களு(ழு)த்துறை!

This entry is part [part not set] of 19 in the series 20011125_Issue

வ.ந.கிாிதரன் –


நேற்றுத் தான் அவன்
விடுதலையாகி
வந்திருந்தான்.
இரு வருடங்கள்
அவனுக்கு இரு யுகங்களாகக்
கழிந்திருந்தன.

நண்பனே! அவர்கள்
உன்னை , உன் தோழர்களை
என்னவெல்லாம் செய்தார்கள் ?
உன் தோழர்கள் அங்கு
என்னவெல்லாம் செய்வார்கள் ?
காலத்தினையெவ்விதம்
கழிப்பாரோ ?

ஆசனத்துள் ‘எஸ்லோன் ‘ வைத்து
அதனுள் முள்ளுக் கம்பி வைத்து
இழுத்த இழுப்பினில்
நண்பன் ஒருவனின்
குடலே காணாமல் போனதுவாம்.
நண்பன் கூறினான்.
குடல் காணாமல் போனவன்
இன்னும் பால்பவுடர்
கலந்து தான் உணவருந்துகின்றானாம்.
நண்பன் சொன்னான்.
துளையிடும் கருவியால்
ஒருவன் குதியினைத்
துளையிட்டதில் அவன்
தொலைந்தே போனானாம்.
நண்பன் சொன்னான்.
கற்பனையும் கனவுகளுமாக
வந்த பிஞ்சொன்று
‘பிந்துனுவ ‘வில்
பஞ்சாகிப் போனதுவாம்.
இது போல் பல பல.
இன்னும் பல பல
நண்பன் சொன்னான்.

‘நான் தப்பி விட்டேன்.
ஆனால்..அவர்கள்.. ‘
நண்பன் சொன்னான்.
வெளியில் வீசும்
புயலில் அவர்கள்
மறக்கப் பட்டுப் போனார்களா ?
வருடங்களெத்தனை அவர்
வாழ்வில் வந்து போயின ?
அவர்கள் உள்ளே இருப்பது
யாராலே ? யாருக்காக ?
எதனாலே ? எதற்காக ?
கூற்றுவனின் வாசலிலே
குற்றமற்றவர்
சுற்றமிழந்து இன்னுமெத்தனை
நாள் வாடுவதோ ?
குரல் கொடுப்பார் யாருளரோ ?
யாருளரோ ?

[ *இலங்கை தீவில் அப்பாவித் தமிழ் மக்கள் பலர் களுத்துறை வெலிக்கடைச் சிறைச்சாலையுட்படப் பல சிறைச்சாலைகளில் வருடக் கணக்கில் ,
நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப் படாமல், கைதிகளாகத் தடுத்து வைக்கப் பட்டிருக்கின்றார்கள். இவர்கள் அடையும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சிலர்
‘பிந்துநுவ ‘ போன்ற சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப் பட்டுமுள்ளார்கள். அண்மையில் கூட இவர்கள் தமது இரத்ததில் கடிதம் எழுதி நீதி கேட்டிருப்பதாகப்
பத்திாிகைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன.]


Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்