கவிதை உருவான கதை – 4

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

எஸ். பாபு


கோவையில் மருதமலை செல்லும் ரோடு ஒரு காலத்தில் கரடு முரடாக இருந்ததாம். கோவை பேருந்து நிலையத்திலிருந்து மருதமலைக்கு எப்போதாவது ஒரு பஸ் வருமாம். ஆனால் கடந்த இருபது வருடங்களில் அப்பகுதி அடைந்த வளர்ச்சி ஆச்சர்யமானது என்று சொல்லப்படுகிறது. கோவையில் இப்போது மருதமலை ரோடு பரபரப்பான பகுதிகளில் ஒன்று. அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன. அந்த ரோட்டில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் சில வருடங்கள் வேலை செய்தேன். ஒரு நாள் அலுவலகம் துவங்கிய நேரம் அலுவலக வாயிலில் ஒரு பரபரப்பு. அலுவலகத்திலிருந்து எல்லோரும் ரோட்டுக்கு ஓடினார்கள். ஒரு விபத்து நடந்திருந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மீது பேருந்து மோதி அவர் அந்த இடத்திலேயே இறந்திருந்தார். முகம் மட்டும் அடையாளம் காணக்கூடியதாய் இருந்தது. இறந்த மனிதர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும் வங்கி ஒன்றின் வேலை பார்ப்பவர் என்றும் திரண்டிருந்த கூட்டம் அடையாளம் கண்டு கொண்டது. போலீஸ் ஆம்புலன்ஸ் எல்லாம் வந்து ‘க்ளியர்’ செய்து ஸ்தம்பித்திருந்த போக்குவரத்து சீராக ஒரு மணி நேரம் பிடித்தது. அலுவலகம் திரும்பிய எல்லோருக்கும் அன்றைய பேச்சு அந்த விபத்து பற்றியதாகத்தான் இருந்தது. இறந்தவருக்கு இது தான் பிறந்த ஊராம். பாட்டனார் காலத்திலிருந்து அவர்கள் குடும்பம் இந்த ஊரில் தான் இருக்கிறது என்று அவரது பூர்வீகம் பற்றியெல்லாம் அலுவலக மூத்த நண்பர் ஒருவர் விவரித்துக் கொண்டிருந்தார். பள்ளிக்கூடம் போனது முதல், அலுவலகம் சென்று வந்தது வரை நாள் தோறும் இந்த ரோட்டில் சென்று வந்த அந்த மனிதருக்குத் தெரிந்திருக்குமா இதே ரோட்டில் ஒரு நாள் அடிபட்டுச் சாகப்போகிறோம் என்று ? மனித வாழ்வின் நிச்சயமற்ற நிலையை நினைத்தும் இச் சம்பவம் குறித்தும் எனது சிந்தனை கீழ்காணும் கவிதையானது:

வழி வரலாறு

—-

பிழைப்பு தேடி இவ்வூருக்கு

உன் நாடோடி மூதாதையர் வந்துசேர்ந்த

ஒற்றையடிப்பாதை இதுவாக இருக்கலாம்

வண்டித்தடமாய் விரிவடைந்தபோது

நெல்மூட்டைகள் குலுங்க

உனது பாட்டன் முப்பாட்டன்கள்

சந்தைக்குப் போய்வந்திருக்கலாம்

செம்மண் சாலையெனவே

வளர்ந்த பிறகு

புழுதி பறக்க

முதல் மோட்டார் வாகனத்தில் வந்த

வெள்ளைக்காரனுக்கு

உனது முந்தைய தலைமுறைதான்

சாரதியாகவும் இருந்திருக்கக்கூடும்

எல்லாத் தடங்களும்

அழித்துப் போட்ட தார் ரோட்டில்

இன்று

வாகனங்கள் வழுக்கிக்கொண்டோட

விரைந்த சக்கரங்களுக்குள்

சிக்கிச் சிதைந்து

சதைக் குவியலாகிப் போன உன்னை

சற்று முன்

அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்.

(கணையாழியில் 2002ம் ஆண்டு வெளிவந்த கவிதை)

அன்புடன்

பாபு

agribabu@rediffmail.com

Babu Subramanian

Postdoc

Department of Agriculture, Food and Nutritional Science,

410, Agriculture / Forestry Centre,

University of Alberta,

Edmonton T6G 2P5

Alberta, CANADA.

Office phone: 780-492-1778

Home phone: 780-432-6530

Series Navigation

எஸ். பாபு

எஸ். பாபு