கவிக்கட்டு 41

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

சத்தி சக்திதாசன்


பாவங்களை வாங்கிக்கொள்

மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததாலோ
மனிதனின் சோகம் நீ அறிந்தனை
மக்களின் பாவங்களை தன்னில் தாங்கி
மனிதத்துவத்தின் முடியாய் திகழ்ந்தனையே
மாபெரும் தேவதூதனே இயேசுவே !

நத்தார் புனித தினத்தில்
நயமாய் ஓர் இந்து
நான் உன்னை நினைந்து
நெஞ்சத்தில் நிறுத்துகிறேன் !

மனிதனின் விடுதலைக்காய் நீ
மரணித்த உதாரணத்தால்
மண்ணின் விடுதலைக்காய்
மடிகின்றார் புவியினிலே
மறவர்கள் ஆயிரம்
மக்களின் நாயகனே இயேசுவே !

தன்னைப்போல் பிறனையும் நேசி
தன்னிகரற்ற தத்துவத்தை
தரணிக்களித்த கர்த்தரே
தனித்துவமான புனிதன் நீ !

தியாகத்திற்கெல்லாம் முடியாக
தீயது செய்தோரின் பாவமெல்லாம்
தோள்களில் தாங்கிய உயர்ந்தோனே
தோற்காத வீரம் நிறைந்தவன் நீ !

மதங்களில் என்றும் பிரிவில்லை
மக்கள் அனைவரும் சகோதரரே
கிறிஸ்துவின் பிறந்த தினமதில்
கேட்குது ஓர் இனிய கீதம்
மார்கழித் திங்களின் சிறப்பாம்
மாறாத இயேசு கீதம்

****

புயற் பூ

புதுமைப் பெண்ணே விழித்துக் கொள்வாய் இது உன் காலம்
புரட்சிக் கனலாய் பொங்கி எழுவாய் இன்றைய நவீன உலகில்

பூவென்றும் பொன்னென்றும் கவிபாடி துங்க வைத்த காலமல்ல
பூமகள் நீ புதுமகளாய் உலகமைக்க புறப்பட்ட பொற்காலமிது

அடக்கியுனை வீட்டினுள்ளே சிறைவைத்த கதையெல்லாம் மாறியது
அறிவெனும் ஆயுதம் ஏந்தி ஆற்றுகிறாய் கடமை ஆயிரம் மறவாதே

சமுதாய வெற்றிக்கு நீ கொடுத்த உழைப்பு தெளிவாக தெரியுமிங்கு
சமபங்கு தந்தாலும் உணராத கும்பலுக்கு புகட்டிடுவாய் பாடமொன்று

தாயாய் மனைவியாய் காதலியாய் களிப்பூட்டும் நீ போடும் பாத்திரங்கள்
தாமறியார் முட்டாள்கள் உழைப்பை மட்டும் சுரண்டிடுவார் மூடர்கள்

புறப்படுவாய் தோழியே ; மென்மையான இதயமென்று மிதிக்கும் சிலர்
புயலுக்குள் பூத்த ஒரு புயற் பூ என புல்லர் புரிந்துடும் வகை செய்வாய்

****
sathnel.sakthithasan@bt.com

Series Navigation