கடிதம் – ஏப்ரல் 1, 2005

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

அ.வெற்றிவேல்


திரு.சின்னக்கருப்பன்,திரு.விஸ்வாமித்திரா..

திரு.சின்னக்கருப்பன் அவர்கள் ‘சோ, கண்ணதாசன், ஜெயகாந்தன்-மூவரைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரையும், அதனைத் தொடர்ந்து திரு.விஸ்வாமித்திரா அவர்களின் கடிதத்தையும் கண்டேன்.

திரு.சின்னக்கருப்பன் அவர்கள், இந்த மூவர் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.அதில்

திராவிட இயக்கத்தின் பார்ப்பன எதிர்ப்பை யூத எதிர்ப்போடு ஒப்பீட்டிருந்தார்.அது விவாத்திற்குரிய கருத்து.

திராவிட இயக்கம் குறித்து சின்னக்கருப்பன் தெரிவித்த கருத்துக்களைப் பற்றி இங்கு நான் பேசவில்லை.

அது குறித்து வேறு சமயத்தில் பேசலாம்.

திரு.சின்னக்கருப்பனின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த நண்பர் திரு.விஸ்வாமித்திரா அவர்கள், தன்னை மறந்து சோ அவர்களை ‘ராஜ ரிஷி,தீர்க்கதரிசி,ஆண்டவன் அளித்த வரப்பிரச்சாதம் ‘ என்றெல்லாம் சோ அவர்களே கூச்சப்படும் படி, ஒரு சினிமா ரசிகன் தனது ஆதர்ச நாயகர்களின் ஆளுயர கட்-அவுட்க்கு பால் அபிஷேகம் செய்வது போல்,அபிஷேகம் செய்திருந்தார்.

முன்னவர் குறிப்பிட்டதோ,மூவரைப் பற்றி.ஆனால் நண்பர் விஸ்வாமித்திராவுக்கு தெரிந்ததோ சோ மட்டுமே..

சின்னக்கருப்பன் தனது கட்டுரையிலே ‘ சோ நடுநிலையானவர் இல்லை ‘ என்று குறிப்பிட்டது மட்டுமின்றி,

சோ அவர்களே தன்னை ஒரு நடுநிலையானவர் என்று காட்டிக்கொண்டாலும்,அது உண்மை இல்லை என்பது சோவுக்கே தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மூவருடைய திராவிட இயக்க எதிர்ப்பும் வேறு வேறு தளங்களில் அமைந்தது என்பதை சின்னக்கருப்பன் அவர்கள் உணராதது ஆச்சர்யமே.

கண்ணதாசன், திராவிட இயக்கத்தின் உள்ளிருந்து வெளிப்பட்டு, அதன் உண்மைத் தன்மையை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.

ஜெயகாந்தன் மட்டும்தான் திராவிட இயக்கத்தை ஒரு நோய் என்று மனப்பூர்வமாக உணர்ந்து அதன் வளர்ச்சியைத் தடுப்பது எழுத்தாளன் என்ற முறையில் தனது கடமை என்ற நோக்கில் செயல்பட்டவர்.

1971 தேர்தலுக்கு முன்பிருந்தே கண்ணதாசனும்,ஜெயகாந்தனும் இணைந்து தமிழகம் முழுதும் பேசியும் எழுதியும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து திராவிட இயக்க எதிர்ப்பை ஒரு இயக்கமாகவே வளர்த்து வந்தார்கள்.

சோ அவர்களோ இந்த இருவரிடமும் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்.சோவுடைய திராவிட இயக்க

எதிர்ப்போ பார்ப்பனவாத அடிப்படையில் அமைந்தது.எது பார்ப்பனர்களுக்கு நன்மையோ அதை

தமிழர்களுக்கு நன்மை என்று கட்டமைக்ககூடிய வாதத்திறமை சோவுக்கு உள்ளது.1971 தேர்தல் முதற்கொண்டு நான் சோவை பார்த்து வருகிறேன்.அவருடைய பார்ப்பன ஆதரவு நிலைப்பாடு..பல

சமயங்களில் நடுநிலை என்ற போர்வையில் வெளியே தெரியாதவகையில் இருந்தாலும்,சில சமயங்களில்

வெளிப்படையாக தெரிந்ததும் உண்டு.அதற்கு என்னால் பல்வேறு நிகழ்ச்சிகளை உதாரணமாக காட்ட

இயலும்.

ஜெயகாந்தனைப் பொறுத்த வரையில் தி.மு.க அல்லது அ.தி.மு.க இரண்டும் ஒன்று தான்.ஆனால் சோவைப்

பொறுத்தவரையில்..எது பார்ப்பன ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறதோ, அது தி.மு.க வாக இருந்தாலும், அ.தி.மு.க.வாக இருந்தாலும்..அதற்கு தனது ஆதரவை வழங்கத் தவறுவது இல்லை.வெளியில் சொல்ல

ஆயிரம் காரணங்களை கண்டு பிடிக்கும் அபாரத்திறமை சோவுக்கு உண்டு.

தமிழ்,தமிழ் இசை,தமிழுக்கு உரிய இடம் என்று (தி.மு.க/அ.தி.மு.க தவிர) யார் நியாயமான உரிமைக்கு

குரல் கொடுத்தாலும் சோவைப் பொறுத்த வரையில் அவர்கள் திவீரவாதிகள் தான்..இந்தக் குரல்

கொடுப்போர் பல்வேறு கல்வியாளர்களாக இருந்தாலும்..

மேலும் திரு.விஸ்வாமித்திரா அவர்கள்,தி.மு.க வின் திவீரவாத ஆதரவைக் கண்டுதான் சோ டில்லி சென்று,

தானே முன்னின்று திரு.சந்திரசேகர் உதவியுடன் தி.மு.க ஆட்சியைக் கலைத்ததாக ஒரு கதை

புனைந்துள்ளார்.1990-ல் தி.மு.க ஆட்சி ஏன் கலைக்கப்பட்டது என்பது அரசியல் தெரிந்த அனைவருக்கும்

தெரிந்ததே.கலைக்கப்பட்டதற்கு வெளியில் சொன்ன காரணம் வேண்டுமானல் திவீரவாதமாக இருக்கலாம். உண்மை அதுவல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

சோ அவர்களின் திராவிட இயக்க எதிர்ப்பு என்பதை பார்ப்பன ஆதரவு என்ற வகையில் தான் பார்க்க வேண்டும் என்றும், பார்ப்பனர்களுக்கு வேண்டுமானல், அவர் ராஜரிஷியாகத் தெரியலாம்.மற்றபடி சோ அவர்களும் திராவிட இயக்க அரசியல்வாதிகளுக்கு இணையான ஒரு அரசியல்வாதி தான்.

அன்புடன்

அ.வெற்றிவேல்

மின்னஞ்சல்: vetrivel@nsc-ksa.com

Series Navigation