கடிதம் – சுந்தர ராமசாமியின் அறிக்கை பற்றி

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

பா. ரெங்கதுரை


எழுத்தாளரும் காலச்சுவடு இதழின் நிறுவனருமான சுந்தர ராமசாமி அவர்கள் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதை ஒட்டி வெளியிட்டுள்ள அறிக்கையைக் கண்ணுற்றேன்.

‘நம் சமூகத்தில் இதழியல் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் குற்றவாளிகள் மிகுதியாக இருப்பதோடு தமிழ் அரசியலையும் தமிழ்க் கலாசாரத்தையும் அவர்கள் இன்று தீர்மானிப்பதாகவும் ‘ சுந்தர ராமசாமி குறிப்பிட்டுகிறார். இங்கு இதழியல் என்று அவர் குறிப்பிடுவது குமுதம், விகடன், குங்குமம் போன்ற பெரும் வணிக இதழ்களைப் பற்றி மட்டுமா அல்லது காலச்சுவடு, உயிர்மை போன்ற சிற்றிதழ்களையும் சேர்த்துத்தானா என்று அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் இது பற்றி எழுத்தாளர்கள் மெளனம் சாதிப்பது வியப்பை அளிப்பதாகவும் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். எழுத்து, எழுத்தாளர் என்பது பற்றி கறாரான எண்ணங்களைக் கொண்டிருப்பவர் அல்லது கொண்டிருந்தவர் அவர். ஆகவே அவருடைய சமீபத்திய மதிப்பீடுகளின் படி எது எதெல்லாம் எழுத்து, எவர் எவரெல்லாம் எழுத்தாளர் என்று சுந்தர ராமசாமி சொல்லிவிடுவது நல்லது. இந்தப் பட்டியலில் ஜெயமோகன், மனுஷ்ய புத்திரன் போன்றவர்கள் இன்னமும் இடம் பெற்றிருக்கிறார்களா என்பதையும் அவர் தெரிவிக்க வேண்டும்.

சங்கராச்சாரியின் இடத்தில் ஒரு சைவ வேளாள அல்லது வைணவ வகுப்பைச் சார்ந்த மடாதிபதியோ, கத்தோலிக்கப் பாதிரியோ, இஸ்லாமிய முல்லாவோ அல்லது புத்த பிக்குவோ இருந்திருந்தால் அவர்களுக்கு எதிராகவும் இத்தகைய ஒரு அறிவிப்பைத் தன்னால் வெளியிட்டிருக்க முடியுமா என்பதையும் சுந்தர ராமசாமி விளக்க வேண்டும்.

பா. ரெங்கதுரை

சியாட்டல், அமெரிக்கா

rangaduraib@rediffmail.com

Series Navigation