ஒளவை – 9,10

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue

இன்குலாப்


எங்களை நிறைவு செய்யும் சொற்கள்

(பாண்சேரி… வலைகாயும் முற்றம்..பாணர், பாடினியர், ஒரு மரத்தடியில் ஒளவை)

இளைஞன் :
என்ன ஒளவை மீண்டும் சிந்தனை ?

ஒளவை :
(வானைச் சுட்டிக் காண்பிக்கிறாள்)

இளைஞன் :
என்ன ? யாராவது தேவர்கள் தேரில் வருகிறார்களா ?

ஒளவை :
தேவர்கள் எங்கே வரப் போகிறார்கள் ?அந்த முகில்களைப் பாரேன்…அவை ஓரம் சிவந்து தீப்பிடித்து எரிவதுபோல்….

இளைஞன் :
இதில் என்ன வியப்பு ? வானில் முகில்கள்…

ஒளவை :
அதியனின் தகடூரிலிருந்து நம்மை நாடி வருவது போலத் தோன்றவில்லையா ?

இளைஞன் :
எனக்கு அந்த முகில் அந்தி நேரத்தில் ஓரம் சிவந்துதான் தெரிகிறது. உனக்குத்தான் தீப்பிடித்தது போலவும் அதுவும் அதியனின் தகடூரிலிருந்து வருவதுபோலவும்… தோன்றுகிறது. நாம் எல்லோரும் வானத்தையும் மண்ணையும் பார்க்கிறது போல நீயும் பாரேன்…

ஒளவை :
இல்லை….அதியனிடம் நாம் சொல்லிவிட்டு வந்தோம். மீண்டும் வருவதாக.

இளைஞன் :
எத்தனையோ அரசர்களைப் பார்த்துப் போய் வருகிறோம் என்று சொல்லிவிட்டுத்தான் புறப்படுகிறோம். அந்த அரசரை எல்லாம் மீண்டும் போய்ப் பார்க்க முடியுமா ?

ஒளவை :
எல்லோரையும் போலவா அதியன் அஞ்சி ‘

இளைஞன் :
ஏய் ஒளவை ‘ உனக்கு என்ன நேர்ந்தது ? நீ யாரையாவது காதலிப்பாய் என்ற ஐயம் எனக்குண்டு. இப்பொழுது எனக்குத் தீர்ந்துபோய் விட்டது. நீ அதியனைத்தான் காதலிக்கிறாய்.

ஒளவை :
என்ன பேதைமை இது ‘ நம் மீது அன்பு காட்டிய புரவலரிடம் நாம் அன்புகாட்டுவது காதலாகுமா ?

இளைஞன் :
அதியன் ஆண்மகன்…

ஒளவை :
எந்தப் பெண் இன்று புரவலராய் இருக்கிறாள்.. இது ஆடவர் உலகமாகிவிட்டது. அதனால் ஆடவர்தான் புரவலராகவும் இருக்கிறார்கள். அதியன் நமக்குப் புரவலன்.

இளைஞன் :
இருந்தாலும் உனக்கு அதியன் மீது ஒரு தனி ஈடுபாடு இருக்கிறது. வானத்தைப் பார்த்தால் எங்களுக்கெல்லாம் நிலவுதான் தெரிகிறது உனக்கு அதியன் தெரிகிறான்.

ஒளவை :
ஒரு பெண் அன்பும் தோழமையும் ஓர் ஆடவனிடம் காட்ட மாட்டாளா ?

இளைஞன் :
அப்படிக் காட்டப்படுபவன் காதலனாகத்தான் இருக்கவேண்டும்.

ஒளவை :
தேவை இல்லை.. அப்படித்தான் இருக்கும் என்றால் இந்த உலகம் இப்படிச் சுருங்கிப் போய் விடும்(தன் உள்ளங்கையைக் காட்டுகிறாள்)

இளைஞன் :
ஒளவை நீ காதல் வயப்படாதவளாக இருந்தால் இவ்வளவு உணர்வுபட எப்படி உன்னால் அகப் பாடல்களைப் பாட முடியும் ?

ஒளவை :
(அமைதியாக இருந்துவிட்டு) அதனால் அதியனைக் காதலிக்கிறேன் என்கிறாயா ? இந்த அகப் பாடல்களை அதியனைச் சந்திக்கும் முன்பு நான் பாடவில்லையா ? அப்பொழுது யாரைக் காதலித்தேன் என்று கருதுகிறாய்…

பாணர்-1 :
என்ன ஒளவை… இந்த வம்பனிடம் என்ன பூசல் ?

ஒளவை :
ஒன்றுமில்லை. அதியனைப் பற்றி நான் எப்பொழுதும் பேசுவதால் அதியனை நான் காதலிக்கிறேனாம்.

பாணர்-1 :
அப்படிக் காதலித்தால் தான் என்ன தவறு ?

ஒளவை :
காதலிப்பது ஆண் பெண் இயல்பு. ஆனால் ஆணிடம் பெண்ணும், பெண்ணிடம் ஆணும் அன்புகாட்டுவது காதலாகிவிடுமா ?

பாணர்-1 :
இல்லை நாம் கலைஞர்கள். நமது கூத்துகளின் போது எத்தனையோ பேருடன் சேர்ந்து ஆடுகிறோம். ஆண்களும் பெண்களுமாய்.. ஆடுகிறவர்கள் எல்லாம் காதலர்களா ? எத்தனையோ புரவலர்களால் சீராட்டப்படுகிறோம். அன்பு காட்டுவோர் அனைவரும் காதலர்களா ? அவன் இளைஞன்… ஆண் பெண் உறவை அவனால் அப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்.

இளைஞன் :
என் வாயை நீங்கள் இருவரும் அடைத்து விட்டார்கள். நல்லது. ஒளவை உனது அகப் பாடல்களில் வரும் தலைவியர்கள் ஏன் அடக்க மில்லாதவர்களாக இருக்கிறார்கள்…

பாணர்–1 :
எதைவைத்துச் சொல்கிறாய் ?

இளைஞன் :
(பாணரை நோக்கி) அவளுடைய பாலைப் பாடலை எடுத்துக் கொள்ளுங்கள். காதலர் கானகத்துக்குத் தன்னையும் அழைத்துக் கொண்டு சென்றால் உடம்பில் உடம்பு புகுவது போன்று அணைப்புக் கிடைக்கும் என்கிறாளே ‘ தனது காமநோய் மார்பகங்களுக்கிடையில் முளைத்து இன்று உலகமெல்லாம் நிழல் பரப்பி நிற்கிறது என்கிறாளே ‘

பாணர்–1 :
ஏன் இதையும் சொல்லேன். மூட்டுவேன் கொல். தாக்குவேன் கொல். ஆ அ…ஒ எனக் கூவுவேன் கொல், என்ற தலைவி கூற்றாக வரும் பாட்டு…

இளைஞன் :
ஆமாம்–அதையுந்தான்…. இப்படியெல்லாம் ஒரு பெண் பேசலாமா ?

ஒளவை :
ஒரு பெண் எப்படிப் பேசவேண்டும் என்று சொல்கிறாய் ?

இளைஞன் :
கொஞ்சம் குனிந்து, சிறிது நாணி, சிறிது அஞ்சி… மெல்லப் பேசி… உணர்வுகளை ஒடுக்கிக் கொண்டு.

ஒளவை :
இப்படி எல்லாம் பெண் இருக்கிறாள் என்று சொல்கிறாயா ? இருக்க வேண்டும் என்று சொல்கிறாயா ?

இளைஞன் :
இருக்கிறாள். அப்படி இல்லாவிட்டாலும் இருக்க வேண்டும்.

ஒளவை :
இருக்க வேண்டும் என்பதுதான் உன் விருப்பம். அதனால் அவள் குரலை முடக்கிவிட்டார்கள். ஓர் ஆண் தனது நிறைவேறாத காதலை உலகுக்கு அறிவிக்க மடல் ஏறுகிறான். பனங்கருக்கால் உடலைக் கீறுகிறான். தன் காதலியின் உருவைக் கொடியில் எழுதி உயர்த்திப் பிடித்து ஊர்வலம் போகிறான்…

இளைஞன் :
அவன் ஆண். தன் உணர்வை எப்படியும் வெளியிடுவான்.

ஒளவை :
பெண் உணர்வற்றவளா ? பெண்ணுடைய உணர்வை ஆடவனே ‘ நீ உண்மையில் எதிர் கொண்டதுண்டா ? ஆடவர் படைப்பில் பெண் அமைதி காக்கலாம். என் படைப்பில் பெண் ஆரவாரம் செய்வாள். ஆடவர் படைப்பில் பெண் கூண்டுக்குள் முடங்கலாம். என் படைப்பில் அவள் சிறகு விரிப்பாள். ஆடவர் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளை என் தலைவியர் ஏற்க மாட்டார்கள் ‘ என்னுள் பெண்ணின் அச்சமெல்லாம் அற்றுப் போகிறது. நான் பெண்ணின் உண்மை மனத்தோடு பேசுகிறேன். அது எந்த நெருக்கத்திலும் ஆடவர் நெருங்க முடியாத மனம். கட்டுப்பாடுகள் அறியாத காலத்தில் இருந்த சிட்டுக்குருவியின் மனம். பெண்ணை ஒடுக்கினால் அது முட்டுவேன் என்கிறது தாக்குவேன் என்கிறது. கூவுவேன் என்கிறது. இப்படிப் பேசமுடியாத பெண் ஊமையாகிறாள். அல்லது பேயாடுகிறாள். ஆனால், என் பாட்டுத் தலைவியர் ஊமையும் அல்லர் பேயாடுகிறவரும் அல்லர். உணர்வுகளைப் பேசுகிறவர்கள்… அந்தப் பெண் குரலை (பாணரைப் பார்த்து) நீங்கள் கேட்பீர்களோ ? நீ கேட்பாயா ? இல்லை.. இனி ஒருகாலம் வரலாம். அப்பொழுது கட்டுக்களிலிருந்து விடுபடும் ஒரு மனித மனம் பெண் குரலைக் கேட்கும். பிசிறில்லாதபடி கேட்கும்.

பாணர்–1 :
அதனால்தான் வெள்ளிவீதியைப் போல நானும் காதலனைத் தேடி வெளியில் புறப்படுவேன் என்று பாடினாயோ ?

ஒளவை :
ஆமாம்… இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காத இயற்கையின் அறைகூவல் வெள்ளிவீதியினுடையது. அதை நான் கேட்டேன்… என்னை யொத்த எயினர் பெண் கேட்டாள் (இளைஞனைப் பார்த்து) நீ கேட்டதுண்டா ?

இளைஞன் :
(தலையை வேகமாக ஆட்டி) இல்லை.

ஒளவை :
நீ எங்கே கேட்கப் போகிறாய்… ? ஆடவனின் விருப்பத்தைப் பெண்குரலாக யாராவது ஒரு புலவன் பாடுவான்….அதைப் போய் நீ கேட்டுச் சுவை..

பாடினி-1 :
ஒளவை….உன்னுடைய குரலை எங்கள் உள்மனம் கேட்கிறது…அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு வேட்கை எங்கள் குருதியில் சேர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. யாராவது இதைப் பேச மாட்டார்களா என்று ஏங்குகிறது… உன் சொற்களால் ஒளவை, நீ எங்களை நிறைவு செய்கிறாய்…. நாங்கள் சொல்ல முடியாமல் தவித்தது இதுதான் என்று எங்களுக்கு அடையாளம் காட்டுகிறாய். இப்படி நீ அடையாளம் காட்டியதற்குப் பிறகும் எங்களால் அதை வெளிப்படையாகப் பேச முடியவில்லையே ‘ ஆமாம் என்று தலையைக் கூட அசைக்க முடியவில்லையே ‘

ஒளவை :
இல்லை…எல்லா மனமும் ஒருநாள் வெளிப்படும்… அப்பொழுது தலையாட்டுதல் இல்லை… பெரு முழக்கம் கேட்கும்…

பாடினி-2 :
ஒளவை உனக்குப் பிடித்த வெள்ளிவீதியின் பாடல் ஒன்றை இசைக்கட்டுமா ?

ஒளவை :
இந்த நேரத்துக்கு அதுதான் சரியானது ‘

பாடினி-2 :
சிறுவெள்ளாங்குருகே ‘ சிறுவெள்ளாங்குருகே ‘

பாடினி-1 :
சிறுவெள்ளாங்குருகே ‘ சிறுவெள்ளாங்குருகே ‘

பாடினி-2 :
துறைபோகு அறுவைத் தூமடி அன்ன நிறங்கினர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே ‘

பாடினி-1 :
துறையில் துவைத்த தூய வெள்ளுடைபோல் சிறகுகள் வெளுத்த சிறுவெள்ளாங்குருகே ‘

பாடினி-2 :
எம்மூர்வந்தெம் ஒண்டுறை துழைஇச் சினைக் கெளிற்றார்கையை அவர் ஊர்ப் பெயர்தி

பாடினி-1 :
எம் ஊர்த்துறையிள் பளிங்குநீர் துழாவி சினைக்கெளிறு தின்று அவர் ஊர் செல்வாய் ‘

பாடினி-2 :
ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும்…

பாடினி-1 :
அங்குள்ள இனிய நீர் எம்மூர் பரவும்…

பாடினி-2 :
கழனி நல்லூர் மகிழ்நர்க்கு என் இழைநெகிழ் பருவரல் செப்பாதோயே ‘

பாடினி-1 :
கழனி நல்லூர்க் காதலரிடம் போய் என் அணிகலன் நெகிழ்கிற அவலம் கூறாயோ ‘

ஒளவை :
எவ்வளவு அருமையான பாடல் இது ‘

பாடினி-2 :
வெள்ளாங்குருகு எங்கள் ஊரில் உள்ள துறைக்கு வந்து மீனைப் பிடித்துப் பசியாறும் என்று சொல்லாமல் சினைக்கெளிறு என்று ஏன் சொல்ல வேண்டும்…

ஒளவை :
(மெல்லியதாய்ச் சிரிக்கிறாள்)

இளைஞன் :
ஐய…இதுகூடத் தெரியாதா ? சினைக் கெளுத்தி தான் நல்ல சுவையாய் இருக்கும். (அப்பொழுது பாடினி-1 ஓரத்தில் போய் வாந்தி எடுக்கிறாள்)

இளைஞன் :
என்ன நீ மீனே சாப்பிடாத பார்ப்பனர் வீட்டுப் பெண் போல ‘ உன் வீட்டுமுன்னால் தான் மீன் வலை காய்கிறது. இப்பொழுது என்ன கெளுத்தி என்றாலே குமட்டுகிறது. வாந்தி வருகிறது.

பாடினி-2 :
சினைக்கெளுத்தி என்றாயல்லவா ? அதுதான் காரணம். ஏதோ ஒரு வெள்ளாங்குருகு இந்தக் கெளுத்தியைக் கொத்திவிட்டது.

இளைஞன் :
எனக்கு ஒன்றுமே புரியலையே ‘

ஒளவை :
வெள்ளிவீதியின் பெண்குரல் அவளுக்குப் புரியும். எனக்குப் புரியும். உனக்கு ஒருபோதும் புரியாது…. (மீண்டும் வானத்தைப் பார்த்து) விளிம்பில் தீப்பிடித்து எரியும் முகில் எதையோ சொல்லிவிட்டு மீண்டும் நகர்கிறது. அது தகடூர் இருக்கும் திசை….

இளைஞன் :
மீண்டும் அதியனிடமா ? ஒளவை ‘ நாம் புறப்பட்டு வரும்போதே அங்கே போர் முரசு ஒலிக்கத் தொடங்கி விட்டது. இதோ பார் ‘ நமக்கு வேண்டிய பொருள் கிடைத்துவிட்டது…

ஒளவை :
அஞ்சி, வேந்தர் வேந்தன் அல்லன். ஒரு குறுநிலத் தலைவன்…அவனுக்குப் படைக்கலம் மட்டும் போதாது…. பாட்டும் வேண்டும் ‘

இளைஞன் :
ஒளவை…

ஒளவை :
நீங்கள் வந்தாலும் வராவிட்டாலும் அதியனிடம் நான் செல்வேன்.

ஒளவை 10

களம்புகல் ஓம்புமின்

(போர் முரசொலி… போர்க்கள ஆரவாரம் — ஒளவையின் குரல்)

எதிரிகளே ‘ எதிரிகளே ‘

வாருங்கள் களத்திற்கு…

எம்மிலும் ஒருவீரன் உள்ளான்…

நாளொன்றுக்கு எட்டுத்

தேர் செய்யும் தச்சன்…

ஒரு திங்கள் செய்த

தேர்க்கால் போல

எம்மிலும் ஒருவீரன் உள்ளான்

எம்மிலும் ஒருவீரன் உள்ளான்…

(படைஆரவாரம்)

யாவராய் இருந்தாலும் எதிரிகளே வாருங்கள் ‘

போர் செய்வோம் என்ற உறுதிமொழி பேணுங்கள் ‘

எமது தலைவனைக் காணாத மட்டுக்கும்

போர் செய்வோம் என்று உறுதிமொழி பேணுங்கள்.

(மீண்டும் படை ஆரவாரம்)

(ஒரு பெண் நடந்து செல்லும் ஓசை… தொடர்ந்து ஆண்குரல்)

ஆண்குரல் :
இடுப்பில் மணிக்கோவை இன்னிசை எழுப்ப….

மைதீட்டிய கண்ணுடன் வருகிற விறலியே ‘

உன் பெரிய நாட்டில் போர்வீரன் உண்டோ…

என்னோடு மோதும் போர்வீரன் உண்டோ ?

பெண்குரல் :
வீரன் உண்டோ என்று வினாவும் அரசே… ‘

வீரன் உண்டோ என்று வினாவும் அரசே ‘

கோலுக்கு அஞ்சாத பாம்புகள் போன்ற

இளைய வீரர் ஏராளமுண்டு…

அவர் மட்டுமல்லர் அவர்மட்டுமல்லர்…

பொதுமன்ற மரத்தின் கிளைகளில் கட்டிய

முழவின் கண்ணில் காற்று மோதினால்

முழவின் கண்ணில் காற்று மோதினால்…

(முழவின் தென்கண்ணில் காற்று மோத வரும் உறுமி ஒலி)

அதுபோர் என்று ஆரவாரம் செய்யும்

எமது தலைவன் அதியனும் உள்ளான்

எமது தலைவன் அதியனும் உள்ளான் ‘

(போர் ஆரவாரம்)

***********************************************************************************

நட்பின் இசை

(அதியனின் இல்லத்தில் ஒளவை. ஒரு வீரன் ஒளவையின் முன் வந்து

வணங்குகிறான்)

வீரன் :
ஒளவை ‘ மழவர் பெருமான், தங்களைக் காணவந்து

கொண்டிருக்கிறார்.

ஒளவை :
என்னைக் காண அரசன் வருவதா ? நானே நேரில்

போய்ப் பார்க்கிறேன்.

வீரன் :
ஒளவையே ‘ அரசர் தங்களை யாரினும் கூடுதலாக

மதிக்கிறார்… திருக்கோவலூர் மன்னருடன் நடந்த

போரில் எங்கள் வெற்றியை உறுதிப்படுத்தியவை

எங்கள் படைக்கலன்கள் மட்டுமல்ல… உங்கள்

பாடலுந்தான். எங்கள் வீரர்கள் கையில்

வில்லையும் நாவில் உங்கள் சொல்லையும் ஏந்தியே

களம் சென்றார்கள். வெற்றியோடு திரும்பியவர்கள்

வில்லைக் கீழே போட்டாலும்…சொல்லை இசைத்த

படியே இருக்கிறார்கள்.

ஒளவை :
போதும் வீரனே ‘ உன் புகழ்ச்சி மொழி என் செவியில்

நிறைத்து முகமெல்லாம் வழிகிறது. சரி. அதியனைக்

காண நானே புறப்படுகிறேன். (எதிரில் அதியன்

வீரர்களுடன் வருகிறான்.)

ஒளவை :
அதியன் வணக்கம் அதிய.. நீ சொல்லி விட்டிருந்தால்

நானே உன்னைப் பார்க்க வந்திருக்க மாட்டேனா… ?

அதியன் :
அதனால் என்ன ? எனக்கு நீயார் ? என் ஆருயிர்த்

தோழியைக் காண வருவதற்கு… இந்த அரசப்

பதவி தடையாய் நிற்குமோ… ? ஒளவை ‘ உனக்கு

ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன்.

ஒளவை :
இனிமேல் நீ தருவதற்கு என்ன இருக்கிறது.

உன் அன்புத் தோழமையைத் தவிர வேறென்ன

எனக்குத் தேவை ?

அதியன் :
உன் கருத்துக்கு நான் சூட்டும் பொன் பூ மாலையன்று

…உன் மேனியில் போர்த்தும் பட்டாடையுமன்று…..

உன் நாவுக்குச் சுவையானது…

ஒளவை :
ஏதாவது புதிதாய் மது வந்துள்ளதா ? இன்று மூழ்கி

விட வேண்டியதுதான்.

அதியன் :
என்னைவிட முடாக்குடியளாய் இருக்கிறாயே ‘

நாவுக்குச் சுவையென்றால் மது மட்டுந்தானா ?

ஒளவை :
பிறகு ஏதாவது புதுவகை உணவா ? கொழுத்த

புலால் உணவும் மணக்கும் சாலி அரிசியும் சேர்த்த

புதுவகைச் சோறா ?

அதியன் :
ஐயோ…. ஐயோ.. ‘ மது இல்லாவிட்டால் புலால்..

வேறெதுவும் உன் நாவுக்குச் சுவை தராதா ?

ஒளவை :
உன்னைப் புகழ வரும் சொல். அதுவும் இனிக்கும்.

அதியன் :
அது எனக்கு மதுவைக் காட்டிலும் மயக்கம் தரும்.

ஆயினும் ஒளவையே நான் தரப்போவது அரியதொரு

கனி ‘

ஒளவை :
என்ன, அரியதொரு கனியா ? உன் முன்னோர்கள்

கடலுக்கு அப்பாலிருந்து கரும்பைக் கொண்டு

வந்து தமிழ் நிலத்துக்கே முதலில் அறிமுகம்

செய்தார்கள் என்று சொல்வார்கள்…

அதியன் :
அது பழைய கதை…

ஒளவை :
அதனால் என்ன ? ஏதோ மேலுலகத்திலிருந்து

கரும்பினைக் கொண்டு வந்ததாக நம்புகிறார்கள்.

கரும்பை உன் முன்னோர்க்குக் கொடுத்தவர்களின்

வழியினர் இங்கு வந்தால் அவர்கள் தங்குவதற்கு

ஒரு விருந்து மனைகட்டி வைத்திருக்கிறாய்

அல்லவா ? அங்குவரும் அவர்களை மேலுலகத்தில்

இருந்து வரும் தேவர்கள் என்றே நினைக்கிறார்கள்.

அதியன் :
அப்படியா ?

ஒளவை :
ஆமாம்…அவர்கள் மஞ்சள் நிறத்தில் செம்பட்டைத்

தலையுடன்… மூக்குச் சப்பையாய்…மழமழவென்று…

அதியன் :
ஆமாம்…ஆமாம் அவர்கள் தோற்றம் நம்மிலிருந்து

வேறுபட்டதுதான். ஆனால் ஒளவை இது அங்கிருந்து

வந்த கனியன்று ‘

ஒளவை :
பிறகு…

அதியன் :
தகடூருக்கு அடுத்த கொல்லிமலை அடுக்குகளிலே,

ஆமாம்… அந்தக் காடுகளுக்குப் போயிருந்தேன்.

அங்குள்ள எயினர்கள் ஒரு மலைப்பிளவின்

உச்சியில் ஒரு தனி நெல்லிமரம் நிற்பதாகச்

சொன்னார்கள்.

ஒளவை :
அப்படியா

அதியன் :
அதனுடைய கனிதான் இது. (மடியிலிருந்து ஒரு

துணிப்பையை விரித்து நெல்லிக்கனியை எடுத்து

ஒளவையிடம் நீட்டுகிறான்)

ஒளவை :
நீ சாப்பிடவில்லையா ?

அதியன் :
நான் வருகிற வழியிலேயே சாப்பிட்டுவிட்டேன்.

ஒளவை :
ஒரே ஒரு நெல்லிக் கனியை கொண்டு

வந்திருக்கிறாயே… இதில் என்ன அருமை இருக்கிறது ?

அதியன் :
நீ சாப்பிடு, பிறகு சொல்கிறேன்.

ஒளவை :
ஏன் புளிப்பு மிகுதியோ ? அதனால் என்ன ? நாம்

அருந்தும் கள்ளைவிடவா புளிக்கப் போகிறது ‘

நீ பாதி சாப்பிடு.

அதியன் :
ஐயையோ…..ஒன்றுக்குமேல் சாப்பிடுவதா ? என்

பல் கூசுகிறது ‘

ஒளவை :
என் பல்லுக்குத் தேர்வு வைத்துப் பார்க்கிறாயா ?

தா…நானே சாப்பிடுகிறேன்… இன்னும் ஏதாவது

கூட இருந்தாலும் கொடு (ஒளவை அவனிடம்

இருந்து காயை வாங்கிச் சாப்பிடுகிறாள்) என்ன

அதிய ? அப்படி ஒன்றும் புளிக்கவில்லையே ‘

(மேலும் ஒரு முறை கடித்து) அடடா….எச்சில்

ஊற ஊற வாயெல்லாம் இனிக்கிறதே ‘ என்ன

நெல்லி இது ? மேலும் பறித்துவரக்கூடாதா ?

காவலன் :
அந்த நெல்லி மரத்தில் இந்த ஒரு கனிதான் இருந்தது.

அதியன் :
ஏய்…. நீ இங்கிருந்து போ…

காவலன் :
அம்மையே ‘ இதைச் சாப்பிட்டவர்கள் மரிக்க

மாட்டார்கள்.

அதியன் :
ஏய் போகமாட்டாய் நீ ?

காவலன் :
நீங்கள் நெடுங்காலம் வாழவேண்டும் என்பதற்காக

அரசர் அந்த ஒற்றைக் கனியையும் உங்களுக்கே

தந்துவிட்டார்கள்…

ஒளவை :
அதியன் வரும் வழியில் ஒன்றைச் சாப்பிட்டதாக….

காவலன் :
அது பொய்…

அதியன் :
டேய்….

(காவலன் ஓடுகிறான்)

ஒளவை :
என்ன வேலை செய்தாய் அதிய….. என்னிடமும்

பொய்யா ?

அதியன் :
வரும் வழியில் நான் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டது

உண்மை. ஆனால், இந்த அருநெல்லியை என்

ஒளவைக்குத் தந்தேன்.

ஒளவை :
நீ உண்டிருக்கலாமே ‘

அதியன் :
இல்லை. இதை நீ உண்டு நிறைய நாள் வாழ்ந்து

நிறையப் பாடல்களை இசைக்கவேண்டும் என்பது

என் விருப்பம்.

ஒளவை :
நீ உண்டு நீண்ட நாள் வாழ்ந்து உன் மக்களைக்

காக்க வேண்டும். என்னை உண்ணச் செய்துவிட்டாயே ‘

அதியன் :
அதனால் என்ன ? ஒளவை. எப்பொழுதும் களத்தையே

எதிர்நோக்கியுள்ளது என் வாழ்வு. எனக்குப் பெருமை

களச்சாவில் தான்….

ஒளவை :
அதிய… ‘

அதியன் :
களச்சாவில்லாது வெறுமனே செத்த மன்னர்களைப்

புல்லில் பரப்பி.. அவர்களுக்கு நான் மறை

அந்தணரை வைத்துச் சடங்குகள் செய்த பின்னர்,

அந்த உடல்களை வாளால் கீறி… வீரர்கள் சென்ற

உலகம் செல்க என்று அடக்கம் செய்வார்களே ‘

அத்தகைய போலிக்களவுச் சாவு எனக்கு வேண்டாம்.

நான் போரில் மடிவேன்…. இந்த நெல்லிக்கனி,

கருவியால் வரும் சாவைத் தடுக்காது….

ஒளவை :
அதிய…. சாவு என்பதை யார் முன்கூட்டிச் சொல்வார்…

நான் பாடினி என்பதால் என் நெஞ்சை உறுதிப்படுத்திச்

சொல்கிறேன். களச்சாவுக்கு முன்பும் இயற்கைச் சாவு

நேரலாம் அல்லவா ?

அதியன் :
போருக்கான நேரம் இதுவன்று என்றிருந்தால்….

எனக்கும் இயற்கைச் சாவு நேரலாம். இதோ பார்

…. திருக்கோவலூர் மன்னன் என்னிடம் தோற்ற

போதும் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையுடன்

உறவு கொண்டாடுகிறான்… கொல்லி மலைத்

தலைவன் வல்வில் ஓரியைக் கொன்று, கொல்லி

மலையையும் சேரனுக்குக் கொடுத்துவிட்டான்….

கொல்லிமலையின் மறுபகுதியாகிய தகடூர், சேரனின்

கண்ணை உறுத்துகிறது. இந்தப் போரில் பழுதுபட்ட

வில்லையும் வாளையும் இன்னும் ஒக்கிடவே நேரம்

இல்லை…. புதுக்கருவிகள் செய்யவும் காலம் இல்லை…

அதற்குள் எதிரிகளின் போர் முயற்சி…ஒளவை…சாவை

நான் முன் கூட்டியே தீர்மானித்துவிட்டேன்… உன்

சொல் என் காயத்தில் வித்தாய் விழும். அதிலிருந்து

நூறு நூறு அதியமான்கள் முளைப் பார்கள்.

ஒளவை :
அதிய.. மதுவைப் பங்கிட்டு உண்போமே ‘ புலால்

உணவைச் சேர்ந்தே சுவைப்போமே ‘ அதுபோல…

இந்த நெல்லிக்கனியை நீ பாதி… நான் பாதி

உண்டிருந்தால் என்ன ?

அதியன் :
யாராவது சாவைப் பாதி பாதியாகப் பங்கிட்டுக்

கொள்வார்களா ? அதுபோலத் தான் உயிர்ப்பையும்.

இதை முழுமையாக உண்டால் தான் முழுப்பயன்…

ஒளவை :
(உன் அன்பு எப்பேர்ப்பட்டது…)

பெரிய மலைப் பிளவிடத்தே நின்ற

சிறிய இலை நெல்லித் தீங்கனியை

சாதல் நீக்கும் அதன் அரிய பண்புணர்ந்தும்

அதனைத் தனக்கெனக் கொள்ளாது

எனக்கீந்தாயே ‘ அதிய ‘

நீ நீலமணிமடற்று ஒருவன் போல நீடுழி வாழ்க

அதியன் :
நீலமணிமிடற்று ஒருவன்…. சிவன்…

ஒளவை :
சாதலுக்குக் காரணமாகிய நஞ்சை உண்டும் சிவன்

சாகாதிருக்கிறான். சாதல் தவிர்க்கும் கனியை

எனக்குத் தந்தும் நீ சாகாதிருக்க வேண்டும்…

அதியன் :
நல்லது ஒளவை… நான் உனக்கு நெல்லிக்கனி

தந்த செய்தியை இவ்வளவு சிறந்த உவமையுடன்

பாடிய பிறகு…. நான் வாழ்வேன்.. காலம் காலமாக….

உன் பாட்டு வரிகளில். சாவுக்குப் பிறகும் சாகாது

வாழ்வேன்…ஒளவை…உன்னை ஒரு கனியால் நீடுழி

வாழவைக்க நினைத்தேன்… நீ என்னை உன் சொல்லால்

வாழ வைத்துவிட்டாய்…. உன் பாட்டு எனக்கு நீ தந்த

நெல்லிக்கனி… அதனால்… இந்தக் கனியை நான் மட்டுமே

உண்டேன் என்று கவலைப்படாதே.

ஒளவை :
என் பாட்டில் அப்படி என்ன இருக்கிறது என்று

பாராட்டுகிறாய். என் சொல்…

யாழிசை போல இன்பம் தராது

காலத்தோடும் பொருந்தி இராது

பொருளென்று எதையும் அறிய வராது…

புதல்வர் தம் மழலை தந்தையர்க்கு அருளும்…

அதுபோலவேதான் என்வாய்ச் சொல்லும்….

(பாடுகிறாள்)

யாழொடும் கொள்ளார் பொழுதொடும் புணாரர்

பொருள் அறிவாரார்… ஆயினும் தந்தையர்க்கு

அருள் வந்தனவாறு புதல்வர்தம் மழலை

என்வாய்ச் சொல்லும் அன்ன… ஒன்னார்

கடிமதில் அரண்பல கடந்த….

நெடுமானஞ்சி நீ அருளல் மாறே..

அதியன் :
இந்தப் பாட்டுக்குப் பரிசளிக்க நான் இன்னொரு நெல்லிக்கனிக்கு எங்கு போவேன் ? ஒளவை இப்பொழுது ஒன்றை உணர்கிறேன் நான்….

ஒளவை :
என்ன அதிய…

அதியன் :
உனக்கு முன்னால் நான் வறியவனாகவே நிற்கிறேன்.

ஒளவை :
பாட்டின் அழகை அன்பால் மதிப்பிடும் மட்டிலும் … என் அதியன் ஒருபோதும் வறியன் ஆக மாட்டான்…

அதியன் :
உன்னிடம் நான் ஓர் உதவியும் கேட்பேன்…

ஒளவை :
சொல் அதிய ‘

அதியன் :
அரசியல் உதவி.

ஒளவை :
அரசியல் உதவியா ? என்னாலா ?

அதியன் :
ஆமாம்….ஒளவை ‘ இந்தச் சின்னஞ்சிறிய தகடூரைச் சுற்றிலும் நடக்கும் போர் முயற்சிகளை நீ நன்கறிவாய். வழிவழி வந்த எதிரிகளோடு புது எதிரி ஒருவனும் தோன்றி இருக்கிறான்.

ஒளவை :
யாரவன் ?

அதியன் :
தொண்டைமான்…அவன் என்னிடம் பகை கொள்ளக் காரணம் இல்லை.

ஒளவை :
நாடுகவர வேண்டும் என்பது ஒன்றுதான் அரசுகளுக்கு இடையில் ஏற்படும் பகைக்குக் காரணம் இல்லையா ?

அதியன் :
சரியாகச் சொன்னாய் ஒளவை ‘ தகடூர் குறித்துத் தொண்டைமானுக்கும் புதுப்பசி ஏற்பட்டிருக்கிறது. ஒளவை… போரில் மடிவதை மன்னனாகிய நான் பெருமைக்குரியதாகக் கருதுகிறேன். என் மக்கள் இந்த மண் பொருட்டுச் சாவது என்னை வருத்துகிறது. தொண்டைமானின் பகையால் என் மக்களுக்கு நேரும் கேடு கூடுவது குறித்துக் கவலைப்படுகிறேன்…. அத்துடன் தொண்டை நாட்டு மக்களுக்கு நேரிடும் துன்பத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். இதைத் தவிர்க்க நீதான் உதவவேண்டும்.

ஒளவை :
நான் என்ன செய்ய வேண்டும் ?

அதியன் :
தொண்டைமானும் பாட்டிலும் கூத்திலும் விருப்பம் உடையவனாம். அதிலும் உன் பாடல்களில் அளவற்ற ஈடுபாடு உடையவனாம். அதனால்…. அமைதிக்காக என் பொருட்டு அவனிடம் தூதுசெல்லவேண்டும்.

ஒளவை :
எனக்கு மகிழ்ச்சி தரும்பணி இது அதிய… (தனக்குள் சிரிக்கிறாள்)

அதியன் :
எதற்காகச் சிரிக்கிறாய் ஒளவை ?

ஒளவை :
வேறொன்றும் இல்லை… பாணர்கள் தலைவர்கள் பொருட்டுத் தலைவியரிடம் காதல் தூது போவார்கள்… பாடினியாகிய யான் உன் பொருட்டு அரசியல் தூது போகிறேன்.

அதியன் :
உன் பாண்பணி அரசியல் தூது நடத்தியது என்ற புது வரலாறு உன்னால் தொடங்கட்டுமே.

Series Navigation

இன்குலாப்

இன்குலாப்