கற்கோவில்கள்

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

சிறில் அலெக்ஸ்



“மக்கா எழும்பு. மடிக்குப் போணும் எழும்பு.” எலிசபெத்தா மகன் சேவியரை எழுப்பினாள்.
“ராவைக்கு ராவ நார்கோலுக்குப் போய் படம் பாத்துட்டு கடலுக்குப் போவ எழும்பாம கெடக்காம் பாரு. எல எழும்புல.”
முனகிக்கொண்டே சேவியர் விழித்தான்.

“அப்பாக்கு காச்சலடிக்கு, நீ மச்சான்கூடப் போ.”
சன்னலில் இருந்த பல்பொடியிலிருந்து கையில் கொஞ்சம் தட்டிக்கொண்டு கஞ்சியும் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்த பையை எடுத்துக்கொண்டு கடற்கரை நோக்கி நடந்தான் சேவியர்.

தெருவிளக்குகள் இல்லாத இடுக்குகளில் கலங்கரை விளக்கின் சுழற்சியில் அவ்வப்போது ஒளிபரவி அதிகாலை இருளை விலக்கிப் பாதை காட்டியது.

கடற்கரையில் கூட்டம் அதிகமில்லை. “அன்னா வாரான் சேவியரு.” சேவியரின் அக்காவின் கணவர் சைமன் கை அசைத்தார்.
“நேத்துமா படத்துக்குப் போன? ரெண்டுவாரத்துல வெளிநாட்டுக்குப் போறவனமாரியா இருக்க. இவ்ளோ நேரமா இங்க காத்துக் கெடக்காவு.” அக்கா திட்டுவதையும் பொருட்படுத்தாமல். வலையை படகில் ஏற்றிக்கொண்டிருந்த மச்சானுக்கு உதவிசெய்தான் சேவியர்.

“அப்பாவுக்கு காச்சலாம்?” அக்கா கேட்டாள்

“ஓமு.”

சேவியர் மச்சானுடன் கடலுக்குப் போகத் தயங்குவான். அவர் இவனைப் போலவே முன்கோபி. மச்சான் திட்டினால் எதிர்த்துப் பேசமுடியாது. அப்பா அப்படியல்ல. மொட்டையன் சாதுவானவர், கோயில் கமிட்டியில் அவர் இல்லாத சமயங்களிலும் அவரிடம் ஊர் பிரச்சனைகளை விவாதிக்கப்பட்டன. மீனவர் என்றாலும் படித்தவர்களே மதிப்புக் கொள்ளுமளவுக்கு ஞானி. பங்கு சாமியார்கள் ஊரில் முதலில் சந்திக்கும் பெரியவர் மொட்டையன் என அழைக்கப்படும் குருசு.

சேவியர் படகின் இயந்திரத்தை இயக்கினான். மிதமாக எழுந்த அலைகளின்மேல் பயணித்தது படகு.

“யாரெல்லாம் படத்துக்குப் போனியல?”

“நானு எதிர்வீட்டுக் குமாரு பெறவு நொண்டி.”
மச்சான் தம்பிகூடப் போனதைச் சொன்னா அவனுக்கு வீட்டில அடிவிழும்.

“நேத்து நொண்டி எங்கூடப் பெரையில சிட்டு வெளையாடிட்டிருந்தான்? பொய், என்னா? ஏண்டே படிக்க பயலுவள கெடுக்குதிய?”
சேவியர் மெளமானான். ‘இவர்கூடப் பேசுனா சண்டதான் வரும்’.

படகு உள்ளே செல்லச் செல்ல நிலம் மறைந்தது. கடல், நீரால் நிரம்பிய ஒரு பாலைவனம் போலக் காட்சிதந்தது. கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் நீலம். வழக்கமாய் மீன்பிடிக்கும் இடத்தை நெருங்கும்போது சைமன் பதட்டமானார்.

“எல சேவியரு அங்கபாரு அந்த போட்டுங்க நம்ம ஊர் போட்டுகமாரி தெரில?”

“நம்ம ஊர் போட்டிகயில்ல. இதோட நாலாது நாளு. இங்க வராதியன்னு அப்பா அன்னைக்குத்தான் சொன்னாவு, பெறவும் இங்கதா வாரானுவ.”

வெளியூர் ஆட்களுக்கு அந்த இடத்தில் மீன் பிடிக்கத்தடை இருந்தது.

“லேய்.. யாருல அது? இங்க வரக்கூடாதுன்னு தெரியாதாக்கும்?” சைமன் சத்தம் போடத்துவங்கினார். இரண்டு வெளியூர் படகுகள் நின்றுகொண்டிருந்தன.

சேவியருக்கு எரிச்சல் வந்தது. மொட்டையன் மகன், அவருக்கு நேர் எதிர். நண்பர்களுக்காகப் பலமுறை சண்டைபோட்டுக்கொண்டு வந்திருக்கிறான். போலீஸ், கேசென்று ஒரு முறை நிலமை கைமீறிப்போனது. மொட்டையன் பங்குத் தந்தையிடம் சொல்லி பிஷப் கடிதத்துடன் போய் சேவியரை அழைத்துவந்தார்.

“ஐயா உங்களப் பத்தி கேள்விப் பட்ருக்கேன். இவன் உங்க பிள்ளையா? கோவம் ஜாஸ்த்தி இவனுக்கு. சொல்லி வைங்க. போலீசையே கை நீட்டுறான்.” இன்ஸ்பெக்டர் எச்சரித்து அனுப்பினார்.

“எல எங்க மாமன் சொல்லியும் கேக்காண்டியளால. நாங்க ஒங்க ஊர்ப் பக்கம் வந்தா உடுவியளா?”
சைமன் வெளியூர் படகுகளிலிருந்தவர்களிடம் சப்தமாய் விவாதித்துக்கொண்டிருந்தார்.

வெளியூர் படகிலிருந்த பெரியவர் பேசினார்.
“மொட்டையன் மருமவனா நீயீ? இரப்பா, வல எறக்கியாச்சு இன்னக்கி ஒருநா இங்கன போட்டும்.”

“நாலு நாள இங்கனதான் மடி எறக்குறீயளாம்? எங்க மாமன் சொல்லியும் கேக்கலேன்னா ..?”

“எல ஒங்க மாமன் என்ன கலெக்டரா?” வெளியூர் படகிலிருந்து இளைஞர் கோவத்துடன் கேட்டார்.

“மைக்கிளு, பெரியவங்க பேசிட்டிருக்கும்போது நீ ஏண்டே குறுக்க. சும்மா இரு.”

“நீரு பெரியவரு. அவன் பெரியவனா?” சைமனைக் காட்டி மைக்கிள் பேசினான்.

“கலெக்டர் சொன்னாத்தான் கேப்பியளா? இங்க வரக்குடாதுன்னு சொல்லியும் திரியத் திரிய வந்துட்டு… மரியாதையா வலைய இழுத்துட்டு போங்க.”

“மக்கா கொஞ்சம் பொறுங்கடே. இன்னைக்கு வலை எறக்கியாச்சு…” பெரியவர் கெஞ்சாத குறை.

“மச்சான் அந்த மைக்கிள்தான் கபடி ஆட்டத்துக்குப் போன நம்ம பயவள அடிச்சது. இன்னைக்கு நாயம் பேசுதான்.” சேவியர் மச்சானுக்குத் தகவல் சொன்னான்.

“ஒங்கூருக்கும் எங்கூருக்கும் சும்மாவே சரிவராது, இதுல மடி போடுற எடத்துல வந்து சண்டைக்கு வராதிய.” சைமன் கடைசியாய் எச்சரித்தார்.

“வலை எறக்கியாச்சுன்னு சொல்லுதேன்..ஒக்காளி.” பெரியவர் முகத்தில் எரிச்சல்.

சேவியர் கடலில் குதித்தான். கடலுக்குள் மூழ்கி சில நிமிடங்களுக்குப் பின் மேல் வந்தான்.

“ஓ பெரியாளு. வலைய அறுத்துட்டாச்சு..இப்பவாவது போங்க.”

பெரியவர் வலையைஇழுத்தார். வலை வெட்டப்பட்டிருந்தது.

“எல சின்னப்பயலுவளா.. புத்திய காட்டிட்டீலுவள்ள? ” பெரியவர் சத்தம்போட்டார்.

வாய்த்தகறாரு துவங்கியது. கெட்டவார்த்தைகள் மிகுந்த ஒரு சப்தமான சண்டைக்கு நடுவில் மைக்கிளின் அலறல் கேட்டது. கையில் பலத்த வெட்டுக்காயத்துடன் இரத்தம் வழிந்தோட படகில் கீழே விழுந்தான் மைக்கிள்.

சேவியர் கத்தியை கடலில் வீசினான்.

மைக்கிள் படகிலிருந்தவர்கள் பெரியவர் படகுக்கு மைக்கிளைத் தூக்கிக்கொண்டு தாவினர். பெரியவர் படகை வேகமாகச் செலுத்த அந்த இடத்திலிருந்து மறைந்தது வெளியூர்ப் படகு. சைமன் இன்னும் கோபம் தீராமல் கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தான். படகிலிருந்த பெட்ரோலை ஊற்றி ஆளில்லாம நின்றுகொண்டிருந்த வெளியூர்ப் படகை கொழுத்தினான்.

சேவியர் எதுவும் நடக்காததுபோல, உடலில் தெறித்திருந்த இரத்தத்தையும் பொருட்படுத்தாமல், வலையை கடலுக்குள் இறக்கினான்.

….

ஞாயிற்றுக்கிழமை பூசையில் பங்குச் சாமியார் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்.”பகைவனையும் அன்பு செய்யச் சொல்லி இயேசு சொன்னதைப் போல மனித வரலாற்றில் வேறு எவருமே சொல்லியிருக்கமுடியாது. லூக்காஸ், அதிகாரம் ஆறு, வசனங்கள் இருபத்தேழு துவங்கி முப்பத்தாறு முடிய. ‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் உங்கள் பகைவர்களை அன்பு செய்யுங்கள், உங்களை வெறுப்போருக்கு ….”

கோவிலின் வெளியே படிக்கட்டுகளில், சேவியர் தன் கழுத்தில் கிடந்த சிலுவையில் காய்ந்திருந்த இரத்தக் கறையை ஈர்க்குச்சியால் சுரண்டிக்கொண்டிருந்தான்.
———————————
cvalex@yahoo.com

Series Navigation