‘ஒரு வெள்ளை அறிக்கை ‘ மற்றும் சில கவிதைகள்

This entry is part [part not set] of 22 in the series 20010825_Issue

தி.கோபாலகிருஷ்ணன்


1. ஒரு வெள்ளை அறிக்கை

விடியற்காலையில்

விதவை முகத்தில்

விழிக்கக் கூடாது

வெளியில் சென்றால்

அபசகுனமாய்

எதிர்வரக்கூடாது

சுப காாியங்களில்

மற்றவர்களுடன்

தலைகாட்டக்கூடாது

மஞ்சள் குங்குமம் மலர்கள்

கைவளை அணிகலன்

அறவே கூடாது

கண்ணாடியில்

முகம்

காணக்கூடாது

வண்ணப்

புடவை

உடுத்தக்கூடாது

புது வெள்ளைப் புடவையும்

வெளுக்காமல்

உடுத்தக்கூடாது

துளசிச் செடிக்கு

நீர்

ஊற்றக்கூடாது

வெந்நீாில்

குளிக்கக்கூடாது

இரவில்

உணவு கூடாது

உணவில்

உப்பு காரம் கூடாது

சிலருக்கோ

தலையில்

முடி கூடாது

மதச் ‘சதி ‘காரர்களுக்கோ

உயிரோட

இருக்கக்கூடாது

கூடாது கூடாது

இந்த சமுதாயம்

விதவையாய்

யாரும்

இருக்கக்கூடாதென்கிறது

ஆதலால்

விதவையே

நீ

சுமங்கலி ஆகிவிடு!

2

அவர்கள்

வெறும் கையோடுதான்

பேசிக்கொண்டிருந்தார்கள்

அவர்கள் மீது நீங்கள் ஏவிய

ஆயுதங்களைத்தான்

இப்போது ஏந்தியிருக்கிறார்கள்

அவர்கள்

வெள்ளைச்சட்டைக்காரர்கள்தான்

ரத்தம் சிந்த வைத்து

அதை சிவப்பாக்கியது

நீங்கள்தான்

3

இருட்டறைக்குள் தள்ளி அடைத்தேன்.

இருட்டையே விரட்டி விட்டது

தீபம்.

4.

எல்லாரும் செய்கிறாரென்று

எட்டுக்கால் கொண்டு

என் வீட்டிலும்

ஒட்டடை அடித்தேன்

வீட்டையே காணவில்லை

Series Navigation