ஒரு நாடகமும் மூன்று பார்வைகளும் (கிரீஷ் கார்னாடின் ‘அக்னியும் மழையும் ‘ நாடகத்தை முன்வைத்து ஓர் அலசல்)

This entry is part [part not set] of 22 in the series 20020707_Issue

வளவ.துரையன், ரகுராம், ஜெயஸ்ரீ


பார்வை : ஒன்று

துரோகமும் கருணையும்

வளவ.துரையன்

கன்னடப் படைப்புலகில் முக்கியமான ஓர் இடத்தைப் பெறுபவர் கிரீஷ் கார்னாட். படைப்பாளி, இயக்குநர், நடிகர், நிர்வாகி எனப்பல துறைகளில் இயங்கும் இவர் கன்னட நாடக உலகுக்கு ஆற்றியிருக்கும் பணி மகத்தானது. ஏற்கனவே இவருடைய பலிபீடம், நாகமண்டலம் போன்றவற்றை மொழிபெயர்த்திருக்கும் பாவண்ணன் இப்போது அக்னியும் மழையும் நாடகத்தையும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

‘எந்தப் பழமையிலும் இன்றும் உயிர்த்துடிப்புக் கொண்ட சாரம் ஒன்று அழுக மறுத்து இளமையாக நின்று கொண்டிருக்கிறது ‘ என்னும் சுந்தர ராமசாமியின் குறிப்பு ( தீராநதி-ஜூன் 2002) கவனிக்கத்தக்க ஒன்றாகும். இதனால்தான் புராணங்களில் இருந்த பாத்திரங்களையும் நடந்த சம்பவங்களையும் இன்றும் வாசிப்புக்கு உட்படுத்துவதோடு அவற்றில் உள்ள சமகாலத் தன்மையையும் உணர முடிகிறது.

மகாபாரதத்தின் வனபருவத்தில் 135-138 அத்தியாயங்களில் வரும் யவக்கிரிதனைப் பற்றிய குறிப்பு இந்நாடகம் தோன்ற வழிவகுத்திருக்கிறது.

பராவசு, அரவசு ஆகிய இருவரும் ரைப்ய மகரிஷியின் பிள்ளைகள். யவக்கிரிதன் என்பவன் மகரிஷியின் சகோதரனுடைய மகன். தன் தந்தைக்குச் சேர வேண்டிய புகழையும் பெருமைகளையும் தனது சித்தப்பா ரைப்ய மகரிஷி தடுத்து விட்டார் என்ற எண்ணம் யவக்கிரிதன் மனத்தில் புகைந்தவண்ணம் இருக்கிறது.

நாட்டில் பத்து ஆண்டுகளாக மழை இல்லை. நாடே அக்னியாகக் கொதித்துக் கொண்டிருக்கிறது. மழைக்காக இந்திரனின் இரக்கத்தைப் பெற வேண்டி அரசன் பெரிய யாகமொன்றுக்கு ஏற்பாடு செய்கிறான். அதற்குத் தலைமைப் பொறுப்பாளி பராவசு. யாகத்தை நடத்துகிறவன் யாகசாலையை விட்டு வெளியே வரக்கூடாது என்பது கட்டளை. திருமணமாகி ஓராண்டு மட்டுமே கழிந்த நிலையில் அன்பான மனைவி விசாகையைப் பிரிந்து பொறுப்பேற்கிறான் அவன். ஏழாண்டுகள் உருண்டுவடுகின்றன. யாகம் முற்றுப்பெறவில்லை. மழையும் வரவில்லை.

விசாகையை உள்ளூரக் காதலித்துக் கொண்டிருந்தவன் யவக்கிரிதன். ஆனால் கடுந்தவம் இயற்றி இந்திரனிடமிருந்து நேரிடையாக வரங்கள் வாங்க நினைத்துக் காட்டுக்குச் செல்கிறான். பத்து ஆண்டுக் கால தவத்துக்குப் பிறகு நாட்டுக்குத் திரும்புகிறான். அவன் உடல் தவக்கோலத்தில் இருந்தாலும் மனம் காமம் என்னும் அக்னியால் சூழப்பட்டு எரிந்து கொண்டிருந்தது.

அரவசு ஒரு நாடகப்பற்றாளன். நித்திலை என்னும் வேட்டுவப் பெண்ணுடன் அவன் காதல் புரிகிறான். சாதி பற்றிய தம்பட்டம் அவனிடம் இல்லை. இரக்கம், காதல், கருணை எல்லாம் நிரம்பியவன்.

காட்டைவிட்டு வந்த யவக்கிரிதன் பராவசுவின் குடும்பத்தைப் பழிவாங்கத் தன் முன்னாள் காதலி விசாகையுடன் உறவுகொள்கிறான். அவன் வேட்கைக்கு உடன்படுகிறாள் அவள். தற்செயலாக அங்கே வரும் அரவசுவுக்கும் நித்திலைக்கும் அந்த விஷயம் தெரிந்து விடுகிறது. ஊகத்தால் விஷயத்தை அறிகிற ரைப்ய ரிஷி சீற்றத்தில் பிரம்ம ராட்சனை ஏவி யவக்கிரிதனைக் கொல்கிறார். தப்பித்து ஓடுமாறு விசாகை கெஞ்சிக் கேட்டும் செல்லாத யவக்கிரிதன் அசுரனிடம் பலியாகிறான். விதியை மீறி வெளியே வராமல் இருந்த பராவசு மனைவியின் நடத்தை பற்றிக் கேள்விப்பட்டு நள்ளிரவில் யாருமறியாமல் ஆசிரமத்துக்கு வருகிறான். நடந்ததை ஒப்புக் கொள்ளும் விசாகை மகரிஷியின் ஆசையையும் தான் தீர்த்து வைக்க வேண்டியிருந்ததாகச் சொல்லிச் சீற்றமுண்டாக்குகிறாள். இதைக்கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகும் பராவசு தந்தையைக் கொல்கிறான். தந்தைக்கு ஈமக்கடன் செய்யும்படி தம்பியிடம் சொல்லி விட்டு யாகசாலை செல்கிறான் அராவசு. குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்லாததால் காதலியை அடைய முடியாதவனாகிறான் அரவசு. வருத்தத் துடன் யாகசாலைக்குள் செல்லும் போது சொந்த சகோதரனாலேயே கொலைக்குற்றம் சுமத்தப்படுகிறான். அடித்துத் துரத்தப்படுகிறான். பிறகு அவன் நாடகக் காரர்களுடன் இணைந்து யாகசாலையில் இந்திர விஜயம் நாடகம் நடத்த வருகிறான்.

நாடகத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்யும் இந்திரனைத் துரத்தும் விருத்திராசுரனாக நடிக்கும் அரவசு தன்னை மறக்கிறான். வாழ்வின் நிகழ்ச்சிகள் நினைவைத் துரத்த யாகசாலைக்குத் தீ மூட்டுகிறான். நெருப்பில் பராவசு தன் முடிவை விரும்பி ஏற்கிறான். இறுதியில் நித்திலையைக் கருணைத் தாயாக்கி, அவள் உயிருடன் இருந்திருந்தால் எதைக் கேட்க விரும்புவாளோ அதை இந்திரனிடம் கேட்கப் போவதாகச் சொல்லிவிட்டு பிரம்ம ராட்சசனுக்கு விடுதலை கேட்கும் அரவசு மனத்தில் உயர்கிறான். உடனே பத்து வருஷமாகப் பெய்யாத மழை பெய்யத் தொடங்குகிறது. துரோகமே வடிவான பராவசு யாக அக்னியில் மூழ்க, கருணையே வடிவான அரவசுவின் கபடற்ற அன்பும் காதலும் மழையைக் கொண்டு வருகிறது.

கதையின் ஊடே சில நம்பிக்கைகளைக் கார்னாட் கேள்விக்குள்ளாக்குகிறார். உயர்சாதிக் ‘கடவுள்கிட்டே பேசணுமின்னா காட்டுக்குள்ள போயி தவம் செய்யணும். இல்லைன்னா யாரும் உள்ளே நுழைஞ்சிடாதபடி சுற்றி வேலி கட்டிட்டு நடுவுல உக்காந்து தவம் செய்யணும். எங்க பக்கத்துல இதெல்லாம் கெடையாது . இந்த இந்த அமாவாசையில உற்சவமின்னு முதலிலேயே சொல்லிடுவாரு சாமியாரு. அதே நாளில் எல்லார் கண் முன்னாலயும் அவர் மேலேயே சாமி வந்து நாங்க கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிடும். இதுல மூடி மறைக்கிற விஷயம் எதுவும் இல்லை ‘ என்று வேட்டுவப் பெண் கூறும்போது கடவுள் உலகம் பற்றி உள்ள வித்தியாசங்களின் சூட்சுமம் புலப்படுகிறது. இதுபோலவே ‘என் துஷ்டத்தனங்களையும் ஒத்துக் கொண்டு இடம்தருகிற ஞானம்தான் வேண்டும் ‘ என்று இந்திரனிடம் யவக்கிரிதன் கேட்பது முக்கியமான ஒன்று. மன எண்ணங்கள் முக்கியமானவை. இயல்பானவை. அவை இருந்தால்தான் அவன் மனிதன். அவை அகன்ற வாழ்வு வாழ்வே அல்ல.

பாவண்ணனின் சரளமான மொழிபெயர்ப்பு ஆற்றொழுக்காகச் செல்கிறது. பெரும்பாலும் மேடைக்காக எழுதப்படும் நாடகங்கள் படிக்கும் பொழுது களைப்படையச் செய்வதுண். ஆனால் ஆறு முதல்நிலைப் பாத்திரங்களை முன்வைத்து நகர்த்தப்படும் இந் நாடகம் வாசகனின் கைப்பற்றி கூடவே இழுத்துச் செல்கிறது. பார்க்க வாய்ப்பில்லாவிட்டாலும் படிப்பதற்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் நுால்.

பார்வை : இரண்டு

பெண்மையும் சூழ்ச்சியும்

ரகுராம்

இருபது முப்பதாண்டுகளுக்குட்பட்ட சமீப காலத்தில்தான் ஓரளவு பெண்களின் முன்னேற்றம் எல்லாத் துறைகளிலும் சாத்தியமாகியிருக்கிறது. கல்வி கிடைத்திருக்கிறது. அறிவுத்துறைகளில் அவர்களின் பங்கேற்புக்கு முக்கியத்துவம் கூடியிருக்கிறது. பொருளியல் நிலையில் சற்றேனும் சொந்தக் கால்களில் நிற்கும் வலிமை வாய்க்கப்பெற்றிருக்கிறது. சுயமாக முடிவெடுக்கக் கூடியவர்களாகவும் பிரச்சனைகளைச் சமாளிக்கக் கூடியவர்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அவர்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய கல்வியும் அமைந்திருக்கக் கூடிய சூழல்களும் இன்றியமையாத காரணங்கள்.

இவ்விரண்டுமே அந்தக் காலத்துப் பெண்கள் பலருக்கும் இல்லை. அவர்கள் அறியாமை என்னும் இருளிலேயே இருந்தார்கள். அவர்கள் அறிவு பெரும்பாலும் அனுபவம் சார்ந்தே இருந்தது. உள்ளுணர்வின் அடிப்படையில் தம் மனத்திலெழும் குரல்களைச் சார்ந்தும் அவர்கள் இயங்கி வந்தார்கள். இவ்வாறு குறுகிய எல்லையில் இயங்கக் கிடைத்த சூழல்களுக்கு நடுவில்தான் பல முக்கியப் பிரச்சனைகளுக்கும் கணநேர யோசனையின் அடிப்படையில் முடிவெடுப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். நம் புராணங்களில் இதற்குப் பல சாட்சிகள் உண்டு.

ஆர்வத்தின் காரணமாகச் சூரியனை வேண்டிப் பெற்ற குழந்தையைத் தனக்கு நேர இருக்கும் அவப்பெயரைக் கருதி, அதிலிருந்து தப்பிக்க அந்தக் குழந்தையைக் கைவிடும் துணிச்சலான முடிவைக் கணநேரத்தில் எடுக்கிறாள். வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வாழ நேர்ந்த சூழலிலும், யாகக் குதிரையைப் பிடித்து வைத்துக் கொண்டு கேள்வி கேட்கிற அளவுக்குத் துணிச்சல் மிக்கவர்களாகத் தன் பிள்ளைகளை வளர்க்கும் சீதையின் மன உறுதியையும் நினைத்துப் பார்க்கலாம். கணவனுக்காக எமனிடம் வாதாடும் சாவித்திரியையும் அரசனிடம் வாதாடும் கண்ணகியையும் நினைத்துப் பார்க்கலாம்.

இவை அனைத்தையும் நினைத்துப் பார்க்கவும் ஒருங்கிணைத்து அலசிப் பார்க்கவும் துாண்டுகோலாக இருப்பது பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கிற கிரீஷ் கார்னாடின் அக்னியும் மழையும் நாடகம் . பெண்கள் எடுக்கும் முடிவுகள் சார்ந்தும் சூழல்கள் சார்ந்தும் இந்த நாடகம் இயங்குகிறது. இந்த நாடகத்தில் விசாகை என்னும் இளம்பெண்ணின் செயல் மட்டுமே கதையை நகர்த்துகிறது. தன் பழைய காதலனுடன் தான் கூடியிருந்ததை அறிந்த சாட்சிகள் அரவசுவும் நித்திலையும். ஆனால் அவர்களால் பெரிய அளவு பிரச்சனை தோன்றாது என்பது அவள் நம்பிக்கை. ஆனால் தற்செயலாக குறிப்பிட்ட நாளுக்கு முன்னமேயே ஆசிரமத்துக்குத் திரும்பிவிடும் ரைப்ய மகிரிஷியும் ஊகித்தறிவதுதான் அவளுக்குப் பிரச்சனையாகத் தோன்றுகிறது. அவரைத் தந்திரமாக வீழ்த்துவதற்கான சூழ்ச்சியும் அவள் மனத்தில்தான் திடாரென்று தோன்றுகிறது.

பராவசு யாகத்தை விட்டு நடுவில் வந்தது யவக்கிரிதன்-விசாகை செய்தியைக் கேட்டுத்தான் என்றாலும், அவன் மனத்தில் பொங்கும் போராட்டங்களையும் அவளைப் பற்றி அவன் மனத்தில் எழும் எண்ணங்களையும் நிமிட நேரத்தில் திசைதிருப்பி, தன் தவற்றுக்கு ஒரே சாட்சியான மாமனாரின் மீதே அவனுக்கு ஆத்திரம் ஏற்படும் வண்ணம் செய்து விடுகிறாள். தன் மனைவியின் மீது தன் தந்தைக்கே நாட்டமிருந்தது என்பதைக் கேட்டுக் கொதிப்பேறிய மகனுடைய அம்புக்குப் பலியாகிறார் தந்தை. பிரம்ம ராட்சசனுக்கு எதிராகத் தன் வலிமையைப் பயன்படுத்த இயலாத வண்ணம் யவக்கிரிதனின் கமண்டலத்திலிருந்த தண்ணீரை நிலத்தில் கவிழ்த்து விடுகிறாள். கலவியின் பிரதான பாத்திரமான யவக்கிரதன் ராட்சசனுடைய ஈட்டிக்குப் பலியாகிறான். ஒரு தவறும் தவறிலிருந்து மீளவும் தன்னைக் காத்துக் கொள்ளவும் விசாகை அந்தந்தக் கணங்களில் எடுக்கிற சுயமான முடிவுகள் சார்ந்து நாடகத்தின் முன்பகுதி இயங்குகிறது.

பின்பகுதியில் நித்திலை நிறைந்திருக்கிறாள். காதலன் கிடைக்காவிட்டாலும் காலம் தனக்குக் காட்டியவனையே மணக்கிறாள். புலம்பும் காதலனுடைய மனத்தைத் தேற்றுகிறாள். நல்வழிப்படுத்துகிறாள். தவிர்க்க முடியாத சூழலில் குடும்பத்தை விட்டு வெளியேறிய நிலையில் மரணப்படுக்கையில் இருக்கிற அரவசுவுக்கு மருத்துவம் பார்த்துக் குணப்படுத்துகிறாள். அரவசுவின் மனத்தில் பொங்கும் கோபத்தை மட்டுப்படுத்துகிறாள். அண்ணனின் பழியுரைகளால் துவண்டிருக்கும் அவன் மனத்தைத் தேற்றுகிறாள். தெம்பூட்டுகிறாள். அவனுக்குப் பிடித்தமான நாடகத்துறையில் ஈடுபடுத்துகிறாள். இறுதியில் கணவனுடைய கையாலேயே வெட்டுப்பட்டுச் சாய்கிறாள்.

நாடகத்தின் இரு பெண்களும் முக்கியமானவர்கள். ஒருத்தியை அக்னீ என்றும் மற்றொருத்தியை மழை என்றும் நினைக்கத் தோன்றுகிறது. தன்னுள் வந்து விழும் அத்துணைப் பொருட்களையும் எரித்துச் சாம்பலாக்கும் அக்னியாக விசாகை இருக்கிறாள். பெருந்தீங்கு எதுவும் விளைவிக்காத, தான் பொழியும் இடத்தையெல்லாம் செழிக்கச் செய்யும் மழையாக நித்திலை இருக்கிறாள்.

அக்னியாக இருந்தாலும் சரி, மழையாக இருந்தாலும் சரி, பெண்களே இந்த உலகின் ஆதாரச் சக்தி. ஆக்கலும் அழித்தலுமான இருவேறு செயல்களின் படிமங்களே அக்னியும் மழையும்.

தமிழ்ச்சூழலில் கிடைக்கப்பெறாத புராண மறுவாசிப்பும் தற்கால வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் விதாமக எழுதுவதும் வேற்று மொழியிலிருந்து தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருப்பது நல்ல வாய்ப்பு. அந்த விதத்தில் பாவண்ணனுடைய கன்னட மொழிபெயர்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியதாகும்.

பார்வை : மூன்று

அன்பும் ஞானமும்

ஜெயஸ்ரீ

கிரீஷ் கார்னாடின் பலிபீடம், நாகமண்டலம் ஆகிய நாடகங்களைத் தொடர்ந்து அக்னியும் மழையும் நாடகமும் புத்தகமாக வந்து விட்டது. இவற்றில் நாகமண்டலம் மட்டுமே அங்கங்கே சிற்சில முறைகள் தமிழ்ச்சூழலில் நடிக்கப் பெற்றதாகத் தெரிகிறது. அதையும் பார்க்க இயலாதவர்கள் நாடகங்களைத் தம் மன அரங்கில் நிகழ்த்திப் பார்த்துக் கொள்ள வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். வாசகர்கள் நாடகத்தைத் தம் மன அரங்கில் நிகழ்த்திப் பார்த்துக் கொள்வதும் கூட ஒருவிதத்தில் நல்ல அனுபவமாகவே இருக்கிறது. நாடகத்தில் வரும் வெவ்வேறு பாத்திரங்களின் மனநிலைக்கும் சென்று மீள்கிற வாய்ப்புக்கு வழியிருக்கிறது. எதிர்எதிர் எண்ணங்களுக்கு இடையே மனத்தை மாறிமாறி இழுத்துச் செல்கிறது அக்னியும் மழையும் நாடகம்.

நாட்டில் பஞ்சம். வறட்சி. மழை இல்லை. தவத்தால் சாதிக்க முடியும் என்பது சிலருடைய நம்பிக்கை. யாகத்தால் சாதிக்க முடியும் என்பது வேறு சிலருடைய நம்பிக்கை. தவமும் யாகமும் தரமுடியாத ஒன்றை மனத்துாய்மையும் அன்பும் தருகிறது என்பதே நாடகத்தின் செய்தி.

யவக்கிரிதன் ஆண்டுக்கணக்காகத் தவமியற்றி என்ன பயன் ? தவத்தின் பயன் புலனடக்கம் எனில் அது அவனுக்குச் சித்திக்கவில்லையே ? தவத்தின் பயனாக அது கிடைக்கவில்லை என்பதற்குக் காரணம் கூட அவன் மேற்கொண்ட தவமே பொய் என்பதுதானே ? விசாகையிடம் பேசும் போது தவம் பற்றி ஏளனமாகக் கூறுகிறான். அப்பேச்சில் தவம் பற்றிய அவனுடைய கருத்தோட்டம் வெளிப்படுகிறது. தன் மீது பாம்பும் பல்லியும் ஊர்ந்துகொண்டிருந்த போதும் விசாகையையே நினைத்துக் கொண்டிருந்ததாகச் சொல்கிறான் அவன். மனம் நிறைய பெண்ணும் காமமுமாக இருக்க மூக்கைப் பிடித்து நிஷ்டையில் இருந்து என்ன பயன் ?

ரைப்ய மகரிஷி பெரிய ரிஷியாக இருந்த போதிலும் அவர் மனத்தில் விரோதமும் பழிவாங்கும் எண்ணமும் பொங்கிப் புரள்கின்றன.

யாகமியற்றும் உரிமை பறெ¢று அதற்காகக் காப்பு கட்டிக் கொண்டு அமர்ந்தவன் பராவசு. எட்டாண்டுகளாக வெளியே வராதவன் சட்டென ஒரு கணத்தில் மனத்தில் கட்டுக்கடங்காத ஆத்திரமும் கோபமும் கொண்டு ஏன் எழுந்து வருகிறான் ? மனைவியின் வார்த்தையால் துாண்டப்பெற்று ஏன் தன் தந்தையையே கொல்கிறான் ? செய்வதையெல்லாம் செய்துவிட்டு அதற்கான எந்தக் குற்றஉணர்வும் இன்றி திருட்டுத் தனமாக மீண்டும் யாக சாலையில் போய் அவனால் எப்படி உட்கார முடிகிறது ?

இவர்கள் யாருக்காகவும், யாருடைய தவவலிமையாலும் பெய்யாத மழை களங்கமற்ற மனமுடையவனாய் எல்லாச் செயல்களையும் -ஏன் , எதற்கு என்று புரிந்து கொள்ள முடியாமலேயே – செய்து முடிக்கிற அரவசுவின் தன்னலமற்ற சேவைக்காகப் பொழிகிறது. தந்தையின் வெறுப்புக்கு ஆளாகிறான் அவன். சொந்தச் சகோதரனாலேயே கொலைக்குற்றம் சுமத்தப்படுகிறான்.ஒரு கணத்தில் தான் போட்டுக் கொண்டிருக்கும் வேஷத்தின் காரணமாக எழும் ஆவேசத்தாால் அண்ணனைக் கொல்லத் துடிக்கிறான் அவன். ஆனால் எதிர்பாராத விதத்தால் நேர்ந்து விடுகிற விபத்தால் அவன் வேகம் தணிந்து விடுகிறது. மனத்துக்கினிய காதலியான நித்திலையின் உயிரா, பிரம்ம ராட்சசனுடைய விடுதலையா என்கிற கேள்வி முன்னிற்கும் போது சொந்த விருப்பத்தைத் துறந்து பிரம்மராட்சசனுக்கு விடுதலை வாங்கித் தருகிறான். எப்போதும் அடுத்தவர்களுடைய நலனையே எண்ணும் அவனால்தான் மழை பொழகிறது. அந்த மனிதனின் நல்லிதயம் எந்தத் தவ வலிமையால் வாய்த்தது ? தவத்திலும் கிட்டாத ஞானம் அவனுக்குக் கிடைத்தது எப்படி ?

இறுதிக் கட்டத்தில் மனச்சாட்சியின் உறுத்தலாலும் குற்ற உணர்வாலும் சுற்றியுள்ள தேவர்கள் அனைவரும் பராவசுவின் கண்களுக்கு அசுரர்களாகத் தோற்றமளிக்கிறார்கள்.

Series Navigation

வளவ.துரையன், ரகுராம், ஜெயஸ்ரீ

வளவ.துரையன், ரகுராம், ஜெயஸ்ரீ