கண்மணியே! நிலாப்பெண்ணே!

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

அதியமான் நிலவன்


இந்தக்கதையை எங்கு, எப்படி, எதில் ஆரம்பிக்க முடிக்க எனக்குத்தெரியவில்லை. ஆதலால் ஒரு முயற்சியாக கவிதை, கற்பனை, கதை, மற்றும் கட்டுரை கலந்த நடையுடன் மன ஊற்றுகளை இங்கே வார்த்திருக்கிறேன். இந்த கதையின் நாயகன் ‘இவன் ‘ ஒரு ஞானத்தேடலை விழைபவன். காதலும்,

காவியமுமாக, நட்பும், தோழமையும், சமத்துவமும் பின்னிபினைந்து, மலைச்சாரலும், குயிலோசையும், மயில் நடனமும் நிறைந்த ஒரு காவிய கானகத்தில், ஆலமரம் போல் தழைத்தோங்கும் குடும்பங்களும், சமூகங்களும் நிறைந்த அமைதியான உலகை கனவுகானவும், படைக்கவும் காக்கவும்

விழையும் மனிதர்களில் ஒருவன். படித்தவன், பாராட்டுகள் பெற்றவன், அழகியலின் சூட்சுமம் தெரிந்தவன். சில கணங்களில் இருத்தலின் வெறுமையை கண்டு சில்லித்து போயும், பல கணங்களில் வாழ்வின் அற்புதங்களை கண்டு மயங்கியும், சிற்சில கணங்களில் பொருளின்பால் ஈர்ப்பும், மற்றும் சிலகணங்களில்

பிறப்பருக்கும் பூரணத்தின் அன்பும், அமைதி நாடியும் திரிபவன். ஒருவருக்கும் கெடுதல் நிணைக்காதவன். சிறுவயதில் சில்மிஷங்கள் பல செய்தவன். காதலின் ருசி கண்டவன், வெற்றியும் பெற்றவன். ஒன்பது வயதில், பள்ளிக்கு கூடப்பயனித்த கருப்பு அழகியை இன்னும் மறக்காதவன். பதினெட்டு வயதில், பஸ்ஸில் பயனிக்கும் ஒரு பெண்ணை ஒரு நொடி பார்ப்பதற்கு இருனூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்தவன். 26 வயதில் காதலுக்காக உருகி மருகி ஒருத்தியை கைபிடித்தவன். 29 வயதில் பார்த்தான் மற்றுமொரு காதல் மோகினியை… இந்த நான்காவது பெண், ‘இவள் ‘ தான் இதில் கதாநாயகி. அவளை

சந்திததன்பின் இவன் கொண்ட ஞான விளைவுதான் இக்கட்டுரை.

பலருக்கு தனக்குள்ளேயெ ஒளிரும் இந்த உள்ளொளியோ, அவர்களின் உள் உறைந்து நிற்கும் தீட்சண்யமோ தெரிவதில்லை, புரிந்துகொள்வதுமில்லை. இந்த உள்ளொளியையும் தீட்சண்யத்தையும் தன்னிடத்திலும், அவைகளைப்பெற்ற மற்றவரையும் கண்டுகொள்பவர்கள்தான் உண்மையான காதலர்கள், ஆன்மதேடல் உள்ளவர்கள் என்று சொல்லலாம். நான் காதலர்கள் என்று குறிப்பது, சினிமா வகை காதலர்கள் அல்ல. இந்த உள்ளொளியின் முதிர்ந்த நிலையைதான் இலக்கியங்கள் கண்ணன் என்றோ, கண்ணம்மா என்றோ சொல்கிறார்கள். இந்த உள்ளொளியைதான் திருமூலர் ‘நங்கை நல்லாள்-தவத்தின் தலைவி ‘ என்கிறார். பாரதி கண்ணம்மா, கண்ணன் என்கிறான். நகுலனும் ஒரு பெண்ணின் வடிவத்தில் கண்டு ‘ஆகாய வடிவமான நித்ய சுந்தரியான உன்னை ஊழி தோறும் தேடி நின்றேன் ‘ என்கிறார். ‘மையோ, மரிகடலோ, மரகதப்பச்சையோ அய்யோ இவள் அழகு ‘ என்கிறார். இப்படிப்பட்ட தீட்சை பொழியும் உடலையும் கண்களையும் உடைய பெண்களைதான் இவன் தேடுகிறேனோ, என்னவோ தெரியவில்லை.

இவன் கண்டுகொண்ட நான்கு பெண்களும் இவன் மனம் நாடிய உள்ளொளியை பொழிவைப் பெற்றிருந்தார்கள் என்பது உண்மை. அந்த நால்வரில் இவன் உண்மையில் காதலித்தது, காதலை வெளிப்படுத்தியது இரண்டு பெண்களிடம்தான். ஒன்பது வயதில் பழகிய கருப்பியிடம் பழகியபோது காதல் என்ற உணர்வே இல்லை. ஏதோ ஒரு ஈர்ப்பு; அவ்வளவுதான். அவள் எங்கு இருக்கிறாள் ? எப்படி இருக்கிறாள் ? தெரியவில்லை. விடலைப் பருவத்தில் பார்த்த இரண்டாவது பெண்ணிற்கு வாழ்த்து மடல் கொடுத்ததோடு சரி. அதற்கு பிறகு பார்த்ததேயில்லை இந்த தேவதையை. அப்புறம் இவன் கல்லூரி படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்த நாளில் கண்டுபிடித்தான் அழகான வாழ்க்கைதுனையான காதலியை; போராடி காதலித்து அடைந்தான் அவளை. அவள் அற்புதமான பெண். வேலைப்பலுவினாலும், குடும்ப சுமைகளினாலும் குழந்தைகள் வளர்ப்பு கொடுக்கும் அழுத்ததினாலும், கொஞ்சம் பொருளியலில் நாட்டமேறி, இவளிடம்

மென்னியல்புகள் வற்றத்தொடங்கியிருக்கின்றன இந்த சகதர்மினிக்கு. இருப்பினும் இவன் தேடிக்கண்டடைந்த உள்ளொளி மங்காமல்தான் இருக்கிறது; அப்புறம் பார்த்தான் இவனது இரண்டாவது காதலியை, ஒரு வன மோகினியை; ஆனால் இந்த வானத்து மோகினியினிடம் காதலைச் சொல்வதற்கு பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த நால்வரிடமும் இவனுக்கு தெரிந்த உள்ளொளி இந்த பெண்களுக்கே தெரியுமா என்றால், தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நால்வரில், கைபிடித்தவளுக்கு மட்டும் இவன் தேடியது என்ன என்று கொஞ்சம் புரிய வைத்திருக்கிறான். இந்த ஞானம் வரப்பெற்றால்தான் பெண்களும் எளிதில் நல்ல காதலர்களை தெரிந்தெடுக்க முடியும்.

இவன் கண்டுகொண்டு காதலித்த பெண்களில்,

தேடியது என்ன ? என்னவென்ன ? தேடியது என்ன ?

நாடியது என்ன ? என்னவென்ன ? நாடியது என்ன ?

அழகா ? எது அழகு ? யார் நிர்ணயிப்பது அழகை!

இது என்ன தோல் விவகாரமா ? பாலியல் கவர்ச்சியா ?

அழகிகள் பலருடன் படித்ததுண்டு,

உடல் சிலிர்த்ததுண்டு, உள்ளம் மயங்கியதில்லை

கண்டதுண்டு, கண் மயங்கியதில்லை;

இவன் தேடும் காதல்தான் என்ன ?

குறிப்பரிந்து, குறிபார்த்து, அன்பெய்து (அம்பெய்து)

அடைந்ததென்ன ? என்னவென்ன ?

உள்ளொளியோ ஒளியோ ?, உள்வெளி தாண்டி

நிற்கும் சூனியமோ, சூனியமோ ? தெய்வீகமோ ?

சீதை பாஞ்சாலி மாதவியும்

கண்ணகி சகுந்தலை கன்னியாகுமரியும்

கொண்டிருந்தது இந்த உள்ளொளியோ ?

ஒளவையும் ஆண்டாள் காரைக்கால் அம்மையும்

பந்தனை விறலியும் (உமையும்) கண்டுகொண்டிருந்த சூனியமோ ?

அன்று மாலை 6.00 மணிக்கு முதன் முதலாக இந்த நான்காவது மோகினியை சந்தித்தான். அமைதியே குடிகொண்ட உருவமும், உற்று உள்

நோக்கும் பார்வையும், தேட்டம் உள்ள கண்களும், கைத்திறனும், கலைப்பொழிவும் மிக்க நங்கை நல்லாள். அதற்கு முன் இவள் யாரைக் கண்டிருந்தாளோ, யாரை கொண்டிருந்தாளோ, யாரை நினைத்திருந்தாளோ ? இவனுக்கு தெரியாது. ஆனால் இவன் அறிவான். இவளுக்கான இவனை அன்று வரை கண்டிராத ஒரு கன்னிப்பெண் என்று. உண்மையான் காதல் கிடைக்காத வரை பெண்டிர் கன்னிப்பெண் தானடி கண்ணே!!

இவன்தான் உன்னவன் என்று எப்படி உரைப்பேன் நான் அவளிடம். ‘தான் ‘ யார் என்று அறியாத இவள் அண்று யாரைத்தேடி வந்தாளோ இவன் அறியான்.

நானும் அறியேன். இவனின் முதல் குயிலையா ? அல்லது சில குரங்கினத்தை தானோ ? நான் அறியேன். ஆனால் ‘அவள் யார் ‘ என்று பார்த்ததும் இவன் கண்டு கொண்டான். அவன் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தான். இவள் கேட்டாள் ‘அவள் இல்லையா என்று ? ‘ இவனும் நோக்கினான்; இவளும் நோக்கினாள். ஒரு நொடிதான் கண்கள் கலந்தார்கள் இருவரும். இவன் உயிரினுலும் உணர்வினுலும் கலந்தாள் அன்றே. இவன் ‘நான் ‘ என்ற நிதானத்தை அடைய ஒரு சில நொடிகள் பிடித்தது. நிதானமாக சொன்னான். அவள் வீட்டில் இல்லை என்று. அன்றே இவளுடன் இவன் பேசியிருக்க வேண்டும். அப்படி பேசி

கலந்திருந்தால் அதன் பின் நடந்த நிறைய விஷயங்களை தவிர்த்திருக்கலாம்.

அதன் பிறகு இவளை பலமுறை இவன் பார்த்திருக்கிறான். இவளது அவருடன் சில தருணங்களில், இவள் அன்னையுடன் சில நேரத்தில்.அருகருகே நின்று ‘இவள் ‘ கண்களை உற்று நோக்கியிருக்கிறான். அவள் இல்லத்திற்கு செல்ல வாய்ப்பிருந்தும் செல்லாமல் இருந்திருக்க்கிறான். இவனுக்கு தெரியும், இவள் இவனுடைய மோகினி விசாகை என்றும், ஆனால் கைமாறி போன சுவாதி என்றும். இவளை தனிமையில் சந்தித்தால் வாழ்க்கை திசை

மாறும் என்ற பயம் வேறு. ஏனெனில் இவன் அவளை முழுதாகக் கொண்டிடுவான் என்ற பயத்தினாலும், அந்த கால கட்டத்தில், அதன் பின் விளைவுகளை சந்திக்கும் நிலையில் இவன் இல்லாததுமே. இவள் குடும்ப பிண்ணனி பற்றி இவனுக்கு ஒன்றும் தெரியாது. இவனைப் போல ஒரு நடுத்தர வர்க்கம் என்று மட்டும் தெரியும். ஆனால் இவளுக்கு அமைந்த வாழ்வினாலோ, இவள் தன்னை அறிய மறந்ததாலோ, தன் தேடலையும் நட்பையும் கொண்டாள் ….

கூட்டத்தினில். அது தெரிந்தும் விலகிச் சென்றான் இவன்; ஆனால் மனதில் இருந்து விலக்க முடியாமல்.

காலத்தின் திட்டமோ ? இவள் வீட்டிலேயே, இவளின் செல்ல படைப்புகளை, குழந்தை உட்பட சுமந்து கொண்டு காவலாக இவன் பொருள் ஒன்று. இல்லை அது சரியான காவலாக இல்லை. அதுதான் இவள் வாழ்க்கை திசை மாறியது என நினைக்கிறேன். இவள் மேல் அவ்வளவு ஈடுபாடு, பாசம் இவனுக்கு. இவன் இவள் இருப்பிடம் விட்டு பிரிந்து செண்றாலும், இவளை எல்லா இடத்துக்கும் அழைத்து சென்றான் மானசீகமாக. எத்தனை காடு மலை நாடு நதி கடந்திருக்கிறான் இந்த வன மோகினியின் நினைவுகளுடன். எத்தனை இடங்களில் இவளுக்கு உடையும் அணிகலனும் எடுத்து மனதிற்குள்ளேயே அழகு பார்த்திருக்கிறான்.

பல ஆண்டுகள் கழித்து ஒரு நாள், இவன் கனவில் வந்து தனது சிறகுகளால் இதயத்தை வருடினாள். இவளை காண ஒடோடி சென்றான் இவன் ? இவள்

குளித்து முடித்து நறுமணம் கமழ கீழேயிருந்த வரவேற்பரையில் அமர்ந்திருந்த இவனை வரவேற்றாள். இவன் எதிர்பார்த்தது போலவே, இவனுக்காக காத்திருந்த சாதகப் பறவை போல பிரியமுடன் பேசினாள். இவள் இவனுடன் பேச விழைந்த காரணம் என்ன ? பெரிய காதல் ஒன்றும் அப்போது இல்லை. ஆனால் ஒரு ஈர்ப்பு. இவள் இவனை எதற்கோ நாடினாள் என்பதைத் தவிர இவனுக்கு வேறு ஒன்றும் தெரியாது. இவனுடன் எப்படியெல்லாம் பேச விழைந்தாள் ? இவன் ஒரு அறிவிலி. இவளுடன் தனிமையில் பேசியிருக்க வேண்டும். இவளை கொண்டவரின் வார்த்தைகளில் நொந்து போய் உடனே திரும்பினான். இருந்தாலும் தானாய் விழுந்த ஒரு அற்புத கனியாய் இந்த கண்மனி கருத்துடன் படைத்த ஓவியம் ஒன்று இவன் கைகளில் கிடைத்தது. இவள் செய்த படைப்ப்போவியத்திலும் குழந்தை படைப்பிலும் தெரிந்ததுை இவளின் உள்ளத்தேட்டம். உளவியலும் அழகியலும் படித்த எனக்கு உடனே புரிந்தது இவள் காதலின் தேட்டம். இந்த ரசிகனுக்கு புரியாதா ஒரு கலைமகளின் படைப்பு. (Carl Jung, ஜென் புத்த கோட்பாடுகள், மற்றும் இந்திய மரபின் தாந்த்ரீய குறிப்புகள் சொல்வது போல ஒவ்வொருவரின் ஆழ்ந்த மனநிலையின் எழுச்சிகளையும், பிறப்பின் தேடலையும், அவரவர் ஆழ்ந்த மனநிலையில் படைக்கும், கலைப்படைப்புகளிலும்,

ஓவியங்களிலும், சிற்பங்களிலும் காணலாம். இந்த அடிப்படைகளில்தான் தென்னின்ந்திய கோவில்களும், திபெத்திய புத்த பீடங்களும் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டன. சித்தர்கள் தங்களுடைய ஆன்ம ஒளியினால் இயற்கையின் சக்திமையங்களை கண்டுகொண்டு இந்த கோட்பாடுகளின்படி கோவில்களை அமைத்தனர். (எல்லா கோவில்களும் இப்படி கட்டப்பட்டதல்ல). இவன் கனவில் எப்பொழுதாவது வந்து போய்க்கொண்டிருந்தாள்.

சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு நாள் ஒரு மலை உச்சியில் இவன் தியானத்தில் ஆழ்ந்திருந்த பொழுது இவளின் காவிய நடனம் கண்டான்; இவளின் ஆழ்ந்த மன நிலையையும், அதன் கூக்குரலையும், குயிலோசையிலும் எப்படி ஆழ்ந்து போனான், இவள் நினைவில், கனவில், காவியத்தில். இந்த யக்ஷியின் நினைவுதான், நினவுதான், நினைவுதான். பின் தொடரும் நிழல் போல.ஒரு கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் நிகழும் கனவை போல இவனை அறியாமலே இவன் மனதில் இவள் நாட்டியமாடிக்கொண்டிருந்தால். இந்த மயக்கத்தில் ஒரு நாள் மனம் உந்த இவளிடம் பேசினான். அதற்கு பிறகு நான்கு முறை

இவளிடம் பேசியிருக்கிறான். அவள் செய்த ஓவியத்தைப்பார்த்து லயிக்காத நாளே இல்லை.

இவளிடம் தன் உள்ளத்தையும், அதில் இவளை பற்றிய கவலைகள் குறித்தும் சொன்னான். இவளிடம் மறைந்து கிடக்கும் உள்ளொளி பற்றி சொன்னான்.

பொதிந்து கிடக்கும் திறமைகள் பற்றி சொன்னான். இவள் சொன்னாள். ‘நான் ஒரு சாதாரண பெண் ‘. இவன் சொன்னான் ‘நீ ஒரு அசதாரணமான பெண் ‘. இதை இவள் உணராததால்தான் தன்னை தாழ்த்திக்கொண்டதோடு தன்னுள் பொதிந்திருக்கும் உள்ளொளியை இவள் அறிய மறுக்கிறாள் என்று நான்

நினைப்பதுண்டு. தங்கள் முகம், அங்க அமைப்பு, உடலின் தீட்சண்யத்தை பலர் வெறும் வெளிஅமைப்பு, கவர்ச்சி பொருள், புற அழகு என்று நினைப்பதால்தான் தங்கள் உடலை வெறும் போகப் பொருளாக பார்க்கிறார்கள். தங்கள் உடலின் ஆதிமூலமாக உள்ள ஆத்ம ஒளியின் அழகை பலர் அறிந்து கொள்வதே இல்லை. ஆத்ம பலத்தின் சக்தியை உணரச் செய்ய சரியான காதலர்கள் அமைவது மிகவும் முக்கியம். இவனுக்கும் இவளுக்கும் என்ண உறவு ?

முன்வினைப்பயனின் தொடர்போ ? ஏதோ ஒன்று, என உள்ளுனர்வு உந்தியதில்தான் அன்று இவன் உற்று இவளை நோக்கினான். விதியின் வசத்தால் இவளிடம் பேச முடியாமல் பல ஆண்டுகள் கழித்து விட்டான். கண்டம் விட்டு கண்டம் கடந்த பின்னும் கண்டத்தில் உருளும் இவளை இவன் எப்படி மறப்பது ?

அதனால்தான் இவன் காதலை இவளிடத்தில் சொல்லும் கணத்தில் குயில் ஒன்று கூவி ‘ஆம் ‘ என்று உரைத்தது இருவரும் அறிவார்கள்; மற்றோர் அறிவாரோ ?

அப்பொழுது இவன் மனநிலையை பாரதி போன்ற மகாகவிகள்தான் சொல்லில் வடிக்க முடியும். சொல்கிறான் பாரதி:

கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்,

எண்ணுதலுஞ் செய்யேன், இஇருபதுபேய் கொண்டவன்போல்

கண்ணு முகமுங் களியேறிக் காமனார்

அம்பு நுனிக ளகத்தே யமிழ்ந்திருக்க,

கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய்

ஒன்றே யதுவாய் உலகமெலாந் தோற்றமுற,

சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி,

நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்

தாளம் படுமோ ? தறிபடுமோ ? யார்படுவார் ?

நாளொன்று போயினது. நானு மெனதுயிரும்,

நீளச் சிலைகொண்டு நின்றதொரு மன்மதனும்,

மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்,

சாயை போல் இந்திர மாயாசாலம் போல் வையமுமா

மிஞ்சிநின்றோம் ‘

பாரதியின் குயில்பாட்டு காவியம் போல சென்ற பிறவியில் இழந்த காதல் உறவை இந்த பிறவியிலே கண்டுகொள்ள வந்த காதலன் போலத்தான் இவன் உணர்ந்தான். இவளைக் காண மிகுந்த ஆவலுடன் இவள் இருப்பிடம் செண்றடைந்தான். இவளைப் பார்க்க சென்ற சில தினங்களுக்கு முன்பு இவனுக்கு வந்த தகவல் கொத்துகளில் ஒன்று இவனை உறையச்செய்துவிட்டது. எப்பொழுதோ படித்த நகுலனின் கவிதை வரிகள்தான் இவனுக்கு ஞாபகம் வந்தது

‘நிலைகுலைந்து நிற்கும் ஒரு நங்கை நல்லாளைக் கண்டு, மனம் மருண்டு மதிவிண்டு நிற்பவருண்டோ கூத்தனே. ?; என்ன ஓலமிடும் நின்னுடுக்கை என்ன ஓலமிடும் நின்னுடுக்கை ‘ இந்த கவிதை வரிகளுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம். தெரியவில்லை. இவன் மனம் மருண்டு நின்றான் என்பது உண்மை. இறைவன் இப்படித்தான் கண்கட்டு வித்தை விளையாடுகிறான். கூத்தன் கட்டவிழ்த்த புதிய சூட்சுமத்தின் பொருள்தான் என்ன ? தான் தேடி வந்த சூட்சுமம் என்ன ? இல்லை, இவன் நாடி வந்தது இது இல்லை. மாயையில் சிக்கி இருக்கும் இவளுக்கு காதல் புரியாது. காதல் வந்தாலும், கட்டாயம் விலக்கி வைத்துவிட்டு எளிதான தடம் பார்த்துதான் இவள் செல்ல முடியும். இதனால்தான் இவளின் பயணம் இப்படி. ஆனால் இவளின் மெய்மை வெறு. நான் இவளிடம் தேடி வந்த சூட்சுமம் இது இல்லை. இது இவள் தன்னை மறந்து விழுந்த மாயையின் வலைப்பின்னல். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு சில நாட்கள் ஆனாலும், இதை நம்ப முடியாமல் இவள் இல்லத்திற்கு சென்று அவள் கண்களை காண விழைந்தான் என்பதுதான் உண்மை. இதைத்தான் விதியென்று பலர் சொன்னாலும், ‘தன்னை ‘ அறிந்த இவன் இவளை கண்டுகொண்டபின்னும் இவளுக்கும் தன்னை உணர வைக்காதது இவன் குற்றமே. அதைதான் அவள் இல்லம் சென்று சொல்ல முன்றான். அவளை ஒரு காதலியாகத்தான் இவன் காண இவன் விழைந்தான். அவள் என்ன நினைக்கிறாள் என்று யார் சொல்ல முடியும் ? அவள் சொல்லலாம் ‘இது என் இயல்பு; இதைதானே நாடி வந்தாய் என்று ‘. இல்லை இது உனது இயல்பில்லை.

வந்த இடத்தில் தேவையற்ற வாக்குவாதம்; மனஸ்தாபம். இவன் சொல்கிறான். கோவிலில் உள்ள தெய்வம் என்ன அழகு ? அவர் சொல்கிறார். ஆமாம், infection ஆகிவிடகூடாதல்லவா ? இன்னும் புரியவில்லை இவனுக்கு; எதனால் இதைச் சொன்னார் என்று. இவன் சொன்னான், தமிழர்கள் நாம் நல்ல பண்புகளை இழந்து கொண்டு வருகிறோம். அவர் சொல்கிறார். ஒருவர்க்கு ஒருத்தி என்கிறார். இவன் சொன்னான். அது முக்கியமல்ல; எந்த உறவிலும் உண்மை காதல்தான் முக்கியம். கண்ணகி கதை தெரியாதா என்றார். இவன் சொன்னான்; ஒளவையும், காரைக்காலம்மையும், மாதவியும் கூட தெய்வ பெண்கள் என்று. இப்படி வாக்குவாதத்தில் மிஞ்சுவது நம்மை உற்றுப்பார்க்கும் ஒரு சூன்யம்தான். இவளும் இப்படித்தான் எங்களை பார்த்துக்

கொண்டிருக்கிறாள். எந்த உறவிலும் உண்மையான காதல் இருப்பின், காதலர்க்கு தெரியும். சண்டையிட்டுக் கொண்டாலும், வெட்டிக்க்கொண்டாலும், ஒருவரை பற்றி ஒருவர் குறை கூரினாலும், பிரிந்திருந்தாலும், மனதினுள் ஒட்டிக்கொண்டுவரும் இந்த ஆழ்ந்த அன்புதான் உண்மையான காதல் என்று. இவனுக்கு அமைந்தால் எல்லாம் முழுமையாக அமைய வேண்டும். ஒரு கணமாயினும் அது உண்மையான உறவாக அமையாக வேண்டும். பாசியில் வழுக்கிச் செல்லும் தண்ணீர் போன்று இவன் எதிலும் செல்ல தயாரில்லை. இன்பமோ துயரமோ, மனம் இஷ்டப்பட்டதில் விழவேண்டும்; இலகுவான இடம் பார்த்து ஏகுவதில் இல்லை வாழ்க்கை என நம்புபவன். உண்மையான காதலை, கனவை விலைகொடுத்து வாங்க கூடாது, முடியாது என நினைப்பவன். இப்படிக்கு முழுமையை எதிர்பார்த்து, அதை எதிர்கொள்ள மனதில் அன்று (10 ஆண்டுகள் முன்பு) தைரியம் இல்லாததால், இவளை பார்ப்பதையோ, இவளிடம் பேசுவதையோ தவிர்த்தான் என்று சொல்ல வேண்டும். அதன் பயனைத்தான் இப்பொழுது இவன் அனுபவிக்கறான். இவளை அழகியின் ‘குழந்தை ‘ யாகவும், அழகிய சிலையாகவும், கலைமகளின் உருவம் பெற்றவள் எனதான் இவன் நினைத்து கொண்டிருந்தான். அதுதான் அவளின் உண்மையான் இயல்பும் கூட. உண்மையான தண்மையும் கூட. ஆனால் இவள் தன்னை அறிய மறுத்ததால் வந்த விளைவுகள் எண்ணிப்பார்த்தால் கொஞ்சம் நடுக்கம்தான். இவளுடைய தெளிவற்ற நட்புகளால் இவள் தன் சுயத்தின் அழகை தொலைத்துக்கொள்ளும் அளவுக்கு சென்றிருப்பாள் என கனவில் கூட இவன் நினைத்தது இல்லை. இவளும் இதைத்தான் சொல்கிறாள். ‘இடத்தை கொஞ்சம் மாற்றிவிட்டான் கடவுள் ‘ என்று. இவளை விடவும், துயரத்தையும், பயத்தையும் அனுபவிப்பவன் இவனாகத்தான் இருக்க முடியும். இவளை சுற்றியுள்ள ஆபத்துகளை இவள் உணர்ந்தாளா என்ன ? இவனுக்கு இவள் நட்புகள் பற்றி கருத்தொன்று இல்லாவிடினும், அழகான கலைமகளின் ஆளுமையையும், அழகின் வெளிப்பாடுகளையும் உடைய இவள், இவனுடைய கனவுதேவதை, பாரதி கண்ட பராசக்தியைப்போல இருக்க வேண்டியவள், இன்று வெறும் பதுமையாக, நிழல் படமாக.

அவளுக்கு உண்மையில் என்மேல் காதல் இல்லாவிடினும், ஈர்ப்பு கூடவா இல்லை. இருந்தது. வாழ்க்கை திசை மாறி இருப்பினும், அவளின் ஏக்கம் இந்த

மாதிரி ஒரு கணங்களை, காதல் ஊறிய சொற்களையும், உண்மை அன்பினையும் நாடிதான் இருக்கும் என என் மனம் சொல்கிறது. இல்லாவிட்டால், என் சொற்கள் ஏன் அவளை காயப்படுத்த வேண்டும். ஏன் அழ வேண்டும். நான் யார் ? ஒரு வழிப்போக்கி என்று நினைத்தால்; என் வார்த்தைகள் கண்டு நடுங்கத்தேவையில்லைதான். எது எப்படியாயினும், யார்யார் வாய் கேட்பினும், காதல் தோன்றியிருந்தால் காதல் இருக்கும், காதல் வழி நடத்தும். இல்லை எனில் காதலின் பின் எப்பொழுதும் தொக்கி நிற்கும் சூன்யம்தான் நகைக்கும். அவளை பலர் காதலித்து இருக்கலாம்; ஆனால் உண்மையில் காதல் கிடைக்க

வில்லை என்பதுதான் உண்மை. அவள் மறுக்கலாம்.

பாரதியிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும் குயிலுக்கு நேர்ந்த கதையை.

யாரிந்த மாற்றங்களை நிகழ்த்துவது ?

பாரதி சொல்கிறார் தன் குயில் பாட்டில்:

கன்னியெனத் தான்பிறந்தாய், கர்ம வசத்தினால்,

நின்னையங்கே. இஇப்பிறப்பில் நீயும் பழமைபோல்

மன்னனையே சேர்வையென்று தாஞ்சூழ்ந்து மற்றவரும்

நின்னைக் குயிலாக்கி நீசெல்லுந் திக்கிலெல்லாம்

நின்னுடனே சுற்றுகின்றார். நீயிதனைத் தேர்கிலையோ ? ‘

என்றார். ‘விதியே! இஇறந்தவர்தாம். வாழ்வாரை

நின்று துயருறுத்தல் நீதியோ ? பேய்களெனைப்

பேதைப் படுத்திப் பிறப்பை மறப்புறுத்தி

வாதைப் படுத்தி வருமாயில், யானெனது

காதலனைக் காணுங்கால், காய்சினத்தா லேதேனுந்

தீதிழைத்தா லென்செய்வேன் ? தேவரே மற்றிதற்கோர்

மாற்றிலையோ ? என்று மறுகிநான் கேட்கையிலே,

தேற்றமுறு மாமுனிவர் செப்புகின்றார்:- ‘பெண் குயிலே,

தொண்டைவள நாட்டிலோர் சோலையிலே வேந்தன்மகன்

கண்டுனது பாட்டிற் கருத்திளகிக் காதல் கொண்டு

நேச மிகுதியுற்று நிற்கையிலே, பேயிரண்டும்

மோச மிகுந்த முழுமாயச் செய்கைபல

செய்து பல பொய்த் தோற்றங் காட்டித் திறல் வேந்தன்

ஐயமுறச் செய்துவிடும், ஆங்கவனு நின்றனையே

வஞ்சகி யென்றெண்ணி மதிமருண்டு நின்மீது

வெஞ்சினந்தா னெய்தி நினை விட்டுவிட நிச்சயிப்பான்;

பிந்தி விளைவதெல்லாம் பின்னேநீ கண்டுகொள்வாய் ‘ ‘

சில கவிதைகள்

‘இப்பொழுது புரிந்ததா என் செல்ல உயிரே!

காதல் ஏன் உயிரினும் மேலானது என்று!

காதலில்லா உறவுகள் கழுத்தை அறுக்கும்

கலங்கத்தை வாரியிறைக்கும்.

களங்கம் மறக்கும் கள்ளம் தீர்க்குமாம் உண்மை காதல் ‘.

‘உள்ளத்தில் ஓளி உண்டாயின்

வாக்கிலும் ஒளி உண்டாம் சொன்னான் பாரதி.

உள்ளத்தில் காதல் உண்டாயின் உடலில் ஓளி தெரியும்

உடல் கிழித்து உள்ளே விழையும் வேகம் வரும்

இணை உயிர்கவ்வும் அதை காக்கவும் விளையும்.

பசலையும் படர் மெலிர்ந்திரங்கும் பாக்கியம் கிடைக்கும்

பார்த்தேன் நானும் உன் பசலைப் பொழிவை!

காதல் கிடைக்கும்வரை பெண் கன்னிதான் தெரியுமா கண்ணே!!

காதலில்லாத ஆண் ஒரு கட்டைதான் தெரியுமா பெண்ணே!!

காதல் என்ற வார்த்தையில் காதல் இல்லையடி!!

காதலின் மேண்மை காதலர் உள்ளத்தின் உண்மையில் உள்ளதடி!!

காதலில்தான் ஒரு பெண் தலைவியாகிறாள். ஒருவன் தலைவனாகிறான்.

காதலில்தான் ஒரு பெண் சக்தியாகிறாள்; காதல் இல்லை எனில் பெண் துகிலுரித்த பொம்மை ‘.

‘இவன் உன்னை ஏமாற்றியதாக நினைக்கிறாயா ? இவனையே இவன் எப்படி ஏமாற்றிக் கொள்ளமுடியும். ஆனால் உன்னை நீ ஏமாற்றிக் கொள்கிறாய்.

இவனுக்கு தெரியும் அவள் சமையல் அறையில் இருந்து

மேற்கில் மறையும் இந்த சூரியனை உற்று பார்த்து கொண்டிருக்கிறாள்

இவனும் பார்த்துக் கொண்டிருக்கிறான் அது கிழக்கில் உதிக்கையில்.

சூரிய கதிர்களே அவர்கள் காதலுக்கு தூதாக.

நீ இருக்கும் திசை நோக்கிதான் தன் மந்திரங்களைச்

சொல்கிறான் இந்த காதல் மந்திரவாதி.

தன் தந்திரங்களை செலுத்துகிறான் இந்த காதல் யோகி.

சித்தம் குவிந்த சிவனாக நிற்கிறான் இந்த காளி (நின்) பக்தன்.

நீ நீயாக நின்னை பாவிப்பது உண்மையான ‘நீ ‘ இல்லை

இவன் உன்னில் அன்று பார்த்ததும் இன்று நாடி வந்ததும்

இந்த ‘நீ ‘ இல்லை. நீ நின் மெய்யை மறந்ததாலோ (மறுத்ததாலோ)

இந்த …. நட்பு.

(பாரதி குயில் பாட்டில் குயிலிடத்தில் இப்படித்தான் பேசுகிறான்: மறு பிறவியில் தொடரும் காதலையும், மெய்யுணர்வை மறப்பதால் குயிலுக்கு ஏற்படும் இடர்கள்யும், குயிலவள் தன் காதலனைக் கண்ட பிறகும் அவனிடல் சேரவிடாமல் தடுக்கும் பேய்களை பற்றி பேசுகிறான். பேய்களெனைப் பேதைப் படுத்திப்

பிறப்பை மறப்புறுத்தி வாதைப் படுத்தி வருமாயில், யானெனது காதலனைக் காணுங்கால், காய் சினத்தாலேதேனும் தீது இழைத்தாலென் செய்வேன் ?

பின்குறிப்பு: நான் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு அண்மை காலங்களில் பயணம் செய்யும் பொழுது விமானங்களிலும், தெருக்களிலும், நடன அரங்குகளிலும் கானும் ‘சில ‘ தமிழ் பெண்களைப் பார்க்கும் பொழுது, மனதிற்குள் ஒரு இனம் புரியா கலக்கமும், தவிப்பும், பரிதாபமும், ஏற்படுகிறது.

மலேசியாவில் நான் தங்கியிருந்த பொழுது என் நண்பன் ஒரு தெருவிற்கு அழைத்து சென்று காண்பித்து சொன்னான் ‘இங்கு உலவும் பெண்களில் கால்வாசி பேர், தமிழ் நாட்டிலிருந்து பலவித பொறுக்கிகளால் நாள்தோறும் அழைத்து வரப்படும் பெண்கள் ‘ என்று. அழகு பெண்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், சுடரும் ஒளி விழி பெற்ற பெண்கள், நடுத்தர வர்க்கத்து பெண்கள், ஏழை குடும்பத்து பெண்கள், கணவனைப் பிடிக்காதவர்கள், கைம்பெண்கள், மாணவிகள் என பலவித பெண்கள். இப்பெண்களை அழைத்து வரும் பொறுக்கிகளும் பலவித பிண்ணனியில் இருந்து வருகிறார்கள் ‘டாக்டர்கள், இஞ்சினியர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்ற போர்வையில் உலவும் பொறுக்கிகள். இவர்கள் இந்த பெண்களை பலவித காதல் பண ஆசைகள் காட்டி ஏமாற்றி அழைத்து வருகிறார்கள். உண்மையில் அழைத்து வருவது மோசமான குழியில் தள்ளத்தான். இந்த தேவதைகளுக்கு அப்படி என்ன கிடைத்துவிடும் இந்த பொறுக்கிகளிடம்…. சுகமா, வசதியா, மன அமைதியா… ஒன்றும் புரியவில்லை. இந்த பெண்களில் பலர் தங்க கொலுசு அணிந்து இருப்பதையும் பார்த்தேன். இந்த ‘சில ‘ தங்க கொலுசு பெண்கள்களையும், அவர்கள் அருகில் உலாவரும் ஆண்களையும் அவர்களது நடை, உடை, பாவனை மற்றும் தெளிவற்ற ஆழமில்லாத எண்ணோட்டங்களையும் அறிய நேரும் பொழுது இந்த கலக்கம் அதிகமாகிறது. நான் ஒன்றும் ‘உடல்ரீதியான கற்பு என்ற ஒரு கொள்கையை ‘ தூக்கிபிடிக்கும் ஒரு பத்தாம் பசலி இல்லை. ஆனாலும் மனதிற்குள் ஒரு பட்சி சொல்கிறது ‘மிகப்பெரிய மோசமான சமூக மாற்றத்திற்கான அறிகுறிகள் இது ‘ என்று. இந்த மாற்றங்களால் தமிழர்களின் வாழ்வியலில் ஏற்கனவே மறைந்து கொண்டிருக்கிற, காதல், அன்பு, நேசம், வீரம், அறம் போன்ற பண்புகள்

சுத்தமாக மழிக்கப்பட்டு, மேற்கத்திய சமூகங்களைப் போல நாமும் எல்லாவற்றிர்கும் ஒரு விலை என்ற நிலைக்குத் தள்ளபடலாம். இதையெல்லாம்

பார்த்ததின் விளைவுதான் என் காதலியைபற்றிய பயம் அதிகமாகிவிட்டது. இது ஒரு உண்மையான வலி. கவலை. அதனால்தான் இதைப்பற்றி எழுதியாக வேண்டியுள்ளது.

athiyannilavan@yahoo.com

Series Navigation

அதியமான் நிலவன்

அதியமான் நிலவன்