கழிமுகம்

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue

பாவண்ணன்


நீதிமன்ற வாசலில் குழந்தையோடு வெளியேறிய ருக்மணியின் முகம் மீண்டும் மீண்டும் சிவபாலனின் மனத்தில் மிதந்தபடி இருந்தது. பரபரப்பில் உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் தவித்தான். ஜன்னல் கதவுகள் திறந்திருந்தன. அசோகமரங்கள், விடுதி வாசல், வாகன நிறுத்தங்கள், பூங்கா, சாலை வரை ஒரே பார்வையில் தெரிந்தன. காலையில் இருந்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிரை உணர முடிந்தது. குறித்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் எந்தக் கணமும் சாலையிலிருந்து விடுதியின் வாசலை நோக்கி வரப்போகிற சாக்லெட் நிற சாண்ட்ரோ காரை எதிர்பார்த்திருந்தான். ஏமாற்றத்தில் அலுத்துத் திரும்பிச் சில கணங்கள் படுக்கையில் விழுந்தான். கைக்கு அருகிலேயே இருந்த மின்விசிறியை இயக்க குமிழியைத் திருப்பினான். உயிர் பற்றியதும் விசிறியின் இறக்கைகள் சுழலத் தொடங்கின. மெதுமெதுவாகக் குமிழியைத் திருகித் திருகி வேகம் கூட்டினான். உச்ச வேகத்தில் இறக்கைகள் எழுப்பிய சத்தம் விசித்திரமாக இருந்தது. அச்சத்தத்திலேயே கவனத்தைப் பதித்தான். ஒரே சீரான வேகத்தில் ‘போபோபோ ‘ என்று தொடர்ந்து அடிக்குரலில் ஆணையிடுவது போல இருந்தது. அதைக் கேட்டதும் உடலில் வியர்வை படர்வதை உணர்ந்தான். குமிழியைச் சட்டெனப் பின்னோக்கி உருட்டி வேகத்தைக் கட்டுப்படுத்தினான். தளர்ந்த இறக்கைகளை வெறுப்புடன் பார்த்தன அவன் கண்கள். ஏஎன்ன என்ன என்னஏ என்று கிண்டலுடன் கேள்வியை முன்வைப்பது போல ரீங்கரித்தன அவை. அவனுக்குத் தலையே வெடித்துவிடும் போல இருந்தது. சீற்றத்தில் குமிழியை மீண்டும் உச்ச வேகத்துடன் திருப்பிவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலோரம் வந்து நின்றான்.

வாசலில் அவன் எதிர்பாார்த்த வாகனம் இல்லை. சற்றே தொலைவில் தெரிந்த சுற்றுலாப் பயணிகளின் வாகன நிறுத்தத்திலும் தென்படவில்லை. உதட்டைப் பிதுக்கிச் சப்புக் கொட்டியபடி மறுபுற ஜன்னலை நோக்கி நடந்து நின்றான். ஒருபுறம் அகன்ற கால்வாயாக சுண்ணாம்பாறு நெளிந்து கொண்டிருந்தது. மறுபுறம் பிரம்மாண்டமான கடல் பரப்பு விரிந்திருந்தது. இடையில் கழிமுகத்தில் வாடகைப் படகுகள் முன்னும் பின்னும் அசைந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு படகிலும் இருப்பவர்கள் அடுத்த படகில் இருப்பவர்களுக்குக் கைகளை அசைத்து சந்தோஷத்தைப் பரிமாறிக் கொண்டார்கள். முழுக்க முழுக்கப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு படகில் ஒரு ஆணும் பெண்ணும் நெருக்கமாக உட்கார்ந்து துடுப்புக் கட்டையை மிதித்துக் கொண்டிருந்தார்கள். கழிமுகத்தைச் சுற்றிப் பச்சைப் பசேலென்ற தோப்பு அடர்ந்திருந்தது. இயற்கையான தோப்பை வளைத்துக் கழிமுகத்துக்கு அரணாக மாற்றியிருந்தது சுற்றுலாத் துறை. மரங்களின் உச்சியில் கட்டப்பட்ட நவீன குடில்களிலும் ஊஞ்சல்களிலும் பயணிகள் கழிமுகத்தை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்கள். கடல் விளிம்புக்கு மேல் கருத்த மேகங்களின் பரப்பு எங்கோ கடுமையான மழை பொழிவதற்கு அடையாளமாகப் படர்ந்திருந்தது. எக்கணமும் அந்த மழைமேகம் கழிமுகத்தை நோக்கி நகர்ந்து வந்துவிடக் கூடும் என்று தோன்றியது. கழிமுகத்தைச் சுற்றி நின்றிருந்த கூட்டம் எந்தப் பதற்றமும் இல்லாததைப் போல இங்குமங்கும் அலைந்தபடி இருந்தது. வரும்போகும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி சீராக்கும் பணியாளர்களின் விசில் சத்தம் உச்சத்தில் இருந்தது. பல வாகனங்களில் காலை மழையின் துளிகள் மிச்சமிருந்தன. குறுக்கும் நெடுக்கும் நடந்து போகும் ஆட்கள் அத்துளிகளைத் தொட்டுக் கண்ணாடியில் விரல்களால் கிறுக்கினார்கள்.

அவன் அலுத்துப் போய் அறைக்கதவைச் சாத்திக் கொண்டு வெளியே வந்தான். நீளமான மாடியைக் கடந்து படியிறங்கும் தருணத்தில் பார்வையாளர்கள் பகுதியில் ருக்மணி பிள்ளையுடன் காத்திருக்கக் கூடுமோ என்ற எண்ணம் உதித்தது. உடனே அவனது உடலில் உற்சாகம் கூடியது. வேகவேகமாகப் படிகளைத் தாண்டிக் கடந்து பார்வையாளர்கள் கூடத்தை அடைந்தான். சுவர் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த கலைச் சிற்பங்களையும் ஓவியங்களையும் மீன்தொட்டிகளையும் பார்த்தபடியும் நின்றிருந்தார்கள் பலர். எதையும் பார்க்காமல் குளிர்பானம் அருந்தியபடியும் குசுகுசுத்தபடியும் நின்றிருந்தார்கள் சிலர். ருக்மணி இல்லை. மீண்டும் ஏமாற்றம் படர்வதை உணர்ந்து அவன் எச்சரிக்கையானான். இன்று இந்தக் கழிமுகத்தின் சாட்சியாக இழந்த வாழ்வை நான் பெற வேண்டும். இந்தச் சந்திப்பு ஒரு நம்பிக்கையான பயணத்துக்கு ஆரம்பப் புள்ளியாக இருக்கலாம். உதிர்நத ஒவ்வொரு சுள்ளியையும் எப்பாடு பட்டாவது சேகரித்துக் கலைந்த கூட்டைக் கட்டிவிட வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் ஊதி ஊதிப் பெரியதாக்கி மோதி முரண்பட்ட கசப்புகளையெல்லாம் தொலைத்துவிட வேண்டும். அலைகளின் வேகத்தில் அவை கரைக்கு ஒதுக்கப்பட்டு விட சங்கமத்தை எதிர்கொள்ள வேண்டும். தனிமை தரும் துயரம் கொடுமையானது. அது ஒரு நெருப்பு. அதன் அருகாமையில் தோலும் மனமும் பொசுங்கிப் பொசுங்கி எல்லாமே தீய்ந்து விட்டன. மறுபடியும் சேர்ந்து புதிய வாழ்க்கையைத் தொடங்குவது குறித்துப் பேச பல முறை நினைத்தும் தீரமானித்தும் அது குறித்துப் பேச அவள் வேலை புரியும் பன்னாட்டு நிறுவனத்தின் வாசல் வரை சென்றும் கூட எதுவுமே சுலபமாக அமையவில்லை. எல்லாமே எளிதாக முடிந்துவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் இறுதிக்கணம் எல்லா நடவடிக்கைகளையும் தடுத்து விட்டது. அபியின் பிறந்த நாள் நெருங்கி வந்தது பல விதங்களில் நல்லதாகப் போயிற்று. அதை ஒரு சுப சகுனமாக எண்ணிக் கொண்டது அவன் மனம். தாயுடன்தான் குழந்தை வளர வேண்டும் என்ற நீதி மன்றத்தின் தீர்ப்பால் ருக்மணியுடனேயே தங்கி விட்டான் குழந்தை அபி. அபி. அபி. அவன் பெயரை உச்சரிக்க உச்சரிக்க மனத்தில் பரவசம் ஊறிப் பொங்கியது. அவனை ஒரு கழிமுகமாக்கி மறுபடியும் இருவரும் இணைந்து விடுவதை ஒரு கனவாக வளர்த்துக் கொண்டான்.

அபிக்காக அழகான தங்கச் சங்கிலி ஒன்று வாங்கி வந்திருந்தான். அவளுக்கும் பிரேஸ்லெட் வாங்கி வைத்திருந்தான். பையில் இருந்த சிறிய சிமிழைத் திறந்து வண்ணத்தாளில் பொதியப்பட்டிருந்த சங்கிலியையும் பிரேஸ்லெட்டையும் எடுத்துப் பார்த்தான். தங்கத்தின் மஞ்சள் ஒளியை அவன் கண்கள் கவனித்தன. அபியின் முகம் மனத்தில் மெல்லப் படர்ந்தது. ஜொள் ஒழுகும் வாயும் கழுத்தில் பிதுங்கிய சதையுமாக ருக்மணியின் தோளில் மிரள மிரள விழித்தபடி கிடந்த முகம்.

தனது பொறுமை கரைவதைச் சங்கடமாக உணர்ந்தான் சிவபாலன். கூடத்தில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் தன்னையறியாமல் காலால் உதைத்தான். கூடத்தின் சமநிலை ஒரே கணத்தில் குலைந்தது. அங்கங்கே சிதறியிருந்த பலரும் ஒரே கணத்தில் திரும்பி அவன் மீது பார்வையைப் பதித்தார்கள். சட்டென்று தலையைத் தாழத்திக்கொண்டு விடுதிக்கு வெளியே வந்தான். அனிச்சையாக வாசலில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தில் முட்களின் அசைவைப் பார்த்தான். குறிப்பிட்ட நேரம் கடந்து வெகுநாழியாகியிருந்தது.

அவன் கழிமுகத்தை நோக்கி நடந்தான். தன் எண்ணங்கள் கடுகடுப்பான ஒரு புள்ளியில் வேகவேகமாகச் சேகரமாவதை வெறுப்புடன் உணர்நதான். அவ்வளவு வெறுப்பை அடிமனத்தின் ஆழத்தில் சுமந்து கொண்டு மீண்டும் இணைய வேண்டும் என்று விழைவது அவனுக்கே வேடிக்கையாகவும் எரிச்சலாகவும் இருந்தது. பெரிய வேஷக்காரன் என்று தன்னைத்தானே சித்தரித்துக் கொண்டான். அத்தருணத்தில் அதை ஒரு சுயகண்டுபிடிப்பைப் போல உணர்ந்தான் அவன். ‘ஐயோ கடவுளே ‘ என்று தலையை உதறியபடியே பார்வையையும் கவனத்தையும் வெளியுலகத்தை நோக்கிப் பதித்தான்.

செம்பருத்திச் செடிகளும் குரோட்டன்ஸ்களும் இருபுறமும் அடர்ந்திருக்கப் பூங்காவுக்கான பாதை விரிந்திருந்தது. ஓரமாக ஒரு மரக் குடிலுக்குள் வெள்ளைச் சீருடை அணிந்த ஆள் ஒருவன் படகுப் பயணத்துக்கான சீட்டுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தான். சட்டென அந்த வரிசையில் போய் நின்றான். குழந்தையுடன் வந்து நிற்கும் ருக்மணிக்கு இந்தப் படகுப் பயணம் பிடிக்குமோ பிடிக்காதோ என்று ஒருகணம் கலவரமாக இருந்தது. திருமணமான புதிதில் இருவரும் கூடிச் சென்ற ஏற்காட்டுப் பயணமும் படகுச் சவாரியும் அவன் மனத்தில் சித்திரங்களாக விரிந்தன. அந்த நினைவு ஆனந்தமாக இறங்கியது அவன் மனத்துக்குள். படகில் செல்வது பற்றிய உற்சாகத்துடன் கழிமுகத்தைப் பார்த்தான். ஐந்து வருஷங்களுக்கு முன்னர் இருந்த பெண்ணின் ஸ்பரிசத்தையும் நெருக்கத்தையும் முதன்முதலாக உணர்ந்த கிளுகிளுப்பும் பரபரப்பும் இன்னும் பாதுகாப்புடன் இருப்பதாக எண்ணத் தோன்றியது. அப்பாதுகாப்பு பற்றிய எண்ணம் ஒரு கேள்வியாக முளைத்த போது அப்படி எண்ணிக் கொள்வது ஒரு நடிப்பு மட்டுமே என்பதாகவே அவன் மனம் பதிலை முன்வைத்தது. மறுகணமே ஸ்பரிசமும் நெருக்கமும் சதாகாலமும் கிளுகிளுப்பும் ஆனந்தமும் தரக் கூடியதாக இருப்பது சாத்தியம்தானா என்றொரு கேள்வி எழுந்தது. சாத்தியம்தான் என்பதற்கு இணையாக கைகளை கோர்த்தபடியும் தோள்மீது கை போட்டபடியும் புன்னகையுடனும் கதை பேசியபடியும் அடுத்தடுத்து நடந்து வரும் பல விதமான ஜோடிகள் கழிமுகத்தில் காணப்பட்டதே சாட்சியாக இருந்தது. சாத்தியமில்லை என்பதற்கு தான் ஒருவனே சாட்சியாக எஞ்சி நிற்கிறமோ என்கிற எண்ணம் அதுவரை அவன் திரட்டி வைத்திருந்த நம்பிக்கைகளையெல்லாம் சிதறடித்தது. அவர்களுக்கெல்லாம் சாத்தியமான ஒன்று தனக்குச் சாத்தியமாகாதது ஏன் என்கிற கேள்வி வண்டு போல மறுபடியும் குடைந்தது. நடிப்பு புலப்படுவது அவர்களிடமா அல்லது தன்னிடமா என்று குழம்பினான். குழப்பங்களின் தொகுதியாக அவன் மாற மாற அவன் மனம் அவநம்பிக்கையின் பக்கமாகச் சரியத் தொடங்கியது. தலையை உதறி எண்ணங்களின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்த முயன்றான். நம்பிக்கையின் விளிம்புக்குள்ளாகவே அத்தருணத்தில் இருப்பது எவ்வளவு அவசியம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். இது அபூர்வமான கழிமும். கடலும் ஆறும் ஒன்றிடம் ஒன்றை இழக்கும் புள்ளி. இரண்டுக்குமே அனுசரணையாக இருந்து இச்சங்கமத்தைக் காலம் முழுக்க நீடிக்கச் செய்யும் இடம். மனத்தளவில் கலக்காமல் உதறிய உறவைப் பற்றி மீண்டும் கலக்க முயற்சி செய்ய வந்திருக்கிறேன். யாரோ ‘அங்கிள் அங்கிள் ‘ என்று சொன்னார்கள். இரண்டு மூன்று முறை குரல் கொடுக்கப்பட்ட பிறகுதான் அதை உணர்ந்தான். ‘என்ன ? ‘ என்று திரும்பிய போது ‘டிக்கட் வாங்காம அப்படியே நிக்கறீங்களே, நா வாங்கிக்கட்டுமா ? ‘ என்றாள் ஒரு சிறுமி. இனிமையான குரல். அபி வளர்ந்து பேசினால் அவன் குரலும் இப்படித்தான் இனிமையாக இருக்கக் கூடும். அவன் மனம் சட்டெனக் குழைந்தது. ‘ஓ ஷ்யூர். மை டியர் ப்ரின்ஸெஸ் ‘ என்றபடி அச்சிறுமிக்கு வழிவிட்டு நின்றான். திடுமெனக் கலவரம் கொண்ட அச்சிறுமி ‘நீங்க வாங்கலையா அங்கிள் ‘ என்றது. ‘ஓ..நோ ப்ராப்ளெம்.. நீ வாங்கு..நீ வாங்கு.. ‘ என்றபடி நீண்டு போன வரிசையின் இறுதியில் போய் நின்று கொண்டான். எல்லாரும் அவனையே பார்ப்பது அவனுக்குக் கூச்சமாக இருந்தது. ‘நோ ப்ராப்ளெம் ‘ என்று சிறிய புன்சிரிப்புடன் சகஜமாகவும் பொறுமையாகவும் சொல்லிக் கொண்டான்.

அங்கிருந்தபடியே நுழைவாசலில் வாகன நிறுத்தப் பகுதியில் கண்களைப் படர விட்டான். ருக்மணியும் அபியும் எந்த வண்ண உடைகளை அணிந்து வருவார்கள் என நினைத்தான். அச்சூழலில் அப்படி நினைப்பதே அபத்தமாகப்பட்டது. கடந்த முதலாண்டுப் பிறந்த நாள் அவர்கள் வீட்டில் நடந்தது. ஆகாய நீலவண்ணத்தில் குழந்தைக்கு ஆடை அணிவித்திருந்தார்கள். ருக்மணி இளமஞ்சள் நிறச் சூடிதாரில் இருந்தாள். இருவருடைய மென்பொருள் நிறுவனங்களிலிருந்தும் ஏராளமான நண்பர்கள் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார்கள். எந்த வாழ்த்தும் ஆசியும் அவர்கள் பிரிந்து செல்வதைத் தடுக்காதது ஏன் என்கிற கேள்வி எழுந்தது. எல்லா யோசனைகளுமே அபத்தமாகப் பட்டன. யோசனைகளின் இடுக்கில் புகுந்து புகுந்து குழப்புகிற இந்த எரிச்சல்களிடமிருந்து மீட்சியே கிடையாது என்று தோன்றியது. நம்பிக்கையோடு தேடி வந்திருக்கிற கழிமுகத்தில் கூட இந்த மீட்சியற்ற தன்மையே தொடர்ந்து வேடிக்கையாகப் பட்டது.

கெளண்டரின் அருகில் நிற்கும் போது மீண்டும் வரிசையின் இறுதியில் நின்று விடலாமா என்று தோன்றியது. இன்னும் இவர்கள் ஏன் வரவில்லை என்கிற கேள்வி அரித்தது. அவனைப் பார்த்ததும் சீட்டு கொடுக்கிறவன் முகத்தில் புன்சிரிப்பு படர்ந்ததைப் போல இருந்தது. தனது செய்கை பைத்தியக்காரத்னமாகப் போய்விடக் கூடும் என்று தோன்றியது. சட்டென்று ‘ரோயிங்க் போட் ஒன் அவர் ‘ என்று இரண்டு நுாறு ரூபாய்த் தாள்களை நீட்டினான்.

‘125 ரூபா சார். சில்லறை இல்லிங்களா ? இந்த அஞ்சி ரூபா பிரச்சனை பெரும்பிரச்சனையா இருக்குது ‘

‘இல்லப்பா, இருந்தா கொடு, இல்லன்னா சீட்டு பின்னால எழுதிக் குடுத்துடு. அப்பறமா வாங்கிக்கறேன். ‘

அதற்குள் மேசை இழுப்பறைக்குள் குடைந்து சில்லறை நோட்டுகளைத் தேடி எடுத்து நீட்டினான். சீட்டுகளோடு அவன் திரும்பிக் கழிமுகத்தை நோக்கி இறங்கினான்.

‘சார்.. சார்.. போட் இந்தப் பக்கம் ‘ என்றான் ஒரு பணியாள்.

‘வொய்ப்பும் குழந்தையும் அங்க இருக்காங்க. கூட்டியாந்துடறேன் ‘ என்று சட்டென்று சொன்னான் சிவபாலன். எப்படி அந்த வார்த்தைகள் வெளிப்பட்டன என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே அவர்கள் ஏற்கனவே அங்கு வந்திருந்து காத்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று தோன்றியது. மெல்ல மெல்ல ஒரு எதிர்பார்பு அவன் மனத்தில் படரத் தொடங்கியது. விசிலடித்தபடி நடக்கத் தொடங்கினான். பேண்ட பாக்கெட்டிலிருந்த சீப்பை எடுத்து அனிச்சையாகத் தலைவாரிக் கொண்டான். குளிர்க்காற்றின் தழுவலை முகமும் கழுத்தும் ஆனந்தமாக ஏற்றுக் கொண்டன. கைளை உரசிச் சூடாக்கிக் கொண்டான்.

கரையோரம் நின்றான். நிறைய சிப்பிகளும் கூழாங்கற்களும் சிதறிக் கிடந்தன. சிறிது தயங்கிக் கால்களைத் தண்ணீரில் நனையவிட்டான். சிலிர்த்தது. இன்னமும் பூக்களால்சுற்றப்பட்ட படகு தொலைவில் அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். சில நிமிடங்களில் கைபிடித்து ஒரு குழந்தையை நடத்தியவண்ணம் ஒரு ஜோடி வந்து கரையில் நின்றது. அக்குழந்தை தண்ணீரைப் பார்த்ததும் முதலில் மிரண்டது. கணவன் அக்குழந்தையைத் துாக்கி ஏதோ கதை சொல்லிச் சமாதானப்படுத்தினான். பிறகு தயங்கித் தயங்கி மூன்று பேரும் தண்ணீரிலேயே நின்றார்கள். சில கணங்களுக்கு முன் அச்சத்தில் அடம்பிடித்த குழந்தை தண்ணீரில் தைதை என்று குதித்தது. அவன் மனம் ருக்மணியையும் அபியையும் ஏக்கத்துடன் நினைத்துக் கொண்டது. அங்குமிங்கும் அவள் கண்கள் தேடின.

கழிமுகமே ஒரு நீண்ட கடற்கரையைப் போல இருந்தது. ஒவ்வொன்றுகும் கட்டணம் என்று வைத்திருந்ததால் மாபெரும் கூட்டமோ நெரிசலோ இல்லை. சுற்றுலாப் பயணிகள் மட்டுமே பார்ப்பதிலும் திரும்பிச் செல்வதிலும் அவசரம் காட்டியபடி இயங்கிக் கொண்டிருந்தார்கள். ருக்மணியும் அபியும் அறைக்குப்போய்க் காத்திருக்கக் கூடுமோ என்ற எண்ணம் திடுமென எழுந்தது. அதற்குப் பின் அரைக்கணம் கூட அங்கே நிற்க முடியவில்லை. மெல்லக் கரையேறினான். சிறிது துாரம் நடந்த பிறகு அந்தத் தண்ணீர்ப்பரப்பை இன்னொரு முறை திரும்பிப் பார்த்தபடி நடந்தான். கடலிலிருந்து வந்த காற்று குளிராக இருந்தது. தன் மனத்தயாரிப்புகள் இறுதிக் கணத்தில் பயனற்றுப் போய்விடுமோ என்று பீதியாக இருந்தது. சம்பந்தமே இல்லாமல் மணவிலக்கு நீதிமன்றத்தில் அந்தப் பெண்நீதிபதி படித்த தீர்ப்பு வாசகங்கள் வரிவரியாக நெஞ்சில் நகர்ந்தன. அந்தக் கணமே அவன் நெஞ்சில் வெப்பம் பரவியது. அதிகரிக்கத் தொடங்கிய அந்த வெப்பத்தைத் தாள முடியவில்லை. கழிமுகத்தின் குளிரால் கூட அந்தத் தீயை அணைக்க முடியவில்லை. ஐயோ என்று உள்ளூர அரற்றினான். அவனையறியாமல் ருக்மணி என்ற குரல் அவனிடமிருந்து வெளிப்பட்டது. மறுமுறை அவனே விரும்பி ருக்மணி ருக்மணி என்றான்.சட்டென அவனைத் தீய்த்துக் கொண் டிருந்த வெப்பம் ஆவியானது. நெஞ்சு அடைப்பதைப் போல உணர்ந்தான். கண்கள் தளும்பின. மூக்கு அடைத்துக் கொண்டது.

ஆர்வமாகவும் வேகமாகவும் விடுதி வரவேற்பாளரிடம் சென்று விசாரித்தான். அவள் உதட்டைப் பிதுக்கக் கண்டு சோர்வுடன் கூடத்தில் பார்வையைப் படரவிட்டான். சிவா என்றபடி ஏதாவது ஒரு ஓவியத்திலிருந்து பார்வையைத் திருப்பி ருக்மணி கூப்பிடக் கூடும் என்று நம்பி சுற்று முற்றும் தேடினான். இல்லை. அவள் வரமாட்டாள் என்று உள்ளூர ஒரு எண்ணம் இருந்தது. தொடர்ந்து அக்கூடத்தில் அவனால் நிற்க முடியவில்லை. வெளியேறி வாகனங்கள் நிறுத்துமிடத்துக்குச் சென்றான்.

சட்டென எங்கும் துாறல் விழத் தொடங்கியது. ஜனங்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். ஒரு சிலர் மட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் நடந்தார்கள். முன்தயாரிப்புடன் வந்திருந்த பலரும் குடையையும் மழைக் கோட்டுகளையும் விரித்துக் கொண்டார்கள். வேகமாக நகர்ந்து ஒரு மரத்தடியில் நின்றார்கள் சிலர். கால்மணிநேரம் விடாத மழை. பிறகு நின்றது. ஒவ்வொருவராக மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு ஓடினார்கள். வானத்தில் அதற்கப்புறம் வெளிச்சம் திரும்பவே இல்லை. முன்னர் இருந்ததைக் காட்டிலும் மேகங்கள் இருண்டு அடர்ந்திருந்தன. கடுமையாக வரப்போகும் மழைக்கு அடையாளமாக எங்கும் படர்ந்திருந்தன அவை. கழிமுகத்திலிருந்து கூட்டம் பாதிக்கும் மேல் வாகன நிறுத்தங்களை நோக்கி வந்ததில் சட்டென ஒரு ஒழுங்கின்மை ஏற்பட்டது. ஒருவரைப் பார்த்து ஒருவர் கத்தினார்கள். வாகனங்கள் இடைவிடாமல் ஹாரன் ஒலி எழுப்பின. நடைபாதையில் சேறு குழம்பியது. மிதியடிகளிலிருந்து சிதறிய சேற்றுப் புள்ளிகள் அனைவரின் ஆடைகளிலும் தயக்கமின்றிப் படிந்தன.

கழிமுகத்தை¢ திரும்பிப் பார்த்தான். ஒன்றிரண்டு படகுகள் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. காற்றிலும் மழையிலும் ஆறும் கடலும் குலாவிச் சிலிர்ப்பதைப் போலிருந்தன.

அந்த மரத்தடியில் தனியே நிற்பதை உணர்ந்தான் சிவபாலன். ‘சார் ஆட்டோ வேணுமா ? ‘ என்று ஒருவன் கூவி அழைத்தான். அவன் ‘வேணாம் ‘ என்று தலையசைத்து மறுத்தான். ‘பாண்டிச்சேரில எங்க போவணும் சொல்லுங்க சார். நா பத்தரமா எறக்கிவிடறேன். சாயங்கால மழை புடிச்சுதுன்னா அவ்ளோ சீக்கிரமா நிக்காது ‘ என்றபடி இறங்கி வந்தான் அவன். ‘நான்தான் வரலைன்னு சொல்றனே கேக்கலையா ? ‘ என்று சட்டெனக் கத்தினான் சிவபாலன். தனது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நொறுங்க கோபமும் மூர்க்கமுமாக தன் மனம் உருமாறுவதை ஒருவித கையாலாகாத் தனத்துடன் கவனித்துக் கொண்டிருந்தான் அவன். ஆட்டோக்காரன் சட்டென விலகிப் பின்வாங்கினான்.

மிரட்சியுடன் ஆட்டோக்காரன் பின்வாங்கிச் சென்ற தோற்றம் அவனுக்கே பரிதாபமாக இருந்தது. மனத்துக்குள் ஒளிந்து நின்றிருந்த ஒரு யானை மதம்பிடித்தபடி ஓடி வருவது தெரிந்தது. அவனுக்கு அக்காட்சி பயமாக இருந்தது. யானையின் பாதையில் மரங்கள் முரிந்தன. பழக்குலைகள் மிதிபட்டன. புழுதி பறந்தது. துாண்கள் பிளிந்தன. மண்டபங்கள் இடிபட்டன. எங்கும் நாசம். சேறு. அவன் அங்கிருந்து ஓடிவிட நினைத்தான். அக்கணத்தில் ருக்மணி வந்துவிடக் கூடாது என்று அஞ்சினான். எந்தத் தங்க நகைளைப் போட்டு அவர்களை ஆனந்தத்தில் குளிப்பாட்ட ஆசைப்பட்டானோ அவர்கள் இருவரும் ஒருவர் மீது மற்றவர் செலுத்தும் அன்பிலும் அணைப்பிலுமே ஆனந்தம் கொள்ள ஆண்டவன் துணையிருக்கட்டும் என வேண்டிக் கொண்டான். கடலோ, ஆறோ அவனுக்கு ஒரு கழிமுகம் சாத்தியமே இல்லை என்று தோல்வியாக உணர்ந்தான். வேகவேகமாக விடுதியை நோக்கி ஓடத் தொடங்கினான். அப்போது சிவா என்ற குரல் அவனை நிறுத்தியது. அது ருக்மணியின் குரல்தான் எனத் திரும்பாமலேயே உணர்ந்தான். காலையிலிருந்து திரட்டி வைத்த அன்பின் சுவடே இல்லாமல் யானை பிளிறிக் கொண்டிருந்தது அவன் மனத்தில். காதில் விழாததைப் போல நடந்தான். அதற்குள் அவள் வந்த ஆட்டோ அவனை நெருங்கிவிட்டது.

‘என்ன சிவா, எவ்வளவு நேரமா கூப்படறேன். ஏதோ யோசனைல போய்ட்டே இருக்கீங்க ? ‘

ஆட்டோவுக்குப் பணத்தைக் கொடுத்தபடியே அவள் கேட்டாள். அவள் ஏன் காரில் வரவில்லை என்ற கேள்வி எழுந்தது.

‘ஸாரி சிவா. நீங்க சொன்ன நேரத்துல வந்துடணும்னுதான் நெனைச்சேன். கெளம்பற நேரத்துல சின்னப் பிரச்சனை. அபி கட்டில்லேருந்து கீழ விழுந்துட்டான். மூக்குல ரத்தம் வந்துட்டுது. க்ளூனிக்குப் போய் காட்டி மருந்து போடறதுல நேரமாய்ட்டுது. குழந்தை அழுது அழுது துாங்கிட்டான். அப்பாவோட கார்ல வீட்டுக்கு அனுச்சிட்டு ஆட்டோவுல வந்தேன் ‘

அவள் ஒரே மூச்சில் சொன்னாள். ஏ ‘ஐயோ அபி ‘ என்று அவன் உள்மனம் பதறியது. ‘என் அபிக்கு ஒன்னும் ஆவலையே என் அபிக்கு ஒன்னும் ஆவலையே ‘ என்று புலம்பியபடியே அவள் கைகளைப் பற்றிக் கொண்டு வீட்டை நோக்கி ஓட வேண்டும் போலிருந்தது. ஆனபோதும் அவளை வெறுப்புடன் உற்று நோக்கியபடி ‘பயங்கரமான கதை ‘ என்றான்

அடிபட்டது போல அதிர்ந்து நின்றாள் அவள். அவளது தாடைகள் நடுங்குவது தெரிந்தது.

‘இதுல பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல சிவா. நெஜமாகவே அவனுக்கு அடி. சிள்மூக்கு ஒடைஞ்சிடுச்சின்னு டாக்டர் சொன்னார் ‘

அவள் பொறுமையாக எடுத்துச் சொன்னாள். அவளது பொறுமை அவனுக்குள்ளே இருந்த மதயானையின் வெறியைப் பல நுாறு மடங்காக்கியது

‘புள்ளையும் அப்பாவும் பார்த்துப் பழகிட்டா எங்க ஒட்டிடப் போறாங்களோன்னு பயந்துட்டியா ? அதை மறைக்க அடி கிடின்னு கதைவிடறியா ? ஒன் கதைய கேட்க இது ஒன்னும் டைவர்ஸ் கோர்ட் இல்ல ‘ கிட்டத்தட்ட அவன் கத்தினான். சுற்றிலும் போய்க் கொண்டிருந்தவர்கள் நின்று பார்த்துவிட்டுச் சென்றார்கள்.

அவள் உடல் நடுங்கியது. கோர்ட் என்ற சொல் அவளைத் தைத்தது. முகத்தில் சீற்றம் படர்வதும் தெரிந்தது. நீண்ட பெருமூச்சு வாங்கினாள். அதே கணத்தில் அவள் கண்களில் தயக்கம் குடியேறியது. தான் முன்வைக்க விரும்பும் எந்த உண்மையும் அவன் நெஞ்சை எட்டாது என்று உறுதியாக நம்புவது போலத் தெரிந்தது. எதையோ சொல்ல விரும்புவது போல அவள் உதடுகள் துடித்தன. ஆனால் எச்சொல்லும் அடித்தொண்டையை விட்டு எழ மறுத்தன. சட்டென எல்லா ஊற்றுக் கண்களும் அடைபட்டு விட உலர்ந்த நதியாக தன்னை உணர்ந்தாள். மிகவும் சிரமத்துடன் தன்னையே திரட்டிக் கொண்டு ‘இங்க பார் சிவா. உங்களிடம் பொய் சொல்ல வேண்டிய அளவுக்கு எனக்கென்ன அவசியம் இருக்குது சொல் ‘ என்று நிதானமாகக் கேட்டாள்.

‘எஸ் மிஸ் ருக்மணி. உங்களிடம் விளக்கம் கேட்க வேண்டிய அவசியமும் எனக்கும் இல்லிங்க. வந்த வழிய பாத்துகிட்டு நீங்க திரும்பிப் போவலாம் ‘ ஓங்கி எழுந்து நிலத்தை அறைந்து விட்டுச் செல்கிற அலை போல வார்த்தைகள் வெளிப்பட்டு அடங்கின.

சீறிக் கொண்டு நிற்கிற கடல் போலத் தோற்றமளித்த அவனை ஒருகணம் நிமிர்ந்து பார்த்தாள் ருக்மணி. அவளிடமிருந்து நீண்ட பெருமூச்சு மட்டும் எழுந்தது. எதுவும் சொல்லத் தோன்றாமலும் பிடிக்காமலும் சாலையை நோக்கி நடந்தாள். அவள் முதுகில் துாக்கிப் போட்ட துப்பட்டாவில் நாலைந்து ரத்தப் புள்ளிகள் தெரிந்தன.

சில கணங்களுக்குப் பிறகு கோபத்துடன் ‘ஷிட் ‘ என்றபடி காற்றில் மூஷ்டியால் ஓங்கிக் குத்தினான சிவபாலன் . சுயவெறுப்பும் அலுப்பும் நெஞ்சில் அடர்ந்திருந்தன. விடுதி நெருங்கியது. அருகில் விரிந்திருந்த கழிமுகத்தையே வெகுநேரம் பார்த்தபடி நின்றான்.

Series Navigation