கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

வ.ந.கிரிதரன்[அண்மையில் தமிழகத்திலிருந்து ஆழி பதிப்பக வெளியீடாக வெளிவந்த ‘தமிழ்க்கொடி 2006’ ஆண்டு மலரில் பிரசுரமான கனடாத் தமிழர்கள் பற்றிய கட்டுரையின் மூல வடிவமிது. கட்டுரையினை இறுதி நேரத்தில்தான் என்னிடம் கேட்டிருந்தார்கள். கட்டுரை சிறிது நீண்டு விட்டிருந்ததால், அதனை மலரின் பக்கங்களுக்கேற்ற வகையில் சுருக்குவதற்கு முன் அனுமதி அளித்திருந்தேன். அதன் விளைவு.. அக்கட்டுரையின் சில முக்கியமான பகுதிகள், சில சஞ்சிகைகளின், எழுத்தாளர்கள் சிலரின் பெயர்கள் விடுபட்டுப் போய் விட்டிருந்ததை மலரில் வெளிவந்த கட்டுரையினைப் படித்தபொழுது அறிய முடிந்தது. ஓரிடத்தில் அர்த்தமே இதன் விளைவாக மாறுபட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. இதன்பொருட்டுக் கட்டுரையினை முழுமையாகப் பிரசுரிப்பதன் தேவை அவசியமெனக் கருதுகின்றேன். – வ.ந.கி]

புலம்பெயர்தலென்பது மானுட சமுதாயத்தின் வளர்ச்சிக்கு எப்பொழுதுமே உறுதுணையாகத்தானிருந்து வந்திருக்கிறது. இதனைத்தான் இதுவரையிலான மானுட வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கிறது. புலம்பெயர்தலுக்குப் பல்வேறு காரணிகள் இருந்த போதிலும் முக்கியமான காரணம் இருத்தலுக்கான தப்பிப் பிழைத்தலே என்று நிச்சயமாகக் கூறலாம். ஆதியில் மானுடர்கள் நாடோடிகளாக புலம்பெயர்ந்தார்கள். உணவுக்காக அவர்கள் அடிக்கடி புலம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது. பின்னர் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்கள் மானுடரின் புலம்பெயர்தலை ஊக்குவித்தன. சங்ககாலத்தமிழர் வாழ்வை விபரிக்கும் சங்கத் தமிழ் இலக்கியங்கள் உழைப்புக்காகப் புலம்பெயர்ந்த தலைவனின், அவனை நினைத்து ஏங்கும் தலைவியின் உளநிலையினை விரிவாகவே விளக்கி நிற்கின்றன. அவ்விதம் உழைப்புக்காகப் புலம்பெயராமல் சோம்பி நிற்றலை எள்ளி நகையாடியது அக்காலகட்டச் சமுதாயம். மாதவியிடமிருந்து பிரிந்து மீண்டும் கண்ணகியை நாடிய கோவலன் அவளுடன் மதுரைக்குப் புலம்பெயர்ந்ததை விபரிக்கிறது சிலம்பு. அத்துடன் பல்வேறு காலகட்டங்களில் வேற்று நாட்டவர்கள் வர்த்தகம் நாடிப் புலம்பெயர்ந்து பண்டையத் தமிழ்கத்துக்கு வந்திருப்பதையும் ‘கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்’ என்று மேலும் விபரிக்கும் (கடல் ஆடு காதை: வரி 130). புலம்பெயர் மாக்கள் என்ற பதத்தினை அப்பொழுதே இளங்கோவடிகள் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் அவ்வப்போது புலம்பெயர்ந்த போதும் புலம்பெயர்தலாலேற்படும் பாதிப்புகள் அதன் தன்மையினைப் பொறுத்து வேறு படும். ஒருவர் தன் சொந்த மண்ணில் எந்தவித அரரசியற் பிரச்சினைகளுமில்லாமல் பொருளாதாரக் காரணங்களுக்காகப் புலம்பெயரும்போது அவரைப் பொறுத்தவரையில் மண்ணுடனான, உறவுகளுடனான பிரிவு, அதனாலேற்படும் விளைவுகளான சோகம், ஏக்கம் மற்றும் கழிவிரக்கம் இவையெல்லாம் தற்காலிகமானவை. எந்த நேரமும் அவர் தன் ம்ண்ணுடன், உறவுகளுடன் இணைந்து கொள்ள முடியும். யுத்தமொன்றின் காரணமாகப் புலம்பெயர்ந்து செல்லும் போர் வீரர்களின் பாதிப்புகள் சிறிது வேறு பட்டவை. ஆயினும் அவர்களும் கூட ஒருவித சுழற்சி முறையில்தான் பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். செய்யும் தொழில் உயிராபத்து நிறைந்ததாக இருந்தாலும் கூட அவர்களுக்கும் சொந்த மண்ணுக்குமிடையிலான பந்தம் அறுபட்டுப் போய்விடுவதில்லை. ஆனால் அரசியற் காரணங்களுக்காக, சர்வாதிகாரிகளின் மற்றும் நீதியற்ற அரசுகளின் மனித உரிமை மீறல்கள் காரணமாக வேரோடு இன்னுமொரு மண்மீது தூக்கி வீசப்படும் அரசியல் அகதிகளின் புலம்பெயர்தலென்பது முற்றிலும் வேறுபட்டது. இது ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதிகமானவை. அதிலும் சொந்த மண்ணில் உடல் ரீதியாக, உளரீதியாகப் பாதிக்கப்பட்டு புலம்பெயர்வோரின் நிலை இன்னும் சிக்கலானது. இத்தகையவர்களை ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்ந்தும் புகுந்த இடத்திலும் ஆட்டிவைக்கின்றன. போலந்து நாட்டு யூத இனத்தவரான அமெரிக்க இலக்கியத்தில் தன் படைப்புகள் மூலம் தடம் பதித்த எழுத்தாளர் ஜேர்சி கொசின்ஸ்கி இவ்விதமாகப் பாதிக்கப்பட்ட ஒருவர். இரண்டாம் உலகயுத்தக் காலத்தில் குடும்பத்தவர்களைப் பிரிந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அலைந்து திரிந்த தன் அனுபவத்தையே பின்னர் பல வருடங்களுக்குப் பின்னர் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த பின்னர் ‘நிறமூட்டப்பட்ட பறவைகள்’ (The Painted Birds) என்னும் நாவலாகப் படைத்தார். அதில் விபரிக்கப்படும் அவரது சிறுவயது அனுபவங்கள் வாசிப்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைப்பதாகவிருக்கும். இன்று இந்த நாவல் அமெரிக்க இலககியத்தில் முக்கியமானதொரு படைப்பாகக் கருதப்படுகிறது. இறுதி வரையில் புலம் பெயர்ந்து புகழ்பெற்ற நாவலாசிரியரான பின்னரும் கூட ஜேர்சி கொசின்கியால் அவரது கடந்த கால அனுபவங்கள் ஏற்படுத்திய உளரீதியிலான பாதிப்புகளிலிருந்து விடுபட முடியவில்லை. இது இறுதியில் அவரது தற்கொலையில் போய் முடிந்தது.

“ஊரான ஊரிழந்தோம்…
ஒற்றைப்பனைத் தோப்பிழந்தோம்.
பாராள வந்தவரே!
உம்மையும் தான் நாமிழந்தோம்.
கடலே நீ இரையாதே!
காற்றே நீ வீசாதே!
நிலவே நீ அவியாதே!
நெஞ்சமெல்லாம் தீயாச்சே!
ஆற்றோரம் மணல் மேடு.
மணல் மேட்டில் பட்டிபூ!
பட்டிப் பூ பூத்திருக்கு.
யார் வரவைக் காத்திருக்கு”

மேற்படி ஈழத்துக் கவிஞன் சேரனின் கவிதை வரிகள் புலம்பெயர்ந்த நெஞ்சங்களின் மண்ணின் மீதான கழிவிரக்கத்தையும், சோகத்தையும் தீயான நெஞ்சத்தினையும் அற்புதமாக வெளிப்படுத்துகின்றன. ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்காவெனப் பூமிப்பந்தெங்கும் ஈழத்தமிழர்களைத் தூக்கி எறிந்தது ஈழத்துத் தமிழர்களின் தேசிய விடுதலைக்கான அரசியற் போராட்டம். இன்னுமொரு ஈழத்துக் கவிஞனான வ.ஐ.ச. ஜெயபாலன் கூறுவது போல்,

” யாழ்நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்போட்டில்
ஒரு சகோதரியோ ப்ரான்ஸ் நாட்டில்
நானோ
வழிதவறி அலாஸ்கா
வந்து விட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்”

ஈழத்தமிழர்கள் உலகின் பல்வேறு திக்குகளுக்குமாகத் தூக்கியெறியப்பட்டார்கள். எந்தவிதமான சட்டரீதியான குடியுரிமை ஆவணங்களுமின்றி, எதிர்காலம் பற்றி நிச்சயமற்ற நிலையில், கனவுகளுடனும், மண் மீதான கழிவிரக்கங்களுடனும் தூக்கியெறியப்பட்ட இவர்கள் மேல் அந்தந்த நாடுகளில் நிலவிய சட்டதிட்டங்கள் சுமத்திய சுமைகளின் கனமோ அளப்பரியது. இவற்றையெல்லாம் உள்வாங்கி துவண்டு விடாது வாழ்க்கையில் எதிர் நீசசல் போட்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வு பற்றிய போதிய ஆய்வுகள் விரிவான அளவில் இதுவரையில் வெளிவராமலிருப்பது வருத்தத்திற்குரியது. இவ்விதம் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிக் குறிப்பாக ஈழத்தமிழர்கள்பற்றி, அவர்களது இதுவரை காலமுமான வாழ்வு பற்றி, 2006இல் அவர்களது நிலைபற்றி, அவர்களது தொழில், வர்த்தகம், மற்றும் கலைஇலக்கிய முயற்சிகள், சமூக அரசியல் மற்றும் பண்பாட்டுரீதியிலான நிகழ்வுகள், இவைபற்றியெல்லாம் சுருக்கமாக ஆராய்கிறது இக்கட்டுரை. அதுவே இக்கட்டுரையின் நோக்கமுமாகும். இதுவொரு விரிவான் ஆய்வுக கட்டுரையல்ல. ஆயினும் அவ்விதமானதொரு ஆய்வினை முறையாகத் தொடர்வதற்குரிய ஆரம்பக்கட்டுரையாக இதனைக் கருதலாம்.

கனடாத்தமிழர்களின் வாழ்வினை 1983ற்கு முற்பட்ட காலகட்டம், 1983-1990 வரையிலான காலகட்டம், 1991-2001 வரையிலான காலகட்டம் மற்றும் 2001ற்குப் பிற்பட்ட காலகட்டம் எனப் பிரித்துக் கொள்ளலாம். மேற்படி காலகட்டங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழர்களின் வாழ்வியற் சூழல்கள் மாறிக்கொண்டே வந்துள்ளதை சிறிது நுணுகிப் பார்ப்பதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.

1983லிருந்து….

பஞ்சாபியர்கள் 1903இலிருந்தே கனடாவுக்குப் புலம்பெயரத் தொடங்கியிருந்தபோதும் 1950களிலிருந்துதான் தமிழர்கள் இலங்கை , இந்தியா போன்ற நாடுகளிலிருந்ததெல்லாம் கனடாவுக்குக் குடிபெயர்ந்து வந்திருக்கின்றார்கள். அறுபதுகளினிறுதியில் மேலும் பலர் இங்கிலாந்து போன்ற மேற்கு நாடுகளிலிருந்தெல்லாம் வந்து குடியேறியிருக்கின்றார்கள். இவர்களெல்லாரும் சட்டரீதியாக இங்கு வந்து குடியேறியவர்கள். இவர்களில் பலர் பல்கலைக் கழகப் புலமைப் பரிசில்கள் பெற்று அல்லது பெரும்பாலும் உயர்கல்விக்காக வந்திருக்கின்றார்கள். வந்தவர்கள். படித்து முடிந்ததும் தமது துறைகளில் உரிய தொழில்வாய்ப்புகளைப் பெற்றதும் தொடர்ந்து நிரந்தரமாகத் தங்கியவர்கள். மேலும் நன்கு ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள். இத்தமிழர்களால் அறுபதுகளின் ஆரம்பித்திலேயே கர்நாடக சங்கீதம் மற்றும் பரதக் கலையினை வளர்க்கும் பொருட்டு ‘பாரதி கலாமன்றம்’ என்றொரு இலாபநோக்கற்ற சங்கமொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ‘ரிச்மண்ட் ஹில்’லில் பிள்ளையார் ஆலயமொன்றும் அமைக்கப்பட்டிருந்தது. ஆயினும் 1983 வரையில் ஒரு சில ஆயிரக்கணக்கான தமிழர்களே இங்கு அவ்விதம் வந்தவர்கள். ஆனால் 1983இல் இலங்கையிலேற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து கனேடிய அரசாங்கம் ஆரம்பத்தில் மனிதாபிமானரீதியில் ஈழத்தமிழர்களை, இலங்கையும் பொதுநலவாய நாடுகளிலொரு உறுப்பினரென்ற வகையில் , எந்தவித விசாக் கட்டுப்பாடுகளுமின்றி நுழைய அனுமதித்தது. இந்த நல்லெண்ணத்தைப் பயன்படுத்திக் கொண்டு நூற்றுக் கணக்கில் ஈழத்தமிழர்கள் கனடாவுக்குள் மான்ரியால் வழியாக நுழைந்து அகதிகளாக விண்ணப்பித்தார்கள். கியுபேக் மாநிலத்து பிரெஞ்சு அரசின் குடிவரவுக் கொள்கைகளும் இதற்கு முக்கிய காரணங்களிலொன்று. பின்னர் அகதிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கவே கனேடிய அரசு விசாக் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் பின்னரும் பல்வேறு வழிகளில், முகவர்களின் துணையுடன் ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்கள் கனடாவுக்குள் வந்து குவிந்தார்கள். ஆரம்பத்தில் இங்கு வந்தவர்களில் பலர் சமூக உதவிப்பணம் பெற்று வாழ்வினைத் தொடங்கினார்கள். விரைவிலேயே பலர் ‘டொராண்டோ’ மாநகருக்கு நகர்ந்தார்கள். ஆரம்பத்தில் ஈழத்தமிழ் அகதிகள் பல்வேறு வழிகளில் சிரமங்களை எதிர்நோக்கினார்கள். வேலை செய்வதற்குரிய அனுமதிப் பத்திரத்தை குடிவரவுத் திணைக்களத்திடமிருந்து பெற வேண்டியிருந்தது. இதற்கு முதலில் வேலை தேடி, வேலை கொடுப்பவரிடமிருந்து கடிதம் பெற வேண்டியிருந்தது. அத்துடன் அகதிக் கோரியவர்கள் வேறு நாட்டவர்களாகக் கருதப்பட்டு, கல்விக்குரிய செல்வுகளெல்லாம் பிறநாட்டு மாணவ்ர்களுக்குரியது போன்றே அறவிடப்பட்டது. ஆனால் மிக விரைவிலேயே இந்நிலை மாறி, அகதிக் கோரிக்கையாளர்கள் எங்கும் எந்தவித அனுமதிப்பத்திரக் கட்டுப்பாடுகளுமில்லாமல் வேலை செய்யலாமென்ற நிலையேற்பட்டது. கல்விக்கான கட்டணங்களும் கனேடியர்களுக்குரியது போன்றே செலுத்தும் நிலையும் ஏற்பட்டது.

அகதிகளாகப் புலம்பெயர்ந்தவர்களில் பல்வேறு வயதினரும், பல்வேறு கல்வித்தகமைகளுடன் கூடியவர்களுமிருந்தார்கள். ஊரில் குழந்தை, மனைவியை விட்டுவிட்டு வந்தவர்களிருந்தார்கள். கணவனை, குழ்ந்தைகளை விட்டுவிட்டு வந்த பெண்களிருந்தார்கள். பெற்றோர், சகோதரர்களை விட்டு விட்டு வந்த இளைஞர்களிருந்தார்கள். யுவதிகளிருந்தார்கள். குடும்பமாகப் புறப்பட்டு நடுவழியில் பிரிபட்டு துணையிழந்த பறவைகளாய் வந்த பெண்கள் அல்லது ஆண்களிருந்தார்கள். முதியவர்களிருந்தார்கள். நல்ல கல்வித்தகைமைகளுடன் வந்தவர்களிருந்தார்கள். தகைமையற்றவர்களிருந்தார்கள். இவ்விதம் பல்வேறு பிரிவினருக்கும் பல்வேறு வகையான மனப்பாதிப்புகளைப் புலம்பெயர்தல் ஏற்படுத்தியிருந்தது. இவர்களில் இளைஞர்களைப் பொறுத்தவரையில் போதிய வழிகாட்டலின்மை, தொடர்வதற்குரிய முன்மாதிரியானவர்களற்றிருந்த சூழல், கலாச்சார அதிர்ச்சி (cultural shock) , புகுந்த மண்ணில் நிலவிய இனத்துவேசம், பெற்றோர்களின் வழிகாட்டலற்ற நிலை (பலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகளிலிருந்து தப்புவதற்காக புலம் பெயர்ந்தவர்கள்) , புதிய மண்ணில் தம்மை நிலைநிறுத்துவதற்குரிய உதவிகள் போதிய அளவில் இல்லாமை, மொழியில் தேர்ச்சியின்மை (பலருக்கு ஆங்கில அறிவில் போதிய தேர்ச்சியில்லாதிருந்தது) போன்றவை பல சிக்கல்களைத் தோற்றுவித்தன.

இவ்விதம் வந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகவும் கடினமாக உழைத்தார்கள். பலர் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடின்றி உணவகங்கள், தொழிற்சாலைகளில் மாடுகளாக உழைத்தார்கள். கடின உழைப்புக்கு ஈடு கொடுக்க முடியாதவர்கள் பாதுகாவலர் போன்ற பணிகளையாற்றினார்கள். உணவகங்கள், தொழிற்சாலைகளில் உழைத்தத பலர் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று இடங்களிலெல்லாம் வேலை செயது சேமித்தார்கள். போதிய நித்திரையின்றி, தூக்கக் கலக்கத்துடனெல்லாம் உழைத்தார்கள். மேலும் பலர் சிறிது சிறிதாக வங்கிகள், காரியாலயங்களில் நிர்வாகப் பணிகளைக் கையாளும் எழுத்தர்களாக, கோப்புகளைக் கையாளும் எழுத்தார்களாக என்று நுழைந்தார்கள். காலப்போக்கில் அகதிக் கோரிக்கைளர்களில் பலர் நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றார்கள்; பின்னர் அவர்களில் பலர் கனடியக் குடியுரிமை பெற்றார்கள்.. இவர்களெல்லாரும் கடுமையாக உழைத்து குடும்பத்தவர்களைக் கனடாவுக்கு அழைப்பித்தார்கள். இளைஞர்கள் ஊரிலிருந்து பெண்ணெடுத்து மணந்து கொண்டார்கள். இவ்விதமாகத் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகவே தமிழர்கள் மத்தியில் தமிழர்களை மையமாக வைத்து வியாபாரங்கள் தொடங்கப்பட்டன. உணவகங்கள், பலசரக்குக் கடைகள், நகைக் கடைகள், புடைவைக் கடைகள், பத்திரிகைகள், வர்த்தகக் கையேடுகள், திரைப்படக் கொட்டகைகள், புத்தகக் கடைகள், துரிதப் பணமாற்றுச் சேவை நிலையங்கள், பூக்கடைகள், ஆலயங்களென மூலைக்கு மூலை முளை விட்டன. காப்புறுதி முகவர்கள், வீடு விற்பனை முகவர்கள், பிரயாண முகவர்கள், கடனட்டை மற்றும் ‘மோட்கேஜ்’ முகவர்களென முகவர்கள பலர் காட்சியளிக்கத் தொடங்கினர். மருத்துவர்கள், வக்கீல்கள், திருமணப் பதிவு அதிகாரிகளென மேலும் தமிழ் சமுதாயம் வளர்ந்தது. மூலைக்கு மூலை சங்கங்கள் முளைத்தன. பிறந்த ஊர்ச் சங்கங்கள், படித்த பாடசாலைச் சங்கங்கள், நாடக அமைப்புகள், வானொலிகள், தமிழர் நலன்புரிச் சங்கங்கள், பட்டதாரிகள் சங்கங்கள், முதியவர் நலன் பேணும் சங்கங்கள், பெண்கள் நலன்/உரிமைச் சங்கங்களென நூற்றுக் கணக்கில் சங்கங்கள். ‘சங்கத் தமிழரென கனடாத் தமிழரைக் கிண்டல் செய்யுமளவுக்கு எண்ண முடியாத எண்ணிக்கையில் சங்கங்கள். கல்வி நிலையங்கள், இசைக்கல்லூரிகள், நடனப் பள்ளிகளென மேலும் பல.

தமிழர் வர்த்தகக் கையேடுகள் கனடாத் தமிழர்களின் வர்த்தக முயற்சிகள் பற்றிய தகவல்களைத் தருகின்றன. 1990இலிருந்து நந்தா பதிப்பகம் ‘தமிழர் மத்தியில்’ என்றொரு வர்த்தகக் கையேட்டினை ஆண்டுதோறும் வெளியீட்டு வருகின்றது. உலகத்தமிழர் இயக்கத்தின் வணிகப் பிரிவினரால் வெளியிடப்படும் ‘வணிகம்’ மற்றும் ஆதவன் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுவரும் ‘தமிழன் வழிகாட்டி’ ஆகியவை குறிப்பிடத்தக்க தமிழர் வர்த்தகக் கையேடுகள். இவை தமது அநுபந்தமாகக் கனடாவில் இயங்கும் பல்வேறு அமைப்புகள், ஆலயங்கள், வானொலிகள் , அரச திணைக்களங்கள் பற்றிய தகவல்களைத் தருகின்றன.

ஆலயங்களைப் பொறுத்தவரையில் மூலைக்கு மூலை காணப்படுகின்றன. நல்லூர் கந்தசாமி கோவில், நல்லூர் சிவன் கோவில், கனடா கந்தசாமி கோவில், ஸ்ரீஐயப்பன் ஆலயம், கிப்ளிங் சிவன் கோவில், நயினை நாகம்மாள் கோவில், பெரிய சிவன் ஆலயம், ரிச்மண்தில் பிள்ளையார் கோவில், ஸ்ரீபுவனேஸ்வரி இந்து ஆலயம், ஸ்ரீ சந்திர மெளலீஸ்வர சிவாலயம், ஸ்ரீ கற்பக விநாயகர் தேவ்ஸ்தானம், ஸ்ரீ முத்துமாரி அம்மாள் தேவ்ஸ்தானம், துர்க்கையம்மன் ஆலயம், ஸ்ரீ மீனாஷி அம்மன் ஆலயம், திருச்செந்தூர் முருகன் ஆலயம், ஸ்ரீ விஷ்ணு சிவன் ஆலயம், ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயமென எண்ண முடியாத அளவுக்கு ஆலயங்களை டொராண்டோ பெருநிலப் பரப்பில் காணலாம். ஆலயங்கள் இங்கு பெரிய அளவில் வருமானத்தை அள்ளித் தருமொரு தொழிலாகவே மாறிவிட்டதெனலாம். குருக்கள்மார்கள் சிலர் உச்சிக்குடுமியுடனும் வேட்டியுடனும் B.M.W போன்ற மோட்டார் வாகனங்களை முழுப்பணமாகக் கொடுத்து வாங்கிச் செல்வதைக் கார் விற்பனை முகவர்கள் கூறி வியந்து போகின்றார்கள்.

கனேடியத் தமிழர்களின் எண்ணிகைக்கைப் பெருக்கம் இன்னொரு வகையில் இலங்கை மற்றும் தமிழக வர்த்தக முயற்சிகளைப் பெரிதும் ஊக்குவித்தன. தமிழகத்திலிருந்து மற்றும் ஈழத்திலிருந்து பலசரக்குப் பொருட்கள், பல்வேறு ஆடை வகைகளை இறக்குமதி செய்தார்கள். நூல்களை ஆயிரக்கணக்கில் டொராண்டோ பெரும்பாகத்தில் இயங்கும் மாநகரசையின் நூலகக் கிளைகள் வாங்கின. தமிழர்களும் தனிப்பட்டரீதியிலும், நூல் கண்காட்சிகளுக்காகவும் பெருமளவில் வாங்கினார்கள். தமிழகத் திரைப்படங்களைப் போட்டிப் போட்டிக் கொண்டு வாங்கினார்கள் இதன் மூலம் அவற்றின் விலையும் பெருமளவில் அதிகரித்தது. தமிழகத்திலிருந்து திரைப்படக் கலைஞர்களை அழைத்துக் கலைவிழாக்களைப் பல்வேறு சங்கங்களும் வருடம் முழுவதும் நடாத்துவதென்பது இன்று சர்வ சாதாரண நிகழ்வுகளிலொன்று. இன்று தமிழகத் திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் ஆடைவகைகள், பல்வேறு பலசரக்குப் பொருட்கள் ஆகிவற்றுக்கு உலகளாவியரீதியில் சந்தையொன்றை ஈழத்தமிழர்களின் புலம்பெயர்தலேற்படுத்தித் தந்திருக்கின்றது. அண்மையில் தமிழகத்திலிருந்து சுததானந்த பவான், அஞ்சப்ப செட்டியார் உணவகம் போன்ற பிரபல உணவகங்கள் டொராண்டோ மாநகரில் கிளைகளை ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்திக் கொண்டிருக்கின்றன.

1983இலிருந்து 1987 வரையிலான காலகட்டத்தில் கனடாவில் பல்வேறு விடுதலை அமைப்புகளுக்கும் ஆதரவாளர்களிருந்தார்கள். அவர்கள் சார்பாகக் கிளை அமைப்புகள் செயற்பட்டன. ஆனால் இலங்கையில் நிலைமாறி விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தில் போராட்டம் சென்று விட, இங்கும் ஏனைய கிளை அமைப்புகள் செயலிழந்தன. அவற்றின் ஆதரவாளர்களில் பலரும் அரசியற் செயற்பாடுகளிலிருந்தும் ஒதுங்கினர். விடுதலைப்புலிகள் அமைப்பே பிரதான அரசியற் சக்தியாக உருவெடுத்தது. அதன் செயற்பாடுகளை உலகத் தமிழர் இயக்கம் முன்னெடுத்தது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தன் நடவடிக்கைகளை விஸ்தரித்தது. இன்று உலகத்தமிழர் இயக்கம் மாணவர் அமைப்பு, பெண்கள் அமைப்பு, பொருண்மிய மேம்பாட்டுக் கழகம், வணிகப் பிரிவு, வானொலி போன்ற பல உபபிரிவுகளை உள்ளடக்கிப் பெரியதொரு அமைப்பாக வளர்ந்திருக்கிறது. ‘உலகத்தமிழர்’ என்றொரு வாராந்திரப் பத்திரிகையையும் வெளியிட்டு வருகின்றது. அத்துடன் பெரியதொரு நூலகத்தையும் நடாத்தி வருகின்றது. மாற்றுக் கருத்துள்ள இளைஞர்கள் சிலரால் நடாத்தப்பட்ட தமிழர் வகைதுறை வள நிலையம் என்றொரு அமைப்பு தொடர்ந்தும் நீண்ட காலம் இயங்கிப் பின்னர் ஓய்ந்து போனது. இருந்தாலும் அது இயங்கிய காலகட்டத்தில் நூலகமொன்றினைப் பல ஆண்டுகள் நடாத்தியது. சமூக, அரசியல், கலை இலக்கியக் கருத்தரங்குகள் பலவற்றை நடாத்தியது. தேடல் என்றொரு இலக்கிய சஞ்சிகையினையும் நடாத்தியது. முதல் முதலில் கனடாவில் ‘நிரபராதிகளின் காலங்கள்’ போன்ற நவீன நாடகங்களை அறிமுகப்படுத்தியது.

1990இலிருந்து 2001 வரையிலான காலகட்டம்….

இந்தக் காலகட்டத்தில் கனடா வெகுசன ஊடகங்களில் கனடாத் தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக இடம்பிடித்துக் கொண்டார்கள். குறிப்பாகக் கனடாத் தமிழர் சமுதாயத்தில் நிலவிய குழுக்களுக்கிடையிலான மோதல்களால பல பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள், சில சமயங்களில் இடையிலகப்பட்டு அப்பாவிகள் உயிரிழந்தார்கள். A.K.47 கண்ணன், VVT (வல்வெட்டித்துறை) ஆகிய குழுக்களுக்கிடையிலான மோதல்களே இக்காலகட்டத்தில் முதன்மை வகித்தன. மேலும் பல சிறு சிறு குழுக்கள் டொராண்டோவின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கின. குழுக்களைப் பற்றி இத்தகைய குழுக் கலாச்சாரமென்பது தமிழர்களுக்கு மட்டும் உரியதல்ல. டொராண்டோவில் வாழும் பல்வேறு இனங்களிலும் காணப்படுமொரு போக்கு. கறுப்பினத்து இளைஞர்கள் மத்தியில் , வெள்ளையினத்து இளைஞர்கள் மத்தியில், சீன மற்றும் வியட்நாம், லத்தீன அமெரிக்க மற்றும் சோமாலிய இளைஞர்கள் மத்தியிலெல்லாம் காணப்படுமொரு போக்கு. பொதுவாக மேற்குநாட்டு இளம் சமுதாயங்களில் காணப்படுமொரு போக்கென்றும் கூறலாம். ஏற்கனவே கூறியுள்ளது போன்று ‘போதிய வழிகாட்டலின்மை’, ‘தொடர்வதற்குரிய முன்மாதிரியானவர்களற்றிருந்த சூழல்’, ‘கலாச்சார அதிர்ச்சி’, ‘நிலவிய இனத்துவேசம்’, ‘புதிய மண்ணில் தம்மை நிலைநிறுத்துவதற்குரிய உதவிகள்’, ‘மொழியில் தேர்ச்சியின்மை’ (பலருக்கு ஆங்கில அறிவில் போதிய தேர்ச்சியில்லாதிருந்தது) போன்ற பல காரணங்களினாலேற்பட்ட பாதிப்புகள் இளைஞர்கள் மத்தியில் இத்தகைய குழுக்கள் உருவாகக் காரணங்களில் சில எனக் கருதலாம். மேலும் குழுக்களைப் பற்றிய கனடிய வெகுசன ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் ஒட்டுமொத்தமாகப் பல்வேறு இன்னல்களுக்கிடையில் கடும் உழைப்பின் மூலம் வேற்று மண்ணில் கால் பதிக்க முயன்று கொண்டிருந்த கனேடியத் தமிழர்கள் பற்றிய எதிர்மறையான பிம்பங்களைக் கனடியர்கள் மத்தியில் எற்படுத்தின. இக்குழுக்களின் பல்வேறு சட்டவிரோதச் செயல்களை முதனமைப் படுத்திக் கனேடிய வெகுசன ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டபோது அவை ஒட்டு மொத்தமாகக் கனடியத் தமிழர்களையே பாதித்தன. வழக்குகளில் விடுதலைப் புலிகளுடன் இக்குழுக்களின் சிலவற்றை தொடர்பு படுத்த காவற் துறையினர் முயன்றனர். வெகுசன ஊடகங்களும் இதனைப் பெரிது படுத்தின.

2001ற்குப் பிற்பட்ட காலகட்டம்….

செப்டம்பர் 11ற்குப் பிற்பட்ட நிலைமையின் காரணமாக அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் சட்டதிட்டங்கள் கடுமையாகின. பல்வேறு சமுதாயங்களின் மத்தியில் இயங்கும் குழுக்களுக்கெதிராகப் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு காவற்துறையினரால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்பயனாக நூற்றுக்கணக்கில் தமிழ் இளைஞர்கள் நீதிமன்றங்களில் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்கள். மேற்படி குழுக்களின் முக்கியமான தலைவர்கள் பலர் மேன்முறையீடுகள் தோல்வியுற்றநிலையில் 2006இல் நாடு கடத்தப்பட்டார்கள். இதே சமயம் ‘கனடாத் தமிழ் இளைஞர் அபிவிருத்தி மையம்’ என்றொரு அமைப்பு இளையவர்களால ஆரம்பிக்கப்பட்டு இளைஞர் குழுக்கள் பற்றி ஆய்வறிக்கையொன்றினைச் சமர்ப்பித்து தன் சமூகச் செயற்பாடுகளை முன்னெடுத்தது. தமிழ் இளைஞர்களைச் சரியான வழியில் திசை திருப்புவதன் பொருட்டுப் பல்வேறு நடவடிக்கைகளை இவ்வமைப்பு ஏற்படுத்தி வருகின்றது. கடந்த சில வருடங்களாகக் குறிப்பிடத்தக்க குழு மோதல்களற்று காணப்படும் போக்கானது வரவேற்கத்தக்கது.

பெண்கள் , முதியவர்கள் நிலையும் புதிய சூழலும்…..

புதிய சூழல் பெண்களையும், முதியவர்களையும் வெகுவாகப் பாதித்தது. ஊரிலிருந்த உறவினர் மற்றும் ஊரவர் ஆதரவற்றதொரு நிலையில் இங்கு அவர்கள் தனித்துப் போயினர். ஆயினும் பெண்களைப் பொறுத்தவரையில் கனடியச் சட்டதிட்டங்கள் ஆதரவாகவேயிருந்தன. இங்கு அவர்களும் ஆண்களுக்கு நிகராக வேலை செய்ய முடிந்தது. கணவனை இழந்து அல்லது பிரிந்து வாழும் பெண்களுக்குப் பல்வேறு வகையான சமூகக் கொடுப்பனவுகளையும் கனேடிய அரசு வழங்கியது. அதே சமயம் ஆண்களில் பலர் இன்னும் அதே ஆணாதிக்க மனோபாவத்திலேயே தொடர்ந்தும் இருந்து வந்தனர். பகல் முழுவதும் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பும் பெண்கள் வீட்டுச் சுமைகளையும் சுமந்தார்கள். குழந்தைகளைப் பராமரிப்பது தொடக்கம் சமையல்வரையில் அவர்கள் உழைப்பைப் பலவழிகளிலும் சமுதாயம் வேண்டி நின்றது. ஒருவரையொருவர் சந்தேகித்தார்கள். இவற்றால் மற்றும் குழந்தைப்பேற்றாலேற்பட்ட மன அழுத்தங்கள், உளைச்சல்கள் காரணமாகக் குடும்பங்களுக்கிடையில் பிரிவுகள், பெண்கள், மோதல்கள் ஏற்பட்டன. தற்கொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்தன. பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவிட தெற்காசிய பெண்கள் அமைப்பு, அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ‘கருமையம்’ பெண்கள் அமைப்பு, ‘விழிப்பு’ பெண்கள் அமைப்பு ஆகியன தமது சேவைகளை வழங்கின. கருத்தரங்குகள பலவற்றை நடாத்தின. நடாத்தி வருகின்றன.

பகல்முழுவதும் வீடுகளில் தனித்து விடப்பட்ட முதியவர்களும் ஆரம்பத்தில் பல்வேறு வகையான மன அழுத்தங்களுக்கு, உழைச்சல்களுக்குள்ளானார்கள். சிலர் அடுக்கு மாடிகளிலிருந்து குதித்துத் தற்கொலை செயது கொண்ட சம்பவங்களும் நடந்தன. ஆயினும் இன்று பல்வேறு முதியவர்கள் அமைப்புகள் இந்த விடயத்தில் ஓரளாவது உதவத் தொடங்கியுள்ளன. இத்தகைய இலாப நோக்கற்று இயங்கும் அமைப்புகள் பலவற்றுக்கு அரச மற்றும் ஏனைய அறக்கட்டளைகளின் பண உதவி கிடைக்கின்றன. இவ்வகையில் கிடைக்கப்படும் பணத்தில் பெரும்பகுதி அவற்றின் நிர்வாகச் செலவுகளுக்கே செலவழிக்கப்படுவது துரதிருஷ்ட்டமானது. ஆயினும் அதுவே இங்குள்ள இவ்வகையான அமைப்புகள் அனைத்தினதும் நிலை. இங்குள்ள யதார்த்தம் அப்படி.

கனடாத் தமிழ் கலை. இலக்கிய முயற்சிகள்…..

புலம்பெயர்ந்த இலக்கியச் சூழலில் கனடாத் தமிழ் இலக்கியத்திற்குத் தனியிடமுண்டு. கவிதை, சிறுகதை, நாவல், சிற்றிதழ் எனத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தம் பங்களிப்பை கனடாத் தமிழ்ப் படைப்பாளிகள் பெருமைப்படத் தக்க அளவில் செய்திருக்கின்றார்கள். எங்குமிருப்பது போல் இங்கும் நிறையத் தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. பெரும்பாலானவை தமிழக அல்லது ஈழத்துப் பத்திரிகைகளின், இணையத் தளங்கள் வழங்கும் செய்திகளின் நகல்களாகயிருக்கின்றன அல்லது பிரச்சாரம் செய்கின்றன. வியாபாரமே இவற்றின் முக்கிய குறிக்கோள். இணையத்தின் வளர்ச்சி இவர்களிற்குப் பெரிதும் உதவுகின்றதென்றே கூற வேண்டும். ‘உதயன்’, ‘தமிழர் செந்தாமரை’ போன்ற பத்திரிகைகளின் உள்ளடக்கத்தின் பெரும்பகுதியினை வர்த்தக விளம்பரங்களும், மரண அறிவித்தல்களுமே நிறைத்திருக்கின்றன. இலவசமாக விநியோகிக்கப்படும் இவற்றை விளம்பரப் பத்திரிகைகளெனலாம். ஆயினும் உதயன் பத்திரிகை ஆண்டுதோறும் உலகளாவியரீதியில் சிறுகதை மற்றும் கவிதைப் போட்டியொன்றினை வருடா வருடம் நடாத்திப் பரிசளிக்கிறது. ஈழநாடு, உலகத்தமிழர், முழக்கம், ஈழமுரசு, வைகறை, சுதந்திரன், பரபரப்பு போன்றவற்றில் விளம்பரங்களைவிட விடயதானங்கள் அதிகமானவையாக இருப்பதால் செய்திப் பத்திரிகைகள் என்று குறிப்பிடலாம். ஆரம்பத்தில் வெறும் விளம்பரத்திற்காகவே மாதமிருவிதழ்கள் வெளிவந்த ‘விளம்பரம்’ இன்று ஆக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளிவருவது நல்லதொரு மாற்றம்.

தமிழிலக்கியம் , வளர்ச்சியென்று பார்த்தால் இங்கும் சில சிற்றிதழ்கள், சில தனி மனிதர்களே நினைவிற்கு வருகின்றார்கள். ‘காலம்’, ‘தேடல்’, ‘தாயகம்’, ‘நுட்பம்’ , ‘ழகரம்’, ‘மறுமொழி’ , ‘நான்காவது பரிமாணம்’, ‘பொதிகை’ ..இப்படிச் சில இதழ்கள். இவற்றில் செல்வத்தின் காலம் சஞ்சிகை மட்டுமே இன்னும் அவ்வப்போதாவது வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஏனையவை மூச்சடங்கிப் பல வருடங்களாகி விட்டன. கனேடியத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் நிறையவே பெருமைப் பட்டுக் கொள்ளலாம் அ.முத்துலிங்கம், பா.அ. ஜயகரன், ‘காலம்’ செல்வம், ஜோர்ஜ் குருஷேவ் , பவான், என்.கே.மகாலிங்கம், சக்கரவர்த்தி, வ.ந.கிரிதரன், சம்பந்தன், அ.கந்தசாமி, க.நவம், திருமாவளவன், குமார் மூர்த்தி, சேரன், சிவதாசன், ஆனந்தப் பிரசாத், செழியன், குறமகள், டானியல் ஜீவா, மொனிக்கா , சக்கரவர்த்தி, கவிஞர் கந்தவனம், மைக்கல், அளவெட்டி ஸ்ரீஸ்கந்தராஜா, சுமதி ரூபன், இளங்கோ, தான்யா தில்லைநாதன், பிரதீபா தில்லைநாதன், வசந்திராஜா, கலைவாணி இராஜகுமாரன், மைக்கல், ப.ஸ்ரீகாந்தன், ரதன், மொனிக்கா, குரு அரவிந்தன், ராவுத்தர்.. இப்படிச் சிலரே ஞாபகத்தில் வருகின்றார்கள். ‘காலம்’ காலம் தப்பியாவது வெளி வந்துகொண்டிருக்கின்றது. தமிழர் வகைதுறை வள நிலையத்தினர் வெளியிட்டு வந்த ‘தேடல்’ அவர்களது செயற்பாடுகள் செயலற்றதுடன் நின்று பல வருடங்களாகி விட்டன. 90களில் ஆரம்பித்தில் எழுத்தாளர் ஜோர்ஜ் குருஷேவ் ‘தாயகம்’ சஞ்சிகையினைத் தொடர்ந்து ஐந்து வருடங்கள்வரையில் வாராந்தம் வெளியிட்டுத் சாதனை படைத்தார். பல்வேறு படைப்பாளிகளும் அன்று தாயகத்தில் எழுதினார்கள். தாயகத்தின் அன்றைய காலகட்டம் கனடாத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘மணிக்கொடி காலகட்டம்’, ‘மறுமலர்ச்சி காலகட்டம்’ என்பது போன்று குறிப்பிடவேண்டியதொரு முக்கியமான காலகட்டம். தாயகத்தில் பல்வேறு முரண்பட்ட போக்குகள் கொண்டவர்களும் எழுதினார்கள். நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, விமரிசனம், ஆய்வு எனப் பல்வேறு விடயங்களுக்கும் தாயகம் இடம் கொடுத்தது. அதில் எழுதும் எழுத்தாளர்களுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்தது. ‘தாயகம்’ ‘தேடல்’ போன்றவற்றை அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களே அதிகம். அவற்றையும் மீறி அவை கனேடியத் தமிழ் இலக்கியத்திற்காற்றிய பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியதொன்று. வ.ந.கிரிதரன் ‘இரவி’, ‘கல்வி’ ஆகிய பத்திரிகைகளையும், ‘நமது பூமி’, ‘கணினி உலகம்’ ஆகிய செய்திக் கடிதங்களையும், ‘குரல்’ என்றொரு கையெழுத்துப் பிரதியினையும் ஆரம்பத்தில் வெளியிட்டார். இவை ஒருசில இதழ்களே வெளிவந்து நின்று போயின. ஆனால் 2000இலிருந்து ‘பதிவுகள்’ இணைய இதழினை வெளியிட்டு வருகின்றார். பதிவுகள் இன்று முக்கியமானதொரு இணைய இதழாக மலர்ந்திருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் எழுதுகின்றார்கள். (இணைய முகவரி: http://www.pathivukal.com). பதிவுகளும் நந்தா பதிப்பகத்துடன் இணைந்து உலகளாவியரீதியில் சிறுகதைப் போட்டியொன்றினை நடாத்தியது. எழுத்தாளர் ராவுத்தர் ‘சக்தி’ என்றொரு பத்திரிகையினைச் சிறிது காலம் நடாத்தினார். பொதிகை சஞ்சிகை ஆரம்பத்தில் குரும்பசிட்டி ஜெகதீசனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து பின்னர் நிருபா தங்கவேற்பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. ‘காலம்’ அடிக்கடி ‘வளரும் தமிழ்’ என்று புத்தகக் கண்காட்சியினை, ‘காலம்’ சஞ்சிகையினை ,நூல் வெளியீடுகளை, இலக்கியக் கருத்தரங்குகளை, மறைந்த எழுத்தாளருக்கான நினைவஞ்சலிகளை அவ்வப்போது நடாத்தி வருகின்றது. பாரதி மோகனும் தனிப்பட்ட ரீதியில் சில புத்தகக் கண்காட்சிகளை நடாத்தியிருக்கின்றார். எழுத்தாளர் அளவெட்டி சிறிஸ்கந்தாராஜா ‘நாளும் தமிழ்’ என்றொரு நூற் கண்காட்சியினைத் தன் நூல் வெளியீட்டுடன் நடாத்திப் பார்த்திருக்கின்றார். எழுத்தாளர் திருச்செல்வம் பல வருடங்களாக ‘தமிழர் தகவல்’ என்றொரு மாத தகவல் இதழினை வெளியிட்டு வருகின்றார். விருதுகளைத் தனிப்பட்டரீதியில் வழங்குகின்றார். இவர்தான் டொராண்டோவில் விருது வழங்கும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவர். அவரைத் தொடர்ந்து இன்று பலவேறு அமைப்புகளும் ஆளாளுக்கு விருதுகளை வழங்கிக் கனடாத் தமிழர்கள் உள்ளங்களைக் குளிர்வித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கனடாத் தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டு தோறும் இயல் விருதினை எழுத்தாளர்களின் வாழ்நாள் இலக்கிய சாதனைகளைக் கெளரவிக்கும் முகமாக வழங்கி வருகின்றது. இதற்குப் பின்னணியில் இருந்து செயற்படுபவர்கள் எழுத்தாளர் அ.முத்துலிங்கம், ‘டொராண்டோ’ பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் செல்வா செல்வநாயகம் ஆகியோரே. மேற்படி விருது வழங்கும் செயற்பாடுகளுக்கு ‘டொராண்டோ’ பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் பிரிவினரும் ஆதரவளித்து வருகின்றனர். இம்முறை 2005ற்கான ‘இயல் விருது’ அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவிலுள்ள பேக்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பீடம் அமைத்து அதன் தலைவராகப் பணிபுரிந்துவரும் பேராசிரியர் ஜோர்ஜ் ஹாட்டிற்கு இவ்விருது வழங்கப்பட்டது. இவர் தமிழிலேயே உரையாற்றி விருதினைப் பெற்றுக் கொண்டது அவரது தமிழ்ப் புலமையினை எடுத்துக் காட்டியது. புறநானூற்றுச் செய்யுள்களை மேற்கோள் காட்டிச் சபையோரை வியக்க வைத்தார். ஏற்கனவே இவ்விருதினை எழுத்தாளர்களான சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், கே.கணேஷ் ஆகியோர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. விரிவுரையாளர் செல்வநாயகமே ‘Lutesong and Lamnet: Tamil writing from Sri Lanka’ என்னும் ஆங்கில நூலினையும் தொகுத்து வெளியிட்டவரென்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் செல்வா கனகநாயகம், ஏ.ஜே.கனகரத்னா, பேராசிரியர் சுரேஷ் கனகராஜா, பேராசிரியர் சிவசேகரம், சோ.பத்மநாதன் ஆகியோரால் மொழிபெயர்ப்பு செய்யப் பட்ட ஈழத்துப் படைப்புகளின் தொகுப்பு நூலான மேற்படி நூலில் மஹாகவி, சேரன், நீலாவணன், எஸ்.பொ., டொமினிக் ஜீவா, மு.பொன்னம்பலம், கி.பி.அரவிந்தன், தாமரைச் செல்வி, சிவரமணி, செல்வி, கஸ்தூரி, ஊர்வசி உட்படப் பலரின் படைப்புகள் அடங்கியுள்ளன. இச்சமயத்தில் ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.பொ.வையும் குறிப்பிட வேண்டும். அவர்தான் முதன்முறையாக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியுடன் சேர்ந்து கனடாத் தமிழ எழுத்தாளர்களின் படைப்புகளுட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் பெறப்பட்ட 39 புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய புகழ்பெற்ற தொகுப்பான ‘பனியும் பனையும்’ தொகுப்பினை வெளியிட்டவர். அதன்பிறகு அவ்விதமான காத்திரமானதொரு தொகுப்பு இதுவரையில் வெளிவராதது துரதிருஷ்ட்டமானது.

1983இலிருந்து இன்று வரையில் நூற்றுக் கணக்கில் கனடாவிலிருந்து நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், பிரயாண அனுபவங்களெனப் பல நூல்கள் கனடாவிலிருந்து, தமிழகத்திலிருந்தும் வெளிவந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் இங்கு பட்டியலிடுவது முடியாததொன்று. ஆனாலும் இவற்றுக்குச் சொந்தமான முக்கியமான படைப்பாளிகளாக அ.முத்துலிங்கம், குமார் மூர்த்தி, சம்பந்தன், கடல் புத்திரன், பா.அ.ஐயகரன், சேரன், அ.கந்தசாமி, திருமாவளவன், நிலா குகதாசன், வ.ந.கிரிதரன், குறமகள், கெளரி, சக்கரவர்த்தி , கவிஞர் கந்தவனம், மொனிக்கா, செழியன், தேவகாந்தன், ஆனந்தப் பிரசாத், சுமதி ரூபன், என்.கே.மகாலிங்கம், குரு அரவிந்தன், பொன்.குலேந்திரன், ஈழத்துப் பூராடனார், விரிவுரையாளர் இ.பாலசுந்தரம், கவிஞர் புகாரி.. எனப் பட்டியல் விரியும். சிறுகதை நூல்களாக குமார் மூர்த்தியின் ‘முகம் தேடும் மனிதன்’ (தமிழகத்தில் ‘காலம்’ வெளியீடாக வெளி வந்தது), வ.ந.கிரிதரனின் ‘அமெரிக்கா’ (தமிழகத்தில் ‘சிநேகா’ பதிப்பக வெளியீடாக வெளி வந்தது) , சம்பந்தனின் ‘வித்தும் நிலமும்’ , கடல் புத்திரனின் ‘வேலிகள்’ (தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்தது), அளவெட்டி சிறிஸ்கந்தராஜாவின் சிறுசுவின் சிறுகதைகள் (மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்தது) , குறமகள்’ வள்ளிநாயகின் ‘குறமகள் கதைகள்’ (மித்ர வெளியீடு), ‘உள்ளக்கமலமடி’ (மித்ர பதிப்பக வெளியீடு), கனடா எழுத்தாளர் இணைய வெளியீடான ‘அரும்பு’ (சிறுகதைத் தொகுதி), அ.முத்துலிங்கத்தின் பல்வேறு சிறுகதைத் தொகுப்புகள், சுமதி ரூபனின் ‘யாதுமாகி நின்றாய்’ சிறுகதைத் தொகுப்பு, பொன்குலேந்திரனின் ‘விசித்திர உறவு’ ஆகியன நினைவுக்கு வருகின்றன. N.K.மகாலிங்கத்தின் ‘சிதைவுகள்’ நல்லதொரு மொழி பெயர்ப்பு நூல். நோபல் பரிசு பெற்ற ஆபிரிக்க எழுத்தாளரான Cinua Achebe’ யின் ‘Things Fall Apart’ இன் தமிழாக்கமிது. ‘காலம்’ வெளியீடாகத் தமிழகத்திலிருந்து வெளி வந்தது. வ.ந.கிரிதரனின் ‘நல்லூர் ராஐதானி: நகர அமைப்பு’ (நல்லூர் நகர அமைப்பு பற்றிய ஆய்வு நூல்), ‘தாயக’தில் தொடராக வெளி வந்து தமிழகத்தில் ‘சிநேகா’ பதிப்பக வெளியீடாக வெளி வந்திருக்கின்றது. இப்பொழுது மீண்டும் திருத்தங்களுடன் திண்ணை இணைய இதழில் வெளிவருகின்றது. கவிதை நூல்களாக சேரனின் ‘எலும்புக் கூடுகளின் ஊர்வலம்’ மற்றும் சக்கரவர்த்தியின் ‘யுத்த சன்னியாசம்’, அ.கந்தசாமியின் ‘கானல் நீர்க் கனவுகள்’, வ.ந.கிரிதரனின் ‘எழுக அதிமானுடா’ (மங்கை பதிப்பக வெளியீடு) , நிலா குகதாசனின் ‘இன்னொரு நாளில் உயிர்ப்பேன்’, செழியனின் ‘அதிகாலையினிலே’ கெளரியின் ‘அகதி’ , நாவற்குழியூர் நடராஜனின் ‘உள்ளதான ஓவியம்’, கவிஞர் புகாரியின் ‘பச்சை மிளகாய் இளவரசி’, ‘சரணமென்றேன்’ இவற்றுடன் மேலுமிரு கவிதைத் தொகுதிகள், ரதன், அ.கந்தசாமி, மலையன்பன் ஆகியோரின் ‘காலத்தின் பதிவுக’ளுட்பட மேலும் பல கவிதைத் தொகுப்புகள் அண்மைக் காலத்தில் வெளிவந்திருக்கின்றன. சேரனின் நூறு கவிதைகளடங்கிய தொகுப்பொன்றினை, ‘நீ இப்பொழுது இறங்கும் ஆறு’, தமிழகத்திலிருந்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது. திருமாவளவனின் ‘பனிவயல் உழவு’ குறிப்பிடப்பட வேண்டிய தொரு கவிதைத் தொகுதி. குரு அரவிந்தனின் சிறுகதைகள், நாவல்கள் பல தமிழகத்தில் மணிமேகலைப் பிரசுரங்களாக வெளிவந்துள்ளன. கவிஞர் கந்தவனத்தின் பல கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. காலச்சுவடு பதிப்பகம் என்.கே.மகாலிங்கத்தின் மொழிபெயர்ப்புக் கதைகளின் தொகுப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இவரது ‘தியானம்’ கவிதைத் தொகுதி பல வருடங்களுக்கு முன்னர் ‘காலம்’ வெளியீடாக வெளிவந்துள்ளது. மணி வேலுப்பிள்ளை சமூக, அரசியல், இலக்கியம் மற்றும் மொழியியல் சம்பந்தமான கட்டுரைகளை, ஓரிரு சிறுகதைகளையும் எழுதி வருகின்றார். விரிவுரையாளர் செல்வா கனகநாயகமும் இலக்கியக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தற்போது கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் தேவகாந்தனின் ‘கதாகாலம்’ (மகாபாரதத்தின் மறுவாசிப்பு) கனடாவில் ‘காலம்’ வெளியீடாக வெளிவந்துள்ளது. இவரும் பல இலக்கிய மற்றும் நூல் விமரிசனக் கட்டுரைகளை ‘பதிவுகள்’ இணையத் தளமுட்பட ‘வைகறை’ போன்ற பத்திரிகைகளில் எழுதி வருகின்றார். டிசெதமிழன் என்ற பெயரில் எழுதி வரும் இளங்கோவும், கனடாவில் வசிக்கும் பெண் எழுத்தாளரான மதி கந்தசாமியும் தமது வலைப் பதிவுகளில் மற்றும் சஞ்சிகைகளில் இலக்கியத் தரம் வாய்ந்த கட்டுரைகளை, நூல் மற்றும் நிகழ்வுகளின் விமரிசனங்களை, கவிதைகளை, சிறுகதைகளை எழுதிவருகின்றார்கள். வ.ந.கிரிதரனின் ஆரம்பகால நாவல்களான ‘வன்னி மண்’, ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’, ‘கணங்களும் குணங்களும்’, மற்றும் ‘மண்ணின் குரல்’ ஆகியன ஒரு தொகுப்பாக ‘மண்ணின் குரல்’ என்னும் பெயரில் குமரன் பப்ளிஷர்ஸ் (சென்னை) மற்றும், மங்கை பதிப்பகத்தினரால் (கனடா) வெளியிடப்பட்டன. இவற்றில் ‘மண்ணின் குரல்’ தவிர ஏனையவை ‘தாயகம்’ சஞ்சிகையில் வெளிவந்தவை. ‘மண்ணின் குரல்’ மான்ரியாலிலிருந்து 1984இல் வெளிவந்த ‘புரட்சிப்பாதை’யில் வெளிவந்தது. இதுவே கனடாவிலிருந்து நூலாக வெளிவந்த முதல் நாவல். ஈழத்துப் பூராடனாரின் பல நூல்கள் அவரது றிப்ளக்ஸ் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளன. இ.பத்மநாதன் மற்றும் த,சிவபாலு போன்றோர் நல்ல உளவியற் கட்டுரைகளை எழுதியுள்ளனர். இவர்களது கட்டுரைகள் நூலுருப் பெற்றுள்ளன. இ.பத்மநாதனின் ‘சிந்தனைப் பூக்கள்’ கட்டுரைத் தொகுதி பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து பலரினதும் பாராட்டுதல்களைப் பெற்றது. த.சிவபாலு கட்டுரைகளுடன் கவிதைகளையும் எழுதிவருகின்றார். நூற்றுக் கணக்கில் கனடாவில் இயங்கும் ஊர்ச் சங்கங்கள், முன்னாள் மாணவர் மன்றங்கள் ஆண்டுதோறும் நடாத்தும் கலைவிழாக்களின் போது வெளியிடும் மலர்களில் சில சமயங்களில் இலக்கியத் தரம் வாய்ந்த மலர்களும் வந்து விடுகின்றன. அளவெட்டி அருணோதயாக கல்லூரியின் 2000ம் ஆண்டுக்கான கலைவிழா மலர் ‘பூச்சொரியும் பொன்னொச்சி மரம்’ என்னும் பெயரில் அழகான தரமான வடிவமைப்புடன், இலக்கியத்தரம் வாய்ந்த ஆக்கங்களுடன் வெளிவந்திருக்கின்றது. வன்னிக் கழகமும் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் ‘கொம்பறை’ மலரும் இத்தகைய இலக்கியத்தரம் வாய்ந்த மலரே. இதில் பல வன்னி மண், இலக்கியம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவருகின்றன். தமிழகத்தைச் சேர்ந்த ஜெயபாரதன், வெங்கட்ரமணன் ஆகியோர் அறிவியல் கட்டுரைகள் பல் இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை மற்றும் பல்வேறு சஞ்சிகைகளில் எழுடி வருகின்றனர். இவர்களில் ஜெயபாரதன் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகளென திண்ணை மற்றும் பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் எழுதி வருகின்றார்.

சிலர் தனிப்பட்ட ரீதியில் அவ்வப்போது காத்திரமான இலக்கிய அமர்வுகளை நடாத்துகின்றார்கள். ‘ரூபவாகினி’ புகழ் விக்கினேஸ்வரன் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன முன்னால் தமிழ்ப் பிரிவின் தலைவரான ராஐசுந்தரம் போன்றோர் ‘முரசம்’ என்று Media சம்பந்தமான பல அமர்வுகளை நடாத்தியிருக்கின்றார்கள். மிகவும் பயனுள்ள அமர்வுகள் அவை. பல புகழ் பெற்ற திரைப் படங்கள் ,Cycle Thief போன்றன, இவ் அமர்வுகளில் திரையிடப்பட்டு விவாதிக்கப் பட்டன. தமிழர் வகை துறை வள நிலையமும் பல இலக்கிய அமர்வுகளை நடாத்தியிருகின்றது. ஞானம் லம்பேட் , மகரந்தன் போன்றோர் இத்தகைய அமர்வுகளை நடாத்தியிருக்கின்றார்கள். ஒரு காலத்தில் தமிழர் வகைதுறைவள நிலையத்தினரால் முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ராஜேந்திரன் தலைமையில் பின்நவீனத்துவம் பற்றிப் பல பயனுள்ள கருத்தரங்குகள் நடாத்தப்பட்டிருக்கின்றன. கனடா எழுத்தாளர் சங்கம், தமிழப் படைப்பாளிகள் அமைப்பு ஆகியனவும் அவ்வப்போது நூல் வெளியீடுகளை, கருத்தரங்குகளை நடாத்தியிருக்கின்றன. இது தவிர பல சங்கங்கள் அமைப்புக்கள் (பட்டியலிட முடியாதவளவிற்கு) பல்வேறு விதமான களியாட்ட விழாக்களை நடாத்தித் தாமும் பங்களிப்புச் செய்வதாகப் பெருமைப் பட்டுக் கொள்கின்றன. அடிக்கடி தமிழ் நாட்டிலிருந்து ‘பிரபலங்க’ளை அழைத்துச் சம்பாதிப்பதை சேவையென்று கூட இவைகள் கூறிக் கொள்கின்றன.

நாடகத் துறையினப் பொறுத்தவரையில் ‘மனவெளி’ அமைப்பு, ஜயகரனின் ‘நாளை’ நாடகப் பட்டறை, உயிர்ப்பு நாடகப் பட்டறை, கருமையம் பெண்கள் அமைப்பு ஆகியன கனடாத் தமிழ் நாடகத் துறையினை நவீனமயப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளன. கவிஞராக இனங் காணப்பட்ட ஐயகரன் நல்லதொரு நாடகாசிரியராகவும் மலர்ந்திருக்கின்றார். அவரது ‘எல்லாப் பக்கமும் வாசல்’ என்ற நாடகப் பிரதி நூலுருப் பெற்றுள்ளது. இவரது பல நாடகங்கள் அண்மைக் காலங்களில் கனடாவில் ‘நாளை நாடகப் பட்டறையில்’ மேடையேறியுள்ளன.
குறிப்பாக யூன் 3/4, 2006இல் ‘டொராண்டோ’வில் நடைபெற்ற இவரது நாடகமான ‘காலத்தின் உயிர்ப்பு’ பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றிக் குறிப்பிடுகையில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் இந்நாடகம் ஜயகரனது ஆளுமையினையும் ஆற்றலினையும் வெளிப்படுத்தும் நல்லதொரு நாடகமெனத் தனது விமரிசனக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் செழியனின் ‘என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது’ என்னும் நாடகப் பிரதியைத் தமிழகத்திலிருந்து உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஈழத்தில் வானொலி மற்றும் திரைப்படக் கலைஞராகப் புகழ்பெற்றிருந்த கே.எஸ்.பாலச்சந்திரன் இங்கும் மேடை நாடகங்கள், திரைப்படங்கள், குறும்படங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நகைச்சுவைச் சித்திரங்களெனத் தன் பங்களிப்பினைத் தொடருகின்றார். முனைவர் பார்வதி கந்தசாமி பெண்ணியச் சிந்தனையினைப் பிரதிபலிக்கும் வானொலி நாடகங்களைத் தயாரித்து வருகின்றார். அவ்வப்போது இலக்கியக் கட்டுரைகளை எழுதிவருகின்றார். சுமதி ரூபனும் நிர்வாண அமைப்பின் மூலம் பல குறும்படங்களை அண்மைக் காலத்தில் உருவாக்கிப் பலரின் கவனத்தினையும் ஈர்த்திருக்கின்றார். ஓவியத் துறையினை எடுத்துக் கொண்டால் கருணா, ஜீவன் போன்றவர்கள் நவீன பாணி ஓவியங்களை வரைகின்றார்கள். ஜீவனின் ஓவியக் கண்காட்சிகள் சில நடைபெற்றிருக்கின்றன.

அதே சமயம் குழு மனப் பான்மை இங்கும் இருக்கின்றத. முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம் இலக்கியவாதிகளிடத்தில் இன்னும் இல்லை தான். முரண்பாடுகள் தான் வளர்ச்சியின் அறிகுறி என்பதை விளங்கிக் கொண்டால் , புரிந்து கொண்டால், முரண்பாடுகளிற்கிடையில் ஒருவித இணக்கம் காணப் பக்குவம் அடைந்து விட்டால் அது ஆரோக்கியமான தொரு இலக்கியச் சூழலை உருவாக்குமென்பதை அனைவரும் புரிந்து கொண்டால் நல்லது. மொத்தத்தில் புலம் பெயர் தமிழ் இலக்கியத்திற்கு தாங்கள் அளித்த பங்களிப்பினையிட்டுக் கனடாத் தமிழ் எழுத்தாளர்கள் நிறையவே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

2006இல் கனடாத் தமிழர்…

இன்று கனடாவில் சுமார் 200,000ற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சிலர் இந்தத் தொகையினை 300, 000 என்பர். இவர்களில் பலர் டொராண்டோ, வான்கூவர், மான்ரியால் போன்ற பெரு நகரங்களில் செறிந்து வாந்கின்றார்கள். இருந்தாலும் டொராண்டோ மாநகரிலேயே மிகவும் அதிகமாக சுமார் 150,000ற்கும் அதிகமாக வாழ்கின்றார்கள். டொராண்டோவின் ஸ்கார்பரோ பகுதியில்மட்டும் சுமார் 70,000 ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருவதாக அரச் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அண்மைக் காலமாக மார்க்கம் நகரிலும் மிகவும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருவதை அண்மையில் நடைபெற்ற டொராண்டோ மாநகரசபைக்கான தேர்தல்கள் புலப்படுத்தின. முதன்முறையாக இம்முறை நடந்த மாநகர சபைத் தேர்தலில் மார்க்கம் நகரிலிருந்து லோகன் கணபதியும் என்ற தமிழர் நகரசபை உறுப்பினராகவும், நீதன் சண்முகராஜா என்ற தமிழர் கல்விச் சபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருகின்றார்கள். நடைபெற்ற இத்தேர்தல்களில் வெற்றி பெற்றதன் மூலம் இவர்கள் கனேடிய அரசியலில் நுழையும் தமிழர்களில் முதலிரு வெற்றியாளர்களென்ற பெருமையினைப் பெற்றுள்ளனர். மேலும் பலர் கனேடிய அரசியலில் ஈடுபடுவதற்கு இவர்களது இந்த வெற்றி தூண்டுகோலாக அமையும். 150,000ற்கும் அதிகமாகத் தமிழர்கள் வாழும் ‘டொராண்டோ’ மாநகரில் தமிழர்களுக்குப் போதிய அரசியல் பிரதிநிதித்துவமில்லை என்ற குறையினை இது தீர்த்து வைத்ததெனலாம்.
அதே சமயம் வழக்கம் போல் இம்முறையும் நாடக விழாக்கள், இலக்கியக் கருத்தரங்குகள், குறுந்திரைப்பட வெளியீடு, இசை விழாக்கள், பழைய பாடசாலை மாணவர்f மற்றும் ஊர் அமைப்புகள் நடாத்திய கலைவிழாக்கள், கோடைகாலச் சுற்றுலாக்கள், மெல்லிசை இரவுகள், தவில்/ நாகசுரக் கச்சேரிகள், ஆலயத் திருவிழாக்களென கனேடியத் தமிழர்களின் வாழ்க்கை வட்டம் மீண்டுமொருமுறை உருண்டோடியது. நம்பிக்கை தரும் விடயமென்னவென்றால் கனேடியத் தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் பல்கலைக்கழகங்களில், பத்திரிகை மற்றும் எழுத்துத் துறைகளில், விளையாட்டுத் துறைகளிலெனக் கால்பதிக்கத் தொடங்கி விட்டதுதான். சோனியா ஜெயசீலன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் நல்லதொரு கனடிய டென்னிஸ் வீராங்கனையாக உருவாகியிருக்கின்றார். துளசி ஸ்ரீகாந்தனின் பல செய்திக் கட்டுரைகள் ‘டொராண்டோ ஸ்டார்’ பத்திரிகையில் வெளிவருகின்றன. இளம் எழுத்தாளரான தமயந்தி கிரிதரனின் பல கட்டுரைகள் நூல் விமரிசனங்கள் ‘டொராண்டோ ஸ்டார்’ பிரதி வியாழன் தோறும் வெளியிடும் Brand New Planet என்னும் சிறுவர் சிறுமியருக்கான பத்திரிகையில் அவ்வப்போது வெளிவருகின்றன. நல்லதொரு எதிர்காலத்தை நோக்கிக் கனேடியத் தமிழ் சமூகம் மெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆயினும் இந்த எதிர்கால வெற்றிக்காகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் இழந்தவையோ… ஒருமுறை கருத்தரங்கொன்றில் பாரிசில் வசிக்கும் எழுத்தாளர் வாசுதேவன் இவ்விதம் கூறினார்: ‘பாரிசில் இருக்க கூடிய புலம்பெயர் வாழ்க்கை பரிமாணங்கள் மிகவும் பலப்பட்டவை. அங்கே ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டால் நீங்கள் வந்து எவ்வளவு காலம் என்று கேட்டுக் கொள்வார்கள். 90க்கு முற்பட்ட வாழ்க்கை மாடுமாதிரி உழைக்க வேண்டிய கடினமான காலமாக இருந்தது. அன்று ரெஸ்ட்டாரண்டில் கடுமையாக உழைத்தவர்களெல்லாம் இன்று சொந்தமாக உணவகங்களை வைத்துள்ளார்கள். 19 வருடங்களுக்கு பிறகு என் சொந்த கிராமத்தை தேடி யாழ்ப்பாணம் சென்றேன். எல்லாம் மாறிக்கிடந்தது. அப்பா, அம்மா யார் பேரைச் சொன்னாலும் தெரியவில்லை. என்னுடைய ஊர், என் வேப்பமரம், என் பனை, என் பூவரச மரம் எங்கே போனதென்று தெரியவில்லை. இந்த வலி எல்லா ஈழத்தமிழர்களுக்கும் உண்டு’. இது பாரிஸ் தமிழர்களுக்கு மட்டுமல்ல கனேடியத் தமிழர்களுக்கும் பொருந்தும்.


ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்