கன்னிமை

This entry is part [part not set] of 6 in the series 20000827_Issue


எஸ்.ராமநாதன்


சப்பாணி டாக்கடை எடுத்து வைக்கும் ஒன்பது மணிக்கே
படுத்தவள் -புரள்வாள் தூக்கமின்றி…
கீழக்கொட்டகையில் இரண்டாம் ஆட்டம் விட்டும்;
எட்டுக்குத்து இளைவளுக்கெல்லாம் – அமைந்த;
தனக்கு மட்டுமே வாய்க்காமல் போன –
கல்யாணத்தை கனவித்தபடி

இரவு குலைத்த –
கேட்டுப் பழகிய
(ஆனாலும் பயமுறுத்துகிற)
இராப்பாடியின் குரல் மேலத்தெரு கடைசி கேட்கையிலே…
சாதம் தார்சாவில் வைத்துத் திரும்பவும் படுப்பாள்

யார் மாதிரி இருப்பான் ?
நினைவில் முகம் பிடிபடாமல் போகும்.

முற்றத்து வேப்பமரத் தூக்கம் கலைந்து
பறவைகள் படபடக்க…
டயர் செருப்பு தேய வீதி வழி நடந்து
(பயம் விரட்ட ?)
பண்ணைக் காவல்காரன் பால்மணி அடித்துப் போவான்
நினைவில் –
(மறந்து போன ஆசைமுகம்)
முகம் பிடிபட்டு வரும் வரும்…
தூக்கம் இவளுக்கு வரும்.

 

 

  Thinnai 2000 August 27

திண்ணை

Series Navigation