கசாப்புக்காரனிடம் வாலாட்டுகிறது குறும்பாடு

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

ரோல்டு தால் (இங்கிலாந்து)


– ரோல்டு தால் (இங்கிலாந்து)

சுத்தமான கதகதப்பான அறை அது. பனி விழ ஆரம்பித்து விடும் என்று ஜன்னல் திரைச்சீலைகள் இழுபட்டிருந்தன. உணவுமேசையின் இரு விளக்குகளும், அவளுடையதும், எதிர்த்தாற்போல காலி நாற்காலிப் பக்கமானதும், ஔ¢ர்ந்து கொண்டிருந்தன. மேரி மலோனி, கணவர் வேலையில் இருந்து வீடு திரும்பக் காத்திருந்தாள்.
மென்மையும் மந்தகாசமுமான பெண். அவள் ஆளும் அப்படி செயலும் அவ்வண்ணமே. பூத்தையல் வேலையை சர்வ அமைதியுடன் அவள் கைக்கொண்டிருந்தாள். வயிற்றில் ஆறு மாதம். ஆகவே சருமம் நெகிழ்ந்திருந்தது. உதடுகள் மெல்லிசாய் இருந்தன. கண்கள் பெரிசாயும் முன்னிலும் கருமையாயும் தோற்றம் காட்டின.
கடிகாரத்தில் நாலு ஐம்பது. கார்க்கதவைச் சாத்தும் ஒலியை அவள் கேட்டாள். காரைப் பூட்டும் க்ளிக். தைக்கிற ஜோலியை ஒதுக்கி வைத்தாள். எழுந்து கொண்டாள். ஆத்துக்காரரை எதிர்கொண்டு வரவேற்று முத்தமிட முனைந்தாள்.
அவளுக்கு நாளின் அந்திப் பொழுதுகள் ஆனந்தப் பொழுதுகள். வெறுமனே உட்கார்ந்திருந்தாலுங் கூட, துணைக்கு யாருமற்ற நீண்ட தனிமைப் பொழுதுகளில் இருந்து ஆசுவாசம் அளித்தன அவை. கணவர் அலுப்புடன் பக்கத்து இருக்கையில் ஓய்ந்து கிடப்பதும், தளர்ச்சியாய் அவள்பக்கம் வருவதும், காலை நீளப்பரப்பி அவர் எட்டுவைத்து நடப்பதும் அவளுக்குப் பிடித்திருந்தது. எளிய பார்வை. அவரது முகவாயின் விநோத நெளிவுகள். எத்தனை களைப்பாய் வீடுதிரும்பினாலுமே அவர் அமைதியுடன் காணப்படுவார்.
‘நாள்ப்பூரா, இத்தனை வயசு சர்வீஸ் போட்ட ஆளை, வேலைன்னு சொல்லி நடந்தே அலைய விடறாங்க. அசிங்கம்!’ என்றாள் அவள். அவர் பதில் பேசவில்லை. அவள் குனிந்து தைக்கிறதில் முனையலானாள்.
‘செல்லம்…’ என்றாள் அவள். ‘கொஞ்சம் பாலாடை கொண்டு வரவா? வெளிய போய்ச் சாப்பிடலாம்னிருந்தேன். வீட்ல சமையல் கிமையல்னு எதும் பண்ணல.’
‘வேணா’ என்றார் அவர்.
‘வெளிய கிளம்ப வேண்டாம் அலுப்பாய் இருந்தீங்கன்னா…’ என்றாள். ‘நாழியகல்ல. கீழ குளிர்சாதனப் பெட்டில நிறைய இருக்கவே இருக்கு. எதாச்சும் தயார் பண்ணிக்கிருவம். அங்கயே உக்கார்ந்த மேனிக்கே நீங்க சாப்பிடத் தோது பண்ணிருவம்.’ அவரது பதிலுக்கு, ஒரு கீற்றான புன்னகை – தலையாட்டல் – அவள் அவரைப் பார்த்தாள். பதில் சொல்லவில்லை அவர்.
‘சரி, நான் கொறிக்க எதாவது, அப்றம் பாலாடை எடுத்தாறேன்…’
‘எதும் வேணாம் எனக்கு’ என்றார் அவர்.
தன் நாற்காலியில் இருந்தபடியே அவள் சிறிது கவலை காட்டினாள் அவரைப் பார்த்து. ‘ஐய ராத்திரி கண்டிப்பா எதும் சாப்பிடணும் நீங்க. குறும்பாட்டுக் கறி. பன்றி இறைச்சி. எதுனாலுஞ் சரி. ஐஸ்ல இருக்கு. சூடு பண்ணிக்கிறலாம்.’
‘சாப்பாட்ட விடு’ என்றார் அவர்.
‘அட கண்டிப்பா நீங்க சாப்பிடணும்ப்பா. செல்லம். நான் எதாவது தயார் பண்ணி வைக்கிறேன். அப்றம் வேணுமா வேணாமா, உங்க செளரியம், நீங்க முடிவு பண்ணிக்கிடுங்க.’ எழுந்து கொண்டாள் அவள். தையல் வேலையை மேசையில் விளக்கருகே வைத்தாள்.
‘உக்காரு இவளே’ என்றார் அவர். ‘சித்த உக்காரு சொல்றேன்.’
மெல்லக் குனிந்து உட்கார்ந்து கொண்டு பெரிய கண்ணில் கலக்கமாய் அவரைப் பார்த்தாள்.
‘ஒரு சமாச்சாரம் உன்ட்டச் சொல்லணும்’ என்றார் அவர்.
‘ம்.’
அவர் அசையாது அப்படியே இருந்தார் கொஞ்ச நேரம். முகவாய்க்குக் குறுக்கே நிழல் விழுந்தது. விளக்கு வெளிச்சம் படாத அளவில் தலையைக் குனிந்தவாறு இருந்தார். அவரது இடது கண் துடித்ததை அவள் கவனித்தாள்.
‘உனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருக்கும்…’ என்றார் அவர். ‘ஆனா நான் விஷயத்தை நேரடியாச் சொல்லிர்றது உத்தமம்னு முடிவு பண்ணிட்டேன்.’
அதற்கு ரொம்ப நேரம் ஆகவில்லை, நாலைந்து நிமிஷம் ஆகியிருக்கலாம். அவள் சலனங் காட்டவே இல்லை. ஒவ்வொரு வார்த்தையிலும் அவளை விட்டு விலகி விலகி அவர் து¡ரப்போவதைக் கலவரத்தோடு கவனித்துக் கொண்டே வந்தாள்.
‘ஆமா. அதான் விவரம.¢’ அவர் முடித்தார். ‘சரி, கேட்க கஷ்டமாத்தான் இருக்கும், ஆனா சொல்றதைத் தவிர வேற வழியில்ல. எப்பிடியும் உனக்குப் பணம் தரேன். உன்னைப் பார்த்துக்கறேன். நீ பெரிசா அலட்டிக்காதே. என் வேலைக்கு வேட்டு வைக்காத இரு.’
‘உமக்கு ராச்சாப்பாட்டு வேலை யிருக்கு’ என முனகினாள். இப்போது அவளை அவர் ஆட்சேபிக்கவில்லை.
நம்பவே முடியவில்லை. கனவு போலிருந்தது அவர் பேசியது. எழுந்து போனபோது கால் தரையில் பாவிய பிரக்ஞையே இல்லை. எதையுமே உணர முடியாமல் உணர்வுகள் மரத்துப் போனாற் போலிருந்தது. யந்திரகதியில் இயங்கிக் கொண்டிருந்தாள். கீழ் நிலவறைக்குப் படிகளில் இறங்கியது, விளக்கைப் போட்டது, ஐஸ்பெட்டி… கைக்கு எது எட்டுகிறது எனத் துழாவியது…
குறும்பாட்டின் கால்.
சரி, ராத்திரிக்கு இதே சாப்பிடுவோம். மீண்டும் மேலேறி, ஹாலுக்கு வந்தாள். ஜன்னல் வழியே வெளியே எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார் அவர். அவளது நடை நின்றது.
‘உனக்குப் புண்ணியம்’ என்றார் அவர் திரும்பாமல். ‘எனக்கு எதும் பண்ண வேணாம். நான் வெளில போறேன்.’
அதற்கப்புறம்தான் மேரி மலோனி அவரை நோக்கி நிதானமாய்ப் போனாள். தாமதிக்காமல், விறைத்துக் கிடந்த ஆட்டுக்காலைக் காற்றில் சுழற்றி, தன்னால் முடிந்த பலத்துடன் அவர் பின்மண்டையில் இறக்கினாள்.
இரும்புத் தடியால் போன்ற செமத்தியான அடிதான்.
மோதலின் உக்கிரம், அதன் ணங்கென்ற சத்தம், சின்ன சாப்பாட்டு மேஜை நிலைகுலைய அவர் கீழே தரைவிரிப்பில் சரிந்து விழுந்தது, இவை அவளை அதிர்ச்சி நிலையில் இருந்து மீட்டன. பயத்தில் உள் சிலிர்க்க, சிறிது ஆச்சரியமும் வந்தது. அவரது உடலைப் பார்த்தாள். இரண்டு கையாலும் இன்னும் அந்த மாமிசத்துண்டை இறுக்கமாய்ப் பற்றியிருந்தாள்.
கொன்னுட்டேன், அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
ரொம்ப அபூர்வமாய், அவள் தெளிவாய் இருந்தாள் இப்போது. அவள் சி.ஐ.டி. போலிசின் பெண்டாட்டி. அவளது காரியத்துக்கு என்ன தண்டனை, அவளுக்கு நல்லாத் தெரியும். அதனால என்ன. அதைப் பத்தி அலட்டிக்க எதும் இல்லை. தண்டனைன்னு வாய்ச்சாலுங்கூட அது அவளுக்கு பிரச்னைலேர்ந்து விடுபட்டாற் போலத்தான். அது சரி, ஆனால் குழந்தை? கர்ப்பிணிக் கொலைகாரிகள் பத்தி சட்டம் எப்பிடியோ?
அவள் அறியாள். அதுபத்தி எந்த அவசர முடிவும் எடுக்க அவள் தயார் இல்லை.
அந்த மாமிசத்துண்டை அடுபபங் கரைக்குக் கொண்டுபோனாள். சமையலை ஆரம்பித்தாள். பிறகு கைகளைக் கழுவிக் கொண்டாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள். லேசாய்ப் புன்னகை காட்ட முயன்று பார்த்தாள். விநோதமாய்க் கோணியது. ‘சாம் அண்ணே’ என்றாள் சத்தமாய். ‘உருளைக் கிழங்கு இருக்குமா?’ குரலும் விநோதமாய் ஒலித்தது.
திரும்பத் திரும்ப ஒத்திகை பார்த்துக் கொண்டாள். மேல்கோட்டை எடுத்துக் கொண்டபடி வெளியிறங்கினாள்.
மணி இன்னும் ஆறாகவில்லை. பலசரக்குக் கடையில் இன்னும் விளக்கு இருந்தது. கடையடைக்கும் நேரம். ‘சாம் அண்ணே’ என்றாள் உற்சாகத்துடன். கல்லாப் பெட்டியில் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்துப் புன்னகையை வீசினாள்.
‘ஆ, மாலை வணக்கம் திருமதி மலோனி அம்மா. எப்பிடி இருக்கீங்க?’
‘உருளை போடுங்க, அண்ணே. ம்… பட்டாணி இருந்தா அதும் ஒரு டப்பி.’ கடைக்காரன் தனது பின்பக்க அலமாரியில் இருந்து பட்டாணி எடுத்தான்.
‘பாட்ரிக் அலுத்துக் களைச்சு வந்தாரு. வெளிய சாப்பிடப் போக இஷ்டம் இல்லை அவருக்கு…’ அவள் அவனிடம் சொன்னாள். ‘பொதுவா வியாழக்கிழமை வெளிய சாப்பிடுவமா, இன்னிக்கு அதான்… காய்கறியே கூட வெச்சிக்கிறாம இருந்தேன்…’
‘இறைச்சி எதும் வேணுமா மலோனி அம்மா?’
‘இல்ல இருக்கு. நன்றி. ப்ரிஜ்ல ஆட்டுக்கால் வெச்சிருந்தேன்.’
‘ம்’
‘பொதுவா குளுந்து வெறைச்சப்பறம் எடுத்து சமையல் பண்றது எனக்குப் பிடிக்கறதில்லை. சரியா வருமா அண்ணே?’
‘என்னியப் பொறுத்த மட்டுல’ என்றான் கடைக்காரன். ‘அதுனால ஒண்ணும் வித்தியாசமா இராது. இந்த வெள்ளை உருளைக்கிழங்கு போட்றலாமா?’
‘போடுங்க போடுங்க. பெரிசா ரெண்டு!’
‘வேற?’ காய்கறிகளைக் காட்டி – சேவல் முகத்தை நீட்டினாப்போல இருந்தது அவன் கைஜாடை – வியாபாரப் புன்னகையுடன் அவன் கேட்டான். ‘நாளைக்கு எதும் வாங்கிக்கிறலியா?’
‘ம், நாளை… என்ன சமைக்கலாம். நீங்களே சொல்லுங்க அண்ணாச்சி!’
கடைக்காரன் தன் சரக்குகளை நோட்டம் விட்டபடியே ‘இந்தா பாலாடைக்கேக். அவருக்குப் பிடிக்கும்.’
‘போடுங்க போடுங்க’ என்றாள். ‘அவருக்குப் பிடிக்கும்.’
எல்லாவற்றையும் பொட்டலம் கட்டி வாங்கிக் கொண்டாள். பணம் கொடுத்தாள். உற்சாகம் கொப்பளிக்க ‘வரேன் சாம் அண்ணே. இரவு வணக்கம்’ என்றாள்.
துரிதமாக அவள் வீடு திரும்பினாள். தனக்குள் இப்படிச் சொல்லிக் கொண்டாள். என் புருஷன் சாப்பிடக் காத்திருக்கிறார் வீட்டில். நான் காய்கனி வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறேன். சமையலை அவள் நல்ல ருசியோடு செய்வாள்… ஏன்னா பாவம் அவர் களைச்சிப்போய் வந்திருக்கிறார். அவள் வீட்டுக்குள் நுழைகிறபோது, எதும் அசம்பாவிதமா சோகமா எதிர்பாராததா இருந்திச்சின்னா அவள் அதிர்ச்சி அடைவாள். பயமும் துக்கமுமா அவளையே நிலைகுலைத்து விடும். ஆமாம், உள்ளே இதுவரை நடந்தது எதுவுமே அவள் அறியாதவள். ஒரு வியாழக்கிழமை சாயந்தரம், ஒரு திருமதி மலோனி பாட்ரிக், காய்கறி வாங்கிக்கிட்டு ராச்சாப்பாடு செய்கிற முனைப்பில் வீடு திரும்புகிறாள், அவ்வளவுதான்.
ஆக, சமையலறைக்குப் பின்வாசல் மூலம் நுழைந்தபோது தனக்குத்தானே ஒரு பாடல்வரியை முணுமுணுத்துக் கொண்டாள். இங்கிருந்து தரையில் அவர் விழுந்து கிடந்ததைப் பார்த்தது அவளுக்கு நிஜமாகவே அதிர்ச்சியாய் இருந்தது. காலகாலமான புருஷன் காலமாகி விட்டார். நெஞ்செலாம் துக்கம் பொங்கி வந்தது. அழுகை உருகிப் பெருகியது. அது பாசாங்காகக் கூட இல்லை.
கொஞ்சம் அழுது ஓய்ந்தாள். பிறகு தொலைபேசிக்குப் போனாள். கதறியபடியே அவள் ‘உடனே வாங்க. சீக்கிரம்! பாட்ரிக் இறந்துவிட்டார்!’ என்றாள்.
‘யாரு பேசறது?’
‘மலோனியோட சம்சாரம். திருமதி பாட்ரிக் மலோனி…’
‘பாட்ரிக் மெலோனி செத்துட்டார்ன்றீங்களா?’
‘அப்டிதான் தோணுது!’
‘உடனே வர்றேன்’ – அந்த ஆள் சொன்னான்.
உடனே வந்து விட்டார்கள். அவள் முன்கதவைத் திறந்தாள். ரெண்டு போலீஸ்காரர்கள். அவர்கள் இருவரையுமே அவள் அறிவாள். அந்தப் பக்கத்து ஆண்கள் அநேகமாக எல்லாரையும் அவளுக்கு அறிமுகம் உண்டு. ஜேக் நு¡னனின் கைகளைப் பற்றிக் கொண்டு அவள் பதட்டமாய் அழத் துவங்கினாள்.
கடைக்குப் போய்த் திரும்பி வந்து பார்த்தால் இந்த மனுசன் அலங்கோலமாத் தரையில் கிடக்கிறாரு. அவள் பேச்சும் அழுகையாப் பேசிட்டிருக்கிற போதே நு¡னன் இறந்து கிடந்தவரின் மண்டையில் உறைந்துவிட்ட ரத்தப் படலத்தைப் பார்த்தார். கூட வந்த ஆள் ஓமாலியிடம் அதைக் காட்டினார். உடனே தொலைபேசிக்குப் போனார் ஓமாலி.
ஒரு டாக்டர் வந்தார். இரண்டு சி.ஐ.டி.கள் வந்தார்கள் அடுத்து. அவர்களில் ஒருத்தரின் பேர்கூட அவள் அறிவாள். இம்முறை முழுக்கதையும் திரும்ப ஆதியோடந்தமாய் அவள் சொன்னாள். பாட்ரிக் உள்ள வந்தார். நான் தெச்சிட்டிருந்தேன். அவர் அலுப்பாய் இருந்தார். வெளிச்சாப்பாடுல அவர் ஆர்வம் காட்டவில்லை. அதனால இறைச்சி சமைக்க ஆரம்பித்தாள் அவள். /அது இதோ உள்ள ஆயிட்டிருக்கு!/ விறுவிறுன்னு கடைக்குப் போனாள். வீட்டுக்கு வந்து பார்த்தால்… இவர்… இவர்…
‘எந்தக் கடை?’ என்று ஒரு சி.ஐ.டி. கேட்டார். அவள் சொன்னதும் மற்ற சி.ஐ.டி.யும் கேட்ட ஆளும் குசுகுசுவென்று பேசிக் கொண்டார்கள். அந்த மற்ற ஆள் தெருவில் இறங்கிப் போனார். ஒரு பதினஞ்சு நிமிஷத்தில் முழுப்பக்கக் குறிப்புகளுடன் வந்து சேர்ந்தார் அவர். தன் விசும்பல்களின் ஊடே அரைகுறையாய் அவள் காதில் கேட்டுக் கொண்டாள் அவர்கள் ரகசியமாய்ப் பேசிக் கொள்வதை.
கடைக்காரன் சாதாரணமாப் பேசினான். உற்சாகமானவள். புருஷனுக்கு நல்ல சாப்பாடு கொடுப்பதில் பிரியமாய்… பட்டாணி. கேக். அவள் இப்பிடியரு…
சிறிது கழித்து டாக்டர் கிளம்பிப் போனார். அந்த ரெண்டு போலீசும் உள்ளே வந்து சடலத்தை அப்புறப் படுத்தினார்கள். ரெண்டு துப்பறிகிறவர்களும், போலீசும் கிளம்பவில்லை.
ஜேக் நு¡னன் தன்மையாய்ப் பேசினார் அவளிடம். அவள் கணவர் பின்மண்டையில் மழுங்கிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப் பட்டிருக்கிறார். அநேகமா பெரிய கம்பியா இருக்கும் போலருக்கு. ஆயுதத்தை கொலையாளியே எடுத்திட்டுப் போயிருக்கலாம். இல்ல வெளிய எங்கயாச்சும் எறிஞ்சிருக்கலாம். அல்லது பக்கத்துல எங்காவது ஔ¢ச்சி மறைச்சிருக்கலாம்.
‘வழக்கமான கதைதான். ஆயுதம் கிடைச்சா ஆளே கிடைச்சாப்போல!’ – வீட்ல அப்பிடி அவரை அடிக்கிறாப்போல ஆயுதம் ஏதாவது… அவளுக்குத் தெரியுமா? ஒரு பெரிய ஸ்பானர் மாதிரியோ, இல்ல கனமான பூஜாடியோ இப்படியாய்…
அவர்கள் வீட்டில் உலோகத்தில் பூஜாடியே இல்லை.
‘அல்லது ஸ்பானர், பெரிய அளவுல?’
அதுமாறி ஒண்ணும் இருக்கறதாத் தெரில. இன்னாலும் ஒருவேளை கார்ஷெட்ல பார்க்கலாம்.
அவளை உக்கார வைத்துவிட்டு அவர்கள் தேடுதல் ஜோலியை ஆரம்பித்தார்கள். சரளைக்கல் தரையில் அவர்கள வீட்டின்¢ வெளியே நடப்பதை அவள் கேட்டாள். வெளியேயிருந்து வீட்டு ஜன்னல் திரைகளை டார்ச் அடித்து சோதித்தார்கள் அவர்கள். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. மணி ஒன்பது என்றது கடிகாரம். துப்பறிவாளர்கள் சோர்வடைய ஆரம்பித்திருந்தார்கள். என்றாலும் தொடர்ந்து சோதனையும் தேடலுமாய் இருந்தார்கள். சார்ஜென்ட் நு¡னன் சமையல்கட்டிலிருந்து வெளியே வந்தபடி ‘பாருங்க திருமதி மலோனி, உள்ள அடுப்பு எரிஞ்சிட்டிருக்கு, இறைச்சி வெந்திட்டிருக்கு… மறந்தே போனீங்களே!’
‘ஆமாமா’ என்றாள் அவள்.
‘நான் அணைச்சிறட்டுமா?’
‘செய்ங்க செய்ங்க. ரொம்ப நன்றி!’
இரண்டாம் முறை அவள்பக்கம் அவர் வந்தபோது பெரிய கரிய அழுத கண்ணுடன் அவள் ‘ஜேக் சார்’ என அழைத்தாள்.
‘ம்’
‘ஒரு ஒத்தாசை செய்யறீங்களா?… நீங்களும் இந்த மத்த ஆளுங்களும்…’
‘பாக்கலாம் திருமதி மலோனி…’
‘பாட்ரிக்கோட நல்ல சகாக்கள் நீங்க எல்லாரும். வந்திருக்கீங்க. அவரை கொன்னவனைப் கண்டுபிடிக்க முயற்சி செய்யறீங்க. எல்லாரும் ஏகப் பசியா இருப்பீங்க இப்ப. உங்களை சரியா கவனிச்சிக்கலைன்னா பாட்ரிக் என்னை மன்னிக்கவே மாட்டாரு. அடுப்புல ஆட்டிறைச்சி வெந்திட்டது. ஒடனே தயார் பண்ணிருவேன். எல்லாரும் ஒருவாய் சாப்பிடுங்களேன்!’
‘ஐயய்ய, அப்டி நெனைக்கவே ஏலாது எங்களால்…’
‘தயவு பண்ணுங்க’ – அவள் குழைந்தாள். ‘என்னால ஒரு துண்டுகூட வாய்ல வைக்க முடியாது இன்னிக்கு. நீங்க சாப்பிட்டா நல்லது. சாப்பிடுங்க. பெறகு உங்க வேலையப் பழையபடி ஆரம்பிக்கலாம் நீங்க.’
அந்த நாலு போலீசும் ரொம்பத் தயங்கினார்கள். ஆனால் எல்லாப் பயல்களுமே பசியாய்த்தான் இருந்தார்கள். முடிவாய் அவர்கள் தங்களுக்குத் தாங்களே பரிமாறிக் கொண்டு சாப்பிடலானார்கள். திறந்த கதவுவழியே அவர்களை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். வாய்நிறைந்த இறைச்சியில் அவர்கள் பேச்சு குளறலாய்க் கேட்டவாறிருந்தது.
‘இன்னுங் கொஞ்சம் போட்டுக்க சார்லி.’
‘போதும். கொஞ்சம் மிச்சம் வைக்கலாம்…’
‘அந்தம்மா காலி பண்ணீருங்கன்னிச்சே.’
‘சரி, அப்ப போடு!’
‘சர்ரியான உருட்டுக் கட்டையால சாதுவான பாட்ரிக்கை அடிச்சிருக்கான் கொலையாளி!’ என்கிறான் ஒருவன் தின்றுகொண்டே.
‘அதனாலதான் அதை சுலபமாக் கண்டுபிடிச்சிறலாம்னு தோணுது.’
‘ஆமாமா.’
‘யாரு அதைச் செஞ்சிருந்தாலும் அதைத் து¡க்கிட்டுல்லாம் திரிய மாட்டாங்க.’ ஒருத்தன் அழுத்தமாய்ப் பேசினான் ரொம்ப நம்பிக்கையோடு. ‘என்னைக்கேட்டா… அது இங்கியேதான் எங்கியோ இருக்கு… நம்ம கைக்கிட்டத்ல…’
வெளியே மேரி மலோனிக்குச் சிரிப்பு வந்தது.


பின்குறிப்பு
Lamb to the slaughter/Roald Dahl
விசித்திரக் கற்பனை. லேசான எள்ளல். தலைப்பிலேயே குறும்பு கொப்பளிக்கிறது. அதைத் தமிழில் கொணர முடியுமா என்று பார்த்தேன். ரொம்ப லாஜிக்லாம் எதிர்பார்க்கிறதற்கில்லைதான். துப்பறியும் போலிசைக் கொன்றுவிட்டு, துப்பறிய வந்தவர்களையும் டேக்கா கொடுக்கிற பெண். கணவருக்கு வேறு பெண்ணுடன் உறவு ஏற்பட்டதை விவரப் படுத்தாதது அழகு. கதைப்போக்கு சிதைவுறும் அல்லவா? அதைப்போலவே முன்வாசல் பூட்டிக் கிடந்ததாகவும், அழைத்தும் கணவர் வராததால், அவள் பின்வாசல் கதவைத் திறந்துகொண்டு உள்நுழைந்தாள், எனவும் இட்டுக் கட்டிய கதையை விளக்காமல் விட்டதும் நல்ல விஷயம். வாசகனுக்கான ருசியான இறைச்சி அது!
கணவர் இறந்ததும் செத்திட்டாரான்னு அவள் பார்க்கக் கூட இல்லை, என்பதை குறையாக உணர்ந்தேன்.
மறுநாளைக்குக் காய் வாங்காமல் திரும்ப இருந்தது, கணவர் இறந்து விட்டார் என இவளே போலீசிடம் தகவல் தெரிவித்தது, பின் சமாளித்தபடி – என்று நினைக்கிறேன்… என திருத்திக் கொண்டது போன்ற சுவாரஸ்யங்களை சிறு முடிச்சுகள் நிரப்பியிருக்கிறார் Dahl அண்ணாச்சி. எப்படியும் கற்பனை புதுசாய் இருக்கிறது.

மொழிபெயர்ப்பு – எஸ். ஷங்கரநாராயணன்
storysankar@gmail.co

Series Navigation