கடிதம் டிசம்பர் 23, 2004 – பழையன கழிதலும், புதியன புகுதலும்!

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

ஜோதிர்லதா கிரிஜா


‘ஜோ.கி.’ குமூர்த்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும் எனும் கேள்வியை விசிதா அவர்கள் எழுப்பியுள்ளார். (திண்ணை 2.12.2004) ஒரு சாதாரண ஆளாகிய என் கட்டுரையைப் பொருட்படுத்தி விசிதா ஏன் பதில் எழுத வேண்டும் ? ஒரு சாதாரண ஆளுக்கே விசிதா எதிரொலிக்கும்போது, தமிழகத்தில் ஒரு பெரும் புள்ளியான – இண்டியன் எக்ஸ்பிரஸ், துக்ளக், தினமணி போன்ற பெரும் இதழ்களில் கட்டுரைகள் எழுதிவரும் – ஒரு சிந்தனையாளருக்கு நாம் ஏன் முக்கியத்துவம் தரக் கூடாது ? முக்கியத்துவம் என்கிற சொல்லுக்கு ‘முழுவதுமான ஏற்புடைமை’ என்று பொருள் கொள்ளத் தேவை இல்லைதானே ?

என் கருத்துகள் குருமூர்த்தியின் கருத்துகளை முற்றும் நிராகரிப்பதாக இல்லை, மாறாக 50% ஏற்பது போலத் தோன்றுகிறது என்றும் விசிதா கூறுகிறார். ஒருவரின் கருத்துகாளை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்றோ அல்லது முழுவதுமாக நிராகரிக்கவேண்டும் என்றோ ஏதேனும் சட்டம் உள்ளதா ?

பெண்களின் உடை பற்றி நாம் எழுதியுள்ளது அவருக்கு வேடிக்கையாக உள்ளதாம். தொழில் மற்றும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு பெண்கள் உடை யணிவதற்கு யாரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் எந்த உடையிலும் ஒரு கண்ணியம் (decency) இருக்க வேண்டும். (ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி) அதிலும் பெண்கள் தங்கள் நலனைக் கருத்தில் கொண்டு இதில் அதிகமாய்க் கவனம் செலுத்தவேண்டும். தட்ப வெப்ப நிலைக்கு ஏற்பப் பெண்கள் உடை யணிய வேண்டும் என்பதிலும் நமக்குக் கருத்து வேறுபாடு இல்லை. (இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற குளிர் நிலங்களில் கூட ஆண்கள் முழு உடை (full suit) அணிகின்றனர். ஆனால், பெண்கள் மட்டும் அப்படி முழு உடலையும் மறைக்கும் உடைகளை அணிவதில்லை (நாம் அறிந்த வரையில்!) இத் தகவல் தவறெனில் திருத்தவும்.

பெண்களின் விளையாட்டு உடைகளைப் பற்றி எழுத வெகு நாள்களாக ஆசை. எனக்கு விளையாட்டுகள் பற்றி அதிகம் தெரியாதாகையால், இது பற்றி எழுதத் தயங்கி வந்துள்ளேன். எனினும், இந்த விளையாட்டு வீராங்கணைகளின் உடைகள் தேவைக்கு மேல் குறைவாகவும் வெளிப்பாடாகவும் (revealing) உள்ளன என்பதே நமது கருத்தாக இதுகாறும் இருந்து வந்துள்ளது. வேர்க்கிறது என்பதற்காக ‘இப்படி’ உடை யணியத் தேவை இல்லை. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் முழு ஆடை அணியும்போது பெண்களின் விளையாட்டுகளில் பலவற்றிலும் அரைகுறை ஆடை ஏனாம் ?

சில ஆண்டுகளுக்கு முன்னால் பெண்களின் ஒரு பிரபல ஆங்கில இதழில் பெண்களில் வாலிபால் ஆட்டத்துக்கு மட்டும் ஆண்களின் கூட்டம் அலை மோதுவதாகவும், ஆனால் அவர்களில் பலரிடமிருந்து கண்ணியக் குறைவான விமரிசனக் கூச்சல்கள் கிளம்பி வருவதாகவும் மனம் கசந்து அதன் ஆசிரியை எழுதி யிருந்தார். ஆண்களைத் திட்டி யிருந்தார். நாம் பெண்ணுரிமைவாதிதான். ஆனால், அந்த ஆசிரியை ஆண்களைச் சாடியதில் நமக்கு உடன்பாடு இல்லை. பெண்கள் கண்ணியமான உடைகளை அணியும் போதே அவர்களுக்கு உரிய மரியாதையைப் பல ஆண்கள் தருவதில்லை. கண்ணியக் குறைவான ஆடைகளில் அவர்களைக் காணும் எந்த ஆண்தான் வாயை (சமயங்களில் கையையும்) வைத்துக்கொண்டு சும்மா இருப்பான் ? ஆண்களின் பிறப்பு இயல்பான – பரம்பரை பரம்பரையாக ஊறிப் போயிருக்கும் – இந்த மனப் பான்மைக்குப் பெண்கள் தங்கள் கண்ணியக் குறைவின் மூலம் மேலும் தூப தீபம் வேறு காட்டலாகுமா என்பதே நமது கேள்வி.

கிளர்ச்சி யூட்டும் வாசகங்களும், தரக்குறைவான வாசகங்களும் அமைந்த பனியன்களில் இப்போதெல்லாம் சில பெண்கள் தென்படத் தொடங்கி யுள்ளார்கள். இது முறைதானா ? பலவீனம் நிறைந்த ஆண்களைச் சீண்டுவதாகாதா ? அப்புறம், அவன் தன் மீது வேண்டுமென்றே இடித்தான் என்றோ, கண்ணியமற்ற விமரிசனச் சொற்களை வீசினான் என்றோ புகார் செய்வதிலோ, அல்லது முகம் சுழிப்பதிலோ என்ன அர்த்தமோ புத்திசாலித்தனமோ இருக்கிறது ?

துப்பட்டா அணிய வேண்டும் என்பதற்கு நான் கூறும் காரணங்கள் நகைப்புக்கு உரியன என நினைக்கும் இவரது நகைப்பே எமக்கு நகைப்புக்கு உரியதாய்த் தோன்றுகிறது. இதற்கு இவர் கூறும் உதாரணம் இன்னும் அதிக நகைப்புக்கு நம்மை உட்படுத்துகிறது. ‘நாட்டில் திருடர் பயம் அதிகம், பாதுகாப்பில்லை என்பதற்காக யாரும் பர்ஸ் வைத்துக்கொள்ளக் கூடாது, ரூபாய் நோட்டுகளைக் கொண்டு செல்லக் கூடாது’ என்று கூறுவது போல் நாம் எழுதியுள்ளோமாம்.

நாம் குருமூர்த்தியை ( இவரது கருத்தின்படி) 50% ஆதரிப்பது போன்றே இவரது இந்தக் கருத்தையும் 50% ஆதரிக்கிறோம். திருடர்களுக்குப் பயந்து ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்துச் செல்லாமல் இருக்க முடியாதுதான். இவர் சொல்லுவது ரொம்பவே சரிதான்.

ஆனால், விசிதா அவர்களே, ரூபாய் நோட்டுகளைத் திருடர்களின் பார்வையில் படும் படியாக, ‘இதோ பார். என்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது பார்!’ என்று அவர்கள் கவனிக்கும் வண்ணமாக அவற்றைப் பாதுகாப்பற்ற முறையில் வெறும் கைகளில் விரித்துவைத்துக்கொண்டா போகிறோம் ? (Dear friend! Do we flaunt the rupee notes and invite trouble from thieves ?) நீங்களே சொல்லியுள்ளது போல் பர்சில்தானே பாதுகாப்பாக ’மூடி, மறைத்து’ வைத்துக்கொள்ளுகிறோம்! அதிலும், அந்தப் பர்சைக்கூட ஒரு கைப்பைக்குள் – அதிலும் அதனுள் இருக்கும் ஜிப் வைத்த உள் அறைக்குள் – கூடப் பலர் இன்னும் அதிகப் பாதுகாப்போாடு வைத்துக்கொள்ளுகிறோமே! இதை யோசித்திருந்தால், இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருப்பீர்களா ? எனவே, நாலு பேர் பார்வையில் பட்டு அவர்களுக்குத் திருடும் நோக்கத்தை ஏற்படுத்தாத முறையில் பர்சுக்குள் பணத்தைப் பாதுகாப்பாக மறைத்து வைத்துக்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம் என்பது எவ்வாறு சரியானதோ – நன்மை பயப்பதோ – அவ்வாறேதான் ஒரு பெண் தன் அங்க அவயவங்களைக் கவர்ச்சிகரமாய் வெளிப்பாடான ஆடைகளின் வாயிலாக வெளிக்காட்டி ஆண்களின் வெறிக் கண்களுக்குத் தீனி போடாமல் இருப்பதும்!

பிரச்சினை செய்யும் ஆண்களுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டியதுதான். அதற்குப் பெண்கள் கராத்தே கட்டாயமாய்க் கற்க வேண்டும். பள்ளியிலேயே இது பாடத்த்திட்டத்தில் சேர்க்கப்பட ணே¢டும் என்பது நமது வெகு நாளைய கருத்தாகும். இக்கருத்தை வலியுறுத்த வாய்ப்பளித்த விசிதாவுக்கு நன்றி.

ஆண்களின் கண்ணோட்டத்திலும் மனோபாவங்களிலும் மாற்றம் வர வேண்டும்தான். ஆனால் அது (இப்போதைக்கு) சாத்தியம் என்று தோன்றவில்லை. ‘அவர்கள் மாறுவார்கள்’ என்பதே கேள்விக்குரியதுதான். திரெளபதியைத் துகிலுரித்துச் சிறுமைப்படுத்திய ஆணின் மனோபாவம் இன்னும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஒரு பெண் ஓர் ஆணின் தவற்றுக்காக அவனிடம் நியாயமான முறையிலேயே வாக்குவாதமோ சண்டையோ செய்தாலும் கூட, அவன் அவளுக்கு ஒரு தோதான நேரத்தில் அப்படித்தான் கெடுதி செய்து பழி தீர்த்துக்கொள்ளுகிறான். ஆணின் இம்மனப் பான்மை மாறாத வரையில் பெண் பக்குவத்தோடு நடந்து தன்னைக் காத்துக்கொள்ளுவதே அறிவுடைமை என்பதே நமது கருத்து. அதை விடுத்து, ‘ என் உடை என் சொந்த விஷயம்’ என்று வீம்பாய்ப் பேசும் அதி (அ)நாகரிகப் பெண் நாகரிகம் கற்காத ஆண்களிடம் சிக்கி அவதிபட வேண்டியதுதான். அதைப் பற்றித் தங்களுக்குப் பரவாயில்லை என்று நினைக்கும் பெண்களுக்காக நான் எழுதுவதில்லை. அதைத் தவிர்க்கவிரும்பும் பெரும்பான்மைப் பெண்களுக்காகவே எனது கட்டுரை.

இது ஆண்-பெண் சமத்துவப் பிரச்சினையே அன்று, விசிதா அவர்களே! பெண்கள் ஆண்களை விடவும் (பல அம்சங்களிலும்) உயர்ந்தவர்கள் என்பது நமது கருத்து. எனவே நாம் உயர்ந்தவர்களாகவே இருப்போம். சமத்துவத்தின் பெயரால் தாழ வேண்டாம்!

9.12.2004 திண்ணையில், புகை பிடித்தல், குடித்தல் ஆகியவை தனி நபர் தெரிவு என்று இவர் கூறுகிறார். ரொம்பவும் சரி என்றே வைத்துக்கொள்ளுவோம். ஆனால், குடிப்பது தனி மனித உரிமை என்று நினைத்துக் குடிக்கும் பெண் ‘தனி’யாகவே இருந்துவிடுதல் நலம். ஏனெனில் அவள் பெறும் குழந்தைகளையும் அது பாதிக்கிறது என்று மருத்துவ ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. புகை பிடித்தல், புகையிலை போடுதல் போன்றவை உடல் நலத்துக்குத் தீங்கு பயப்பவை என்றாலும், ஒரு பெண்ணோ, ஆணோ, ‘

என் உடல் என்னுடையது’ எனும் உரிமையில் ‘எதை வேண்டுமானாலும் நான் உட்கொள்ளுவேன்’ என்று சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால், கருவுற்றிருக்கும் பெண் குடிப்பதும் புகை பிடிப்பதும் அவள் வயிற்றிலுள்ள குழந்தையைப் பாதிக்கும் என்பது நினைவிருக்கட்டும்!

இக்கருத்துகள் போலிப் பெண்ணுரிமைவாதத்தின் வெளிப்பாடு என்னும் இவரது கருத்து இவருக்குச் சொந்தமானது. அதில் தலையிட நமக்கு விருப்பமில்லை. தீமை பயப்பனவற்றை நவ நாகரிகத்தின் பெயரால் பிடித்துக்கொண்டு தொங்குவதை விட, இப்படி ஒரு பழமைவாதியாக (conservative) வே இருந்துவிட்டுப் போகிறேனே! இது பற்றிய வெட்கம் எனக்கு இல்லை. மாறாக இதில் எனக்குப் பெருமையே!

jothigirija@hotmail.com / jothigirija@vsnl.net

Series Navigation