கடைசி ஆலமரம்
ஜி. எஸ். தயாளன்
தெருவின் முகத்தில் அறைந்தபடி
வீடுகளின் கதவுகள் சாத்தியே கிடக்கின்றன
மட்கும் இலைகளுக்கும்
நெழியும் மண்புழுக்களுக்குமான
கான்க்ரீட் சமாதியில்
வாகனங்கள் வேகமெடுக்கின்றன
கிண்டலும் கேலியும்
நிறைந்த திண்ணைகளை
சுற்றி வளைத்த வேலிச் சுவர்களுக்குள்
நாய்களின் உறுமல்
இடைவெளிகளால் உருமாறும்
வீடுகளின் முகங்களில்
தீவின் தனிமை
புழுதிப் பறக்காத
மேட்டிமை அமைதியுனூடே
சாக்கடை நரகல் மெல்ல நகர்கிறது
அழைப்பாரற்ற
அம்மி கொத்துபவனின் கூப்பாடு
தெருவெங்கும் எதிரொலித்தபடியிருக்க
வயதாகிச் சரிந்தது கடைசி ஆலமரம்
gsdhayalan@gmail.com