கடிகாரங்கள்
ம.நவீன்

குறிப்பிட்ட
நேரத்திற்குப்பின்
பொறுமை இழந்த
கடிகார முட்கள்
கண்ணாடியை
உடைத்துக்கொண்டு
வெளிப்பட்டன.
நீங்கள் தாமதித்துக்
கொண்டிருந்தீர்கள்
அவைகளைப் போலவே
காத்திருந்த எனது
மன அழுத்த மொழி தெரியாமல்
விரோதமாய் நோக்கி
சுவர் சொர சொரப்பில்
சொறிந்து
தங்களைக் கூர்மைபடுத்தின.
நீங்கள் தாமதித்துக்
கொண்டிருந்தீர்கள்
உங்களுக்கான குற்ற
உணர்ச்சியையும்
நானே சேமித்திருந்ததால்
குறுகி கிடந்தேன்
அவை எனை நோக்கி
பாய்வது தெரிந்தும்
நீங்கள் தாமதித்துக்
கொண்டிருந்தீர்கள்
ஏதோ ஒரு துவாரத்தில்
நுழைந்து
இதயத்தை முற்றிலுமாய்
அறுக்க முற்பட்ட நேரம்
நீங்கள் வழக்கமான
புன்னகையோடு
வெளிபட்டீர்கள்
கடிகாரத்தில்
முட்கள் இல்லாததை
நீங்கள் கவனிக்கவில்லை.
ம.நவீன்,
மலேசியா
na_vin82@yahoo.com.sg