கலர்ப் பாம்பு கரை ஒதுங்கி

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

டான்கபூர்


குடி நுகரும் ஊருக்குள்.
வாவிக்குள் வந்த மாதிரி ஊர்ச் சல்லுக்குள்.
ஜனநாயகம்
காயாத கருவாட்டில் புழுக்கும்.
தலைக்குள் இருந்து வண்டுகள் உமிழும்.

பச்சைப் பாம்பு ஒன்று
மனிதாபிமானத்தின் இறக்கை விரிக்கும்.
வறண்ட நாக்கு மக்களுக்கு பேசும்.
எதிர்கால நாற்காலி முதிரையில் இருக்க
சுனாமிக்கு மூக்குத்தி குத்தி விழா காணுகிறது.

நீலமாய் ஒரு பாம்பு.
சுனாமியால் நிரம்பிய வெளிநாட்டுச் சுரியை
நிரப்பிக் காண்பித்து
தெற்கில் அது சட்டை கழற்றுகிறது.
காட்டையும் களனியாய் காண்கிறது.
வடக்கையும் கிழக்கையும் என்னில் போர்த்துவேன் என்று
சட்டையை மாட்டுகிறது.

சிவப்பாய் இன்னொன்று.
கண்களை உருட்டும்.
முடியைக் கோதும்.
பிணம் இனித் தின்னேன் எனக் கத்தும்.
உழைப்பாளியைத் தீண்டேன் என முழங்கும்.
ஏழைகளின் கண்ணீர் உவர்த்தலாகாது எண்ணுகிறது.

இப்பாம்பு,
அலகொன்றை எடுத்து சிலம்பாடும்.
தனியிடத்தில் நிற்காது.
இனிப்பூட்டி அழைக்க விலாங்காக மாறியும் வாழும்.
சிறுபான்மைக்குள்ளிருந்து சீறுகிறது.

சுனாமியின் முடிபிடுங்க வந்திறங்கும்.
சுனாமியின் நகம் பிடுங்க வந்திறங்கும்.
ஊருக்குள்.
மீண்டும் பேயர்களைக் கொத்த.
எல்லா வர்ணப்பாம்புகளும்

சுனாமி பூசிய கரியுடன் கியூவில்….

டான்கபூர், இலங்கை

Series Navigation

டான்கபூர்

டான்கபூர்