கடிதங்கள் – ஜனவரி 15,2004

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

நாகூர் ரூமி – சூர்யா – சண்முகசுந்தரம் – சோதிப் பிரகாசம் -நரேந்திரன் – K.ரவி ஸ்ரீநிவாஸ் – கலவை வெங்கட் – அரவிந்தன் நீலகண்டன்


பித்தன் அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பதில் : நாகூர் ரூமி

———————————————————————————–

முஸ்லிம் பெண்களை தலையில் துண்டு போடச்சொல்லி கட்டாயப்படுத்துவதாக பித்தன் எழுதியிருந்தார். ‘மார்க்கத்தில் கட்டாயம் எதுவுமே இல்லை ‘(லா இக்ராஹ ஃபித்தீனி) என்று திருக்குர்ஆனே கூறுகிறது. சட்டங்கள் உண்டு. ஆனால் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு நடைமுறை வேறாக இருக்கலாம். இது உலகத்திலுள்ள அத்தனை சமுதாயங்களிலும் உள்ள பொதுவான பிரச்சனைதான். இஸ்லாமிய சமுதாய நடைமுறையில் பெண்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்படுமானால் அதைக் களையப்பாடுபடுவது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாக இருக்கும்.

ஆனால் கொள்கையிலும் கோட்பாட்டிலும் எந்த பிரச்சனையுமில்லை. இஸ்லாமிய வேதம் வற்புறுத்தலுக்கும் வேறுபாட்டுக்கும் இடமளிக்கவில்லை. ஆனால் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கற்பனை செய்து கொள்பவர்களிடம் இந்த ஆரோக்கியமான அடிப்படை இருக்கிறதா என்று நண்பர்கள் யோசிக்கவேண்டும்.

தலையில் துண்டு போடும் முஸ்லிம் பெண்கள் ரொம்பவும் விரும்பியே அப்படி செய்கிறார்கள். அதை மரியாதையாகவும் அழகாகவும் நினைக்கிறார்கள். வேண்டுமானால் அவர்களிடமே கேட்டுப்பாருங்கள். சில ஊர்களில் கருப்பு நிறத்தில் ‘புர்கா ‘ என்று சொல்லப்படும் மேலாடை ஒன்று அணிவார்கள். நாகூர் நாகை காரைக்கால் பக்கம் வெள்ளை நிறத்தில் ‘துப்பட்டி ‘ என்று ஒன்று அணிவார்கள். கீழக்கரை திருநெல்வேலி, மதுரை கோவை பக்கமெல்லாம் முஸ்லிம் பெண்கள் இப்படி பிரத்தியேகமாக எதுவும் அணிவதில்லை. இஸ்லாமிய பெண்கள் கண்ணியமான முறையில் உடை அணியவேண்டும். சட்டம் அவ்வளவுதான் சொல்கிறது. கண்ணியத்திற்கான வரையறையரைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பது காலவிரயம்.

பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டும் என்று எந்த முஸ்லிம் பெண்கள் இயக்கத்தினர் கொடி பிடித்தார்கள் ? சொல்வதற்கே அவசியமில்லாத, வெளிப்படையான, பகுத்தறிவுள்ள எல்லாருக்கும் உடனே புரிந்துவிடுகின்ற காரணங்களினால்தான் ஆண்கள் கூடுகின்ற இடங்கள் எல்லாவற்றுக்கும் பெண்கள் போகத்தேவையில்லை என்று உள்ளது. பெண்கள்மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால் ஆண்களின் கண்களைத்தான் நம்புவதற்கில்லை…! Prevention is better than cure அல்லவா ?

இஸ்லாத்தில் பெண்ணை இதைச் செய் என்று சொன்னாலும் அதைச் செய்ய வேண்டாமென்று சொன்னாலும் இரண்டுமே பெண்களின் கண்ணியம் கருதித்தான்.

ஹெச்.ஜி.ரசூலின் கவிதைகள் பற்றி விவாதிக்கத் தேவையில்லை. அவரே சொன்னதையெல்லாம் வாபஸ் பெற்றுக்கொண்டு ஜமாஅத்தோடு ஒன்றிவிட்டார்! (நான் ஏற்கனவே விபரமாக மைலாஞ்சி பற்றி எழுதியுள்ளேன்.படித்திருக்கலாம்.) சுமைய்யா என்ற ஒரு வயதான பெண்மணி முஸ்லிமானார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை நிர்வாணமாக்கி அவரது குறியில் அம்பெய்து கொன்ற சமுதாயம் அரேபியர்களுடையது. அது கடந்தகால வரலாறு. ஒரு பெண் பி.ஸி. அல்லது சப் இன்ஸ்பெக்டர் என்றாலும், பணி முடிந்து போகும்போது அவளின் கணவர் வந்துதான் பாதுகாப்பாக அழைத்துப் போகிறார். இது இந்தக்கால வரலாறு. இந்த லட்சணத்தில் ஏன் ஒரு பெண் நபி வரவில்லை என்று கேள்வி வேறு ?! பெண்கள் என்று சொல்லிவிட்டாலே அது பெண்ணியச் சிந்தனையாகிவிடாது. ரசூல்தான் சிந்திக்கவில்லை. மற்றவர்களாவது சிந்திக்கவும்.

அன்புடன்

நாகூர் ரூமி

ruminagore@yahoo.com


கமல்ஹாசனின் விருமாண்டி பார்க்க முடிந்தது, ப்ரிவியூவாக. நல்ல ஒளிப்பதிவு, எல்லா ஃப்ரேமிலும் கமலே வரும் மிகைநடிப்பு. எக்கச்சக்கமான காதல் காட்சிகள் . குறிப்பிடவேண்டியவர் பசுபதி .சிறு காட்சிகளே என்றாலும் அற்புதமான நடிகர் என்பதை உணரமுடிந்தது. மற்றபடி இப்போது பேசுவது சரியல்ல. படம் ஓடுவதற்கான வாய்ப்புகள் குறைவே. கவனமாக எடுக்கப்பட்ட சாதிப்படம். முக்கியமாக சொல்லவேண்டியது சி சு செல்லப்பாவின் வாடிவாசல் பலவகைகளில் பயன்படுத்தப்பட்டு இருப்பது. ஆனால் credit அளிக்கப்படவில்லை. இது மிக நெருடியது.

சூர்யா

suurayaa@rediffmail.com


ஆசிரியருக்கு கடிதம்

ஜெயமோகனின் கட்டுரைக்கடிதம் கண்டேன். தமிழில் இன்றுவரை தொடர்ந்து செயல்பட்ட அனைவரைப்பற்றியும் இம்மாதிரி அவதூறுகள் சொல்லப்பட்டுள்லன. சி சு செல்லப்பாவுக்கும் க நா சுவுக்கும் வெங்கட சாமிநாதனுக்கும் சி ஐ ஏ பணம் வந்து குவிவதாக எழுதினார்கள். திறனாய்வுக் கருத்துக்களை தன் தளத்திலே எதிர்கொள்ள முடியாதவர்களால் இந்த குற்றச்சாட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒருவன் சொல்லும் கருத்தை எதிர்கொள்ள இரு வழிகள் உள்லன. நாம் நேர்மையாக இருந்தால் அவற்றை மறு கருத்தை சொல்லலாம். நமக்கு நேர்மை தட்டுப்பாடு என்றால் அக்கருத்தை சொன்னவனும் நேஎர்மையில்லாதவன் என்று முத்திரை குத்தலாம். ஜெயமோகனின் படைப்புகள் உக்கிரமானவை. விமரிசனங்கள் நேர்மையும் கூர்மையும் உடையவை. அது அனைவருக்கும் தெரியும். ஆகவே எவருக்குமே அவரை புறக்கணிக்க முடியவில்லை. விளைவாக இம்மாதிரி அவதூறுகள் எழுப்ப படுகின்றன. இவற்றை அவர் பொருட்படுத்த கூடாது. தன் பணியிலேயே கவனம் செலுத்தி இயங்கிடவேண்டும். நான் அவரது ஆக்கங்களை எட்டு வருடங்களாக கூர்ந்து படித்துவருபவன்ம். இதுவரை ஒருகடிதம் எழுதியது இல்லை. இதை எழுதுவதற்கு காரணம் இந்த குப்பைகூளங்களால் அவர் சோர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவேயாகும்

சண்முகசுந்தரம்

shanmukasuntharam1960@rediffmail.com


பாவம் ஜெயமோகன்!

சோதிப் பிரகாசம்

ஜெயமோகனின் ‘காடு ‘ கதை பற்றிய வேதசகாயகுமாரின் கருத்துகளைப் படிக்கின்ற பொழுது, ஜெய மோகனுக்காகப் பரிதாபப் படுவதா ? அல்லது வேதசகாயகுமாருக்காகப் பரிதாபப் படுவதா ? என்று நமக்குப்

புரிய வில்லை. ஜெயமோகனின் எதிர்ப்பாளர்களோ இவர்கள் இருவரையும் விடப் பரிதாபத்துக்கு உரியவர்க ளாக நமக்குத் தோன்றுகிறார்கள்.

ஜெயமோகனின் எதிர்ப்பாளர்கள் என்றாலும் சரி அல்லது ஆதரவாளர்கள் என்றாலும் சரி, அவரது எழுத்துகளைக் கண்டு நன்றாக இவர்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள் என்பது மட்டும் மிகவும் நன்றாக

நமக்குத் தெரிந்து விடுகிறது. ஆனால், ஏன் என்பது மட்டும்தான் நமக்குப் புரிய வில்லை.

அதே நேரத்தில், மார்க்…ிய வாதிகளாகத் தங்களைக் கருதிக் கொண்டு வருகின்ற மேலாண்மைப்

பொன்னுசாமி போன்றவர்கள் கூட, ஜெயமோகனைக் கண்டு மிரண்டு போய் நின்று கொண்டு இருப்பதுதான் இதில் வேடிக்கை!

எதிர்க் கருத்துகளை எதிர் கொள்வதற்கு எந்த நேரத்திலும் எந்த ஒரு மார்க்…ிய வாதியும் தயங் குவது இல்லை. ஆனால், எதிர்க் கருத்துகளுக்கு எதிராக வசை மொழிகளை மட்டும் உதிர்த்துத் தள்ளிக் கொண்டு இவர்கள் வருவதனை நாம் காண்கின்ற பொழுது, ஓர் உண்மை நமக்கு வெட்ட வெளிச்சம் ஆகி விடுகிறது; அதாவது, இவர்கள் மார்க்…ிய வாதிகள் அல்லர், மாறாக, ஸ்தாலினி… வாதிகள் என்று!

அனுபவ அறிவு நிலையின் உச்சக் கட்டமான பகுத்தறிவினைக் கீறிப் பிளந்து, முரணியக்க(dialecti- cal) அறிவு நிலையினை நீந்திக் கடந்து, காரண அறிவு நிலையினை நாம் எய்துகின்ற பொழுதுதான் கார்ல்

மார்க்ஸ் போன்றோரின் நூல்களை நாம் புரிந்து கொள்ள முடியும் என்பதை மார்க்…ிய வாதிகள் அறிவர். ஆனால், நமது பொன்னுசாமி போன்றவர்களோ, வெறும் கதைகளைக் கூட படித்துப் புரிந்து கொள்ள முடியாமல் சித்தம் கலங்கிப் போய் விடுகிறார்கள்.

பகுத்தறிவு நிலையில் எழுதப் படுவனதாம் கதைகளும் கவிதைகளும்! ஜெயமோகனின் கதைகளுக்கும்

இது பொருந்தும். எனினும், சில சமயங்களில் முரணியக்க அறிவுக்குள் புகுந்து, காரண அறிவு நிலையினைச் சற்றே தொட்டுத் திரும்பி வந்து, அவர் நெய்து காட்டுகின்ற மாயங்களைக் கண்டு பலரும் மயங்கிப் போய் விடுகிறார்கள். கார்ல் மார்க்ை…த் தொட்டுக் கூட பார்த்து இருக்க முடியாத ஒரு ஸ்தாலினி… வாதியாக இருப்பதனால்தான் நமது பொன்னுசாமியும் இப்படி மயங்கிப் போய் விடுகிறார்; தமது இயலாமை

யினை மூடி மறைப்பதற்காக வசை மொழிகளுக்குள் தஞ்சம் புகுந்தும் விடுகிறார்!

ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம் ‘ கதையினை மேலாண்மைப் பொன்னுசாமி படித்தாராம்! அதில் அவர்

கண்டது எல்லாம் ஹிந்துத்வம்தானாம்! உற்றுக் கூட விஷ்ணு புரத்திற்குள் பொன்னுசாமி பார்த்தது இல்லை

என்பதற்கு இதுதான் சரியான சாட்சி என்பது கூட அவருக்குப் புரிய வில்லை என்பதுதான் இதில் வேதனை!

ஏனென்றால், பண்ணையச் சமுதாயத்தையும் மன்னர் ஆட்சியையும் மத மூடங்களையும் பார்ப்பனச் சதிகளையும் கிண்டல் செய்து எழுதப் பட்டு இருப்பதுதான் விஷ்ணுபுரம்! இறுதியில் அதில் வெற்றி பெறுவதோ புத்த மதம்! ஆனாலும் நமது பொன்னுசாமிக்கோ அதில் தெரிவது ஹிந்துத்வம்! அறிவாண்மை நாணயம் எதுவும் எழுத்தாளர்களுக்குத் தேவை இல்லை போலும்!

சிவகாமியின் ‘பழயன கழிதலும்… ‘ கதையையும் ஜெயமோகனின் ‘காடு ‘ கதையையும் ஒப்பிட்டு, முன் னதன் நீட்சிதான் பின்னது என்று நான் பேசினால், காலச் சுவடு அய்யனார் கேட்கிறார்–அதற்கும் இதற்கும்

என்ன சம்பந்தம் என்று! கூடவே அவர் உணர்த்தவும் செய்கிறார்–சிவகாமி மகிழ்ந்திட வேண்டும் என்பதற் காக அப்படி நான் பேசி இருக்கக் கூடும் என்று! ஒரு பெண்ணின் மகிழ்ச்சியில் புலப்படுகின்ற காட்சிகள் எல்லாம் அவர் நெஞ்சில் விரிந்து இருந்தன போலும்!

காலச் சுவடு அய்யனார்தாம் அப்படி என்றால் ஜெயமோகனின் ஆர்ப்பரிப்பு ஆதரவாளரான வேதசகாய குமாரும் ‘காடு ‘ கதையைப் புரிந்து கொண்டு இருப்பதாக நமக்குத் தெரிய வில்லை.

அந்தக் காலத்துக் குறிஞ்சிக் காடுகளைப் பற்றி அந்தக் காலத்துக் கவிஞர்கள் பாடிய அந்தக் காலத் துப் பாடல்கள் இந்தக் காலத்துக் கதை நாயகர்களுக்கு இந்தக் காலத்து மலைக் காடுகளைக் கண்ட உடன் நினைவுக்கு வரலாம். ஆனால், இந்தக் காலத்துக் காடுகளோ அழிந்து கொண்டு வருபவை!

அந்தக் காலத்துக் குறிஞ்சிக் காடுகளில் கட்டற்ற காமம் என்பது ஒரு மெய்மையாக இருந்து இருக் கலாம்! ஆனால், இந்தக் காலத்து மலைக் காடுகளில் ஜெயமோகன் காட்டி இருப்பதோ திருட்டுக் காமம்!

அதே நேரத்தில், ‘காடு ‘ கதையின் முழு வீச்சும் சாதிச் சமுதாயத்தின் போலித் தனத்தைப் பற்றியது;

அதன் அவலத்தையும் அசிங்கத்தையும் பற்றியது; என்பதுதான் இங்கே முக்கியம். சாதிச் சமுதாயத்தின் அவலங்களைச் சித்தரித்துக் காட் டுவது ‘பழயன கழிதலும்… ‘ என்றால், சாதிச் சமுதாயத்தை இழிவு படுத்துவது ‘காடு ‘!

எடுத்துக் காட்டாக, புலையர் பெண்களைப் புணர்ந்து விட்டு வந்தால்தான் பயிர் செழிக்கும் என்று ஒரு சில நாயர்கள் கூறுவதைக் கேட்கின்ற ஜெயமோகனின் கதை நாயகன் கூறுகிறான்–நாயர் பெண் களைப் புலையர்கள் புணர்ந்தாலும் பயிர் செழிக்கும் என்று!

ஆனால், வேதசகாயகுமாருக்கோ ‘காடு ‘ கதையில் வெறும் காமமும் குறிஞ்சிக் காட்சிகளும்தாம் தெரிகின்றன!

பாவம், ஜெயமோகன்!

அவரது எதிர்ப்பாளர்கள் மட்டுமா, ஆதரவாளர்கள் கூட அவரது எழுத்துகளைப் புரிந்து கொள்ள

வில்லை என்றுதான் நாம் சொல்ல வேண்டும். எனினும், ‘வரலாற்றின் முரண் இயக்கத்தில் ‘ இணைக்கப் பட்டு உள்ள ‘ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல்: ஓர் அலசல் ‘ என்னும் கட்டுரையில் அவர்

புரிந்து கொள்ளப் பட்டு இருக்கிறார் என்பதற்காக அவர் மகிழ்ந்து கொள்ளலாம்.

சோதிப் பிரகாசம்

sothipiragasam@yahoo.co.in


பெருமதிப்பிற்குரிய ஐயா சங்கரபாண்டி அவர்களுக்கு,

வணக்கம்.

எனது ‘வலுக்கும் எதிர்ப்பு ‘ கட்டுரையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்தி படிக்க வேண்டும் என்று கூறியதைச் சாடி இருந்தீர்கள். என் கட்டுரைகள் வாயிலாக மற்றவர்களை நான் விமரிசிப்பது போல, என்னையும் விமரிசிக்க உங்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு. அதற்குப் பதிலளிக்க வேண்டிய கடமையும் எனக்கு உண்டு. என்னால் இயன்றவரை உங்கள் கேள்வி(களு)க்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

‘இந்தக் கேள்வியை யாரேனும் கேட்க மாட்டார்களா ‘ என்ற ஆதங்கம் பல நாட்களாகவே என் மனதில் இருந்தே உண்மை. உங்கள் மூலமாக அந்தக் கேள்வி எழுப்பப் பட்டது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. வரவேற்கிறேன்.

முதலில், நீங்கள் சொன்ன ‘துக்ளக் ‘ கும்பல் பற்றி எனக்குத் தெரியாது. அவர்கள் யாராக வேண்டுமானும் இருந்து விட்டுப் போகட்டும். அது பற்றி எனக்குக் கவலையில்லை. இந்தியைத் திணித்து விட்டு, வழக்கொழிந்து போன சமஸ்கிருதத்தைக் கொண்டு வந்து, அதன் மூலம் தங்களின் மேலாண்மையை இந்தியா முழுவது நிறுவவேண்டும் என்பதுதான் ஒரு சாராரின் நோக்கம். எனவே அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது. முழு மூச்சாக எதிர்க்க வேண்டும் என்ற Ideology-இன் பாற் பட்டதே உங்கள் கருத்து.

இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் அது போலெல்லாம் (சமஸ்கிருதத் திணிப்பு) நடக்குமா, நடக்க விடுவார்களா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே. அப்படியே முயன்றாலும், என்னை விடப் பலமடங்கு அறிவிலும், அனுபவத்திலும் சிறந்த உங்கள் போன்றவர்கள் அதுபோல நடக்க அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் உங்களுக்குத் தோள் கொடுக்க என் போன்றவர்கள் தயாராகவே இருப்பார்கள். எனவே அது பற்றிக் கவலை வேண்டாம்.

நான் தமிழ்நாட்டு இளைஞர்களை இந்தி படிக்கச் சொல்வது Practicality-இன் பாற் பட்டது. எனது வாதத்தையும் அதனடிப்படையிலேயே விளக்க முற்படுகிறேன்.

தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்தி படிப்பதால் அவர்களுக்கு வேலை கிடைக்கும் என்று சொல்வது தவறு என்றும், சமூக, பொருளாதார வளர்ச்சிதான் சரியானது என்றும் கூறியிருந்தீர்கள். மிகச் சரியான வாதம். அதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் உயர் கல்வி கற்றவர்கள் அதிகம். எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும், இறைவன் அருளால் தமிழ்நாடு இன்னும் ‘கல்வி சிறந்த தமிழ்நாடுதான் ‘. அங்ஙனம் தமிழ்நாட்டில் உயர் கல்வி கற்ற ஒரு இளைஞருக்கு, அவரின் கல்வித்தகுதிக்குரிய வேலை தமிழ்நாட்டிலேயே அமைந்து விட்டால் அதை விட வேறு மகிழ்ச்சியான விஷயம் வேறில்லை. அவரிடம் சென்று ‘இந்தி படியுங்கள் ‘ என்று சொல்வது கேலிக்குரியதாகும். ஒத்துக் கொள்கிறேன். அப்படிப் பட்ட ஒரு பாக்கியம் எத்தனை படித்த தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கிடைக்கிறது ?

பரந்த இந்தியாவில், தமிழ்நாடு ஒரு மாநிலம். இயற்கை வளமும், தொழில் வளமும் குறைந்த ஒரு மாநிலம். நம்மிடம் இருக்கும் ஒரே வளம் நமது கல்வி மட்டும்தான். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளும், இன்ஜினியர்களும் நமது பல்கலைக் கழகங்களில் பயின்று வெளிவருகிறார்கள். அத்தனை பேர்களுக்கும், அவரவர் கல்வித்தகுதிக்குரிய வேலை தமிழ்நாட்டிலேயே கிடைத்து விட்டால் இந்த கடிதத்திற்கே வேலையில்லை.

ஆனால், உண்மை நிலவரம் வேறுவிதமாக இருக்கிறது. நாற்பது வயது தாண்டியும் வேலை கிடைக்காத பட்டதாரிகளும், படித்து விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக உடலுழைப்பை மறுத்து வெட்டியாகப் பொழுது போக்குபவர்களும் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கிறார்கள் என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.

இருக்கும் வேலைகளுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. பொதுவாக அரசு வேலைகள்தான் (ஆசிரியர்கள், கிளர்க்குகள் போன்றவை) அதிகம். அது கிடைக்க நமது இளைஞர்கள் படும்பாடு சொல்லி மாளாது. நாயினும் கடையர்களான அரசியல்வாதிகளின் கால்களை நக்க வேண்டியதும், அவர்களிடம் கையூட்டுக் கொடுத்துக் கையேந்துவதும் கண்கூடாக நடப்பதை நீங்கள் அறிவீர்கள். எனது குடும்பத்திலேயே இதற்கு உதாரணம் இருக்கிறது.

தமிழர்கள் தொழில் முனைபவர்களல்ல. அவர்களுக்கு வியாபாரம் மறந்து வெகுகாலமாகிறது. ஆனால் வட இந்தியர்கள் நமக்கு நேரெதிரானவர்கள். அவர்களிடம் கல்வி குறைவாக இருந்தாலும், வணிகம் செய்பவர்களாக, தொழில் அதிபர்களாக இருக்கிறார்கள். குஜராத், மகாராஷ்ட்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலத்தவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஒரு டாடா, அம்பானி, பிர்லா போல் எத்தனை தமிழர்கள் மிகப் பெரும் வணிக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் வைத்திருக்கிறார்கள் ? (அரசியல் வியாபாரிகளைக் கணக்கில் சேர்த்துக் கொள்ளாதீர்கள்).

வட இந்தியத் தொழிலதிபர்கள், தென்னிந்தியர்களின் மீது – குறிப்பாகத் தமிழர்களின் மீது – அவர்களின் நேர்மையின் மீது, கடின உழைப்பின் மீது மிக்க நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதை நான் கண் கூடாகக் கண்டிருக்கிறேன், மும்பையில் இருக்கையில். தென்னிந்தியர்களை மிக விருப்பத்துடன் தேர்ந்தெடுத்து அவர்கள் வேலை கொடுப்பதையும் நான் கண்டிருக்கிறேன்.

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லியாக வேண்டும். நான் மும்பையில் வேலை செய்து கொண்டிருந்த போது, என்னுடன் Textile Technology படித்த தமிழ்நாட்டு நண்பர் ஒருவர் தங்கியிருந்தார். மிகுந்த புத்தி கூர்மையுள்ளவர். மும்பை மற்றும் குஜராத்தில் textile மில்கள் அதிகம். எனவே அதில் வேலை செய்யத் தகுதியுள்ளவர்களுக்கு டிமாண்டும் அதிகம். இருப்பினும் இந்த நண்பருக்கு வேலை கிடைப்பது சிறிது சிரமாகவே இருந்தது. வேலை அளிப்பதில் ஆர்வம் காட்டிய ஒரு குஜராத்தி மில் முதலாளி திடாரென்று மனதை மாற்றிக் கொண்டார். மிகவும் சிரமப்பட்டுக் காரணத்தை விசாரித்த போதுதான் விவரம் புரிந்தது. அந்த குஜராத்திக்கு முதலாளிக்கு ஆங்கிலம் தெரியாது. என் நண்பருக்கோ இந்தி தெரியாது. பிறகு எப்படி அவரிடம் நான் வேலை வாங்குவது ? என்றார் அந்த குஜராத்திக்காரர். மிகவும் இடிந்து போனார் எனது நண்பர். அவரின் பெற்றோருக்கு அவர்தான் ஒரே மகன். திருமணத்திற்குத் தயாராக இரண்டு சகோதரிகள். அன்று அவர் அழுத அழுகை இன்றும் என் கண்ணில் நிற்கிறது.

இந்தி படிப்பதும், படிக்காமலிருப்பதும் அவரவர் விருப்பம். நான் இந்தி படியுங்கள் என்று சொல்வது, தமிழை மறந்து விடுங்கள் என்று சொல்வதாக ஆகாது. இந்தி தேவலோக மொழியுமல்ல. இந்தி படிப்பதனால் என் கல்விக்கேற்றே வேலை கிடைக்கும், எனது வறுமை ஒழியும் என்றால் அதைக் கற்றுக் கொள்வதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்தி படிப்பதனால் தமிழ் அழிந்து விடாது என்பதை பல முறை எழுதி இருக்கிறேன். நமது அண்டை மாநிலங்களான கேரளத்திலும், ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் இந்தி பள்ளியிலேயே கற்றுத் தரப்படுகிறது. அதனால் அவர்களின் மொழிகள் அழிந்துவிடவில்லை. அவர்களின் கலாச்சாரத் தனித்தன்மை சீர் கெட்டு விடவில்லை. மாறாக, தமிழர்களை விடப் பல மடங்கு மொழியுணர்வும், தங்களது கலாச்சாரப் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றிய அறிவும் அவர்களுக்கு இருக்கிறது.

தமிழனிடம் தமிழில் பேசுவதையே கேவலாமாக நினைப்பவர்கள் நாம் என்பதை மறந்து விடாதீர்கள். ‘ஆங்கிலத்தில் பேசுபவனே அறிவாளி ‘ என்ற விசித்திரத் தாழ்வுமனப்பான்மை நமக்கு இருப்பதுவும் நீங்கள் அறிந்ததே.

நம்மைப் போலவே தொழில் வளம் குறைந்த கேரளத்து இளைஞர்களைப் பாருங்கள். நமது மாநில இளைஞர்களைப் போல படித்து முடித்ததும் அவர்கள் மாநிலத்திலேயே அடைந்து கிடைப்பதில்லை. வேலை நம்மைத் தேடிவரும் என்ற எண்ணத்துடன் அமர்ந்து இருப்பதில்லை. வேலை இருக்கும் இடங்களைத் தேடிப் போகிறார்கள். அவர்களுக்கு யாரும் வேலை ‘கொடுப்பதில்லை ‘. அவர்களே ‘எடுத்துக் ‘ கொள்கிறார்கள். கேரள இளைஞர்கள் மட்டுமல்ல. கேரளப் பெண்களும் அப்படியே. கல்வி அவர்களை முடக்கிப் போடவில்லை. ‘கேரளத்திலேயே நமக்கு வேலை கிடைக்கவில்லையே ‘ என்று அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பதும் இல்லை. துணிந்து புறப்பட்டு விடுகிறார்கள். அவர்களுக்கு இந்தியாவின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் இந்தி படிக்க, எழுதத் தெரிந்ததும் ஒரு காரணம்.

இந்தியும் அதன் கிளை மொழிகளும் (உர்து, பெங்காலி, குஜராத்தி, மராட்டி போன்றவை) தெற்காசியாவில் பரவலாகப் பேசப் படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் வளைகுடா நாடுகளில் கூட இந்தி பேசப்பட்டு, புரிந்து கொள்ளப் படுகிறது. இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்வதனால் நமது எல்லை விரிவடைகிறது. வேலை வாய்ப்பின் எல்லையைப் பெருக்க அது ஒரு கருவி. அவ்வளவுதான்.

இந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நம்மைச் சுற்றித் தேவையற்ற ஒரு பெரும் சுவற்றை எழுப்பிக் கொண்டோம். மொழிகள் மனிதர்களை இணைக்கும் பாலங்கள். தமிழைப் போல் எத்தனையோ கலைச் செல்வங்கள் மற்ற மொழிகளில் கொட்டிக் கிடக்கின்றன. நம்மில் எத்தனை பேருக்கு ப்ரேம் சந்த்-ஐயும், காண்டேகரையும், தாகூரையும் தெரியும் (தேசியகீதம் எழுதியவர் என்பதைத் தவிர) ? அதுபோலவே எத்தனை வட இந்தியர்களுக்கு பாரதியையும், திருவள்ளுவரையும் தெரியும் ? நமது உயரிய கலைப் படைப்புகளை வட இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பினை இழந்து விட்டோம்.

பல மொழிகள் தெரிந்த ஒருவரால்தான் நமக்கு ‘தகழி ‘ சிவசங்கரப் பிள்ளையும், ‘வைக்கம் ‘ முகமது பஷீரும், ஜக்காரியாவும் அறிமுகமானார்கள் என்பதை மறுக்க முடியுமா ?

தயவுசெய்து இனிமேலும் தமிழர்களை ஒரு குறுகிய வட்டத்தில் சிந்திக்க வைக்க நினைக்காதீர்கள். கடந்த நாற்பது ஆண்டுகளாக அதன் பலனை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் வருகிறீர்கள். ‘சீரிய சிந்தனையாளர்கள் ‘ என்று உங்கள் போன்றவர்களால் அறிமுகப் படுத்தப்பட்டு, உச்சத்தில் உட்காரவைக்கப் பட்டவர்களின் செயல்களைப் பாருங்கள். சாதி வெறியையும், மத வெறியையும் தங்களின் சுய நலத்திற்காகத் தூண்டி விட்டுக் கொண்டு ஆட்டம் ஆடுகின்ற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை, அவர்கள் சொல்வதை இனிமேலும் எங்களுக்கு உதாரணமாகக் காட்டாதீர்கள்.

அதிகாரமும், பணமும் உள்ளவனிடம் அஞ்சி, கூனிக் குறுகி அற்ப ஜந்துக்களைப் போல நடக்கும் தமிழ்நாட்டு மக்களையும், தரங்கெட்ட சினிமா நடிகர்களின் பின்னே ஓடும் இளைஞர்களையும், அரசியல்வாதி என்ற போர்வையில் உலவும் கிரிமினல்களையும், அதிகாரிகளின் அடக்குமுறைகளையும், கயமைத்தனங்களையும் கண்டு மனம் வெதும்பி இருக்கிறேன். இந்தக் காரணத்திற்காகவே, எனக்கு முன்பின் அறிமுகமில்லாத பாண்டிச்சேரியில் வீடுகட்டிக் குடியேறினேன். அங்கும் இது போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு அளவிற்கல்ல. பாரதியும், பாரதிதாசனும் சுவாசித்த பாண்டிச்சேரிக் காற்றைச் சுவாசித்தால் எனக்கும் சுதந்திரச் சிந்தனைகள் ஏற்படாதா என்ற நப்பாசையும் ஒரு காரணமே.

எழுதிக் கொண்டே போகலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. உங்கள் நேரத்தை வீணாக்க மனமில்லாததால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

நன்றி.

அன்புடன்,

நரேந்திரன்.

narenthiranps@yahoo.com


ஆசிரியருக்கு

திரு.மணி வேலுப் பிள்ளை சில கருத்துக்களையும்,பல பலனுள்ள தகவல்களையும் தந்துள்ளார்.அவருக்கு என்

நன்றிகள்.அவர் கடிதத்திற்கு இப்போது ஒரு விரிவான எதிர்வினையை தர இயலவில்லை.அவர் எழுதியுள்ளவற்றை கருத்தில் கொள்கிறேன்.கலைச்சொற்கள் குறித்து வேறோரு சந்தர்ப்பத்தில் எழுத நேர்கையில்

அவர் எழுதியவை குறித்து விரிவாக என் கருத்துக்களை குறிப்பிடுகிறேன்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

ravisrinivas@rediffmail.com


அன்புடைய பரிமளம்,

‘பாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில் ‘ என்ற எனது கட்டுரையை சார்ந்து தாங்கள் மடலில் கூறியதாவது: ‘அவரது நூலில் 18-ம் நூற்றாண்டு என இருப்பது கவனக் குறைவால் ஏற்பட்ட பிழையா ? ‘ என்று வினவியுள்ளீர்கள்.

பிழையல்ல. தரம்பால் அவர்களின் நூல் 18-ம் நூற்றாண்டு மற்றும் 19-ம் நூற்றாண்டின் முதல் 30 வருடங்களில் — அதாவது 130 ஆண்டுகள் — நடந்த ஆய்வுகளைத் தந்துள்ளார். 30-ஐ விட 100-தானே பெரிது ? எனவேதான் அவர் நூலில் 18-ம் நூற்றாண்டு என தலைப்பு. நான் எழுதிய ஆதாரங்களை நீங்கள் படித்துப் புரிந்திருந்தால், நான் சுட்டிக் காட்டிய புள்ளி விவரம் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தை சார்ந்தது என அறிந்திருப்பீர்கள். எனவேதான் எனது கட்டுரையில் 19-ம் நூற்றாண்டு என தலைப்பு.

தாங்கள் மேலும் கூறியதாவது: ‘கலவை வெங்கட் எடுத்துக் காட்டும் புள்ளி விவரங்கள் அனைத்தும் ஐரோப்பியர்களும், பாதிரியார்களும் நம் நாட்டுக்கு வருவதற்கு முன் உள்ள நிலையைக் கூறாமல் அவர்கள் வந்து இரு நூற்றாண்டுக்ளுக்கு மேல் உள்ள நிலையைக் காட்டுகின்றன. வெங்கட் சொந்த வலைக்குள் பந்தைப் புகுத்துவதாகத் தெரிகிறது. ‘

எனது கட்டுரையைப் படித்துப் புரிந்து பதில் எழுதுவது நலம். ஐரோப்பியர்களும், பாதிரியார்களும் நாட்டில் நுழைவதால் மட்டுமே நமது பாரம்பரியக் கல்வி அழிந்துவிடாது. அவர்கள் நமது பாரம்பரியக் கல்வி அழியும் விதமாகத் திட்டங்களை செயல் படுத்தியதாலேயே அழிந்தது. அங்ஙனம் அவர்கள் செயல் படுத்தியது மெகாலே வருகைக்குப் பின்னரே — அதாவது 1830-க்கு பிறகு. அதற்கான ஆதாரங்களையும் எனது கட்டுரையில் தந்துள்ளேன். மீண்டும் படிக்கவும்.

தாங்கள் மேலும் கூறியதாவது: ‘கடிகைகளில் பயின்ற மாணவர்களின் புள்ளி விவரம் பற்றி தரம்பால் ஏதேனும் கூறிய்ிருக்கிறாரா ? ‘

இல்லை. பிரிட்டிஷ்காரர்கள் கடிகைகளைப் பற்றி ஏதும் புள்ளி விவரம் தரவில்லை. கடிகைகள் பற்றி தனிக் கட்டுரை இயற்றுவேன். படிக்கவும். தாங்கள் மடலில் வைத்த மற்ற (குதர்க) வாதங்கள் எனது பதில் பெறும் தகுதிக்குரியனவல்ல.

இவண்,

கலவை வெங்கட்

history_judge@yahoo.com


யாரை மேற்கோள் காட்டுவேன் ?

-அதுவும் அவர்கள் Google-இல் இல்லாத போது ?

திரு.கார்த்திக்குடைய கருத்துக்கள் எனக்கு குழப்பத்தை தருகின்றன. ஏனெனில் நான் கூறாதவற்றை அவர் என்மீது திணிக்கிறார். சமஸ்கிருதத்தின் பாணினி இலக்கணத்தில் செயற்கைத்தன்மை மேலொங்கி நிற்பதனால் அதன் கட்டுமானத்தன்மை கணினியின் செயற்கை நுண்ணறிவுக்கு பயன்படும் என நான் கூறியதால் சமஸ்கிருதம் தமிழைவிட உயர்ந்த மொழி என ஆகிவிடுவதாக நான் எங்காவது கூறியுள்ளேனா ? அப்படி கூறியிருந்தால் அவர் மேல் கூறிய வாசகம் சரி. அப்படியில்லாதபோது நான் எதற்காக மேல் கூறிய வாசகத்தை ஒப்புக்கொள்கிறேன் என ஒப்புதல் வாக்குமூலம் கூற வேண்டும் என தெரியவில்லை. இதற்கு பதிலாக கார்த்திக் உலகம் உருண்டை என ஒப்புக்கொள்வீர்களா என்று கூட கேட்டிருக்கலாம். இரண்டிற்கும் ஒரே relevanceதான்.

மேலும் தெளிவாகவே சமஸ்கிருதம்தான் கணினிக்கு ஏற்ற மொழி எனக்கூறுவதை குறித்து ‘மிகைபடுத்தப்பட்ட பிரபலப்படுத்தலே திரு. நாக இளங்கோவன் சுட்டிக்காட்டியிருந்த தவறுகள் ‘ என்றே குறிப்பிட்டிருக்கிறேன். ஆக சமஸ்கிருதம் தமிழை விட உயர்ந்ததென்றோ அல்லது கணிதத்தை விட செயற்கைத்தன்மை கொண்டதென்றோ இவ்வாதத்தொடரில் நான் குறிப்பிட்டுள்ள ஒரு இடத்தையாவது கார்த்திக் சுட்டிக்காட்டினால் நல்லது. சமஸ்கிருதத்தை நாம் கற்க இதுவெல்லாம் காரணங்கள் என நான் கூறவில்லை. மாறாக சமஸ்கிருதத்தை நாம் கற்க வேண்டிய அவசியத்திற்கான காரணங்களாக நான் காண்பவை ஏற்கனவே நான் குறிப்பிட்ட பின்வரும் கருத்துக்கள்தான்: ‘பாரதத்தில் சமஸ்கிருதம் ஏதோ ஒரு வகுப்பினரது, அல்லது சாதியினரது அல்லது ஒரு மாகாணத்தைச் சார்ந்தவர்களது மொழி என்பது தவறானது. யானைபாகர்களும் சரி அந்தணர்களும் சரி அம்மொழியினை பயன்படுத்தியுள்ளனர். அம்மொழியின் மிகச்சிறந்த கவிஞன் காளிதாசன் எனும் சூத்திரன். அம்மொழியின் ஆதிகவி வான்மீகியான வனவாசி. திராவிடத்தைச் சார்ந்த சங்கரர், ராமானுஜர், நாகார்ஜுனர் ஆகியோரது பங்களிப்பினை பெற்ற மொழி அது. அது எந்த குறிப்பிட்ட சாதியினுடையவும் தனிச்சொத்து அல்ல. இந்நாட்டின் முழுமைத்துவம் வாய்ந்த சமுதாய விடுதலை இயக்கங்கள் சமஸ்கிருதத்தை மக்களிடம் கொண்டு சென்றவை. உதாரணமாக நாராயண குருதேவரின் இயக்கம். ‘ இந்நிலையில் நான் ஏன் திருமூலரை மேற்கோள் காட்டவில்லை அல்லது அருணகிரிநாதரை காட்டவில்லை எனும் கேள்வி ஏன் எழுந்தது என்பதும் தெரியவில்லை. திரு.கார்த்திக் சிறிதே சிரமம் எடுத்து திண்ணையில் பழைய கட்டுரைகளில் சென்று பார்ப்பாரெனில் சூழலியல் குறித்த எனது கட்டுரைத்தொடரின் முதல் கட்டுரையே நற்றிணைப்பாடலுடன் முற்றுப்பெறுவதை காணலாம். ஆனால் இப்போது திரு.கார்த்திகேயனுக்கு ‘சமஸ்கிருதத்தை யாராவது புகழ்ந்தாலே வருகிற ஆத்திரத்தையும் ‘, ‘பாரம்பரிய இந்திய சிந்தனை என்றால் வேதங்கள், உபநிடதங்களிலிருந்து மட்டும் மேற்கோள்கள் காட்டுவதை தமிழர்கள் தவிர்க்க வேண்டும்.மாறாக தமிழிலிருந்தும், அவைதிக மரபுகளிலிருந்தும் மேற்கோள்கள் காட்ட வேண்டும். ‘ முற்போக்கு மகாசன்னிதானம் தமிழர்களுக்கு விதித்துள்ள பத்வாவையும் பார்க்கும் போது நான் எந்த தமிழ் இலக்கியத்தையும், அருளாளரையும் மேற்கோள் காட்டுவதும் படு பிரச்சனையாக உள்ளது. அருணகிரிநாதரை நான் மேற்கோள் காட்டுகிறேன் என வைத்துக்கொள்ளுங்கள், யாராவது கார்த்திக் போன்ற மனநிலையில் உள்ளவ யாராவது கிழிமேதாவி, ‘ஆகா அருணகிரிநாதரை இவன் ஏன் மேற்கோள் காட்டுகிறான் தெரியுமா ஏனெனில் சமஸ்கிருத காவியமான மகாபாரதத்தை முத்தமிழ் அடைவு என கூறியவரல்லா அருணகிரிநாதர் அதனால்தான் ‘ எனக்கூறி கிழித்துவிடலாம் (முத்தமிழ் அடைவினை முற்படுகிரிதனில் எழுதியவராக கரிமுகனை துதிக்கிறார் அருணகிரிநாதர்.) ஏற்கனவே பிறர் முகத்தில் தன் முகம் பார்த்து மற்றவர்களை ‘அரைலூசு ‘ என பண்பட்டு அழைக்கும் கிழிமேதாவிகள் அதே பண்பட்ட பாணியில் நம் ஆன்மிக அருளாளர்களையும் அவ்வாறு விளிக்க அந்த பாவத்தை வேறு நான் கட்டுச்சுமக்க வேண்டுமா ? சரி அருணகிரிநாதரை விடுங்கள். செஞ்சடை ஆதி புராதனனை ‘செந்தமிழாதி ‘ எனப்போற்றும் திருமூலரை எடுத்துக்கொள்வோம். ஆனால் அடடா…ஏற்கனவே முற்போக்கு மகாசன்னிதானம் தமிழர்கள் இனி வேதங்களை மேற்கோள் காட்டக்கூடாது என சொல்லியிருக்க, மேற்கோள் காட்டுவதற்கும் ஒருபடி மேலே போய் இந்த திருமூலர் செய்திருக்கும் வேலையை பாருங்கள். ‘ஆதியை வேதத்தின் அப்பொருளானை ‘ என்கிறார். சரி ஏதோ வேதம் என்று நினைத்தால் மிகத்தெளிவாக, ‘மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள் ‘ என்கிறார். அட ‘நீதியில் வேத நெறி வந்துரை செய்யும் ‘ என்று வேறு கூறுகிறார். நம் முற்போக்கு மகாசன்னிதானத்துக்கு இருக்கிற தமிழ் பற்றில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லாத திருமூலரை நான் மேற்கோள் காட்டினால் முற்போக்கு என்னை ‘கிழிப்பது ‘ இருக்கட்டும், வேதத்தை பெரிதாக பேசுவதால் கார்த்திக் அவர்களுக்கும் கூட ஆவேசம் வந்துவிடலாம். தென்னாடுடைய சிவனை தெள்ளத்தெளிவாக திருமூலர்

‘சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்

ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே ‘

என ஆரியனாக கூறுமிடத்தில் வேப்பிலையால் அடித்து கூட தணிக்கமுடியாத அளவுக்கு ஆத்திராவேசம் கார்த்திக் அவர்களுக்கு எழுந்து விடலாம். முற்போக்கு மகாசன்னிதானமோ திருமூலரை இனி எந்த தமிழனும் மனதால் கூட நினைக்கக்கூடாது என்று அடுத்த பத்வாவும் போட்டுவிடக்கூடும். திருமூலர்தான் இப்படியென்றால் ‘பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனாக ‘ கோகழி ஆளும் குருமணியாம் சிவபிரானை துதிக்கும் மாணிக்கவாசகப் பெருமானை நான் எப்படி மேற்கோள் காட்ட ? பிறகு EPW காரர்களுக்கு ‘டமில் ‘ துரோகியாகிவிட மாட்டேனா நான் ?(எனக்கு அதைப்பற்றி ஒரு புண்ணாக்கும் கவலை இல்லை என்பது வேறுவிஷயம்.) சரி சந்தான குரவருள் ஒருவராகிய அருணந்தி சிவாச்சாரியாரைத்தான் மேற்கோள் காட்டலாமென்றால் சிவாகமத்தையே

‘ஆரியமாய் அறம் பொருளோ டின்பம்வீ டெல்லாம்

அறைந்துயிர்கட்கு அறிவுசெயல் அளிப்பது ‘

எனக் கூறுகிறவரையாவது மேற்கோள் காட்டுவதாவது. ( இதெல்லாம் தமிழர்கள் தவிர்க்கவேண்டியவர்கள் இதுவரை திருமூலர், அருணகிருநாதர், மாணிக்கவாசகர், அருணந்தி சிவாச்சாரியார்.) சரி புறநானூற்றைத்தான் நாம் மேற்கோள் காட்டலாம் என நினைத்தால்… தமிழ மன்னர்களின் ஒற்றுமைக்கே அது காட்டுகிற எடுத்துக்காட்டை பாருங்கள்:

‘ ஒன்று புரிந்து அடங்கிய இரு பிறப்பாளர்

முத்தீப் புரையக் காண்தக இருந்த

கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர் ‘

மூவேந்தரின் ஒற்றுமையை வேதவேள்வியின் முத்தீயாக காட்டுவதைக்காட்டிலும் ‘டமிலுக்கு ‘ ஏதாவது இழிவு இருக்க முடியுமா ? அட கிள்ளிவளவன் என்று ஒரு பெயர் வருகிறதே நம்ம தொல்.திருமாவளவன் கிட்ட வருகிற பெயராக உள்ளதே இங்கே நல்லபடியாக மேற்கோள் காட்ட ‘அவைதீகமாக ‘ ‘வேதம் உபநிஷத் ‘ தொடர்பில்லாத சேதி கிடைக்குமென பார்த்தால், கிள்ளிவளவன்

‘அறுதொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த

தீயொடு விளங்கும் நாடன் ‘ என்கிறது புறநானூறு என்கிற ஆரிய சூழ்ச்சியால் உருவான நூல். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பாரது பாடல்களை புறநானுற்றிலிருந்து நீக்கச்செய்ய ஒரு போராட்டமே விடுதலை சிறுத்தைகள் நடத்த வேண்டியுள்ளது. சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியுடனிருக்கும் காட்சியை ஒப்பிட வேறு ஒன்றுமே கிடைக்கவில்லையா போயும் போயும் பலராமனுடனும் கண்ணபிரானுடனுமா ஒப்பிட்டு திருமாவளவனின் வைணவத்தன்மையை காட்டவேண்டும் ?

‘பால்நிற உருவின் பனைக்கொடியோனும்,

நீலநிற உருவின் நேமியோனும் என்று ‘ என்றா ஒப்பிட வேண்டும் ?

திருமாலது உருவையே வேத வேள்வியின் உருவமாக

(…படிநிலை வேள்வியுள் பற்றி ஆடுகொளலும்,

புகழியைந்து இசைமறை உறுகனல் முறைமூட்டித்

திகழ்ஒளி ஒண்சுடர் வளப்பாடு கொளலும்… )

வெளிக்காட்டும் பரிபாடலை தமிழன் மேற்கோள் காட்டலாமா என திருவாளர். முற்போக்கு திருவாய் மலர்ந்தருளணும். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி தன் யாகசாலையில் நட்ட தூண்களை ‘யூபம் நட்ட வியன்களம் பலகொல் ‘ எனப்பாராட்டும் புறநானூற்றையும் தமிழன் ‘கடாசி ‘ விட வேண்டியதுதானா ? என்ற கேள்வி ஒருபுறமிருக்க நமது தொல்.திருமாவளவன் தன் ‘தமிழ் பெயர் சூட்டும் வைபவங்களில் ‘ பெருவழுதி, கிள்ளிவளவன் ஆகிய பெயர்களையும் தவிர்ப்பதுடன் எதற்கும் தன் பெயரையும் இன்னமும் ‘நல்ல ‘ எவ்வித வைதீக தொடர்புமற்ற தமிழ் பெயராக்க முயற்சிக்கலாமே! என்ன முனைவர்.சங்கர பாண்டி ஐயா அவர்களே தாங்களும் (தாங்கள் எனக்கு அடுத்த திண்ணையில் கட்டாயம் வழங்கப்போகிற வசையுடன்) இந்த பெயர் மாற்றம் குறித்து திருமாவளவனாருக்கு ஏதாவது உருப்படியான யோசனை வழங்கலாமே ? தவிர்க்கப்பட வேண்டிய மற்றொரு பெயரையும் திருமாவளவனுக்கு கொடுத்துவிடலாம், ‘இருங்கோவேள் ‘. இருங்கோவேளின் குலமுதல்வன் வட பக்கத்து முனிவர் ஒருவரின் ஹோம குண்டத்தில் தோன்றியதாக கூறும் புறநானூற்றுப்பாடலை படித்த பிறகு எப்படி இந்த பெயரை ‘தமிழ் ‘ பெயர் என நாம் கூறமுடியும் ?

‘வடபால் முனிவன் தடவினுள் தோன்றி

நாற்பத்தொன்பது வழிமுறை வந்த

வேளிருள் வேளே ‘

சரி ஐயா இந்த புறநானூறுதான் போகட்டும், இந்த அகநானூறுமா பரசுராமன் செய்த வேதவேள்வியை

‘மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்

முன் முயன்று அரிதினில் முடித்த வேள்வி ‘ என புகழவேண்டும் ?

ஆக நான் இதில் எதையாவது மேற்கோள் காட்டினால் சமஸ்கிருத-வேத சடங்குகளை போற்றும் நூல்களை கூறுகிறேன் என யாருக்கெல்லாம் ஆத்திரம் வரும் என்பதும் இவற்றையெல்லாம் தமிழன் பேசக்கூடாது என ‘பத்வா ‘ வரும் என்பதும் தெரியவில்லை.

சரி, ஆழ்வார்களில் அந்தணரல்லாத திருமங்கையாழ்வாரையாவது மேற்கோள் காட்டி பேசலாமென்றால்,

‘சந்தோகன் பெளழியன் ஐந்தழலோம்பு

தைத்திரீயன் சாமவேதி ‘

என்கிறவரையா மேற்கோள் காட்ட முடியும் ?

ஆக வேதநெறி தமிழ் பண்பாட்டுக்கு அன்னியமல்லாத ஒன்றாக இருக்க சமஸ்கிருதம் மட்டும் எப்படி நமக்கு அந்நியமாக முடியும் ? நம் பண்பாட்டின் ஒரு பகுதியை நமது மடமையால் நாமே வெறுத்து ஒதுக்குவது சரியா ? என்கிற பகுத்தறிவுக்கு ஒவ்வாத கேள்விகளை உருவாக்கும் மேற்கூறிய நூல்களையெல்லாம் புறம்தள்ளி இனி தமிழன் பகுத்தறிவின் பெயரால் ஈவெராவும் அவரது கூட்டமும் நடத்திய மட்ட-மலின-வக்கிர-பிரச்சார கூத்துக்களையும், இல்லையென்றால் திருவாளர்.மஞ்சள்துண்டு-பகுத்தறிவின் ‘பராசக்தி ‘ வசனங்களையே தத்துவமென மேற்கோள் காட்டிவரவேண்டியதுதான்.

அரவிந்தன் நீலகண்டன்

infidel_hindu@rediffmail.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)


வணக்கம்

சென்ற வாரத் திண்ணையில் திரு.வரதன் செல்வி ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம், தனியொருவர் எழுதிய கடிதம் அல்ல. கோடிக்கணக்கான தமிழர்களின் உள்ளுணர்வினை வெளிப்படுத்தும் கடிதமாகும். நண்பர் வரதனுக்கு எனது பாரட்டும், நன்றியும் உரித்தாகுக. அவர் எழுத மறந்த வேண்டுகோள் ஒன்றினை நான் சேர்க்க விரும்புகிறேன். காட்டில் திரியும் கொலைகாரனிடமும், நாட்டைப் பிரிக்க நினைக்கும் நயவஞ்சகர்களிடமும், கொஞ்சிக் குலாவி, பேரம் நடத்தும் நச்சுக் கிருமிகள் சில இன்று சட்டத்தின் ஓட்டையைப் பயன் படுத்தி வெளி வந்து விட்டன. அத்தகைய நச்சுக் கிருமிகளை ஒழிக்கும் பணி எவ்விதச் சுணக்கமும் காட்டாமல் தொடரவேண்டும் என்பதை நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களின் வேண்டுகோளாக வைக்கிறேன்.

திரு.ஜெயமோகன் அவர்களின் நீண்ட விளக்கம் கண்டேன். அவர் மீது இறைக்கப் பட்ட சேற்றிற்கும், அநாகரீகமான தாக்குதல்களுக்கும் சக எழுத்தாளர்கள் பயத்தின் காரணமாகவும், தங்கள் சுயநலப் போக்குகள் காரணமாகவும் அமைதி காத்தது வெட்கப் பட வேண்டிய ஒன்று. அதிலும், இதைச் சாக்காக வைத்துக் கொண்டு, தங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்டிப் பிழைப்பு நடத்திக் கொண்டவர்களின் நடவடிக்கைகள் அருவருக்கத் தக்க, கேவலமான செயல்பாடுகளாகும். இந்த விஷயத்தில் இவர்கள் காட்டிய காழ்ப்புணர்வுகள், இவர்களின் அசிங்கமான இன்னொரு முகத்தை உலகத்துக்கு காட்டுபவையாக அமைந்தன. சக எழுத்தாளர்கள் கண்டிக்கவில்லையெனினும், என்னைப் போன்ற எண்ணற்ற வாசகர்களின் சார்பாக அவர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித்தனங்களுக்கான கண்டனத்தையும், அவரது நேர்மையான, வெளிப்படையான விமர்சனங்களுக்கான ஆதரவையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.நரேந்திரனின் கட்டுரையில் வந்த ஒரு வரியை வைத்துக் கொண்டு ஒருவர் இந்தி அரக்கி எனும் பூச்சாண்டியை காட்ட முயன்றிருக்கிறார். மொழியை வைத்துப் பிழைப்பு நடக்கும் வரை, செத்த பாம்பை அடிக்கும், இவர்களது வெற்றுக் கூக்குரல்களும், வீராவேசங்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். இவர் எழுப்பிய கேள்விகளின் அபத்தங்களை சுய அறிவுடன் சிந்திக்கும் எவரும் கண்டு கொள்வார்கள்.

தனது கட்சியை நிலை நாட்டி, அதன் மூலம் ஆட்சியைப் பிடித்து, ஊழல் பல புரிந்து, தனது குடும்பத்தை வளப்படுத்துவதற்காகவும், தங்கள் ஆதிக்க சக்தியைத் தமிழகத்து அப்பாவி மக்கள் மேல் நிலை நிறுத்துவதற்காகவும், பாட்டாளி மக்களைச் சுரண்டி அவர்களை தங்களது சினிமா மாயயையிலும், அடுக்கு மொழி வசனங்களிலும் அடிமையாக, எதையுமே சிந்திக்க முடியாத ஓட்டுப் போடும் இயந்திரங்களாக வைத்திருப்பதற்காகவும், திராவிடக் கட்சிக் கும்பல்களால் உருவாக்கப் பட்டதுதான் இந்த இந்தி ஆதிக்கமெனும் மாயை. அன்று இந்தி படிக்காதே என்று சொன்ன அதே நாக்கு இன்று தனது பேரனுக்கு இந்தி தெரியும் என பெருமைப் பட்டுக் கொள்கிறது, அதனால் அவரே டெல்லிக்கு அடுத்த வாரிசு என்று இந்தி அறிவைக் காரணம் காட்டி வாரிசு அரசியலை நிறுவுகிறது. இங்கே ஏமாந்தது யார் ? இவர் பாஷையிலேயே சொல்வதானால் கேப்பையிலே நெய் வடியுதெனக் கூறி முப்பாதாண்டுகளாகக் தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே பாழாக்கியதுதான் இந்தக் கும்பலின் சாதனை. இப்பொழுது அமெரிக்கா சென்று நெய் வடிவதாகப் பம்மாத்துப் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் சிலர். அதை நம்பும் ஒரு கூட்டம் அங்கேயும் இருக்கலாம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இன, மொழி வெறுப்பகளைத் தூண்டி விட்டு வியாபரம் பண்ணுபவர்கள் காட்டில் நல்ல மழைதான். இந்த உண்மைகளைச் சொல்பவர்கள் எல்லாம் துக்ளக் கும்பலெனில், அந்தக் கும்பலில் ஒரு தொண்டனாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.

திரு.வல்லிக்கண்ணன் அவர்களைப் பற்றிய சிவக்குமாரின் அறிமுகம் சிறப்பாக இருந்தது. திரு.முருகன் அவர்களின் கேரளப் பயணத்தில் கோவில் வாசலை அவர் விவரித்திருக்கும் விதமே அலாதிதான்.

அன்புடன்

விஸ்வாமித்திரா


திரு. நரேந்திரன் கடிதத்துக்குப் பதில்:

உங்கள் விளக்கத்துக்கு நன்றி. ஆனால் நான் முன்பு கூறிய கருத்துக்களிலேயே உங்களின் வாதத்துக்குப் பதில் இருக்கிறது. நீங்கள் மீண்டும் ஒரு முறை நான் எழுதியதை தயவு செய்து படித்துப் பாருங்கள். இங்கே மேலும் சில விளக்கங்கள்.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், இந்தி மட்டுமல்லாமல் வேறு எந்த மொழியைக் கற்றுக்கொள்ளுவதாலும் பயன்களே நிறைய உள்ளன என்று. தமிழ் நாட்டில் இந்தி படிக்கக் கூடாது என்ற தடையிருந்தால் உங்கள் கோபத்தில் அல்லது ஆதங்கத்தில் நியாயம் இருக்கிறது. தாராளமாக எந்த மொழியை வேண்டுமானாலும் (இந்தி உட்பட) நீங்கள் விரும்பினால் படிக்கலாம், எந்த ஒரு மொழியையும் (தமிழ் உட்பட) விருப்பமில்லா விட்டால் படிக்காமலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் கேட்பதோ அனைத்து மக்களும் அரசு செலவில் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்பது.

வாதத்துக்காக மிகைப்படுத்தியே எடுத்துக் கொள்வோம், இந்தி தெரியாததால் வட இந்தியாவுக்கு சென்று வேலை தேடும் வாய்ப்பை இழந்த உங்கள் நண்பரைப் போன்ற இளைஞர்கள் 6 இலட்சம் என்று வைத்துக் கொள்வோம், தமிழ் நாட்டின் மக்கள் தொகையான 6 கோடியில் அவர்கள் ஒரு விழுக்காடு. அவர்களுக்காக ஆறு கோடி மக்களும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது நியாயமா ? நீங்களே உங்கள் கருத்துக்களிலே உள்ள முரண்பாட்டைப் பாருங்கள். “இந்தி படிப்பதும், படிக்காமலிருப்பதும் அவரவர் விருப்பம்.” என்று கூறும் நீங்கள் இந்தியை எப்படி கட்டாயப் பாடமாக தமிழ்நாட்டில் நடத்தச்சொல்கிறீர்கள் ?

உங்கள் நண்பரைப் போன்று நானும் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். வறுமையின் காரணமாகவே என் தம்பி 18 வயதில் பாலிடெக்னிக் பட்டத்தோடு டெல்லிக்கு ஒரு தனியார் நிறுவன வேலைக்கு அனுப்பப்பட்டார். தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டதால் ஆங்கிலம் கூட சரியாகப் பேச வராது. பாலாஜி பதிப்பகத்தின் இந்திப் புத்தகம் தான் அவருடன் சென்ற ஒரே துணை. ஒரு வருடம் நிறையச் சிரமப் பட்டிருக்கிறார், ஆனால் ஒரே வருடத்தில் இந்தி நன்றாக பேசக் கற்றுக் கொண்டார். இருபது வருடங்களுக்கு மேலாக வட இந்தியாவில் பணி புரியும் அவருக்கு இன்று வரை ஒரு இந்தி எழுத்துக் கூட தெரியாது. அதே வேலையில் காஷ்மீர், கல்கத்தா, புவனேஸ்வரம், விஜயவாடா, பெங்களூர், திருவனந்தபுரம் என பல ஊர்களுக்கு மாற்றப் பட்டிருக்கிறார். சென்ற இடங்களிலெல்லாம் முதல் வருடம் மிக அல்லலுற்றிருக்கிறார். மேற்கு வங்காளத்திலும், ஆந்திரத்திலும், ஏன் மகராஷ்டிரத்தின் உட்பகுதிகளில் கூட இந்தி தெரிந்தால் மட்டும் போதாது. அந்தந்த மொழியும் அறிந்திருக்க வேண்டும். இன்று அவருக்கு பெரும்பாலான இந்திய மொழிகள் நன்கு தெரியும். பட்ட சிரமங்களினால் ஆங்கிலத்திலும் தேர்ந்து விட்டார். தற்பொழுது சில வருடங்களாக சொந்தமாகத் தொழில் செய்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். அந்த உந்துதலுக்கான காரணம், உங்கள் நண்பரைப் போன்ற அதே குடும்பச் சூழல்தான் எங்கள் வீட்டிலும், திருமணத்துக்காகக் காத்திருந்த இரண்டு சகோதரிகள் உட்பட. பொறியியல் தொடர்பாகப் படிக்காததால் நான் அதுபோல வடக்கே வேலை தேடி செல்லாமல், தமிழ்நாட்டிலும் வேலை கிட்டாமல் மேற்படிப்பைத் தொடரும் வாய்ப்பைப் பெற்றேன். கிடைத்திருந்தால் நானும் அப்படியே சென்றிருபேன்.

பிழைப்பை நாடி வேறு இடத்துக்குப் போனால் அங்குள்ள மொழியையும், பண்பாட்டையும் முதலில் மதிக்கத் தெரிய வேண்டும். அங்குள்ள மொழியை எப்பாடு பட்டாவது கற்றுக்கொள்ள வேண்டும். அப்படியல்லாமல் என்னுடைய அரசாங்கம் என்னை நட்டாற்றில் விட்டு விட்டது என்று அழுது புலம்பலாமா ? ஜப்பானில் வேலை கிடைத்தால், ஜப்பானிய மொழியை நான் தான் கற்க வேண்டும், அதை விட்டு தமிழ்நாட்டில் எனக்கு ஜப்பானிய மொழியை பள்ளிக்கூடத்தில் கற்றுத்தரவில்லையே என்று அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவது என்ன நியாயம் ?

நீங்கள் குறிப்பிட்ட நண்பர்களைப் போன்றவர்கள் 6 ஆயிரம் பேர்கள் தேறுவார்களா என்பது சந்தேகம். முன் சொன்னது போல 6 இலட்சம் என்றே வைத்துக் கொள்வோம், ஒரு விழுக்காடு என்பது கணிசமான அளவுதான். அவர்களுக்காகவும் நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். என்ன காரணமாகயிருந்தாலும் சரி, மாநிலம் விட்டு மாநிலம் பெயர்ந்து வாழ விரும்பும் மக்களுக்கு அப்படிச் செல்லும் முன் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்தோடோ பயிற்சி அளிக்கும் மொழி மையங்கள் ஏற்படுத்த வேண்டும். பள்ளிக் கூடத்தில் தேர்வுக்காகப் படித்து மறந்து விடுவதை விட இப்படிப் பயிற்சியளிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று மற்ற தென் மாநிலங்களைச் சேர்ந்த நண்பர்கள் பலர் என்னிடம் சொல்லியிருக்கின்றனர்.

தேவை அதிகமானால் மாவட்டம், வட்டம் அளவில் கூட மொழி மையங்கள் ஏற்படுத்தலாம். அவை இந்தியை மட்டுமல்லாமல், தேவைப்படுபவர்களின் தொகையைப் பொறுத்து எல்லா மொழிகளையும் கற்றுத்தர வேண்டும். அவற்றைத் தவிர மொழி பெயர்ப்புப் பணிகளிலும் அம்மையங்கள் ஈடுபட்டு இந்திய மக்களிடையேயான நல்லுறவு மையங்களாகவும் திகழலாம். இவை தென் மாநிலங்களில் மட்டுமல்லாமல், வட இந்தியாவிலும் நிறுவப்பட வேண்டும். உண்மையான கூட்டாட்சி மத்திய அரசாங்கம் இதைத்தான் செய்திருக்கும். இப்படிச் செய்திருந்தால் அதைப் பாராட்டியிருக்கலாம். அதைவிட்டு மொழியை வைத்து (தற்பொழுது மதத்தையும் வைத்து) ஆதிக்க அரசியல் நடத்தி, பிரிவினை உணர்வுகளைத் தூண்டி விட்டது மத்திய அரசுதான். அதற்கு எதிராகத்தான் மொழியை வைத்து பிழைப்பு அரசியல் நடத்தி ஆங்கில மேலாதிக்கத்துக்கு வழி செய்து வந்துள்ளன திராவிட இயக்கங்கள். இதையெல்லாம் சுட்டிக் காட்டினால் நீங்கள் என் போன்றோரைத் தேச விரோதிகள் என்றும், குறுகிய வட்டத்தில் சிந்திப்பவர்கள் என்றும் குற்றஞ்சாட்டுவீர்கள். திராவிட இயக்க சிந்தனையாளர்கள் கூட என் போன்றோரை துரோகிகள் என்று கூறுவார்கள்.

உங்கள் சிந்தனைக்காக இன்னொரு எடுத்துக்காட்டையும் கூற விரும்புகிறேன். நான் சென்னையில் வேதியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பொழுது அடிக்கடி பாரி முனை நைனியப்ப நாயக்கன் தெருவுக்குச் செல்ல வேண்டி வரும். அங்குதான் அறிவியல் உபகரணங்கள் மற்றும் வேதிப்பொருள்கள் விற்கும் கடைகள் அனைத்தும் இருந்தன (இப்பொழுது எப்படியெனத் தெரியாது). அந்தக் கடைகள் அனைத்தும் வட இந்தியர்களுக்குச் சொந்தமானவை. ஒரு நாள் அவர்களுடைய கிட்டங்கியிலிருந்து சில பொருள்கள் வர வேண்டியிருந்ததால் அதிக நேரம் காத்திருக்க நேர்ந்தது. கடை உரிமையாளர் என்னை அமரச்செய்து உபசாரம் செய்து பேசிக் கொண்டிருந்தார். என்னுடன் ஓரளவு ஆங்கிலத்தில் பேசிய அவர் கடைச்சிறுவனுடன் இந்தியில் ஓரிரு தமிழ் வார்த்தைகள் கலந்து பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் இது பற்றி கேட்ட பொழுது சொன்னார், அவனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் இந்தி சரியாகப் புரிந்து கொள்ள முடிய வில்லை, இப்பொழுது நன்றாகப் புரிந்து கொண்டு, அரை குறையாகப் பேசவும் ஆரம்பித்திருக்கிறான் என்று. வியப்பாக நோக்கிய என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவர் சொன்னார், தான் இருபது ஆண்டுகளுக்கு மேல் படித்த தமிழை விட அவன் இரண்டு வருடங்களில் கற்றுக் கொண்ட இந்தி அதிகம் என்று.

அவர் மேலும் கூறும் பொழுது அவர் நண்பரைப் பற்றிச் சொன்னார். அவரும், அவரது நண்பரும் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் பம்பாயிலிருந்து சென்னைக்கு வர முடிவு செய்த பொழுது, வேதிப்பொருள்கள் விற்பனையில் பம்பாயில் போட்டி அதிகம் இருந்ததாகவும், சென்னையில் அவ்வளவு அதிகம் இல்லை எனவும், அதனால் பம்பாயில் கொள் முதல் செய்து சென்னையில் கடை வைத்து விற்க முடிவு செய்து சென்னைக்குப் புறப்பட்டனர். இருவருக்கும் ஆங்கிலம் நன்றாகப் பேச வராது, அப்படியே பேசினாலும், சென்னையில் அந்தக் காலத்தில் ஆங்கிலத்தை வைத்து மேல் தட்டு வர்க்கத்திடம் மட்டும்தான் உரையாட முடியும். தற்காலத்திலோ ஆங்கிலம் மட்டுமே தெரிந்தால் போதும் என்பதால் மற்ற மாநிலங்களிலிருந்து வந்து பிழைப்பு நடத்த இலகுவாக உள்ளது என்றார். ஆனால் அக்காலத்தில் தமிழ் தெரியாததால், அவர் முதல் சில வருடங்கள் மிகச் சிரமப் பட்டிருக்கிறார். ஆனால் அவரது நண்பர் அப்படி சிரமப்பட்டு வாழப் பிடிக்காமல், பம்பாய்க்குத் திரும்பி அங்கு வியாபாரப் போட்டியினால் வெற்றியடையாமல் நொடித்துத் தற்பொழுது வேறு நிறுவனத்தில் பணி புரிகிறார்.

இந்த எடுத்துக்காட்டுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். குஜராத்தில், பள்ளிக்கூடத்தில் கட்டாய பாடமாகத் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறீர்களா ? அல்லது நான் சொல்லியிருக்கும் யோசனை, அதனை விட நல்லது என்கிறீர்களா ? இதெல்லாம் மத்திய அரசை ஆண்ட தலைவர்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்களா ? தமிழ் மட்டுமே கொஞ்சம் தெரிந்து, ஆங்கில மொழி கூடத் தெரியாத அப்பாவி கிராம மக்கள் தபால் அட்டையிலும், தபால் கவர்களிலும் தமிழைக் கண்டதில்லை. தந்தி அனுப்புவதற்கும், மணியார்டர் அனுப்புவதற்கும் உள்ள படிவங்களில் தமிழ் கிடையாது. வங்கிகளுக்குப் போய் ஒரு கணக்கு (அக்கவுண்டு) திறக்க வேண்டுமானால் தமிழ் இல்லை. இன்று கூட மாறியிருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. இவர்கள் எல்லாம் மனிதர்களாக உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா ? அமெரிக்காவிலும் கனடாவிலும் தமிழர்கள் கணிசமாக வாழும் இடங்களில் தேவைப்பட்டால், வாகன ஓட்டுதலுக்குரிய தேர்வைத் தமிழில் எடுக்கலாம். தொலை பேசிக் கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டு இந்திய மொழிகளில் வாடிக்கையாளர்களை அவர்கள் மொழியில் அழைக்கின்றன. நாமோ ஒரு அடிப்படைப் பிரச்சினையை அரசியலாக்கி சண்டை போட்டுக் கொன்றிருக்கிறோம்.

எனவே நம் வர்க்கத்தைச் (class !) ஒரிருவர் வட இந்தியாவில் வேலை தேட முடியவில்லை என்பதை மட்டும் பார்க்காதீர்கள். ஒட்டு மொத்தமாகப் பிரச்சினையின் எல்லாத் திசைகளிலும் ஆழமாக யோசியுங்கள். அப்பொழுதுதான் தாகூர் நூல்களைப் படிக்கவில்லை என்பவற்றை விடத் தலையாய மொழிப் பிரச்சினைகளும் இந்தியாவில் உண்டு என்பது தெரிய வரும். சாகித்ய அகடமி இந்தியாவின் நல்ல நூல்கள் பலவற்றை ஒரு மொழியிலிருந்து வேறு மொழிக்கு அருமையாக மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கின்றனர். அதை படிக்க முடியவில்லை என்பது நம்முடைய அறிவுத்தேடலில் உள்ள கோளாறு. அதை விட்டு, குறுகிய சிந்தனை, தேச விரோதம் என்று பெரிய பெரிய வார்த்தைகளை எங்களுக்கு எதிராகப் பயன் படுத்தினால் நாங்களும் ஆதிக்க சக்திகள், துக்ளக் கும்பல்கள் என்றுதான் பதிலுக்கு அழைக்க வேண்டி வரும்.

சொ.சங்கரபாண்டி (sankarpost@hotmail.com)


16/01/2004

அதிகாலை 2 மணி

அன்பிற்குரிய கமல் அவர்களுக்கு

குடும்பத்தினர் அனைவருடன் இரவுக்காட்சியாக விருமாண்டி திரைப்படத்தினைக் கண்டுவிட்டு வீட்டுக்கு

வந்தவுடன் உடனடியாக இந்த கடிதத்தை வரைகிறேன். இந்தத் திரைப்படம் தங்கள் மீதான எனது பார்வையை

மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது.

தொடர்ந்து ஆனந்தவிகடன் குங்குமம் போன்ற இதழ்களில் உங்களின் பேட்டியிலும் சன் மற்றும் ஜெயா

தொலைக்காட்சிகளில் பொங்கல் தினத்தன்ற தங்களின் பேட்டியின் போதும் உங்களின் அனேக

உளறல்களையும் சகிக்க வைத்து விட்டது படம். படத்தினைப் பற்றிய திறனாய்வை பல்வேறு சினிமா

தொடர்பான ஆய்வாளர்கள் செய்யக் கூடும். இன்னும் இரண்டு மூன்று முறை படத்தினை திரையரங்கிலே கண்டு நானும் எழுத முயற்சிக்கிறேன்.

படத்தினைக் கண்டபின் எனது தனிப்பட்ட அக்கறை என்னவென்றால் தயவு செய்து இனி தங்களின்

திரைப்படங்களில் மட்டுமே தாங்கள் கவனம் செலுத்த வேண்டும் பேட்டிகளில் அல்ல என்பதே. பாராட்ட

வேண்டியதை ‘உடனடியாகப் ‘ பாராட்ட வேண்டுமென்பதாலே இந்தக் கடிதம்

வாழ்த்துக்களுடன்

நா.இரா குழலினி.

(kuzhalini@rediffmail.com)


Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி