ஒரு துளியின் சுவை

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

பாவண்ணன்


எண்பதுகளின் தொடக்கத்தில் ஏறத்தாழ எட்டாண்டுகளுக்கும் மேலாக கர்நாடகத்தின் தென்கோடியிலிருந்து வடகோடிவரை உள்ள எல்லா மாவட்டங்களிலும் சிற்சில மாதங்கள் மாற்றிமாற்றி வேலை செய்தபோதுதான் நான் கன்னடம் கற்றுக்கொண்டேன். நான் பயிலும் கன்னடம் என்னுடைய தினசரித் தேவைகளுக்காக மட்டுமன்றி இலக்கியம் படிக்கவும் பயன்படவேண்டும் என்கிற எண்ணமிருந்ததால் முறையாக அரிச்சுவடியில் தொடங்கி, ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புக்குரிய கன்னடப்புத்தகங்களைப் படிக்க முனைந்து பத்தாம் வகுப்புப் புத்தகம் வரை படித்துப் பயிற்சியெடுத்தேன். அப்பயிற்சிகள் எனக்கு மிகவும் உற்சாகம் ஊட்டின. போதையில் திளைப்பதைப்போல புதிய மொழியறிவு கொடுத்த ஆனந்தத்தில் அமிழ்ந்தேன். எந்த வரியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்தாலும் உடனே அந்த வரியை உள்மனம் ஓர் இயந்திரத்தைப்போல கன்னடத்தில் உருமாற்றம் செய்து சரிபார்க்கும். எந்த வாசகத்தை யார்வழியாகக் கன்னடத்தில் கேட்க நேர்ந்தாலும் உடனடியாக தமிழில் உருமாற்றத் தொடங்கும். மனம் தன் தளத்தில் இயங்கிக்கொண்டே இருக்கிற தருணங்களில் கூட இத்தகு உருமாற்றப் பணிகள் அனிச்சைச்செயலைப்போல வேறொரு தளத்தில் நிகழும். இதன் நீட்சியாக தினசரிப் பத்திரிகைகளிலும் வாரப்பத்திரிகைகளிலும் இடம்பெற்ற இலக்கிய, சமூகக்கட்டுரைகளையும் சிறுகதைகளையும் படித்துப்படித்து ஒவ்வொரு நாளும் பயிற்சியை மேம்படுத்திக்கொண்டேன்.

அதற்கப்புறம் நான் படிக்கத் தேர்ந்தெடுத்த புத்தகம் சிவராம காரந்தரின் ‘சோமன துடி ‘. அந்த வாசிப்பு என் தன்னம்பிக்கையை வளர்த்தது. ஏற்கனவே தமிழில் மொழிபெயர்ப்பு வழியாக ‘அழிந்தபிறகு ‘, ‘மண்ணும் மனிதரும் ‘, ‘பாட்டியின் நினைவுகள் ‘ ஆகிய நாவல்கள் வழியாக என் மனத்தில் ஆழமான இடத்தைப் பெற்றவர் சிவராம காரந்த். ஒரு புராணப் பாத்திரத்தைப்போல அவருடைய உருவம் என் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது. அவருடைய படைப்பை அவருடைய மொழியிலேயே முதல்முதலகாகப் படித்தபோது கிளர்ச்சியூட்டப்பட்டதைப்போல மனம் துள்ளத் தொடங்கியது.

எந்தப் புத்தகத்தை வாசித்தாலும் அந்தப் புத்தகம் எனக்கு ஏன் பிடித்தது அல்லது ஏன் பிடிக்காமல் போனது என்கிற கேள்வியை ஒட்டி மனத்தை அசைபோட அனுமதித்துக் கண்டறிவது என் வாசிப்புமுறை. ‘சோமனதுடி ‘ அளித்த வாசிப்பு மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை அப்போது எண்ணிக்கொண்டே இருந்தேன். ஒரு சாதாரண உடுக்கையை உள்மனத்தின் ஓசையை வெளிப்படுத்துகிற ஊடகமாக மாற்றி இயக்கிய அம்சம் மிகவும் பிடித்திருந்தது. உடுக்கை ஓசை கேட்கும்போதெல்லாம் அது சோமனுடைய உடுக்கை ஒலியாகவும் பிறகு கையறு நிலையில் மனிதகுலம் எழுப்பும் ஓசையாகவும் மாறி, இறுதியில் உலகப்பரப்பில் வஞ்சிக்கப்பட்ட மானுடத்தின் துயரத்தைச் சுமந்த ஓசையாக மாறி நெஞ்சைக் கனக்கவைத்தது. ஒரு துண்டு நிலத்துக்காக கடைசிவரை ஆசையோடு காத்திருக்கிற சோமனுடைய கனவு இறுதியில் மெள்ளமெள்ளக் குலைந்து போகிறது. நிலத்தைக் கொடுப்பதாக ஆசைகாட்டி கைவிரிக்கிற ஆண்டையின் போக்கைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் வயதான தந்தையோடு இருக்கவேண்டிய மகனும் மகளும் கூடப் பிரிந்துபோய்விடுகிறார்கள். கட்டிப்போட்டு தீனி போட்டவனுடன் கடைசிவரை இருக்கிற ஒரு மாட்டுக்குத் தெரிந்த தர்மம்கூட பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு ஏன் தெரியாமல் போனது ? மானுடம் தனக்குரிய தர்மத்தை ஏன் தொலைக்கிறது ? என்கிற துயரமே சோமனுடைய உடுக்கையொலியின் வழியாக ஒலித்ததை நான் வலியுடன் உணர்ந்தேன்.

தனக்குரிய தர்மத்தைத் தொலைத்து புளியமரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்துத் தன் அகங்காரத்தை நிறுவிக்கொண்ட புதிய பூங்காவின் வழயோக ‘ஒரு புளிய மரத்தின் கதை ‘ நாவலில் எழுந்த அதே துயராமன கேள்வி. ‘அதான் இருக்கற மரத்தயெல்லாம் வெட்டி சாய்ச்சிட்டியே, இனிமேல புளிய எங்கேர்ந்துடா கொண்டாருவே ? ‘ என்று ‘சாயாவனம் ‘ நாவலில் வெளிப்பட்ட அதே துயரமான கேள்வி. ‘சோமனதுடி ‘ நாவல் எனக்குப் பிடித்துப்போனதற்கான காரணத்தைக் கண்டடைந்தேன். என் கன்னட வாசிப்புப் பழக்கம் இப்படித்தான் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. அந்த நாள்களில் மொழிபெயர்க்கும் ஆர்வம் எனக்குத் துளியும் இல்லை. என் கவனம் என் படைப்புகளிலும் வாசிப்பிலும் மட்டுமே இருந்தது.

தொண்ணுாறுகளின் தொடக்கத்தில் நான் பெங்களூருக்கு மாற்றலாகி வந்தேன். எனக்கும் திருமதி. சரஸ்வதி ராம்னாத் அவர்களுக்கும் ஏற்கனவே உருவாகியிருந்த கடித உறவின் அடிப்படையில் அவரை நேரில் பார்த்து உரையாடினேன். அவருடைய வீட்டு நுாலகத்தில் பல புத்தகங்கள் இருந்தன. படிப்பதற்கு எடுத்துச்செல்ல என்னைத் தாராளமாக அனுமதித்தார். மாதத்துக்கு ஒன்றிரண்டு முறைகள் நான் அவர்களுடைய வீட்டுக்குச் சென்று பேசிக்கொண்டிருப்பது வழக்கமானது. பிரேம்சந்த், தாகூர் போன்ற மூத்த படைப்பாளிகள் முதல் நிர்மல் வர்மா, அஜித் கெளர், அம்ரிதா ப்ரீதம், இந்திரா கோஸ்வாமி போன்ற வாழும் படைப்பாளிகள் வரை பல வடஇந்திய எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றி உற்சாகமாக மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பார் அவர். கன்னட ஆக்கங்களைப்பற்றி ஆர்வமாகக் கேட்பார். என் வாசிப்பு அளவுகோலைக் கேட்டதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நான் வாசித்த ஒவ்வொரு நூலைப்பற்றியும் அந்த அளவுகோலை ஒட்டிச் சொல்லச் சொல்ல ஒரு சின்னக் குழந்தைக்குரிய ஆர்வத்துடன் கேட்ட சித்திரம் என் மனத்தில் இன்னும் பசுமையாக உள்ளது. உற்சாகத்தின் மிகுதியில் அவராகவே நாவல்களின் தலைப்பைச் சொல்லிச் சொல்லி ‘இதற்கு என்ன பொருள் ?, இதை எப்படிப் பார்க்கிறீர்கள் ? ‘ என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்வார். என் தாயின் வயதுள்ள அவர் ஒரு குழந்தையாக மாறி நான் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொள்வார். அப்பொறுமை பேசும் உற்சாகத்தை எனக்குள் பலமடங்காகப் பெருக்கிவிடும். மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன் ‘ நாவலைப்பற்றி அவர் தொடக்கத்தில் கொண்டிருந்த கருத்து வேறு. நான் அதைப்பற்றி என் பார்வையில் எடுத்துரைத்தபிறகு வளர்த்தெடுத்துக்கொண்ட கருத்து வேறு.

இக்கருத்துமாற்றங்களின் தொடர்ச்சியாக தற்செயலாக ஒருநாள் மொழிபெயர்ப்பைப்பற்றிய பேச்சு இடம்பெற்றது. அவர் அப்போது இந்திய மொழிகள் அனைத்திலிருந்தும் ஒரு நாடகத்தைத் தேர்ந்தெடுத்து ஒரு பெருந்தொகுப்பை உருவாக்கும் கனவில் இருந்தார். அதை வடநாட்டு நாடகங்கள் என்றும் தென்னாட்டு நாடகங்கள் என்றும் இரு பிரிவுகளாகச் செய்யும் திட்டம் அவருக்குள் இருந்தது. வடநாட்டு நாடகங்கள் என்ற பகுதியில் இந்தி வழியாகவே எல்லா நாடகங்களையும் மொழிபெயர்த்துத் தொகுக்கவும் தென்னாட்டு நாடகங்கள் என்ற பகுதியில் அந்தந்த மொழியிலிருந்து நேரிடையாகவே நண்பர்கள் மூலம் மொழிபெயர்க்கச் செய்து வாங்கித் தொகுக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார். அப்போதுதான் கன்னடத்திலிருந்து என்னை மொழிபெயர்க்க முதன்முதலாகத் துாண்டினார். எனக்குள் இல்லாத ஆசையையும் எண்ணத்தையும் துாண்டுவதாக இருந்தது அவர் கோரிக்கை. நான் வெளிப்படுத்திய தயக்கங்களை அவர் பெரிதுபடுத்தவில்லை. ‘எல்லாம் முடியும், செய்யுங்கள் ‘ என்று சிரித்தவாறு சொல்லி அப்பேச்சை முடித்துவிட்டார். ஓர் அன்புக் கட்டளையாக அது என் நெஞ்சில் விழுந்துவிட்டது. ஒரு சில நாள்களில் சந்திரசேகர பாடால் என்னும் நாடக ஆசிரியரின் ‘அப்பா ‘ என்னும் நாடகத்தை அவருடைய அனுமதியுடன் மொழிபெயர்த்துக் கொடுத்தேன். அதுதான் என் முதல் மொழியாக்க முயற்சி.

தொடர்ந்து கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என எல்லா வகைகளிலும் சில படைப்புகளைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன். மொழிபெயர்ப்பதற்காக ஒரு படைப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அப்படைப்பை வாசிக்கும்போது என் மனம் அடையும் அனுபவமே முதல் அளவுகோல். அடுத்து அப்படைப்புகளின் வாசிப்பைத் தொடர்ந்து உருவாக்கிக்கொள்ளும் கேள்விகள் வழியாக மானுடவாழ்வின் மேன்மை அல்லது கீழ்மையை எப்படிப் புரிந்துகொள்ள முடியும் என எனக்குள் நான் நிகழ் த்திக்கொள்ளும் உரையாடல் இரண்டாவது அளவுகோல். இந்த அனுபவம் நிறைவைத் தரும்போது மட்டுமே என் முயற்சியைத் தொடங்குகிறேன்.

ஒரு படைப்பை மொழிபெயர்க்கும்போது நான் அடையும் மகிழ்ச்சி அப்படைப்பின் வழியாக என் மனத்தை வந்தடையும் சிற்சில புதிய புரிதல்களைக் கண்டடையும் மகிழ்ச்சியாகும். அப்படைப்பின் பல பாத்திரங்கள் உயிருள்ள பாத்திரங்களாக என் மனத்தில் சதாகாலமும் வளையவந்தபடி இருப்பார்கள். இந்தப் புரிதல்கள் என்னை முதிர்ச்சி கொண்டவனாகவும் பக்குவம் கொண்டவனாகவும் மாற்றுகின்றன.

மொழிபெயர்ப்பின் ஒரு வரியை எப்படி என் மனம் உள்வாங்கிக்கொள்கிறது என்பதை என் சொந்த அனுபவத்தை முன்வைத்து விளக்க விரும்புகிறேன்.

‘ஊரார் புடவைக்கு வண்ணான் ஆசைப்பட்டதைப்போல

பொன் என்னுடையது

மண் என்னுடையது என்று மயங்கினேன்

உன்னை அறியாத காரணத்தால் உழன்று கெட்டேன்

கூடல சங்கமதேவா ‘

இது பஸவண்ணனுடைய ஒரு வசனம். இதைப் படித்து மொழிபெயர்த்த சமயத்தில் என் மனம் ஒரே கணத்தில் மின்னுாட்டம் பெற்ற காந்தத் துண்டைப்போல ஆனது. அதை ஒருவகையான தவிப்பு என்றே சொல்லவேண்டும். சில காலம் மனம்முழுக்க அத்தவிப்பு குடிகொண்டிருந்தது. சகஜநிலைக்குத் திரும்பியபிறகு வழக்கமான இயக்கத்தில் மூழ்கிவிட்டது. ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு, வேறொருவருக்குச் சொந்தமான நிலப்பகுதியை பொய்ப்பத்திரங்களை உருவாக்கித் தனதெனக் காட்டி நெடுங்காலம் அனுபவித்துவந்த ஓர் அரசியல் புள்ளி கைது செய்யப்பட்ட செய்தியைப் படித்தபோது தன்னிச்சையாக மேற்கண்ட வரிகள் அடிமனத்திலிருந்து மேலெழுந்து பெரும் கிளர்ச்சியை ஊட்டியது. அன்றைய தினம் முழுக்க எழுச்சியும் பரவசமுமான மனநிலையில் இருந்தேன். பலவிதமான உணர்ச்சிகளும் படிமங்களும் மாறிமாறி மனத்திரையில் தோன்றித் தோன்றி மறைந்தன.

அன்றைய இரவு உறங்கப்போகும் முன்னர் அந்த எண்ணங்களைத் தொகுக்கக் தொடங்கினேன். எழுதப்பட்டு பத்து நுாற்றாண்டுகளைக் கடந்த நிலையில் ஒரு சின்னக் கவிதையின் வரிகள் வாழ்வின் விளக்கமாக இன்னும் பொருத்தமாக எப்படி ஒளிர்ந்தபடி உள்ளன என்பதைக் கண்டடைய இம்முயற்சி உதவும் என்று நினைத்தேன். துணிவெளுப்பவன் ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் துணிதுவைத்துத் தருகிறான். அந்தத் தொழிலுக்காகவே அவன் அந்த ஊர்க்காரர்களால் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறான். அவன் தொழிலுக்கு ஈடாக ஏதோ சாப்பாடோ பணமோ தரப்படுகிறது. துவைப்பதற்காகத் தரப்பட்ட துணிகளை அவன் எத்தனை நாட்களுக்கு வைத்துக்கொள்ள முடியும் ? குறைந்தபட்சமாக ஒரு வாரம் முதல் அதிகபட்டசமாக இரண்டு வாரங்கள் வரை வைத்துக் கொள்ள முடியும். அதுவரை உடல்நலம் சரியில்லை, குளத்துக்குப் போகவில்லை, மழை பொழகிறது என எதாவது ஒரு காரணம் சொல்லித் தப்பிக்கலாம். ஒருகாலும் அந்த ஆடையை வேறு விதமாகப் பயன்படுத்த முடியாது. இரவில் யாரும் அறியாமல் அணிந்துபார்க்கலாம். குளிருக்குப் போர்த்திக்கொள்ளலாம். கீழே தரையில்கூட விரித்துப் படுக்கலாம். ஆனால் அதிகபட்ச காலம் முடிந்தபிறகு வெளுத்துக் கொடுத்தே தீரவேண்டும். கொடுக்க மறுத்துச் சொந்தம்கொண்டாட முடியவே முடியாது. கொடுக் காவிட்டால் என்ன நேரும் ? அவநம்பிக்கை மிகும். கெட்ட பெயர் ஏற்படும். வாடிக்கையாளர்கள் குறையலாம். ஊரைவிட்டே விரட்டப்படலாம். இங்கே ஊரார் புடவையாக எதைக் கொள்வது ? இந்தப் பிறவியே ஒரு புடவையாகலாம். இங்கே நிறைந்திருக்கிற இயற்கை ஆதாரங்களனைத்துமே கூட ஒரு புடவையாகலாம். நம் ஆயுளில் செய்து முடிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட ஒரு சின்ன வேலைகூட புடவையாகலாம். இது ஒரு கோணம். வெளுப்பதற்கு கொடுக்கப்படுவது அழுக்குத்துணிகளே. நமக்கு வாய்த்திருப்பதும் அழுக்குப் பிறவி. இந்த அழுக்கைச் சுத்தப்படுத்தித் துாய்மையாக்கும் பொறுப்பு நம்மிடமே உள்ளது. மட்டுமல்ல, அது திருப்பித் தரப்படவேண்டிய ஒன்றுமாகும்.

இவ்வாறு பலதரப்பட்ட உணர்வுகளை ஒற்றை வரி துாண்டியபடியிருந்தது. விதம்விதமாகத் தோன்றிப் பெருகும் உணர்வுகளே மொழிபெயர்ப்பின் மிகப்பெரிய அனுபவம். அக்கணத்தில் மனத்தில் தோன்றியதைவிட, முடிவேயின்றி வளர்த்தெடுத்துக்கொண்டே செல்லவல்ல பல நுட்பங்களை அவ்வனுபவத்தின் அடிப்படையில் கண்டடைய முடியும். மொழிபெயர்ப்பு என்பது இன்னொரு மனத்திலும் இன்னொரு ச்முகத்திலும் நுழையும் அனுபவம்.

ஒரு படைப்பை மொழிபெயர்க்கும்போது, சிறிதளவாவது அது எழுதப்பட்ட தளத்தைத்தாண்டி வேறொரு தளத்துக்கு நகர்ந்து செல்வதை வயிற்றுக்குள் வளரும் குழந்தையின் அசைவை உணரும் இளம்தாயைப்போல உணர்வது மிகப்பெரும் அனுபவம். நிறுத்திக்கொள்ளலாம் என்று பலமுறை நினைத்தாலும் மீண்டும் மீண்டும் இந்த முயற்சிகளில் நான் தொடர்ந்து இறங்கிவிடுவது இந்த அனுபவத்தில் கிட்டும் பரவசத்துக்காக என்பது மிகையான கூற்றாகாது. எவ்வளவு எழுதியபிறகும் வார்த்தைகளால் வடிக்கப்படமுடியாத ஒன்றாகவே இந்த அனுபவம் எஞ்சிநிற்கிறது என்றே சொல்லவேண்டும். ஒரு படைப்பை மொழிபெயர்க்கும் அனுபவம் அல்லது மொழிபெயர்ப்புப்படைப்பொன்றை வாசிக்கும் அனுபவம் மானுடக் கலாச்சாரத்தின் ஒரு துளியைச் சுவைத்துப்பார்க்கும் அனுபவத்துக்கு நிகரானது.

(15.08.04 அன்று சென்னையில் நடைபெற்ற மொழிபெயர்ப்பு அனுபவங்கள் பற்றிய கருத்தரங்கில் வாசிப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்