கற்சிலைகள் காலிடறும்!

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

ஜோதிர்லதா கிரிஜா


(18.6.2006 ஆனந்த விகடனில் கவிஞர் வாலி கண்ணகிக்குச் சிலை வைத்ததை ஆதரித்து எழுதிய “கண்ணகி கரடி பொம்மையா?” எனும் கவிதைக்கு எதிரொலி)
“கண்ணகி ஒரு கலாசாரக் குறி – இது
என்றோ ஏட்டிலே எழுதி வைத்த முறி” –
கன்னற் கவிஞன் வாலிதன் கூற்றைப்
பெண்ணே! நீ குரலுயர்த்தி முறி!
அன்னணம் செய்தலல்லால், நீ ஒரு தற்குறி!
கண்ணகியின் துதி பாடும் கவிஞனை எதிர்த்திடு
பெண்களுள் அவள் சிறந்தவள் எனும் நினைப்பை உதிர்த்திடு!
கவிஞனின் எண்ணமதில் எள்ளளவும் மயங்காது
விண்ணதிரக் குரல் கொடுப்பின், நீ ரோசமுள்ள மாது.
சிலை வைத்து நினைவதனைக் காலமெலாம்
நிலைப்படுத்த என்னதான் செய்தாள் அவள்?
விலை போன தன் கணவன் கோவலனைத்
தலை வணங்கி ஏற்றாளவன் திரும்பியதும்.
அவனின்றித் தனித்திருக்க நேர்ந்த நாளில் அவள்
கயவன் எவனோடும் கடைக் கண்ணால் பேசவில்லை;
கனவனை மட்டுமே காதலித்துக் காத்திருந்தாள்;
கடைசியில் அவன் திரும்பியதும் கடுஞ்சொல்லால் ஏசவில்லை;
கடையன் அக் கோவலன் மேல் கொடும் பார்வை வீச வில்லை.
கற்புக்கரசியெனக் கொண்டாட இவை மட்டும் போதுமெனில்,
கற்சிலைகள் நம் நாட்டில் காலிடறும் அறியீரோ?
சொந்தச் சோகத்தால் அவள் தனக்கு
எந்தளவுச் சினமிருந்த போதிலுமே
எந்தமிழ் மதுரை மாநகர்தன்னை
வெந்திட்ட சாம்பலாய் ஆக்கியது
எந்த விதி அடிப்படையில்?
சிலை நிறுத்தி ஒருவர்தம் நினைவதனை
நிலை நிறுத்த இவ்வொரு தகுதி மட்டும் போதாது
உலகிற் சிறந்த ஓவியன் என்பதற்காய் – நாளை
உலுத்தன் ஹிட்லருக்கும் சிலை வைப்போமோ?
சோரம் போன கணவர்களைப் புறந்தள்ளி
ஓரங்கட்டி விலக்காது ஏற்றிடுவோர்
காலங்காலமாய் இங்கே உளர் – சொற்
சாலக் கவிஞன் வாலிதன் கூற்றில் மயங்காதீர்!
இலக்கிய உலகினையே இரண்டாம் நூற்றாண்டில்
கலக்கிய பெருமையினைக் கொண்டது சிலப்பதிகாரம்- ஆனாலும்
கலங்கிய மனத்தினளாய் மதுரையை எரித்திடவே
கண்ணகிப் பெண்ணுக்கு யாரளித்தார் அதிகாரம்?
கரடியோ, சிறுத்தையோ கண்ணகியாள் யாமறியோம்; ஆனாலும்
நெரடத்தான் செய்கிறது ஊரெரித்த அவள் செய்கை.
கணவன் ஒரு கல் நெஞ்சக் கயவனே யானாலும்
கண் மலர்த்தி அவனை யேற்கும் அசடுகளின்
கலாசாரம் இனி வேண்டாம் – அது வெறும்
அநாசாரமே – பெண்கள் உணரட்டும்.
சிலப்பதிகாரக் கதை மாந்தர் ஒருவர்க்குச்
சிலை வைத்தேயாகவெண்டும் என்றிருப்பின் – அது
நிலை குலைந்து “யானே கள்வன்” எனக் கூவித்
தலை சாய்ந்த மன்னனுக்கே!
* * * * * * *
jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா