாரணமாக, இதைவிட முன்னேறிய உளவுக் கோள்கள் இருந்தும் அமெரிக்காவால் இந்திய அணுச்சோதனையை கண்டு கொள்ள முடியவில்லை. அந்தமானில் சுனாமி அடித்துச் சென்ற போது, அடுத்து மெயின்லாண்டிலும் இந்த சுனாமி தனது கைவரிசையைக் காட்டும் என்ற அடிப்படை யூகம் கூட நம்மால் முடியவில்லை. சரியான இடத்திற்கு செய்யப் பட்டஒரு செல்பேசி தகவல் இதைத் தவிர்த்திருக்கக் கூடும்.

தகவல் பரிமாற்றம் குறித்து கூறும்போது, ஹாம்சாட் பற்றி குறிப்பிடவேண்டும். பல உலக நாடுகளில் ஹாம் உபயோகிப்பவர்கள் பலவித இயற்கை அழிவுகளின் போது பெரும் பணியாற்றியிருக்கின்றனர். இந்தியாவில் இது குறித்த அதிக செய்திகள் இல்லை. இன்றைய தேதியில் ஹாம் உபயோகிப்பாளர்கள் கூட இணையத்துக்கு தாவிவிட்ட நிலையில் இதன் பயன் குறித்து ஐயப்பாடுகள் எழுகின்றன. இரண்டாவது செயற்கைக்கோளாக அதே ராக்கெட்டில்(PSLV-C6) அனுப்பவதால் செலவு குறைகிறதென்று இஸ்ரோ இம்முடிவை எடுத்திருக்கலாம். இந்த ஹாம்சாட்டில் பலவித புதிய தொழில்நுட்பங்கள் பரிசோதிக்கப் படுவதாக இஸ்ரோ தெரிவித்திருக்கின்றது. இந்த செயற்கைக்கோளில் பயன்படுத்தப் படும் இரண்டு ட்ரான்ஸ்பாண்டர்களுமே பொதுப்பயனாளர்கள் வடிவமைத்தது தான். ஒன்றை இந்தியப் பொது பயனாளர்கள் வடிவமைத்திருக்கின்றனர், மற்றொன்றை நெதர்லாண்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வடிவமைத்துத் தந்திருக்கின்றார். உலக ஹாம் பயனாளர்களுக்கு எமது கொடை இது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் செலவில்லாமல் தகவல் பரிமாற்றங்களை பரிமாறிக்கொள்ளுதல் எளிதாகும் என்றும், பெரும் அழிவு ஏற்படும் காலங்களில் கூட ஏனைய தகவல் பரிமாற்றச் சேவைகள் தடங்கலுக்குள்ளாகும் போது இது மக்களுக்கு துணைபுரியும் என்றும் தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளது. விழிப்புணர்வு, முயற்சி ஆகியவை பொதுமக்களிடையே அதிகரித்து வருவதை சுனாமியைத் தொடர்ந்த செயல்திறனில் காணமுடிந்தது. இந்நி லையில் பயன்பாடு குறித்த ஐயங்களையும் மீறி இது நன்மையே பயக்கும் என்று நம்புவோம்.

பிரச்சினைகள் பல இருந்தாலும், டெக்னாலஜியில் நாம் முன்னேறி வருவதற்கு எடுத்துக் காட்டு இதுபோன்ற சாதனைகள். சுற்று வட்டாரத்தில் ஏனைய நாடுகள் தொட முடியாத சிகரங்களையெல்லாம் நாம் தொட்டிருக்கிறோம். இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமானால், நமது பாதுகாப்பை பலப் படுத்திக் கொள்ள வேண்டுமென்றால், டெக்னாலஜியின் துணையை நாடுவதே ஒரே வழி. புதிய நுட்பங்களை நாம் கற்பதில் பிந்தங்கயிருந்ததாலேயே அன்னியர்களிடம் அடிமைப் பட நேர்ந்தது, அதைத் தொடர்ந்து பாதிக்கப் பட்ட வாழ்க்கைத் தரம், சிந்தனாவாத குறைபாடுகள் போன்ற அல்லல்களுக்கும் ஆட்பட நேர்ந்தது. மேலும், இது போன்ற பொது தொழில்நுட்பங்களின் உபரியாக(spin-off) பாதுகாப்புத் துறையில் பலப்படுதலும், பாதுகாப்பு பலப்படும்போது பொது வாழ்வின் தரம் உயர்வதும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் இரட்டைக் குழந்தைகள் – தனிப்பட்டவை அல்ல. இதனாலேயே இதில் செலவிடும் தொகைக்கான பயன்கள் தொலைநோக்கில் கணித்தோமானால் அளவிடற்கரியனவே.

கார்டோசாட்-1 இன்னும் பதினெட்டு மாதங்களில் தமது பணியை முடித்துவிடும் எனத் தெரிகிறது. அதற்குள் இன்னமும் தெளிவான கார்டோசாட்-2 தமது பணியைத் துவங்கிவிடும். சரியான முறையில் இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் அழிவுகளைத் தொடர்ந்த ஆக்கபூர்வ பணிகளைச் செம்மைப் படுத்தல், நீர்வள மேம்பாடு, காடுகள் அழிக்கப் படுவதை கணித்து ஆவன செய்தல், மக்கள் குடியிருப்புகள் தொடர்பான திட்டமிடுதல்களை செம்மைப் படுத்துதல் போன்ற பணிகளை சிறப்பாகச் செய்யலாம். பெரு நகர மேம்பாட்டில் இப்போது நுழைந்துள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இவை பெரும் துணை புரியும். இத்தருணத்தில், இச்சாதனையை நிகழ்த்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் நமது நன்றிகளைச் சொல்வோம்.

– நேச குமார் –

நேசகுமாரின் வலைப்பதிவு

Series Navigation

author

நேச குமார்

நேச குமார்

Similar Posts