கலியாணம் பண்ணிக்கிட்டா……

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue

தி.சு.பா


"லட்சுமி! நீ இல்லன்னா எனக்கு வாள்க்கையே கெடயாது….ஆங்! செத்துடுவேன்….நீ பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சா என்ன? டவுன் ல ஏதோ தொளில்சாலேல வேல பண்ணா என்னவாம்? நான் கூடத்தான் எங்கப்பன் நெலத்தப் பாத்துக்கறேன்…போதாதா?" என்று தனக்குத்தானே பேசிக் கொண்டும், கற்பனை செய்து கொண்டும் குடமுருட்டி ஆற்றுக்குக் குளிக்கப் போகும் லட்சுமியைப் பின்தொடர்ந்தான் பாலு.

பாலு ஒரு ‘ரெண்டுங்கெட்டான்’. திருச்சியிலிருந்து குழுமணி செல்லும் வழியில் ‘செய்யாமங்கலம்’ என்ற ஒரு குக்கிராமம் தான் அவன் ஊர். நிலபுலன் கொஞ்சம் இருக்கிறது. அவன் தாய்மாமன் தயவில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. வீடு, தோட்டம், தொரவு, அல்ஹம்ரா தியேட்டர் என்றிருந்தவன் வாழ்வில் திடீர் திருப்பம். சினிமாவின் உபயம் என்று கூட சொல்லலாம். காதல், கத்திரிக்காய் என்று அலைகிறான்.

"டேய் பாலு! என்னடா குளிக்கவா? இல்ல குளிக்கறத பாக்கவா?" என்று அவன் நண்பன் ஒருவன் கிண்டல் செய்தான்.

"ஒன் வேலயப் பாத்திக்கிட்டு போடா….வந்துட்டான் அங்கேருந்து…." என்று சாலையில் கீழே இருக்கும் ஒரு கல்லை எடுத்தவன், "ச்சீ கழுத…..என் கண்முன்னால நிக்காத….ஓடி போ…." என்று கையிலிருந்த கல்லை அவன் மேல் தூக்கி எறிந்தான்.

லட்சுமியைப் பின்தொடர்ந்தவன் குடமுருட்டி ஆற்று பாலத்தைக் கடந்து, ஒரு சுமைதாங்கிக்கும் வேப்ப மரத்திற்கும் நடுவில் இருந்த இடத்தில் வழக்கம்போல் வசதியாக அமர்ந்து கொண்டான். அவன் அமர்ந்திருப்பதை ஒரு சில கோணங்களில் மட்டும் தான் மற்றவரால் பார்க்க முடியும். அப்படி ஒரு வசதியான இடம். பாலத்திற்கு இந்தப்புறம் லட்சுமி குளிக்க ஆரம்பித்தாள். லட்சுமியைப் பார்த்தவுடன், விடியகார்த்தால முழிப்பு வந்தவுடன், அப்புறம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பும்பொழுது என்று அடிக்கடி பாலுவுக்கு ஒரு கனவு வரும். ஐந்தாறு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு பெரிய ரதம், அதன் நடுவில் பாலு அமர்ந்திருப்பான். அவன் குதிரையில் பவனி வரும் பொழுது ஊரே அவனை வந்து வணங்கும். லட்சுமி எதிரே இருந்தால், ரதத்தில் அவளும் அவன்கூட அமர்ந்திருப்பாள். அடி மனதில் புதைந்து கிடக்கும் ஆசைகள் தானே கனவில் உருவகம் பெறுகின்றன. நிஜ உலகில் சாதிக்க முடியாதவற்றை கனவுலகில் சாதிக்கிறான் மனிதன். கனவுலகில் சாதிப்பவன் வெறும் மனிதன் ஆக மட்டுமே இருக்கிறான். நிஜ உலகில் சாதிப்பவன் மாமனிதன் ஆகிறான்.

"இந்த ஊரே என் காலடில கெடக்குது…..நாந்தான் இந்த ஊருக்கு ராஜா…என்ன எதுத்துக்க இங்க ஒரு பய கெடயாது….லட்சுமி! என்னயப் பத்தி என்ன நெனைக்கிற?…."

லட்சுமி சிரித்தாள். ஊர் மக்கள் பாலுவிடம் வந்து ஏதோ முறையிட்ட வண்ணமிருந்தனர்.

"எனக்கு இன்னிக்கு நெறிய ஜோலி இருக்கு….உங்களயே கவனிச்சுகிட்டு கெடந்தா என் பொளப்பு அம்பேல் தான்…." என்று ஊர் மக்களை ஏளனமாகப் பார்த்தபின் ரதத்தை கண்காணாத ஒரு காட்டிற்கு இட்டுச் சென்றான். அங்கே தனிமையில் லட்சுமியுடன் காதல் புரிய ஆரம்பித்தான். லட்சுமி அவன் காலில் வந்து வணங்கினாள். அவனுக்கு ஏதேதோ தின்பண்டங்கள் கொண்டு வந்து பரிமாறினாள். அவன் லட்சுமிக்கு ஊட்டிவிட்டான். லட்சுமி வெட்கப்பட்டாள். அதைப் பார்த்து அவனும் வெட்கி தலைகுனிந்து தரையில் காலால் கிறுக்கினான். கோலம் போட்டான். லட்சுமி என்று மண்ணில் காலால் எழுதினான்.

"டேய்! டேய்! செவுட்டு முண்டம்….ஒன்னத்தான்டா…." என்று யாரோ ஒருவன் அவன் மண்டையில் ‘மடேர்’ என்று தட்டினான்.

"என்னடா! எரும…..என்ன வேணும்?" என்று வள்ளென்று அவன் மேல் விழுந்தான்.

"ஆங்! அஞ்சு மணி பஸ்ஸு போய்ட்டா?…"

பாலு ‘பேந்தபேந்த’ முழித்தான். கனவுலகிலிருந்து நனவுலகிற்கு வர அவனுக்கு நேரம் பிடித்தது.

"ஒண்ணு விட்டேன்னு வச்சுக்கோ….ஆறு மணியாட்டத்துக்கு மணி ஆயிடிச்சி, புது படம்….வர்றீயா?" என்று தொடர்ந்தான்.

காலை சுமார் எட்டு மணிக்கு வந்தவன் மாலை ஐந்துமணி வரையில் அதே இடத்தில் அமர்ந்து கனவில் மிதந்து கொண்டிருந்திருக்கிறான். எதிரே ஆற்றில் லட்சுமியைப் பார்த்தான். அவள் அங்கில்லை. யாருமே இல்லை! குடமுருட்டி ஆறு அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றின் அந்த கோடியைப் பார்த்தான். பெருத்த ஏமாற்றம் அவனுக்கு.

நொந்து கொண்டவனாய், "சரி வரேன்….வீட்டுக்கு போய்ட்டு போலாமா?" என்றான்.

"சீக்கிரம்டா….நான் போய் நம்ம ரெண்டு பேருக்கும் டிக்கட்டு எடுத்து வக்கறேன்….சரியா இருபது நிமிஸத்துக்குள்ள வந்துடு….கேட்டுதா?"

"ம்….ம்…"

சினிமாவில் கதநாயகன், கதாநாயகி வீட்டிற்குச் சென்று, அவள் வீடு புகுந்து பெண் கேட்கிறான். அதன்பின் நாயகியின் அண்ணனுக்கும், கதநாயகனுக்கும் பெரிய வாக்குவாதம். முடிவில் நாயகன் வெல்கிறான். நாயகியுடன் டூயட் பாடுகிறான். பாலு மனதில் அந்த காட்சி ஆழமாக பதிகிறது. அவன் லட்சுமியுடன் தன்னை இணைத்துப் பார்க்கிறான். சந்தோஷம் தாங்கவில்லை. பாலுவுக்கு அந்த சுமார் படம் ரொம்ப பிடித்துப் போய்விடுகிறது. படம் முடிந்து வீட்டிற்கு வந்தவன் மனக்கண் முன் அந்த காட்சி ஓடிக் கொண்டேயிருந்தது. ‘நாமும் அந்த மாரி லட்சுமி வீட்டுக்கு போய் பொண்ணு கேட்டா என்ன?’ என்று அவனுக்குத் தோன்றுகிறது. நாளை காலை அவள் வீட்டிற்கு சென்றுவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து உறங்கப் போகிறான்.

என்ன பேசலாம், எப்படி ஆரம்பிக்கலாம் என்று படுத்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தவன் உறங்கி விட்டிருந்தான். அவன் அம்மா காலை 6மணிக்கு எழுப்பிவிடுகிறாள்.

"வயக்காட்டுக்குப் போகணும் எந்திருடா…" என்று நான்கு முறை எழுப்பியபின் பாலு முழித்துப் பார்த்தான்.

எழுந்தவன், "நா ஒண்ணும் வயக்காட்டுக்கு இன்னிக்கு போக மாட்டேன் போ…."

"கிறுக்கு பய புள்ள, ஒன் மாமன் வேற ஊர்ல இல்ல….ஒரு எட்டு போய் பார்த்துட்டு வாடா என் ராசா…."

"ஏய்! ஒரு வாட்டி சொன்ன ஒனக்கு புரியாது….எனக்கு முக்கியமா ஜோலி இருக்கு…..வயக்காடு நான் போய் பாக்கலன்னா ஒண்ணும் ஆங்! கருகி போய்டாது…"

காலையில் அவனிடம் மேலும் வாங்கிக்கட்டிக் கொள்ள அவளுக்கு பிடிக்கவில்லை. "எக்கேடுகெட்டு போ…."

"ஆங்!ஆங்! எனக்கு எல்லாம் தெரியும்….நீ போய் காப்பித்தண்ணி வை…."

காலையில் குளித்து முடித்து, தலை சீவி, ஓரளவு புது சட்டை, வேட்டி அணிந்து கொண்டான். அம்மா கொடுத்த காப்பியை ‘மள மள’ வெனக் குடித்து விட்டு லட்சுமி வீடு நோக்கி புறப்பட்டான். முந்திய இரவு பார்த்த காட்சிகளும், கதாநாயகன் பேசிய வசனங்களும் அவன் மனதில் கடல் அலை போல் மோதிவிட்டு, மோதிவிட்டு சென்றன. அவன் தோரணையைப் பார்த்தால், அந்த வசனத்தில் ‘க்’, ‘ச்’ கூட ஞாபகம் வைத்திருந்து, அதையே இன்று லட்சுமி வீட்டில் பேசிவிடுவான் என்று தீர்மானமாக சொல்லலாம்.

லட்சுமி வீட்டு வாசலுக்கு நேரெதிர்புறம் நின்று கொண்டு, அங்கே போகிறவர், வருபவரிடம் வலுக்கட்டாயமாக பேச்சுக் கொடுத்தான்.

"அப்புறம் அண்ணே….எங்க இந்த பக்கம்…."

"போடா, கூறுகெட்ட பயலே, எங்க இந்த பக்கமா? இது என் வீடு டா….பாக்கப்போனா, நான்தான்டா இந்த கேள்விய உன்ட்ட கேக்கணும்…"

"சரி, சரி…..உங்க ஆத்தாவுக்கு கண் ஆபரேஸன் பண்ணீங்களே, இப்போ எப்படி இருக்கு…."

"கண் ஆபரேஸனா?"

"ஆமாம்!"

"டேய், எங்க ஆத்தா மாசி மாசமே போய் சேந்துட்டாடா…."

"அப்படியா? என்ன ஆச்சு…."

"ஒன்ட வந்து காலங்கார்த்தால பேச்சு கொடுத்தேன் பாரு, என்னய எரும மாட்டு சாணியாலயே அடிக்கணும்….த்துத் தேரிக்கா…" என்று தலையில் அடித்த வண்ணம் அவர் வீட்டுக்குள் ஓடி போனார்.

இந்த மாதிரி ‘தத்துப்பித்தென்று’ உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான் பாலு. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் லட்சுமி தந்தை வீட்டில் இல்லை என்று தெரிந்து கொண்டான். தெருவோர பெருமாள் கோயில் பின்புறம் உள்ள டீக்கடையில் போய் உட்கார்ந்து கொண்டான். அங்கேயும் சென்று டீக்கடைக்கு வருபவரிடம் பேத்திக் கொண்டிருந்தான். ‘குபம்பிட போன தெய்வம்’ குறுக்கே வந்த மாதிரி, அவன் சற்றும் எதிர்பாராத விதமாக லட்சுமி தந்தை டீக்கடைக்கு வந்தார். ‘வைத்த கண் வாங்காமல்’, அவர் முகத்தையேப் பார்த்தவண்ணம் இருந்தான். அவர் டீ வாங்கி குடித்தார். எல்லாரிடமும் பேசினார். 10-15 நிமிடங்களில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அவர் போகும் திசையைப் பார்த்தால் அவர் வீட்டிற்குத்தான் செல்வார் போலிருந்தது. அவரைப் பின் தொடர்ந்தான்.

சற்று வேகமாக நடையைக் கட்டி, "அய்யா! ஒங்களத்தான்….ஒரு நிமிஷங்க….." என்று அவரை அழைத்தான்.

"என்னப்பா பாலு? ஒங்க மாமன் வந்துட்டானா?"

"அவர் வர்ற இன்னும் ரெண்டு நாள் ஆகுங்க…."

"சரி சரி….என்ன நெளியற?"

"ஒங்க கிட்ட ஒரு விஷயம் பேசணுங்க…" என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் பேச ஆரம்பித்தான்.

"என்ட்ட என்னப்பா பேச போற?….ஏதாச்சும் விசகசமா?"

"அப்படில்லாம் ஒண்ணும் இல்லீங்க…." என்றான்.

"சரி சட்டுபுட்டுனு விஷயத்த சொல்லு….12மணி பஸ்ஸுக்கு நான் அசலூருக்குப் போறேன்…ஜோலி கெடக்கு….."

அந்த கதாநாயகன் பேசிய வசனங்களை தொண்டைக்குழிக்கு கொண்டு வந்தவன்,

"வந்துங்க….நான் ஒங்க பொண்ணு லட்சுமிய உயிருக்குயிரா காதலிக்கறேங்க…..கலியாணம் பண்ணிக்கிட்டா அவளத்தான் பண்ணிக்குவேனுங்க..யூ லவ்வுங்க…..அதுக்கு…"

"அதுக்கு…." என்று வேகத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டார் லட்சுமியின் தந்தை.

இரத்தம் கொதித்து, அவர் முகம் முழுவதும் பரவி இருந்ததைக் கண்டு பாலு மிரண்டு போனான்.

"என்னடா, எரும மாடு….ஒன் மூஞ்சிக்கு என் பொண்ணு கேக்குதா…."

"ஏங்க? என்னங்க தப்பு" என்று பாலு அவரை எதிர்த்து கேள்வி கேட்டதுதான் தாமதம், ‘பளார்’, ‘பளார்’ என்று அவன் கன்னத்திலும், முதுகிலும் ஆத்திரம் பொங்க நடு சாலையில் போட்டு அடித்தார்.

"பிச்சு புடுவேன் படுவா….ஒங்க மாமன் மொகத்துக்காக விடறேன்…..இல்லனா அம்புட்டுத்தான்…சொல்லிப்புட்டேன்….நான் லட்சுமிக்குப் பையன் பார்த்துட்டேன்….அதுக்கு தான் இன்னிக்கு அசலூருக்குப் போறேன் கேட்டுக்கோ….." என்று எட்டு ஊர் கேட்குமாறு கர்ஜித்தார்.

பாலுவுக்கு அவமானம் தாங்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘கிடுகிடு’ வென குடமுருட்டிக்கு நடையைக் கட்டியவன், பாலத்தைக் கடந்து வழக்கமான இடத்தில் போய் அமர்ந்து கொண்டான். மீண்டும் அவன் பகற்கனவில் ரதம் வந்தது. இந்த முறை அவனுடன் லட்சுமி இல்லை. அதோ தூரத்தில் லட்சுமி தந்தை அவளுடன் நின்றிருந்தார்.

நேரே அவரருகில் ரதத்தை விட்டவன், "யோவ், பெருசு! முடிவா என்னதான்யா சொல்ற…." என்றான்.

"முடியாது, முடியாதுன்னேன்….என்னடா பண்ணுவ படுவா?"

ரதத்தின் பின்னாலிருந்து ஒரு சாட்டையை எடுத்தான். லட்சுமி தந்தை தோலுரியும் வரை விளாசினான். லட்சுமி கதறினாள்.

"அவரை விட்டுடு…..ஒனக்கு என்ன வேணும்"….

"நான் கலியாணம் பண்ணிக்கிட்டா ஒன்னத்தான் பண்ணிக்குவேன்…..ஒன்னய எனக்குக் கட்டிக் கொடுப்பாரா? ம்ம்ம்"

"தம்பி, என் பொண்ணு லட்சுமியையேக் கட்டிக்க…இந்தா" என்று லட்சுமிக் கையைப் பிடித்து, பாலு கையில் ஒப்படைத்தார் அவள் தந்தை.

லட்சுமியும், பாலுவும் ரதத்தில் ஏறி புறப்பட்டனர், கண்காணாத இடத்திற்கு.

மறுநாள் காலை குடமுருட்டி ஆற்றில் பாலுவின் பிணத்தைக் கிராமத்து மக்கள் கண்டெடுத்தனர்

balaji.trichy@gmail.com

Series Navigation