காத்தவராயனுக்கு காத்திருப்பது

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

அ.முத்துலிங்கம்


ரொறொன்ரோவில் வடக்கு, தெற்காக ஓடும் ஒரு வீதி இருக்கிறது. அதன் பெயர் பேர்ச்மவுண்ட். அந்த ரோட்டில் இருந்து அதிவேக சாலைகளுக்கு போகமுடியாதபடியால் அதிக பிரபலம் இல்லாதது. ஒரு நாள் அதில் தெற்குப் பக்கமாகப் போகும்போது கண்ட ஒரு துணி விளம்பர வாசகம் என்னைத் திடுக்கிட வைத்தது. தமிழில் கொட்டை எழுத்தில் ‘காத்தவராயன் கூத்து ‘ என்று போட்டிருந்தது. அதை எழுத்துக்கூட்டி வாசித்து முடிப்பதற்கிடையில் கார் அந்த இடத்தை தாண்டிவிட்டது. உடனேயே ஒரு ‘ப ‘ திருப்பம் செய்து மீண்டும் வந்து துணி விளம்பரம் காட்டிய மண்டபத்துக்குள் நுழைந்தேன்.

வாசலில் நின்ற ஒரு தடியான ஆள் என்னை மறித்தார். ஒரு 55 இன்ச் டிவியை அவருடைய முதுகு தாராளமாக மறைக்கும். என்னுடைய முகத்தை பார்க்காமலே பத்து டொலர் என்றார். அதை அவருடைய முதுகுக்கு கொடுத்துவிட்டு உள்ளே போனபோது எனக்கு பிரமிப்பான ஒரு புது உலகம் கிடைத்தது.

மண்டபத்துக்குள் ஏற்கனவே ஆயிரம் பேர் இருந்தார்கள். நான் இப்படி கணக்கு சொல்லும்போது சீட் கிடைக்காமல் ஓரங்களில் நின்றுகொண்டிருந்தவர்களையும் சேர்க்கிறேன். நெருக்கிக்கொண்டு மலிவான தகரக் கதிரைகளில் சீட் கிடைத்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சிலர் பழைய கால வெலிங்டன் தியேட்டரில் செய்வதுபோல கைலேஞ்சிகளையும், சால்வைகளையும், கைப்பைகளையும் இருக்கைகளின்மேல் போட்டு இடம் பிடித்து வைத்திருந்தார்கள். முன் வரிசைகளில் கதா காலட்சேபங்களுக்கு உட்காருவதுபோல சிறுவர் கூட்டம் நாற்காலிகளிலும், நிலத்திலுமாக குவிந்துபோய் இருந்தது. நான் விடாமுயற்சியாக முன்னேறி மழை நாள் நாய் ஈர இலைகளை மூக்கால் தள்ளிப் பார்ப்பதுபோல ஒவ்வொரு லேஞ்சியாக கிளப்பி கிளப்பி பார்த்து ஒரு சீட்டை பிடித்துவிட்டேன்.

எனக்கு பக்கத்தில் இருந்தவர் விஷயம் தெரிந்தவர்போல காணப்பட்டார். பலமுறை காத்தவரயான் கூத்தை பார்த்தவர். இந்தக் கூத்தில் நடிப்பவர்கள் எல்லோரையும் அவருக்கு தெரியும். ஒவ்வொரு அரை செக்கண்டும் எப்பொழுது துவங்கும் எப்பொழுது துவங்கும் என்று அவரைத் துளைத்துக் கொண்டிருந்தேன். அப்படி நான் கேட்டபோது தொடங்கவேண்டிய நேரத்தை தாண்டி அரை மணியாகிவிட்டது. அவருடைய பதில் ஒரே மாதிரியிருக்கும். இன்னும் அரை மணி நேரத்தில் பூசை நடக்கும். பிறகு ஆரம்பமாகிவிடும் என்றார். இப்படி கடந்த ஒரு மணித்தியாலமாக அவர் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி வந்தார்.

அப்பொழுது இரண்டு பெண்டிர் ஓடி வந்தார்கள். ஒரு பெண்ணின் இடுப்பில் கைக்குழந்தை ஒன்று கால் சட்டை மட்டும் அணிந்து மேல் சட்டை போடாமல் இருந்தது. அவள் தாவணியை இறுக்கி இழுத்து சுற்றி வந்து இடுப்பிலே மீதியை செருகியிருந்தாள். அவர்கள் வெகு தூரத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கவேண்டும். இருவருமே கழுத்து வேர்வையை வழியவிடாமல் முந்தானையால் துடைத்தார்கள். இரவுச் சமையலை அவசரமாகச் செய்து பத்திரமாக மூடி வைத்துவிட்ட அமைதியும், கூத்துப் பார்க்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சி எதிர்பார்ப்பும் அவர்கள் முகத்தில் தெரிந்தது. எனக்குப் பக்கத்தில் இருந்த லேஞ்சிகளை ஒருவர் அகற்ற அவர்கள் ஆசுவாசமாக உட்கார்ந்தார்கள்.

எங்கு பார்த்தாலும் வீடியோக்காரர்கள். அவர்கள் வயர்களை இழுத்து காமிராக்களை தயார் நிலையில் வைத்திருந்தார்கள். உயரம், கோணம், வெளிச்சம் எல்லாவற்றையும் முன்கூட்டியே பார்த்துக்கொண்டார்கள். ஒவ்வொன்றுக்கும் பிரகாசமான தனி ஒளிவிளக்குகளும் காத்திருந்தன. நான் எழும்பி நின்று சுற்றிலும் ஒருமுறை நோட்டம் விட்டேன். என்னுடைய கடைசிக் கணக்கெடுப்பில் மூன்று வீடியோ காமிராக்கள் இயங்கின; இலக்கப் புகைப்படகருவிக்காரர்கள் நாலு.

கடைசியில் ஒருவாறாக சீன் இழுபட்டது. பூசை முடிந்தது. முத்துமாரி வேடம் அணிந்த பெண் கையிலே சூலத்தை ஏந்தியபடி தோன்றினார். சொந்தக் குரலில் பாட்டுப் பாடியபடியே நடனமும் ஆடினார்; வசனமும் பேசினார். ஹார்மோனியக்காரர் விட்ட அடிகளை எடுத்துக் கொடுத்தார்; பின்பாட்டுக் காரர் பின்பாட்டு பாடினார். அந்த வகையில் மேற்கத்திய முறையில் பார்த்தால் இது ஒரு musical தான்.

ஒவ்வொரு நடிகையும் அல்லது நடிகரும் முதல் தரம் மேடையில் தோன்றும்போது நான் பக்கத்து சீட் காரரை இது யார், ஆணா, பெண்ணா என்று கேட்டபடியே இருந்தேன். ஏனென்றால் மேக்கப் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. பல விவாதங்களுக்கும், பல சீன்களுக்கும் பிறகு ஆண் வேடம் அணிந்தவர்கள் எல்லாம் ஆண்கள் என்றும் பெண் வேடம் அணிந்தவர்கள் எல்லாம் பெண்கள் என்பதையும் கண்டுபிடித்தோம். எங்கள் குழப்பத்துக்கு காரணம் இருந்தது.

இந்தக் கூத்தில் ஒரிஜினலாக ஆண்களே பெண் வேஷமும் போட்டு நடித்து வந்திருக்கிறார்கள். பெண் வேடம் என்றாலும் உள்ளே இருப்பது ஆண் என்றபடியால் பெண் அசைவுகள் மிகையாக்கப்பட்டு இருக்கும். இதிலே நடித்த உண்மையான பெண்கள்கூட ஒரு ஆண் பெண் வேடமணிந்து நடிக்கும்போது எப்படி நடிப்பாரோ அப்படியே நடித்தார். அதனால் அழகு ஒரு படி கூடியிருந்தது.

எனக்கு முன் இருந்த சிறுவர் ஆங்கிலத்திலேயே கதைத்தார்கள். அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. பெற்றோர்கள் தமிழிலேயே கதைத்தார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. பிள்ளைகளுடன் இவர்கள் தமிழில் பேசினால் அவர்கள் ஆங்கிலத்தில் பதில் சொன்னார்கள். இந்தச் சிறுவர்களுக்கு கதாபாத்திரங்கள் பாடியதும், பேசியதும் ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் டேமினேட்டர், மாற்றிக்ஸ் போன்ற ஹொலிவுட் படங்களின் கிராஃபிக்ஸ் காட்சிகளை ரசிக்கும் இந்தச் சிறார்கள் காத்தவராயன் ஆட்டத்தையும், ஆரியமாலாவின் வசனத்தையும், மாரியின் பாட்டையும் கேட்டு மெய்மறந்துபோய் நின்றது வியப்பை அளித்தது.

இதிலே இன்னொரு வேடிக்கை. ஊரிலே கூத்து நடக்கும்போது நிற்கும் ஒலிவாங்கி அல்லது தொங்கும் ஒலிவாங்கி அங்கங்கே வைத்திருக்கும். நடிகர்களுக்கு சொல்லி வைத்தபடி அவர்கள் வசனம் பேசும்போது மைக்குக்கு கிட்ட வந்து மைக்கைப் பார்த்து பேசிவிட்டு நகர்வார்கள். ஆனால் இங்கே அப்படி ஒன்றுமில்லை. ஆனாலும் ஒலி பிரமாதமாக இருந்தது. என்ன விஷயம் என்று பார்த்தேன். நடிக நடிகையர் எல்லோரும் இடுப்பில் transponder களையும், காதில் மாட்டி வளைத்த ஒலிவாங்கிகளையும் அணிந்திருந்தார்கள். ஆகவே அவர்கள் ஆடியபடி பாடலாம், ஓடியபடி பேசலாம். இந்த தொழில் நுட்ப பாய்ச்சலால் ஆட்டமும், பேச்சும், பாட்டும் என்று காத்தவராயன் கூத்து தடங்கல் இல்லாமல் நிறைவேறிக் கொண்டிருந்தது.

சிவபெருமான் வந்தார். ஒரு ஒல்லியான பையனுக்கு சிவபெருமான் வேடம் போட்டிருந்தார்கள். நீண்டு வழிந்த ஜடாமுடி, அதிலே ஓடும் கங்கை, நிற்கும் பிறை, சுருண்டு கிடக்கும் நாகம், இடையிலே புலித்தோல் என்று பொருத்தமாயிருந்தது. கழுத்திலே வலப் பக்கம் நாகம் சுற்றியிருந்தால், இடப்பக்கம் மைக்கிரபோனும் சுற்றிக்கொண்டு கிடந்தது. மான், மழு, சூலாயுதம் என்று பல உபகரணங்களை தாங்கிய சிவபெருமான் புலித்தோலில் விழாமல் குத்திவைத்த transponder ஐயும் காவினார். சிறுவர்கள் அவர் மேடையில் தோன்றியவுடனேயே விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு அது யாரென்றுகூடத் தெரியவில்லை. அதுதான் அவர்களுடைய கடவுள் என்று தெரிந்திருந்தால் இன்னும் கூட சிரித்திருப்பார்களோ என்னவோ.

இதையெல்லாம் சிவபெருமானாக நடித்த பையன் பொருட்படுத்தவில்லை. நடனக் கடவுள் என்ற பெயரைக் காப்பாற்றும் பெருமுயற்சியில் இடுப்பை ஒடித்து ஒடித்து நடனம் ஆடினான். அடிக்கடி transponder கீழே விழுந்தது. அதை எடுத்து மீண்டும் மீண்டும் புலி உடையில் சொருகிக்கொண்டு ஆட்டத்தை தாளம் தவறாமல் தொடர்ந்தான்.

நான் ஏதோ யோசனையில் அசந்திருந்த சமயம் முத்துமாரிக்கு குழந்தை பிறந்து விட்டது. ரஃவெட்டா உடையில், கன்னம் கொழுத்த, கறுப்பு பொட்டு வைத்த, சிறிய சங்கிலியில் பெரிய பதக்கம் அணிந்த குழந்தை. ‘குழந்தை, குழந்தை ‘ என்று மேடையில் இருந்தே ஒருவர் கத்தினார். உடனே சபையிலே இருந்து ஒரு குழந்தை மேடைக்கு அனுப்பப்பட்டது. அதுதான் இந்தக் குழந்தை. முத்துமாரி அந்தக் குழந்தையை வைத்து ஒரு தாலாட்டு பாடினார். அந்தக் குழந்தையும் கால்களை உதைத்து, பிரகாசமான விளக்குகளைப் பார்த்து மிரளாமல் தன் சிறு கைகளை மேலே நீட்டி சிரித்தது. தாலாட்டுக்கு பழக்கமில்லாத கனடா குழந்தை என்பதால் தூங்கவேண்டும் என்பது அதற்கு தெரியவில்லை.

பாட்டு வரும்போதெல்லாம் சனங்களும் சேர்ந்து பாடினார்கள். வசனங்கள் வந்தபோது அவை முன்னரே அவர்களுக்கு தெரிந்திருந்தபடியால் எங்கே எங்கே தலை ஆட்டவேண்டுமென்று தெரிந்திருந்தது. நாற்பது வருடங்களாக இந்த வசனங்கள் இலங்கை தெருக்கூத்துகளில் பேசப்படுகின்றன; நாற்பது வருடங்களாக இந்த பாடல்கள் பாடப்படுகின்றன. நடனங்கள் ஆடப்படுகின்றன. அதே ஹார்மோனியம்; அதே பின்பாட்டு; அதே மேக்கப்.

காத்தவராயன் பூர்வ கதையின் ஆரம்பம் எட்டாம் நூற்றாண்டு என்று சொல்கிறார்கள். காத்தவராயன் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவன். அவனுக்கு அந்த ஊர் ராசகுமாரியின்மேல் காதல் உண்டாகிவிடுகிறது. வளையல்காரன்போல மாறுவேடத்தில் போய் அரசகுமாரியை சந்தித்து தன் காதலை வளர்க்கிறான். ஒரு நாள் அரண்மனை சேவர்கள் பிடித்துக்கொள்கிறார்கள். விசாரணையில் அரசரால் கழுவேற்றப்பட்டு இறக்கிறான். அரசகுமாரியும் இறக்கிறாள். ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, அம்பிகாவதி அமராவதி, அனார்கலி சலீம் போல காத்தவராயன் ஆரியமாலாவும் ஒரு துன்பியல் காதல் கதைதான். என்னுடைய அம்மா இந்தக் கதையை சொன்ன காலத்தில் இதில் கடவுள் அம்சங்களும், கிளைக்கதைகளும் சேர்க்கப்பட்டு விட்டன. சிவாஜி கணேசனும், சாவித்திரியும் நடித்த காத்தவராயன் படம் மந்திர தந்திர காட்சிகளும், கூடுவிட்டுக் கூடுபாயும் மாயா விநோதங்களும் நிறைந்தது. இறுதியில் கழுமரம் வரவே இல்லை. போதிய திகிலூட்டுவதற்காக காத்தவராயன் உச்சக் காட்சியில் சாம்ஸனைப்போல கல் தூண்களை நொருங்கவைத்து எல்லோரையும் கொல்கிறான்.

கலாவிநோதன் சின்னமணியின் காத்தவராயன் கூத்து 40 வருடத்துக்கு முந்திய இலங்கையில் பார்த்த அதே சிந்து நடைக் கூத்துதான். பதினைந்தே நாட்களில் கனடிய நடிக நடிகையருக்கு கலாவிநோதன் பயிற்சி அளித்திருக்கிறார். அதுதவிர மேடை அமைப்பு, மேக்கப், வெளிச்சம் என்ற பல வித ஒத்துழைப்புகளுடன் இந்தக் கூத்து அரங்கேறியிருக்கிறது. இது எல்லாம் நான் பின்னே தெரிந்துகொண்டது.

கறுத்த கொழும்பான் மாம்பழத்தை அரைப்பழத்தில் மரத்திலிருந்து பறித்து, கையால் துடைத்து, தோலுடன் கடித்து கொட்டை வெள்ளையாக தெரியும்வரை உறிஞ்சி சாப்பிடுவது ஒரு ருசி. அதே மாம்பழத்தை நன்கு பழுத்த பிறகு பிடுங்கி, தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, குளிரூட்டி சாப்பிடுவது இன்னொரு ருசி. இந்த கூத்தில் தோலுடன் கடித்து சாப்பிடும் முரட்டு சுகம் இருந்தது. நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த காத்தவராயன் கூத்தில் பின் முத்துமாரி வருமுன்னரேயே நான் தூங்கிவிடுவேன். இப்பொழுது பின் முத்துமாரி, பின் காத்தவராயன், பின் நவீனத்துவம் எல்லாம் வந்து போனபோதும் நான் கண் வெட்டவில்லை. ஒரு வித்தியாசம். அப்பொழுது வீடியோப் படங்கள் இல்லை. இலக்கக் காமிராக்கள் இல்லை. இடையில் சொருகிவைத்த ஒலிகடத்திகளும், ஒலி வாங்கிகளும் இல்லை. ஆங்கிலம் மட்டுமே பேசும் குழந்தை பார்வையாளர்கள் இல்லை. வடக்கும், தெற்கும் அற்புதமாக இணையும் இந்தக் கூத்தை பார்ப்பதற்கு ஒருவருக்கு அதிர்ஷ்டம் நிறைய தேவை.

சில மாதங்களுக்கு முன்பு Lion King என்ற உலகப் புகழ்பெற்ற musical நாடகத்தைப் Princess of Wales தியேட்டரில் பார்க்க நேர்ந்தது. இதற்கு மூன்று மாதம் முன்பாகவே டிக்கட் எடுக்கவேண்டும். அவ்வளவு பிரபலமானது. ஆனால் காத்தவராயன் கூத்து பார்த்தபோது ஏற்பட்ட புளகாங்கிதத்தில் பாதிகூட Lion King பார்த்தபோது எனக்கு கிடைக்கவில்லை.

இப்பொழுதும் அடிக்கடி பேர்ச்மவுண்ட் சாலையில் போகிறேன். காரை மெதுவாகவே ஓட்டுகிறேன். ஏதாவது துணி விளம்பரத்தை கண்டால் ‘ப ‘ திருப்பம் செய்வதற்கு ரெடியாகவே இருக்கிறேன். மக்டொனால்ட் பிரதமரின் படம் போட்ட ஒரு பத்து டொலர் தாளை நாலாக மடித்து பாதுகாப்பாக என் பக்கட்டில் வைத்திருக்கிறேன். காத்தவராயன் படம் வரைந்த துணி விளம்பரம் அதற்கு பிறகு என் கண்ணில் படவே இல்லை.

முற்றும்

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்

1 Comment

Comments are closed.