கரிசல் கிருட்டிணசாமி (17.12.1959)

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

முனைவர் மு.இளங்கோவன்


தமிழக நாட்டுப்புற இசையை மக்கள் மனங்களில் கொண்டுசேர்க்கும் பணியை வானொலி,திரைப்படம் முதலான ஊடகங்கள் முனைப்புடன் செய்துகொண்டிருந்தபொழுது முற்போக்கு இயக்க மேடைகளும்
அப்பணியைக் குறைவின்றிச் செய்தன.பாவலர் வரதராசன் போன்ற கலைஞர்களுக்கு இதில் பெரும் பங்குண்டு.நாட்டுப்புற இசையை,பாட்டை மக்கள் விரும்பிக் கேட்கும்படியாகச் செய்தவர்களுள் கொல்லங்குடி கருப்பாயி,விசயலெட்சுமி நவநீதகிருட்டிணன்,புட்பவனம் குப்புசாமி,பரவைமுனியம்மா,தஞ்சை சின்னப்
பொண்ணு,கோட்டைச்சாமி ஆறுமுகம்,தேக்கம்பட்டி சுந்தரராசன்,க.அ.குணசேகரன்,புதுவைசெயமூர்த்தி
முதலான கலைஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் குரல் இனிமையைத் திரைப்படம் என்ற வணிக நிறுவனம் பணச்சந்தைக்குப் பயன்படுத்தியது.விளம்பரத்தையும்,புகழையும்,பணத்தையும் கைம்மாறாக இவர்களுக்கு வழங்கியது.இவ்வரிசையில் இணைத்துப் பேசப்படவேண்டியவர் கரிசல் கிருட்டிணசாமி அவர்கள்.

கரிசல் கிருட்டிணசாமி என அழைக்கப்பொறும் கிருட்டிணசாமி அவர்கள் பணத்துக்காகவோ, புகழுக்காகவோ இல்லாமல் மக்கள் மனத்தில் மாற்றம் உருவாக்கும் பாடகராக,முற்போக்குக் கலைஞராக உலா வருவதை அவர்தம் பாடல்கள் நமக்கு அடையாளம் காட்டுகின்றன. சவுத் ஏசியன் புத்தக நிறுவனம் வழியாக இவர் பாடிய நான்கு ஒலிநாடாக்கள் இதுவரை வெளிவந்துள்ளன.பல்வேறு முற்போக்கு இயக்கங்களின் கலை இரவுகளில் இவரின் பாடல்கள் பல்லாயிரம் மக்களால் கேட்டுச் சுவைக்கப்பட்டுள்ளன.தூத்துக்குடி வானொலி நிலையமும் மக்கள் தொலைக்காட்சியும் மட்டும் இக் கலைஞனைப் பயன்படுத்திக் கொண்டனவே தவிர பிற அரசு நிறுவனங்களோ,தனியார் அமைப்புகளோ அழைத்துச் சிறப்பிக்காமல் உள்ளமை வருந்தத்தக்கச் செய்தியாகும்.

அஞ்சல் துறையில் உதவியாளராகப் பணிபுரியும் கிருட்டிணசாமி அவர்கள் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் வாழ்ந்து வருகிறார் (3. எப்.சி. செல்வ விநாயகர் கோயில் தெரு,.செல்லமுத்துப் பிள்ளை காம்பவுண்ட், விக்கிரமசிங்கபுரம்-627425. பேசி : 04634-221252).

இவர் பிறந்தஊர் விருதுநகர் மாவட்டத்தின் நரிக்குளம் என்பதாகும்.பெற்றோர் சுப்பையாதேவர்.சொர்ணாம்பாள்.
கணக்குப்பாடம் படித்த(B.Sc) பட்டதாரியான இவர் 26 ஆண்டுகளாக அஞ்சல்துறையில் பணிபுரிந்து வருகின்றார். இளமையில் தந்தையாருடன் இணைந்து பசனைப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த கிருட்டிணசாமி அவர்கள் பின்னாளில் தமிழகமக்களின் உள்ளங்களைக் கவரும் பாடகராக மாறுவார் என்பது அவருக்கே தெரியாது.தொடக்கத்தில் ஓரிரு பாடல்களைப் பாடும் பாடகராகவே அறிமுகம் ஆன கிருட்டிணசாமியை நாட்டுக்கு வழங்கியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கலை இரவுக் கலைநிகழ்ச்சிகள் எனில் பொருத்தமாக இருக்கும்.

தொழிற்சங்கங்களில் இணைந்து பணிபுரிந்தபொழுது தொழிற்சங்கச் செய்திகளைப் பாடலாகப் பாடும்படி இயக்க அன்பர்கள் முன்பு வேண்டுவர். நம் கிருட்டிணசாமியும் தம் இனிய குரலில் பாடி அனைவரிடமும் தம் இயக்கக் கருத்துகளைக் கொண்டு சேர்த்தவர்.இவ்வாறு 1982 இல் பாடத்தொடங்கிய கிருட்டிணசாமி அனைத்து முற்போக்கு இயக்கக் கலை இரவுகளிலும் பாடத்தொடங்கினார்.இவரின் தேன் ஒத்த குரலைக் கேட்கத் தோழர்கள் ஆர்வம்கொண்டனர்.

முற்போக்கு இயக்கத்தோழர்கள் எழுதிய பாடல்களை இசையமைத்துப் பாடும் கிருட்டிணசாமி அவர்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் மண்ணின் மணம் மாறாமல் மக்களை விழிப்புணர்ச்சியூட்டும் தன்மையுடையன.தோழர் நவகவி அவர்களும் வையம்பட்டி முத்துசாமி அவர்களும் இயற்றிய பாடல்கள் கிருட்டிணசாமி அவர்களால் உயிரோட்டமுடன் பாடப்பட்டுள்ளன. இவ்வகையில் வையம்பட்டி முத்துசாமி அவர்களால் இயற்றப்பட்ட ‘பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா’ என்னும் பாடல் கிருட்டிணசாமியின் இசையில்வெளிப்படும்பொழுது அனைவரையும் கவர்ந்து இழுத்துவிடும் தன்மையது.

கிருட்டிணசாமி அவர்கள் மண்ணின் மணம் மாறாமல் இதுவரை பல பாடல்களைப்பாடியுள்ளார்.இப்பாடல்களை முழுமையும் குறுவட்டாக்கி உலகத் தமிழர்களின் சொத்தாக மாற்றவேண்டும்.வறுமைநிலையில் வாடும் இக்கலைஞனை அரசு போற்ற வேண்டும்.கலைமாமணி போன்ற பட்டங்களை இந்த மக்கள் கலைஞனுக்கு வழங்கி விருதுகளுக்கு மதிப்பேற்படுத்த வேண்டும்.அரசு மேடைகளில் இவரைப் பாடச் சொல்லி மதிக்கப் பழகிக்கொள்ளவேண்டும்.

பாரதியார் பற்றியும் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பற்றியும் இவர் பாடியுள்ள பாடல்கள் மிகச்சிறந்த கற்பனை நயமும்.எளிய சொல்லாட்சிகளும் கொண்டுள்ளன.

‘மண்ணெண்ணை விளக்கினில் பாட்டுக்கட்டி இந்த மண்ணுக்குக்கொண்டு வந்தேன்’ எனத்தொடங்கி கிருட்டிணசாமி அவர்ள் பாடும்பொழுது இவர் இசை உச்சிவரை சென்று நம் உயிரை உசுப்புகிறது.

‘பூவுல வாசமில்ல பொண்ணுமனசுல நேசமில்ல
கண்ணுல தூக்கமில்ல கஞ்சியிருந்தும் வயித்துக்கில்ல’

எனக்காதல் சோகம் ததும்பும் பாடலைக் கிருட்டிணசாமி பாடும்பொழுது சொல்லுக்குள் ஓடும் சோகத்தைக் கேட்பவர் கட்டாயம் அனுபவிக்கமுடியும்.

‘கலெக்டர் வாராரு காரில் ஏறித் தாரு ரோட்டுல
கலர் கலரா காகிதம்பாரு ஆபிஸ் கேட்டுல’

என்று மனுகொடுக்க காத்திருக்கும் பொதுமக்கள் நிலையை கிருட்டிணசாமியை விட எளிமையாக
யாரும் உணர்த்திவிட முடியாது.

‘பரதனுக்கு நாடு தந்து பதினான்காண்டு காடுசென்ற
சிறீராமன் கதைமாறுது சீதா ராமாயண கதை மாறுது
………………………………………………………..
பொன்னும் பெண்ணும் மண்ணும்தேடிப் போர்நடத்திய காலமா’

என்று கிருட்டிணசாமி அவர்கள் பாடும்பொழுது மத உணர்வுகளுக்கு மனிதன் ஆட்பட்டுக் கிடக்கின்றமை கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது.
‘ஊரடங்கும் சாமத்தில நான் ஒருத்திமட்டும் விழிச்சிருந்தேன்
ஊர்க்கோடி ஓரத்தில ஒன்நினைப்பில படுத்திருந்தேன்..

கருவேல முள்ளெடுத்துக் கள்ளிச்செடியிலெல்லாம்
உன்பேர என்பேர ஒருசேர எழுதினோம’

என்று இடையிடையே வரும் பாடலடிகளில் சிற்றூர்ப் புறங்களில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதிய உணர்வுகள் அதன் இறுக்கம் ஆகியன காட்டப்பட்டுள்ளன.

கிருட்டிணசாமி அவர்கள் பாடி இதுவரை வெளிவந்துள்ள பாடல்கள் யாவும் கிராமப் புற நிகழ்வுகள்,எளிய உவமைகள்,மக்கள் பேச்சுவழக்குகள்,மக்கள் பிரச்சனைகள் இவற்றைக்கொண்டு விளங்குகின்றன.இவரைப் போற்றுவதும்,இவர் பாடல்களைப் பரப்புவதும் தமிழக மக்களின் கடமை மட்டுமல்ல.அயல்நாடுகளில் வாழும் தமிழ் உணர்வாளர்களின் கடமையாகவும் அமையட்டும்…

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
மின்னஞ்சல்: muelangovan@gmail.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்