கடற்கரய் கவிதைகள்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

சுகுமாரன்


எப்போதும் கவிதை, நிகழ்காலத்தின் எதிர்வினை மட்டுமே. வரலாற்றின் விசாரணையும்

நிமித்திகத்தின் எதிர்பார்ப்பும் கவிதையின் பரப்பில் சமகாலச் சார்புடனேயே மேற்கொள்ளப்

படுகின்றன.புதிய அனுபவ உலகை முன்னிருத்தவும் புதிய உணர்வோட்டத்தை

அடையாளப்படுத்தவும் எத்தனிக்கும் இளங்கவிஞர்களுக்கு கவிதையை சமகாலத்தன்மை

கொண்டதாக நிலைநிறுத்துவது சவாலான நடவடிக்கை.முன்னுதாரணங்களை அதேபடித்

தொடர்வதோ, வழக்கிலிருக்கும் மொழியை அதேபடி எதிரொலிப்பதோ படைப்பாகாது;

நகலெடுப்புமட்டுமே என்பதால்இந்தஅறைகூவலை எதிர்கொள்வது தவிர்க்கவியலாததாகிறது.

இந்த சவாலைச் சந்திப்பதிலுள்ள நெருக்கடியை கடற்கரயின் ‘ஏற்கனவே ‘ என்ற கவிதை

கச்சிதமாகச் சொல்கிறது. ஒரேசமயத்தில் இது கவிதையின் நெருக்கடியாகவும்

வாழ்வின் சிக்கலாகவும் பொருள்படுகிறது. கடற்கரயை பிரதிநிதித்துவப்படுத்தும் கவிதையாக

இதை முன்வைக்க முடியாது. எனினும், இந்த அணுகுமுறை சார்ந்தவைதாம் புதிய

கவிதையை சமகாலத்தன்மை கொண்டதாக்குகிறது. முன்னுதாரணங்களைப் பின்

தொடர்வதல்ல; ‘ஒழுங்கான பாதையைக் கடந்து அலுப்பாகிவிட்டது/மாறுதலுக்காக நிற்கிறேன்/

பாதத்தின் கீழே ஓடிக்கொண்டிருக்கிறது சாலை ‘ என்ற தெளிவே நிகழ்காலத்தின்

அடையாளமும் உயிர்ப்பும்.

கடற்கரயின் கவிதையுலகம் எதார்த்தங்களின் கலைந்த சமவெளி. திட்டவட்டமான

இடங்களைக்கூட கலைத்து அதிர்ச்சியும் எதிர்பார்ப்பும் ஏற்படுத்துகிற வகையிலான

புதிய இடங்களை உருவாக்குவதை தனது கவிதையாக்கத்தின் முறைசாரா ஒழுங்காகக்

கொண்டிருக்கிறார். அறை, தொலைவு, வெளி என்று இடமிடமாகப் பெயர்ந்து முடிவற்ற

பரப்பில் அமர்ந்து சூரியனை உண்ணும் புலியாக கோடையை உருவகப்படுத்தும்

கவிதையை இதன் சான்றாகக் காணலாம்.

இன்னவகையில் சேர்க்கலாம் என்று வகைப்படுத்த முடியாத மீறலை தனது பிரத்தியேக

இயல்பாக கடற்கரய் வரித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மனித இருப்பு, அதன்

காரணமாக உருவாகும் மனப்பெயர்வுகள்,இயற்கைமீதான கரிசனம்,வாழ்வின் தற்செயலான

தருணங்களின் ஆச்சரியம் என நவீன கவிதையில் தொடர்ந்து புழங்கும் அம்சங்களையே

மூலப்பொருட்களாகத் திரட்டிக் கொண்டிருந்தாலும் அதன் விளைவுகள் புத்துயிர்க்

கவிச்சையுடன் திகழ்கின்றன. கவிதையின் பிறவிக்குணம் இது.

மேலோட்டமான பார்வையில் எளிமையும் சிக்கலுமில்லாததாகத் தோன்றுகிறது கடற்கரயின்

கவிதைமொழி. ஆனால் உள்ளோட்டங்களும் முரண்களுமாக கிளைபிரிகிறது. அனுபவத்தின்

தீவிரம் மொழியை சிக்கலாக்குகிற நிர்ப்பந்தத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனில்,

இயல்பான அனுபவத்தைக்கூட சற்று திருகலான மொழியில் வெளிப்படுத்தும் ஆர்வக்கோளாறும்

கடற்கரயின் கவிதையாக்க முறையில் காணநேர்கிறது. ‘வீடு ‘ கவிதையின் மூன்றாம் அங்கம்

அனுபத்தின் தீவிரத்தால் செறிவுபெறுவதையும் ‘அதிகாலை தேநீர் ‘ ‘தரைகொத்தும் பார்வை ‘

ஆகிய கவிதைகள் உணர்வுநிலையின் வெற்றுவார்த்தைக்கூடுகளாகத் தடுமாறுவதையும்

உதாரணங்களாகக் குறிப்பிடத் தோன்றுகிறது. திருத்தமான மொழியில் ‘காகத்தின் கருணை/

நகரத்தை மிருதுவாக்கி வைத்திருக்கிறது ‘ (வெயில் காகம்) என்று எழுதுகிற கடற்கரய்

உன்னை என்பதை உனை என்று இடைக்குறையாகவும் என், என்று என்பனவற்றை

யென்,யென்று ‘ ‘யென ‘ ‘ இலக்கணத் திரிபுடனும் பிரயோகிப்பதில் கவிதைக்குச் செழுமை

கூடுகிறதா ?

நிகழ்கால இருப்பின் துயரங்களை எதிரொலிக்கும் கசப்பும் அலுப்பும் கலந்த குரல்; இயற்கையை

புறப்பொருளாகவன்றி அகத்தின் அம்சமாக ஏற்றுக்கொள்ளும் பெருமிதக் குரல்; காதலின்

லயிப்பும் விலகலும் ரீங்கரிக்கும் கசிவான குரல்; குழந்தையுலகின் வெகுளித்தன்மையில்

நெகிழும் பரவசக்குரல்; தனிமையின் வைபவத்திலும் மூச்சுத்திணறலிலும் இழையும் குரல் –

இந்தப் பலகுரல்களின் மொத்த தொனியில் உயிர்கொண்டியங்கும் கவிதையுலகம்

கடற்கரயுடையது. அதன் இயக்கத்தில் மெல்லிய பதற்றமும் சீற்றமும் வெளிப்படுவதை

கவிஞரின் பிரத்தியேகத்தன்மையாகக் குறிப்பிடலாம். ‘மழையைப் பார்க்க லபிக்காத

ஜென்மத்தில்/ என்னதான் மகத்துவம் கிட்டுமோ போங்கள் ‘, ‘பைத்தியத்தின் மொழியில்

இரவும் பகலும் ஒன்றாகிறது ‘ உள்ளிட்ட வரிகள் இதன் உதாரணங்கள்.

கவிதையின் பொதுப்பிரதேசம் பெரும்பாலும் எல்லாருக்கும் ஒன்றாகவே கிடக்கிறது.

முன் நடந்தவர்களும் சக கவிஞர்களும் பகிர்ந்து வெளிப்படுத்திய பின்னும் புதிய

இடங்கள் திறந்துகொள்கின்றன. இந்த இடங்களைக் கண்டடைவதே இன்று கவிதையில்

ஈடுபடுபவனை சமகாலத்தன்மையுள்ளவனாக்குகிறது. கடற்கரயின் ‘குழந்தை சித்திரம் ‘

இந்த அர்த்தத்தில் நவீன தமிழ்க்கவிதையில் அவருக்கு முக்கியத்துவம் தரும் முயற்சியாகலாம்.

குழந்தைகளின் உலகம் புதிய கவிதையில் ஏறத்தாழ அந்நியமான ஒன்று. குழந்தைகளைப்

பற்றியதாகவன்றி குழந்தைகளின் பார்வையில் பதியும் முதிர்ந்த உலகத்தைத் துல்லியமாக

இந்தக் கவிதை முன்வைக்கிறது. ‘லெளகீகமற்ற குழந்தைகள் அகராதியில் நேற்றென்பது

அனுபூதி ‘ என்ற வரி தொடர் சிந்தனைகளை எழுப்புகிறது.

கவிதையுருவாக்கத்தில் நிகழும் மகத்தான சோகம் கவிதைத்தருணங்களை வார்த்தைகளால்

நிரப்பவேண்டியிருக்கிறது என்பதுதான் என்று முன்னர் எழுதியிருந்தேன்.(மனுஷ்யபுத்திரனின்

‘இடமும் இருப்பும் ‘ தொகுப்புக்கு எழுதிய மதிப்புரை).வார்த்தைகள் அழிந்து அனுபவமாகத்

திரளும் கவிதைகள் எழுதவும் வாசிக்கவும் அபூர்வமாகவே வாய்க்கின்றன.கடற்கரய்

கவிதைகள் அத்தகைய அபூர்வ தருணங்கள இயல்பானதாக்கும் என்ற எதிர்பார்ப்பையும்

நம்பிக்கையையும் உறுதிசெய்கின்றன.

திருவனந்தபுரம் சுகுமாரன்

2 அக்டோபர் 2004

(கடற்கரயின் கவிதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை)

Series Navigation