கஸ்தூரி ராஜாராம்: நடப்பு அரசியலுக்குப் பொருந்தாத அரசியல்வாதி

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

மலர் மன்னன்


2008 பிப்ரவரி 8 அன்று கஸ்தூரி ராஜாராம் இறைவனடி சேர்ந்தார். அந்த திராவிட இயக்க முன்னணியாளர், ஈ. வே.ரா வின் அத்தியந்த சீடர், தமது அந்திமக் காலத்தில் மிகுந்த தெய்வ பக்தியுள்ளவராக மனதார மாறிவிட்டிருந்தமையால்தான் அவர் இறைவனடி சேர்ந்ததாக ஒரு நிச்சயத்துடன் சொல்கிறேன். மனைவி காலமான பிறகுதான் அவரிடம் இப்படி யொரு மாற்றம் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது என்றாலும், அதற்கும் முன்னதாகவே அவர் இறையுணர்வும் ஹிந்து சமூக விழிப்பும் பெறத் தொடங்கிவிட்டிருந்தார்.

ராஜாராமுடன் வெளிப்படையாகப் பழகுமாறு நேரவில்லை. மிக மிகக் குறைவாகவே அவருடன் நேரில் இருந்து பழகியிருக்கிறேன். ஒரு காலத்தில் அவ்வாறிருக்கத் தேவையும் இருந்தது. தொலைபேசி மூலமாக மட்டுமே உரையாடிக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. ஏனெனில் அவர் கருணாநிதியின் அமைச்சரவையில் வீட்டு வசதி அமைச்சராகவும் நான் அப்போது தி மு க விலிருந்து வெளியேறித் தனிக் கட்சி தொடங்கிவிட்டிருந்த எம் ஜி ஆரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பத்திரிகையாளனாகவும் இருந்தோம். ஆக, தொலைபேசி மூலமாகவே பேசிக்கொள்வது எங்களுக்குள் ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது.

அண்ணா அவர்களால் அவரது கட்சியில் தனிப்பட்ட முறையில் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு சிலரில் ராஜாராமும் ஒருவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, இயல்பாகவே சூது வாதில்லாமல், சுய நலத்திலேயே குறியாக இல்லாமல் நல்ல உள்ளத்துடன் இருப்பவர்களைத்தான் அண்ணா நேசித்தார். கஸ்தூரி ராஜாராம் அப்படிப்பட்டவராக இருந்ததால்தான் அண்ணாவின் தனிப்பட்ட பாசத்திற்குரியவராக இருக்கமுடிந்தது. இவ்வளவுக்கும் அண்ணா திராவிடர் கழகத்திலேயிருந்து வெளியேறி தி மு க வை நிறுவியபோது ராஜாராம் அவரோடு சேர்ந்து வெளியேறி உடனிருந்தவரல்ல. ஈ. வே ரா அவர்களின் மீதிருந்த நெருக்கத்தினால் திராவிடர் கழகத்திலேயே நிலைத்திருந்து, ஈ வே ரா வின் செயலாளரகவும் பணிசெய்தவர்தான் ராஜாராம். தி மு க தொடங்கப் பட்டபின் ஈ வே ராவுடன் அவருடைய செயலராக பர்மாவுக்கெல்லாம் சென்று வந்தவர். ஒரு காலத்தில் நான் வகித்த பாத்திரத்தைத்தான் இன்று ராஜாராம் வகிக்கிறான். அவனால் எவ்வளவு நாள் அங்கே இருக்க முடிகிறது பார்க்கலாம். இருக்கட்டும், இங்கே வராமல் எங்கே போய்விடப் போகிறான் என்று அண்ணா அவர்கள் தமது வெற்றிலைக் காவி ஏறிய பற்கள் தெரிய, அவருக்கே உரித்தான குறும்புப் புன்னகையுடன் ஒருமுறை சொன்னார். அவர் சொன்ன மாதிரியே 1956 ல் திருச்சியில் தி மு க வின் மாநில மாநாடு நடைபெற்ற சமயத்தில் ராஜாராம் அண்ணாவிடம் வந்து சேர்ந்துவிட்டார். அண்ணாவின் மீது இருந்த தனிப்பட்ட அபிமானம் காரணமாக அந்த மாநாட்டிற்கு நானும் சென்று, ஒரு அடைப்பக்காரனாக அவ்வப்போது அண்ணாவுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

தொடக்கத்திலேயே நம்மோடு வராமல் திராவிடர் கழகத்திலேயே இருந்துவிட்டு, இப்போது நமக்கு ஆதரவு அதிகரிப்பதைப் பார்த்துவிட்டுத்தானே வருகிறான் என்றெல்லாம் ராஜாராமை அண்ணா இரண்டாம் பட்சமாகக் கருதவில்லை. ராஜாராமின் விசுவாசம் குறித்து எவ்விதச் சந்தேகமும் கொள்ளவுமில்லை. ஒரு கட்சியிலிருந்து விலகி வரும் பிரமுகரை முதலில் மிகவும் ஆதரவோடு வரவேற்ற பிறகு செல்லாக் காசாக ஒதுக்கி வைத்துவிடும் இன்றைய சம்பிரதாயத்தை அண்ணா கையாளவில்லை.

மதியழகன், ராஜாராம், எம் ஜி ஆர் போன்றவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைக்கக் காரணமே அண்ணாவுடன் எனக்கு இருந்த அணுக்கம்தான். அவர்களுக்கு என்மீது தனிப்பட்ட ஈடுபாடு ஏற்படக் காரணமும் அண்ணாவுடனான எனது அணுக்கம்தான்.

நடப்பு அரசியலுக்குச் சிறிதும் பொருந்தாமல் அரசியல்வாதியாக இருக்க நேர்ந்த ஒருசில அரசியல்வாதிகளுள் ராஜாராமும் ஒருவர். மக்களவை உறுப்பினர், மாநில அமைச்சர் என்கிற பதவிகøளை வகித்த போதிலும் அவையெல்லாம் மக்களுக்குத் தொண்டாற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்புகள்தாம் எனப் பிடிவாதமாக இருந்தவர், அவர். பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது ஒரு சிறு வதந்திகூடப் பரவியதில்லை. கட்சியைப் பார்த்தும் ஜாதியைப் பார்த்தும் முடிவு செய்கிற போக்கும் அவரிடம் இருந்ததில்லை. இவ்வளவுக்கும் மிகத் தீவிரமான நீதிக் கட்சிப் பாரம்பரியம் அவருடையது. அந்தக் கால விசாலமான சேலம் மாவட்டத்திலேயே பிரபல நீதிக் கட்சிப் பிரமுகராக விளங்கிய கஸ்தூரிப் பிள்ளையின் மகன்தான் ராஜாராம். ஒருமுறை பத்திரிகையில் நான் ராஜாரமைப் பற்றி எழுதுகையில் கஸ்தூரி ராஜாராம் என்று குறிப்பிட்டேன். அதைப் படித்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த ராஜாராம், “”இப்படி யாருமே என்னைக் குறிப்பிட்டதில்லை. நீங்கள் இவ்வாறு குறிப்பிட்டது வித்தியாசமாக மட்டுமல்ல, மகிழ்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது. இனிமேல் இப்படியே குறிப்பிடுவீர்கள்தானே” என்று ஆசையுடன் கேட்டார். “கஸ்தூரிப் பிள்ளை என்கிற உங்கள் தகப்பனாரை நினைவூட்டுவதற்காக மாத்திரமல்லாமல் நறுமணம் வீசுகிற உங்கள் நல்ல மனதிற்காகவும்தான் அவ்வாறு எழுதினேன்’ என்று சொன்ன போது, குழந்தைபோலக் குதூகலித்து, கரத்தைப் பற்றி முத்தமிட்டார்.

1975 ல் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்ததைத் தொடர்ந்து தி முக வில் ஒரு சலசலப்பு ஏற்பட்டபோது, கருணாநிதியைப் பதவியிலிருந்து விலக்கி கஸ்தூரி ராஜாராமை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்து ஒரு புதிய அமைச்சரவை அமைந்தால் தி மு க அரசு தமிழ் நாட்டில் சுமுகமாக நீடிப்பதோடு, மக்கள் நல அரசாகவும் அது இருக்கும் என்று அன்னை நாடு என்கிற நாளிதழில் எழுதினேன். அதைப் படித்துவிட்டு தி மு க விலிருந்த பலரும் நீங்கள் எழுதியபடி நடந்தால் மிகவும் நல்லதுதான்; ஆனால் அது நடக்கக் கருணாநிதி எப்படி இடமளிப்பார்? அவருக்குச் சரியாகச் சூதாடுகிற சாமர்த்தியம் ராஜாரமுக்கு இல்லவும் இல்லையே என்றார்கள். அண்ணா தி மு கவிலிருந்து விலகி திமு கவுக்கே போய்விட்டிருந்த மதியழகனும் , அருமையான யோசனைதான், அனால் நடக்க வாய்ப்பில்லையே என்றார். கஸ்தூரி ராஜாராம் என்று நீ எழுதுகிறபோது அது அவரது சுபாவத்தையும் உணர்த்துகிறது என்று மதியழகனும் சொன்னார்.

மதியழகனோடு பழகுகையில் அவரது குடும்பத்தாருடனும் பழக நேர்ந்துவிட்டதுபோல் ராஜாராம் விஷயத்தில் அமையவில்லை. எனவே அவரது குடும்பதாருடன் எவ்வித அறிமுகமும் இல்லாது போயிற்று.

அன்னைநாடு இதழில் கஸ்தூரி ராஜாராமை முதல்வராகக் கொண்டு தி மு க புதிய அமைச்சரவையை அமைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடர்ந்தால் மத்திய அரசுடன் மோதல் இல்லாத ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்து, மக்கள் நலன் சிறப்பாக இருக்கும் என்று நான் எழுதியதைப் படித்துவிட்டு, என்ன இப்படி எழுதி என் மீது கருணாநிதிக்குத் தீராத சந்தேகமும் பகைமையும் உண்டாகும்படிச் செய்துவிட்டீர்களே என்று வருத்தப்பட்டார்.

ஒருமுறை அவரைச் சந்தித்தபோது பேச்சு வாக்கில் உங்களுக்குச் சொந்தமாக வீடு இருக்கிறதா என்று கேட்டார். இல்லை என்று சொன்னேன். வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒரு வீடு ஒதுக்குகிறேன், விண்ணப்பித்து விடுங்கள் என்று சொன்னார். நீங்கள் வீட்டை ஒதுக்கித் தந்தாலும் முதல் தவணையாகக் கட்டுவதற்குக் கூட என்னிடம் பனம் இல்லை, அதனால் விண்ணப்பிக்கப் போவதில்லை என்று சொன்னேன்.

திருமணம், வீடு வாங்குதல் போன்ற சமாசாரங்களில் யாரும் முழுப் பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு இறங்குவதில்லை. வேலையைத் தொடங்கிவிட்டால் எப்படியாவது பணம் வரத் தொடங்கிவிடும். அதனால் தயக்கப்படாமல் விண்ணப்பியுங்கள் என்று சொன்னார். அப்போதைக்குச் சரி என்று சொன்னேன். எனினும் அலட்சியமாக இருந்துவிட்டேன்.

எனக்கு மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பலருக்கும் அவராகவே அறிவுரை சொல்லி வீடு விண்ணப்பிக்கச் செய்து ஒதுக்கி உதவினார். சிலருக்கு முதல் தவணைப் பணம் கட்டவும் அவராகவே உதவினார். அவ்வாறு உதவி பெற்றவர்களில் பிராமணரும் உண்டு. அவர்கள் தி மு க ஆதரவாளர்கள் அல்ல என்பதும் தெரிந்தேதான் அவ்வாறு உதவினார்.

எழுதுகிறவர்களை உண்மையாவே மதித்ததால்தான் அவர்கள் விஷயத்தில் ராஜாராம் அப்படி நடந்துகொண்டார். விண்ணப்பம் கொடுங்கள், பணம் தானாவே வரும் என்று அவர் என்னிடம் சொன்னதை விளங்கிக் கொள்ளாத அளவுக்கு அப்பாவியாக இருந்ததால் இறுதிவரை வீட்டு வசதி வாரியத்திடம் விண்ணப்பம் கொடாமல் அலட்சியமாகவே இருந்து விட்டேன்! ஒரு குறிப்பிட்ட ஸ்கீம் அறிவிக்கப்படும், அதைப் பார்த்துத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஒரு சாமானியனாக எல்லரையும் போலவே எண்ணியிருந்தேன்; ஆனால் அதற்கெல்லாம் அவசியம் இல்லையாம். அமைச்சர் விருப்பப்படுகிறார் என்று தெரிந்தால் போதுமாம். அதிகாரிகள் காலியாக இருக்கிற ஏதேனும் ஒரு வீட்டைக் கொடுத்துவிடுவார்களாம். அந்த சூட்சுமம் எல்லாம் பிறகுதான் தெரிய வந்தது. அதற்குள் கவனம் வேறெங்கெல்லாமோ திசை மாறிப் போயிற்று.

தி மு கவில் பெரும்பாலும் கட்சிப் பத்திரிகைகள் தவிர பிரபல பத்திரிகைகளைப் படிக்கிற வழக்கம் இல்லை. தலைவர்கள் நிலையில் கூட அரசியல் சம்பந்தப் பட்ட பகுதிகளை மட்டுமே படித்துவிட்டுப் போட்டுவிடுவார்கள். அண்ணாõதான் சிறுகதைகள், தொடர்கதைகள் என்றுகூடப் படித்துக்கொண்டிருப்பார். அவரைப் போலவே ராஜாரமும் விதி விலக்காகப் பிரபல இதழ்களில் வரும் சிறுகதைகளையும் படிக்கிறவராக இருந்தார். அதனால்தான் அக்கால கட்டத்தில் கல்கி, விகடன் இதழ்களில் எனது சிறுகதைகளும் தொடர்களும் வெளிவர நேர்ந்து அவற்றைப் படிக்க நேரிட்டதால் அவருக்கு என் மீது ஈடுபாடு ஏற்பட்டது.

ராஜாராம் பத்திரிகையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அவராகவே வற்புறுத்தி வீடு கிடைக்கச் செய்த போதிலும் வேண்டியவர்களுக்கெல்லாம் வீடு கொடுத்துக் கொண்டிருந்தார் என்று எண்ணிவிடக் கூடாது. பொதுவாகத் தமிழ் பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மிகுந்த வறிய நிலையில் இருப்பவர்கள், அவர்களுக்கு எந்தக் காலத்திலும் வீடு வாங்குகிற வசதி வராது, ஆகவே அவர்கள் சுலபமாக வீடு வாங்கிக் கொள்ள ஒரு வழி செய்வோம் என்கிற எண்ணத்தில்தான் அவர் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களிடம் சொல்லிச் சொல்லி வீட்டு வசதி வாரியத்திற்கு விண்ணப்பம் அளிக்குமாறு செய்து வந்தார். புத்திசாலிகள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்கள். மேலும், எழுத்தையே தொழிலாகக் கொண்டிருந்தவர்கள் விஷயத்தில்தான் அவர் இவ்வாறு அக்கரை எடுத்துக் கொண்டார்.

இறுதிக் காலத்தில் பகிரங்கமாக நெற்றியில் திருநீறு பூசிக் குங்குமம் வைத்து நான் ஒரு ஹிந்து என்று ராஜாராம் அறிவித்ததோடு, ஹிந்து சமூக உணர்வு வரப்பெற்றவராகவும் இருந்தார். சாவர்கர் எழுதிய புத்தகங்கள் பலவற்றை அவருக்கு அனுப்பி வைத்தேன். சிரத்தையுடன் படித்துவிட்டு, மனம் தெளிந்தேன் என்று சொன்னார். சிறிது இளம் வயதாக இருக்கையிலேயே இந்த விவேகம் வரப்பெற்றிருந்தால் உற்சாகமாக ஓடியாடி ஹிந்து சமூக நலனுக்காக உழைத்திருப்பேன். உடல் தளர்ந்துவிட்ட பிறகு விவேகம் வந்து என்ன பயன் என்று வருந்தினார். சங்கத்தின் வருடாந்திர குரு தட்சிணை நிகழ்ச்சியின்போது அழைத்துச் சென்றோ, குருஜி நூற்றாண்டு விழாக் குழுவில் இடம்பெறச் செய்தோ அவரை ஹிந்து அமைப்புகளுடன் நெருங்கி வரச் செய்ய விரும்பினேன். அவருக்கும் அதில் ஆர்வம் இருந்தது. கூச்சம் காரணமாகத் தானாக முதலடி எடுத்து வைக்கத் தயங்கினார். இல. கணேசனிடம் மிக அன்புடன் பழிகினார். அவராவது இதில் ஆர்வம் காட்டியிருக்கலாம். அவருக்கும் தோன்றவில்லை. எனக்கும் எதிர்ப்படும் விஷயங்களில் எல்லாம் தீவிரமாக இறங்கிவிடும் சுபாவம் காரணமாக ராஜாராம் விஷயத்தில் கவனம் பதியாமலே போனது.

ராஜாராம் தலைமைப் பண்புகள் உள்ளவர் அல்ல. அவருக்கென்று ஒரு பெரிய ஆதரவாளர் கூட்டம் எல்லாம் இருந்ததில்லை. அரசியலில் ஆதாயம் பார்த்துத்தான் ஆள் சேரும். அவரோ வேண்டியவர்கள் என்பதற்காகவோ, தனக்கும் கோஷம் இடுவதற்கு ஆள் வேண்டும் என்பதற்காகவோ பதவியை முறைகேடாகப் பயன் படுத்தி உதவிகள் செய்யவில்லை. இறுதிக் காலத்தில் ஒரு சாதாரணச் சென்னைவாசியாக, சீதம்மா காலனியின் ஒரு தெருவில் தனி நபராகத்தான் வசித்து வந்தார். எனினும் ஒரு மூத்த திராவிட இயக்க முன்னணியாளர் ஹிந்து இயக்கங்கள்பால் வருகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிய வந்திருக்குமானால் அது சிலரையாவது சிந்திக்கத் தூண்டி, ஹிந்து சமூக உணர்வு பெறச் செய்திருக்கும். அந்த வாய்ப்பு கை நழுவிப் போயிற்று.

கடந்த ஆண்டு மிகவும் விமரிசையாக நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தபோதுதான் கடைசியாகக் கஸ்தூரி ராஜாராமைச் சந்தித்தேன். பொதுவாக அம்மாதிரி விழாக்களுக்கெல்லாம் போகிற வழக்கம் எனக்கு இல்லை. வற்புறுத்தி அழைக்கப்பட்டதால் அப்படியே போனாலும் எப்போது வேண்டுமானாலும் எழுந்து போய்விட வசதியாகக் கடைசி வரிசையில் உட்காருவதுதான் வழக்கம். ஆனால் அந்த வெளியீட்டு விழாவுக்கு இல. கணேசனுடன் செல்ல நேர்ந்ததால் முதல் வரிசையில் உட்காரும்படியாகிவிட்டது. கூட்டம் ஆரம்பித்த பிறகு ராஜாராம் வந்தார். அவர் கணேசன் அருகில் உட்காரட்டும் என்று எழுந்து அடுத்த இருக்கையில் உட்கார்ந்தேன்.

முப்பது வருடங்களுக்கும் மேலாகிவிட்ட பிறகு நேருக்கு நேர் நிகழும் சந்திப்பு. முதலில் அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. கூர்ந்து பார்த்தார். மலர்மன்னன்தான் என்று சிரித்தேன். ஆமாம், இப்படியெல்லாம் உருவத்தை மாற்றிக் கொண்டால் எப்படி அடையாளம் தெரியும்? போனில் பேசுகிறீர்கள், புத்தகங்கள் அனுப்பித் தருகிறீர்கள், நேரில் வந்தால் அல்லவா இப்போதைய முகம் பரிச்சயம் ஆகும்? என் மனதில் உங்கள் பழைய முகம்தானே பதிவாகியிருக்கிறது? வீட்டுக்கு வந்தால் எவ்வளவு விஷயம் பேசிக் கொண்டிருக்கலாம்? இப்போதெல்லாம்தான் ஈ, காக்காய் கூட வருவதில்லையே, குறுக்கீடு எதுவும் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கலாம் அல்லவா என்று சொன்னார். சரி, வருகிறேன் என்று சொன்னேன், ஆனால் சமயம் வாய்க்கவேயில்லை.

அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சமயம் தம் தம்பிமார்களில் இருவரைத் தான் மிகவும் விருப்பத்துடன் தம்மோடு அழைத்துச் சென்றார். அவர்களில் ஒருவர் இரா. செழியன். இன்னொருவர் கஸ்தூரி ராஜாராம். இதிலிருந்தே அவர்களிருவரும் தி முக வில் இருந்த போதிலும் வித்தியாசமானவர்கள், என்பது தெரியவரும். சூதும் வாதும் செய்து அரசியல் பண்ணத் தெரியாதவர்களைத்தான் அண்ணா விரும்பினார். அண்ணாவால் விரும்பப் பட்டவராக இருந்ததே கஸ்தூரி ராஜாராமுக்குப் போதுமான பெருமை.


malarmannan79@rediffmail.com

Series Navigation