கடிதம் நவம்பர் 4,2004 -இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் பேசிய உரை

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

நாகூர் ரூமி


(திரும்பத் திரும்ப அவர் சொல்லியவற்றையும், நூலிலிருந்து விரிவாக எடுத்துக் காட்டிய மேற்கோள்களையும் விட்டுவிட்டுத் தருகிறேன். மேற்கோள் குறிகளுக்குள் இருப்பவை அவருடைய வார்த்தைகள். ஒரு நடு நிலையான விமர்சனம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இதை நான் கருதுகின்றேன். அவசியம் கருதி அடைப்புக்குறிகளுக்குள் இருப்பவை எனது வார்த்தைகள் — நாகூர் ரூமி)

‘இங்கு வரவேற்புரை நிகழ்த்திய பத்ரி சேஷாத்ரி போன்றவர்களெல்லாம், கிழக்கு பதிப்பக வெளியீடுகளில் மிக முக்கியமான புத்தகம் இது என்கிற மாதிரியான ஒரு கருத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக, காலத்தின் தேவையை நிறைவு செய்வதற்காக வரவேண்டிய ஒரு புத்தகம், மிகத்தாமதமாக, ஆனால், இப்போதேனும் கிழக்கு பதிப்பகம் மூலமாக வெளிவந்திருக்கிறது என்று சொல்வதோடு, கடந்த 15 ஆண்டுகாலத்தில் வெளிவந்த புத்தகங்களில் மிகச்சிறந்த ஆன்மீக நூல் என்று இந்த புத்தகத்தை நான் இங்கே உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன். ‘

‘இந்த புத்தகத்தின் சிறப்புகள் கொஞ்சம், இந்த புத்தகம் தொடர்பான எனது விமர்சனங்கள் கொஞ்சம், இந்த புத்தகத்தில் நான் கண்ட குறைகள் கொஞ்சம் — இவற்றை சுருக்கமாக உங்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு முன்னால், …(இந்த இடத்தில் அவருடைய சின்ன வயதில் எப்படி ஒரு முஸ்லிம் பெரியவர் அவருக்கு உதவினார் என்று கூறிவிட்டு தொடர்கிறார்)…ஆக, ஒவ்வொரு தனிமனிதர் வாழ்விலும் முஹம்மதியப் பெரியவர்கள் செய்திருக்கிற ஏராளமான நன்மைகளை நாம் பட்டியலிட்டுக் கூறமுடியாது. ‘

‘ஆனால் தீவிரவாதம் முஹம்மதிய வாதம் என்றும், முஹம்மதிய வாதிகள் தீவிரவாதிகள் என்றும் சொல்கிற ஒரு போக்கு, தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் நிலவுகிறது. ‘

‘நாகூர் ரூமி அதை அழகாக இதிலே விவாதித்து, எப்படி அன்பைப் போதிக்கிற மதம் இஸ்லாம் மதம் என்று நிறுவுகிறார். அந்த ஒரு கருத்திற்காக, வானளாவ கொண்டாடத்தக்கது இந்நூல். ‘

’91வயதிற்குப் பிறகு, குர்ஆனை முழுமையாகப் படிக்கும் ஆசையில் படிக்க ஆரம்பித்து, ஏறக்குறைய முக்கால்வாசிப் படித்துவிட்டு உயிரைவிட்ட ஏ.என்.சிவராமன் அவர்களுடைய மாணவன் நான் என்ற பெருமிதத்தோடு இந்த மேடையிலே நான் நிற்கிறேன். ‘

‘எங்கே மத நல்லிணக்கம் தேவையோ, எங்கே தவறான கருத்துக்கள் திருத்தப்பட வேண்டுமோ, அங்கே சரியான வகையில் இந்த புத்தகம் இடம் பெற வேண்டும், இஸ்லாமியர்கள் எல்லோரும் இதன் ஒரு பிரதியை வாங்கிக்கொள்ள வேண்டும், இந்துக்கள் எல்லோரும் இரண்டு பிரதிகள் வாங்கி ஒன்றை தாங்கள் வைத்துக்கொண்டு, ஒன்றை நண்பர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் சிபாரிசு செய்கிறேன். ‘

‘இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பல்வேறு சிறப்புக்களை, அதனுடைய தனித்தன்மைகளை, நாகூர் ரூமி, இங்கே பலர் சொன்னது மாதிரி, சிறந்த நடையோட்டமுள்ள, தற்காலத் தமிழிலக்கியத்தில் தடம் பதித்த ஒரு கதாசிரியர். எனவே விறுவிறுப்பான ஒரு நாவல் மாதிரி இந்த நூலை எழுதியிருக்கிறார். ‘

‘எழுதும்போது, தொடக்கத்திலேயே, எதையும் அரண் கட்டிக்கொண்டு, ஜாக்கிரதையாக சொல்கின்ற ஒரு போக்கோடு செயல்பட்டிருக்கிறார். அது, ஒரு வழக்கறிஞர் மாதிரி, ஒரு விவாத நோக்கோடு இந்த புத்தகத்தை அமைப்பதில் உதவியிருக்கிறது. ‘

‘நூலின் முக்கியமான நோக்கம் மிகத்தெளிவாக இருக்கிறது. இஸ்லாம் என்றால் சாந்தியும் சமாதானமுதான். வன்முறையும் இஸ்லாமும் ஒன்றுக்கொன்று முரணானவை; எதிரானவை. மிக அழகாக இந்த புத்தகத்தில் இந்த கருத்து நிறுவப்படுகிறது. அப்படி நிறுவுகிறபோது, எவ்வளவு ஜாக்கிரதையாக நாகூர் ரூமி சொற்களைக் கையாள்கிறார் என்பது தெளிவாகிறது. ‘

‘ஒருவன் தீவிரவாத்தில் ஈடுபடுவதற்காக, இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள் அனைவருமே தீவிரவாதிகள் என்பது என்ன நியாயம் என்று கேட்கிறார். ‘

‘பல இடங்களில், ஒரு ஆராய்ச்சிப் பூர்வமான அணுகுமுறை, ஒரு பேராசிரியருக்கே உரிய அணுகுமுறை, நம் மனத்தைத் தொடுகின்ற அணுகுமுறை… ‘ ( நூலிலிருந்து உதாரணம் காட்டுகிறார்).

‘சில விமர்சனங்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். முக்கியமாக, ‘அவதாரக் கொள்கையின் அடிப்படையைத் தகர்த்தது இஸ்லாம் ‘ என்று எழுதுகிறார்… ‘தன்னளவில் தகர்த்தது ‘ என்று சொல்லலாம். ‘

‘முதுகுவிட்டு முதுகு மாற்றப்படுகிற சுமையைப் போல, பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு மாற்றுகின்ற சமய அமைப்பை சுக்கு நூறாக உடைத்துவிட்டது இஸ்லாம் என்று சொல்லுகிறார். இது அவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகத் தென்படவில்லை. லட்சிய நிலையில் அப்படி இருக்கலாம். ஆனால் இன்றைய நிலையில் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவருக்குப் பிறந்த குழந்தை இஸ்லாம் மதத்தைச் சார்ந்ததாகத்தான் இருக்கிறது. எல்லா சமுதாயத்திலும் உள்ளது போல. அந்த ஒரு கருத்தை அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். ‘

‘இஸ்லாம் மட்டும்தான் இரண்டையுமே (இம்மையையும் மறுமையையும்) பார்க்கிறது என்று சொல்கிறார். இஸ்லாம் இரண்டையுமே பார்க்கிறது என்று எழுதியிருக்கலாம். ஏனென்றால் ஹிந்து மதத்தில்கூட பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம் என்று நான்கு நிலைகளைச் சொல்கிறார்கள். பல இடங்களில் பார்த்தீர்களானால், இஸ்லாம் மதம், ஹிந்து மதம், கிறிஸ்தவ மதம், உயர்ந்த மதங்களெல்லாம் ஏறக்குறைய ஒரே கோட்டில் இணைவதை நாம் பார்க்க முடியும். வழிமுறையில்தான் சில மாறுதல்களே தவிர, பல விஷயங்கள் ஒன்றாகவே இருப்பதை நாம் பார்க்க முடியும். ‘

‘இதில் பலதார மணத்தைப் பற்றி சில கருத்துக்கள் வருகின்றன. அதில், நியாயப்படுத்துவது மாதிரியான சில வாதங்களை அவர் வைக்கிறார். இதைப்பற்றி தனியாக அவருக்கு நான் கடிதம் எழுதலாம் என்றிருக்கிறேன். ‘

‘இஸ்லாம் மதம் பெண்களுக்காக ஏற்படுத்திய பல நெறிகள், பகுத்தறிவுக்குப் பொருந்தக் கூடியவையாக இருக்கின்றது என்பதை நாம் மிக அழகாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ‘ (இதற்குப் பிறகு நூலில் உள்ள எழுத்துப் பிழைகள் பற்றிப் பேசுகிறார்).

‘534 பக்கங்கள் கொண்ட, 200 ரூபாய் விலையுள்ள ஒரு பிரம்மாண்டமான புத்தகம். இந்த புத்தகம், எப்படி பைபிள், குர்ஆன், திருக்குறள், பகவத் கீதை பல வீடுகளில் இருக்கின்றதோ அது மாதிரி, மத நல்லிணக்கத்தைப் பேணுகின்றவர் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு உன்னதமான புத்தகம். தமிழில் இது ஒரு பெரிய அற்புதமான வரவு. இப்படிப்பட்ட புத்தகத்தில்… ‘(அத்தியாய விபரங்கள், பொருளடக்கம் ஏதும் இல்லாத குறையைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறார்).

‘ஏராளமான பொன்னான தகவல்கள் இந்த புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன. வாழ்த்த வேண்டிய நூல் மட்டுமல்ல, நான் ஏற்கனவே சொன்னது மாதிரி, கொண்டாட வேண்டிய ஒரு நூல். ‘

‘இந்த நூல் சரியான கால கட்டத்தில் தமிழ் மொழியில் வந்திருக்கிறது. இந்த நூல் இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழிபெயர்ப்பாக வேண்டும் என்ற என் ஆசையையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவசியம் தெலுங்கிலும் மலையாளத்திலும் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ‘

‘இந்த நூலைப் படிக்கிறபோது, இந்த நூலை எழுதுவதற்காக இந்த நூலாசிரியர் எடுத்த கடுமையான உழைப்பு, பல இரவுகள் பகல்கள் பாடுபட்டு அவர் எழுதியிருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த உழைப்புக்கு என்னுடைய வந்தனங்கள். ‘

திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் என் நூலைப் பாராட்டிப் பேசியது இருக்கட்டும். அந்த நூலில் உள்ள குறைகள் என்று அவர் நினைத்ததை அவர் சுட்டிக் காட்டிய விதத்துக்கு நான் மரியாதை செலுத்துகின்றேன். அந்த நாகரீகம் கண்ணியத்திற்குரியது. கவனத்திற்குரியது.

ஒரே நூல் திருப்பூர் கிருஷ்ணனுக்கு ஒருவிதமாகவும் நேசகுமாருக்கு வேறுவிதமாகவும் பட்டிருக்கிறது. திருப்பூர் கிருஷ்ணனுக்கு வெள்ளையாகத் தெரிந்தது நேசகுமாருக்கு கறுப்பாகத் தெரிகிறது. எந்தப் பார்வை சரியாக இருக்க முடியும் என்பதை திண்ணை வாசகர்கள் முடிவு செய்துகொள்ளட்டும்.

நாம் போய்க்கொண்டிருக்கிற பாதையைப் பற்றியதல்ல எனது நூல். போகவேண்டிய பாதையை, காட்டப்பட்ட நேரிய வழியை ஆதாரங்களோடு வரலாற்றின் ஒளியில் எடுத்துக்காட்ட எடுத்துக்கொண்ட ஒரு முயற்சியே.

அன்புடன்

நாகூர் ரூமி

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி