கறுப்பு தேசம்

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

கவிதா – நோர்வேகறுப்புதேசம்

கறுப்பு இரத்தம் சுமக்கும்

கரிய மனிதர்கள்

எங்கும் இருள்

எங்கும் கறுப்பு

கனவுகள் மட்டும்

வர்ணங்களில் சுமந்த

வண்ணம்

தினமும் பிறப்பவர்களுக்காக

அழுவதா

இறப்பவர்களுக்காக அழுவதா

தெரியாதவர்கள்.

அவலங்கள் அலங்கரிக்கும்

தெருக்களுக்கு இப்பொழுதெல்லாம்

தெய்வங்கள் வருவதில்லை

பிரிவுகள் மட்டும் தான்

பிரியாமலிருக்கிறது

இந்த கறுப்பு மனிதர்களை

தலையறுந்த பனை மரமும்

வால் அறுந்த சிறுவர்களும்

சிந்திக்க சொல்கிறார்கள்

இந்த தருணங்களில்

சிந்திக்கமுடிந்தவர்கும்

செயல்பட முடிவதில்லை.

உயிர்களைக் கூட்டி அள்ளி

குப்பையில் போடுவது

ஒன்றும் புதிதில்லை

இவர்களுக்கு

இன்னும்தான் புரியவில்லை…

பல விடயங்கள் எனக்கும்.

நான் ஊனமுற்றவள்தான.;

இவை அனைத்தும்

செயலற்று பார்த்துக் கொண்டிருக்கும்

தருணங்களில்…

எரிந்து கொண்டிருக்கும்

என் தேசத்திற்கு

நீர் கொடுப்பதாய்ச் சொல்லி

எண்ணை ஊற்றியவர்கள்தான்

அதிகம்

புகைந்து கொண்டிருக்கிறது

எனக்குள்ளும் முப்பது வருடங்களாய்

அந்தத் தீ

ஒருநாள்

தீ அணையும்.

என் தேசம் துளிர் விடும்.

அந்த நொடி…

புகையும் மனதெல்லாம்

மேகமாகித் தூரலிடும்

அதை

ஏந்திக் கொள்ளவேண்டிய

கைகளெல்லாம்

இருக்க வேண்டி

தவம் இருப்போம்.

kavithai1@hotmail.com

Series Navigation