கந்த உபதேசம்

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

முனைவர் மு. பழனியப்பன்


பேருரையாளர்
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(த),
புதுக்கோட்டை

உயிர்கள் தெளிவு பெற குருவின் கருணை இன்றியமையாதது. குருவின் உபதேசமே கடவுளைக் காட்டி உயிர்களைத் தெளிவு பெற வைக்கின்றது. சமணம், பௌத்தம், சைவம், வைணவம், கிறித்துவம், இசுலாம் போன்ற அனைத்துச் சமயங்களிலும் இவ்வுபதேச நடைமுறை காணப்படுகிறது. குறிப்பாக சைவ நெறியாளர்களுக்குக் குருபாராம்பரியம் என்பது மிக்க உறுதியுடையதாக இருந்து வருகிறது.

நந்தி குருவாக அமைந்து திருமுலருக்கு அருளிய செய்திகள் திருமந்திரமாக உயிர்களுக்குக் கிடைத்தது. நந்தியின் வழியில் தற்போது சைவமடங்கள் அமைந்து குருநெறிகளைப் பரப்பி வருகின்றன. தட்சிணாமுர்த்தி வடிவம் இறைவனின் குரு வடிவமாகும். மாணிக்கவாசகருக்குக் குறுந்தமரத்தடி குருபீடமாகவும், இறைவன் குருவாகவும் அமைந்து கிடைத்த பேறு சிறப்புடையது. முருகப் பெருமான் சுவாமிநாதனாக அமைந்துச் சிவபெருமானுக்கு பிரணவம் அருளிய பெருமையும் இதனுடன் எண்ணத்தக்கது. இவ்வகையில் குரு காட்ட கோடி நன்மை உயிர்களுக்கு விளைகின்றது என்பது தெளிவு.

அருணகிரிநாதருக்கு முருகனே குருவாக இருந்து ஞானஉபேதசத்தை அருளியுள்ளார். அதற்கான பல அகச் சான்றுகள் அருணகிரிநாதரின் பாடல்களில் உள்ளன. உணரும் பொருளாகவும், உணர்த்தும் பொருளாகவும் முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு அமைந்தது வேறு எவருக்கும் கிடைக்காத பேறு ஆகும். இவ்வுபதேசம் பெற்றதன் வழியாக பெறுவதற்கு முன்பிருந்த நிலை மாறி புதிய ஞானநிலை அருணகிரிநாதருக்கு வாய்த்தது. இதன்பிறகு அவர் வாக்குகள் அனைத்தும் முருகனின் திருப்புகழ் பரவும்படி வெளிவந்தன. அருணகிரிநாதரை மனம், வாக்கு, காயம் ஆகிய அனைத்தாலும் புதிய உயிராக ஆக்கிய பெருமை இந்த உபதேசத்திற்கு உண்டு. அருணகிரிநாதருக்குக் கிடைத்த இந்த உபதேசத்தின் பெருவலியை உயிர்கள் அனைத்தும் அறிந்து கொண்டால் உயிர்கள் அனைத்தும் கடைத்தேறும் என்பதில் ஐயமில்லை. இவ்வகையில் ஞானத்தின் தாழ்நிலைக்கும், ஞானத்தின் உச்ச நிலைக்கும் ஒரே காட்டாக அருணகிரிநாதர் விளங்கியுள்ளார். தாழ்நிலை பெற்றவரும் குருவருள் பெற்றால் உயர் நிலை பெறுவர் என்பதற்கு அருணகிரியாரின் வாழ்வே சான்றாகின்றது.

குறிப்பாக அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம் என்ற நூலில் இவ்வுபதேசம் உபதேசிக்கப் பெற்ற முறையும், உபதேசம் பெறப்பட்ட நிலையும் மிகத் தெளிவாகக் காட்டப் பெற்றுள்ளன. இவ்வலங்காரம் அருணகிரிநாதர் பல வேளைகளில் பாடிய பாடல்களில் தொகுப்பு என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் உபதேசம் பெற்ற நிலையின் அடுத்து இது எழுதப் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெறும் நிலையில் இதனுள் பல பாடல்கள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக முருகன் சாவின் விளிம்பில் அருணகிரிநாதரைத் தடுத்து நிறுத்தியபோது அவர் கண்ட அருள் வடிவே அலங்காரமாகப் பாடப் பெற்றுள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அருணகிரிநாதருக்கு முன்புவரை இலக்கண நூல்களுக்கே அலங்காரம் என்ற பெயர் தமிழ் வழக்கில் இருந்துள்ளது. தண்டியலங்காரம், மாறனலங்காரம் போன்றன செய்யுள்களை அழகுபடுத்தும் இலக்கணங்களை இயம்பிய காரணத்தால் அவை அலங்காரம் காட்டும் இலக்கண நூல்களாகி அலங்காரப் பெயர் பெற்றன. இதனின்னறு மாறிப் பெருத்த மாற்றத்தை அருணகிரிநாதர் ஏற்படுத்தி நூறு பாடல்கள் கொண்ட சிற்றிலக்கிய வகையாகக் கந்தர் அலங்காரத்தை புதுமை செய்துப் படைக்கின்றார்.

சலங்காணும் வேந்தர் தமக்குமஞ் சார்யமன் சண்டைக்கஞ்சார்
துலங்காநரகக் குழியணுகார் துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தநன்னூல்
அலங்கார நூற்றுள் ஒருகவி தான் கற்றறிந்தவரே.
( கந்தர் அலங்காரம் 101)

என்பது கந்தர் அலங்காரப் பயன் கூறும் பாடலாகும். அலங்காரத்துள் அத்தனை கவியும் சிறந்திருக்க வேண்டும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. அதனால்தான் ஒருபாடல் போதும் என்ற நிலையில் இக்காப்புச் செய்யுள் பாடப்பெற்றுள்ளது.

இவ்வகையில் சிற்றிலக்கிய வரிசையில் முதல் அலங்கார நூல் பாடிய அரும் பரும் படைப்பாளராக அருணகிரிநாதர் வைத்து எண்ணத்தக்கவர் ஆகின்றார்.

அழகு கூட்டும் இவ்வலங்கார நூலில் முருகப் பெருமான் அருளிய உபதேசத் தன்மையை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகின்றது.

அருணகிரிநாதர் உலக வாழ்வை வெறுத்துத் தன்னை முடித்துக் கொள்ளத் துணிந்தபோது முருகப் பெருமான் காட்சி தந்து வேலால் அருணகிரிநாதர் நாவில் மெய்ப் பொருளை எழுதினார் என்பது அவர் வாழ்வில் நிகழ்ந்த வரலாறு ஆகும்.

தோதிமி தித்தித் தனத்த தந்தவெனி சையோடே
சூழ நடித்துச் சடத்தில் நின்றுயிரான துறத்தற்
கிரக்க முஞ்சுப சோபன முய்க்கக்
கருத்தும் வந்தருள் புரிவோனே (திருப்புகழ் 394)

என்ற திருப்புகழ்ப் பாடலில் தான் உயிரை முடித்துக் கொள்ள எத்தனித்த நிலையினைப் பதிவு செய்கின்றார் அருணகிரிநாதர். அவ்வேளையில் முருகப் பெருமான் காட்சி தந்து தன்னைக் காத்தார் என்ற குறிப்பும் இப்பாடலில் காட்டப் பெற்றுள்ளது.

ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத் துச்சியின் மேல்
அளியில் விளைந்ததொர் ஆநந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியை
தெளிய விளம்பிய வாமுக மாறுடைத் தேசிகனே
(கந்தரலங்காரம் 8)

இவ்வலங்காரப் பாடலில் பாழ்வெளியில் வெறுந்தனியாக தனிப்பொருளாக இருக்கும் முருகனின் நிலையைக் கண்டு அவன் வாய்ச் சொல் தெளியக் கேட்ட நிலையை அருணகிரிநாதர் வெளிப்படுத்துகின்றார்.

முருகப் பெருமான் ஔ பொருந்திய அருணைமலையின் மேலே ஆநந்தத் தேனாக இருந்து அருள் தர அதனைத் தனியே தான் மட்டும் மாந்தியத்திறம் மேற்பாடலில் தெரிவிக்கப் பெற்றுள்ளது.

தேன்என்று பாகுஎன்று உவமிக்க ஒணாமொழித் தெய்வவள்ளி
கோன்அன்றுஎனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறவன்றோ
வான்அன்று கால்அன்று தீயன்று நீர்அன்று மண்ணும்அன்று
தான்அன்று நான்அன்று அசரீரி அன்று சரீரியன்றே
(கந்தரலங்காரம் 9)

இப்பாடலில் உபதேசித்த வரலாறு உறுதிப்படுத்தப் படுவதோடு அவ்வுபதேசத்தின் தன்மையும் தெற்றெனக் காட்டப் பெறுகிறது. அவ்வுபதேசம் பெறும்போது ஐந்து பெரும் புதங்கள் சூழும் இவ்வுலக நிலை இல்லாமல் போயிற்று என்பதைத் தான் இப்பாடலின் முன்றாம் வரி எடுத்துரைக்கின்றது. மேலும் அவ்வுபதேசம் ஒலி வடிவமான அசரீரியாகவும் கேட்கப் பெறாது அதனின்றும் வேறுபட்டு தனித்த நிலையில் அமைந்திருந்தது என்ற குறிப்பையும் அருணகிரிநாதர் இங்குக் காட்டுகின்றார்.

செவியில் வந்துக் கந்தன் கருணையோடு உபதேசித்த நிகழ்வை மற்றொரு அலங்காரப்பாடல் தருகின்றது.

கின்னம் குறித்தடியேன் செவி நீயன்று கேட்கச் சொன்ன
குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடு சூழல்
சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங் குறிச்சியில் சென்று கல்யாண முயன்றவனே
(கந்தரலங்காரம் 24)

காது நிறையச் சொன்ன உபதேச மொழிகள் அருணகிரிநாதரை ஒன்றுமற்ற பரவெளி அனுபவத்திற்குக் கொண்டுபோனது என்பதையும் இப்பாடல் வெளிப்படுத்தி நிற்கிறது.

இவ்வுபதேசம் பெற்றதினால் அருணகிரிநாதருக்கு புத்தாக்க நிலை உருவாகியது. அதனை பின்வரும்பாடல் எடுத்துரைக்கின்றது.

சொல்லுகைக்கு இல்லைஎன்று எல்லாம்இழந்து சும்மாவிருக்கும்
எல்லையுட் செல்ல எனை விட்டவாக இல் வேலன் . . .
(கந்தரலங்காரம் 10)

எல்லாம் இழந்து சும்மாவிருக்கும் எல்லையுள் செல்ல முருகப் பெருமான் அருணகிரிக்கு வழிகாட்டியுள்ளார். சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே என்ற கந்தரனுபூதிப் பகுதியும் இதனுடன் ஒப்பு நோக்கத்தக்கது. இதன்வழி கந்த உபதேசத்தின் முலம் கவலையற்று அனைத்தையும் ஏற்கும் உணர்வு வயப்படா நிலையை அருணகிரி பெற்றுள்ளார் என்பது தெளிவாகின்றது.

இந்நிலையின் உயர்வை மற்றொரு பாடல் உணர்த்துகின்றது.

சொன்ன கிரௌஞ்ச கிரிஊடு உருவத் தொளைத்தவைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்ப மௌனத்தை உற்று
நின்னைஉணர்ந்துஉணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்குணம்பூண்டு
என்னை மறந்திருந்தேன் இறந்த விட்டது இவ்வுடம்பே
(கந்தரலங்காரம் 19)

கந்த உபதேசத்தின் படிநிலைகளை இப்பாடல் எடுத்துரைக்கின்றது. முதல் நிலை மௌனநிலை. அந்நிலையைப் பெற்றபின் கந்தன் தன்னை உணர்த்தியுள்ளான். அவனையே எப்போதும் உணரும் ஆற்றல் அடுத்து ஏற்படும் நிலையாகும். இதன் வழி நிர்குணம் அதாவது குணமே அற்ற நிலை கிட்டும். அதன்பின் தன்னை, என்னை மறக்கும் நிலை கிட்டும். அடுத்து உடல் பாசம் அழிந்துபோகும். உள்ளம் நிலை பெறும். இதுவே கந்த உபதேசம் பெற்ற சும்மா இருக்கும் சொல்லற்ற நிலையான நிர்குண பேறுஆகும். இதனை எய்தச் செய்து முருகன் அருணகிரிக்கு அருள் புரிந்துள்ளார்.

இவ்வரிய நிலையை முழுவதும் எடுத்து இயம்பி விட இயலாது என்று வாக்கிற்குப் பெயர் பெற்ற அருணிகிரியார் மற்றொரு பாடலில் காட்டுகின்றார். கண்டார் விண்டார் இல்லை. விண்டார் கண்டார் இல்லை என்ற கூற்று மெய்ப்படுமாறு பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

வேலே விளங்குகையான் செய்ய தாளினில் வீழ்ந்து இறைஞ்சி
மாலே கொளஇங்ஙன் காண்பதல்லால் மன வாக்குச் செயல்
ஆலே அடைதற்கு அரிதாய் உருவு அருவாகி ஒன்று
போலே இருக்கும் பொருளை எவ்வாறு புகல்வதுவே
(கந்தரலங்காரம் 28)
உருவமாகவும் அருவமாகவும் ஒன்றாகவும் இருப்பது கந்தப் பொருள் என்றாலும் அதுதான் அதன் வடிவமாக என்பதைத் தான் அறியேன். அதன் இயல்பை எவ்வாறு சொற்களுக்குள் அடக்குவது என்று எல்லையற்ற பொருளின் இயல்பை இப்பாடலில் தெரிவிக்கின்றார் அருணகிரியார். இவ்வகையில் உபதேசப் பொருளாகவும், உபதேசியாகவும் முருகன் விளங்கி அருணகிரிக்கு அருள்புரிந்த தன்மை வலுப்பெறும் உண்மையாகின்றது.

உருவ அருவ மற்ற அப்பொருளை பன்னிருகை பாலானாக நான் கண்டேன் என்று மற்றொரு பாடல் அலங்காரப்படுத்துகின்றது.

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்
தித்தித் திருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்க
புத்திக் கமலத்து உருகிப் புவனம் எற்றித்
தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரத்தே

(கந்தரலங்காரம் 47)

இப்பாடலில் மௌனம், செயல் மாண்ட சும்மா இருக்கும் நிலை முதலில் சித்திக்க அதன்பின் தித்திருக்கும் அமுதாமாக ஒளியின் ஊடே திருமுகங்கள் ஆறுடன், பன்னிரு தோள்களுடன் முருகப் பெருமான் அருணகிரிக்குத் தோன்றிக் காட்சி அளித்த செயல் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளது. அருவமாக, உருவமாக மால் காட்டி விளையாடிய முருகன் நிறைவில் தன் உன்னத வடிவை அருணகிரிக்குக் காட்டி அருள் செய்துள்ளான்.

. . .குமரேசர்இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடின்
(கந்தரலங்காரம் 39)

என்ற பாடலும் முருகனின் அழகான உருவத்தைக் கண்முன் காட்டுகின்றது. இவ்வாறு உபதேசித்த முருகனின் அருள் வடிவைத் தெளிவாய்க் காட்டுகிற அலங்காரமாக கந்தரலங்காரம் விளங்குகிறது. சும்மா இருக்கும் நிர்குண நிலை வாய்த்த அருணகிரிப் பெருமான் உயிர்களையும் அப்பேற்றினை அடையத் தந்த வழியே கந்தரலங்காரம் எனின் அது மிகையாகாது.

Series Navigation