ஒரு கவிதையும் ஆயிரமாண்டுகளுக்குப் பின்னர் அதன் அகழ்வாராய்வும்

This entry is part [part not set] of 14 in the series 20010115_Issue

பாரதிராமன்


ஆசை
என்னைச் சுற்றி
அடேயப்பா,
எத்தனை பேர்!

அாியக்குடி,ஆலத்தூர்,மதுரை மணி,
சோமு,செம்பை,ஜா.என்.பி,வசந்தகுமாாி,
கோகிலம்,முசிறி,டைகர், எம்.டி.ஆர்,
பாகவதர்,கிட்டப்பா,சுந்தராம்பாள்,
ஜெயராமன்,ராமனாதன்,மகாலிங்கம்,
மகாராஜபுரத்துத் தந்தையும் தனயனுமாக
ஒரு புறம்.

இன்னொரு புறம்
சுப்புலட்சுமி,பட்டம்மாள்,மணி,
சரோஜா லலிதா,ராதாஜெயலட்சுமி,
செம்மங்குடி,சங்கரநாராயணன்,நாராயணசாமி,
சேஷகோபாலன்,பாலமுரளி,பினாகபாணி,
வோலேட்டி,யேசுதாஸ்,ஸ்ரீகண்டன்,நேதனூாி,
ராஜம்,தியாகராஜன்,கல்யாணராமன்,
ராமன் லட்சுமணன்,ராமச்சந்திரன்
என்றவாறு.

வேறொரு புறமாக
உன்னிகிருஷ்ணன்,விஜய்சிவா,சங்கரன்,
சுதா,ஜெயஸ்ரீ என்று
சுகமான இளைஞர் வட்டம்.

சுற்றி இருந்தாலும்
சும்மாவே இருக்கிறார்களே
அத்தனை பேரும்
அதேன் ?

ஆராதனை என்று எண்ணியாவது
அத்தனை பேரும்
அழகாய்க் கூடிப்பாடலாமே,
அல்லது
அகாதமி நிகழ்ச்சிபோல
ஆளுக்கொன்றென
அகாலத்திலும்
ஆழமாகப்பாடலாமே ?
ஏன் இந்த மெளனம் ?

அடடா,அடடா!
மின்சாரம் அல்லவா
தடை பட்டிருக்கிறது!
II

தடை நீங்கிப்
பாய்ந்து வருகிறது
மின்சாரம்!

கர்நாடகமாய்
என்னைச்சுற்றியிருப்பவர்கள்
துடிக்கிறார்கள்
தொண்டைகளைத் திறக்க.

இருந்தாலும்
அவர்கள் எல்லோருமே
மெளனமாய்க் காத்துத்தான்
கிடக்கவேண்டும்
என்னை மன்னித்துவிட்டு.

இப்போது(1994)
எனக்கொரு
சின்ன சின்ன ஆசை
ஒட்டகத்தைக் கட்டிக்கொள்ள.

————————————-
III

இணைப்பு :-

கி.பி.2494ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய ஆய்வுக்குழுவினாின் அதிகாரபூர்வமான அறிக்கையின் முதற்பகுதியிலிருந்து சில கருத்துகளின் சுருக்கம்:

‘ஆசை ‘ காட்டும் அதிசயங்கள்,அதிர்ச்சிகள்,அனுமானங்கள்.

கி.பி.1994வாக்கில் எழுதப்பட்டதாகக் கருதப்பெறும் ‘ஆசை ‘என்னும் கவிதைமூலம் வெளிப்படும் அப்போதைய தமிழகத்தின் பலநிலைகளை இப்போது பார்ப்போம்.

தட்டுப்பாடுகள்:

இப்போது போலவே ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பேயும் தமிழ் நாட்டில் மின்சாரப் பற்றாக்குறையும் அதன் காரணமாக பலத்த மின் வெட்டுகளும்(முன் அறிவுப்புடனா அது இல்லாமலா என்பது மேலும் ஆராயவேண்டியதாக இருக்கிறது)இருந்திருப்பது தொிகிறது.வெட்டுக்குப்பின் மின்சாரம் திரும்பிவருவதென்பது காதில் தேன் பாய்வது போன்ற மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சியாக இருந்ததென்பதும் தொிகின்றது. கவிதையில் வரும் ‘பாய்ந்து ‘ என்ற சொல்லாட்சி இதை உறுதிப்படுத்துகிறது. மகாகவி சுப்ரமண்யபாரதியாருக்குப் பின் மிக்க அழுத்தத்துடன் இச்சொல் பயன்படுத்தப் பட்டிருப்பது இக்கவிதையில்தான்!

நோய்கள், சிகிச்சைகள் :

இக்கவிதையின் காலத்தில் (கால நிர்ணயம் பற்றிய கருத்து பின்னால்) தமிழ் நாட்டில் தொண்டை அழற்சி நோய் பொிய அளவில் பரந்து இருந்ததாய் புலப்படுகிறது. இக்கவிதையின் ஆசிாியர்கூட தொண்டைநோய் மருத்துவராகத் தென்படுகிறார். ஒரே நேரத்தில் பல தொண்டை நோயாளிகள் சூழ்ந்துகொண்டு தொந்தரவு செய்வதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதைக் கவிதை விவாிக்கிறது. ஆண்கள்,பெண்கள், முதியோர்,சிறியோர்,ஊரைப் பெயராகக் கொண்டோர்,பெயரை ஊராகக் கொண்டோர், பெற்றோருடன் உற்றோர், உற்றோருடன் பெற்றோர் என்றிப்படிப் பலவிதமான நோயாளிகள் எல்லோரையும் ஒரே நேரத்தில் வாயைத்திறந்து பாடச்சொல்லும் வாயிலாகச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தொிகிறது. வாயைத் திறக்கச் செய்ய மின் அதிர்ச்சி தேவைப்பட்டதாகவும், மின்சாரம் இல்லாதபோது நோயாளிகள் வாயை மூடிக்கொண்டிருக்கவேண்டியிருந்ததும் தொிகிறது. இவ்வெளிய மின்சார சிகிச்சைமுறை சிறப்பாகப் பயன்பட்டதாகத் தொிவதால் தற்போதுகூட நம் மருத்துவமனைகளில் இம்முறையைச் செயலாக்கிப் பார்ப்பது நன்மைபயக்கக் கூடும் என்று படுகிறது.

சிறப்பு முகாம்கள் :

கவிதை தரும் நோயாளிகளின் பெயர்ப்பட்டியலில் தமிழரல்லாதோரும் நிறையக்காணப் படுவது தமிழகத் தொண்டைநோய் மருத்துவர்களின் தேர்ச்சியைக்காட்டுவதாகஇருக்கிறது. இது மேலும் தொண்டைநோய் சிகிச்சைக்கான முகாம்கள் அந்நாளைய தமிழகத்தில் பெருகி இருந்திருக்கவேண்டும் என்று அனுமானிக்க இடமளிக்கிறது.

மருத்துவர்- நோயாளி உறவுகள் :

மருத்துவர்கள் அந்தக்காலத்தில் எவ்வளவு மாியாதை தொிந்தவர்களாக இருந்தார்கள் என்பது நோயாளிகள் தொண்டைகளைத் திறக்கமுடியாமல் மெளனமாக இருந்ததற்குக் மின் தடையே காரணமாக இருந்தது என்றாலும், தானே குற்றவாளிபோல் தன்னை மன்னிக்கும்படி மருத்துவர் நோயாளிகளிடம் கேட்டுக்கொள்வதிலிருந்து தொிகிறது. இந்த நிகழ்ச்சியை வேறு ஒரு கோணத்தில் பார்க்க,அப்படி அந்த மருத்துவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டிராவிட்டால் நோயாளிக்கும்பல்கள் அராஜகத்தனமாக அவரை கத்திக்கூச்சலிட்டோ,நெருக்கியோ கொன்றிருக்ககூடும் என்ற அளவில் அந்நாளைய தமிழ்ச் சமூகத்தில் அராஜகம் நடமாடிக்கொண்டிருந்தது என்ற முடிவுக்கு வரக் காரணமாயும் இருக்கிறது எனலாம். இந்நிலையில் இந்நாளைய தொண்டை மருத்துவர்கள் ஒன்றுகூடித் தங்கள் சிகிச்சை முறைகளின் ஆரம்பநாள்தொட்டு இந்நாள் வரையிலான வளர்ச்சிவழிகளை ஆராய்ந்து பார்த்தாலன்றி அந்நாளைய தொண்டை மருத்துவர்களின் மாியாதைப் பண்பு பற்றியோ நோயாளிகளின் அராஜகப் பண்பு பற்றியோ நாம் எந்த முடிவுக்கும் வருவதற்கில்லை.

கால நிர்ணயம் :

பல பண்டைய காலத்துப் புலவர்களைப்போல இல்லாமல் தன் கால கட்டத்தைப் பின்னால் வரக்கூடியவர்களுக்கு உணர்த்தக் கடமைப்பட்டவர் போல இக்கவிதை ஆசிாியர் செயல்பட நினைத்திருக்கிறார். எனவேதான் இக்கவிதையில் இப்போது என்று 1994ம் ஆண்டைக் குறித்திருக்கிறார். ஆனாலும் அது கி.பியா, கி.முவா என்று குறிப்பிடப்படவில்லை. அதனால் கவிதையின் கால கட்டத்தை நிர்ணயிப்பதில் கி. மு1994க்கும் கி.பி 1994க்கும் இடைப்பட்டதான சுமார் நாற்பது நூற்றாண்டுகள் வித்தியாசம் ஏற்படக்கூடும்.ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியில் இது நீண்ட காலமே. எனவே இக்கவிதையின் காலத்தைச் சாியாக நிர்ணயிக்க வேறு சில அளவு கோல்களை நாம் பயன் படுத்தவேண்டியுள்ளது. கவிதாசிாியாின் பெயரை வைத்து ஆராய்ச்சி செய்ததில் பாரதி என்ற பெயரும் ராமன் என்ற பெயரும் மகாகவி சுப்ரமண்யபாரதியாாின் தொற்றத்துக்கு முந்தியே புழக்கத்தில் இருந்த பெயர்கள் என்று புலப்படுவதால் கவியின் காலம் பாரதிக்கு முந்தியதாக (அதாவது கி.மு.1994) இருக்ககூடும் என்ற ஐயப்பாடு எழுந்தாலும் கவிதையிலுள்ள ாபாய்ந்துா என்ற சொல்லாட்சியை வைத்தும், நோயாளிகளின் பெயர்கள், அவைகளின் ஆங்கிலத் தலை எழுத்துகள் இவற்றை மனதில்கொண்டும், மற்றும் மின்சாரம் உபயோகத்தில் இருந்ததைக்கொண்டும் கவிதையின் காலம் கி.பி.1994 என்று அறுதியிட்டுக் கூறமுடிகிறது. மேலும் கவிஞர் கி.மு. காலத்தவரானால் அதை அவர் அறிந்திருக்க முடியாதல்லவா ?

தமிழாின் ஆசைகள் :

நிற்க. கி.பி.இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழருக்கிருந்த ஆசைகளைப்பற்றி கவிதை தெளிவாகக் கூறுகிறது. அந்தக்காலத்தில் ஆசைகள் சின்னச் சின்னதாகவே இருந்தன. அவை பொியனவாக இல்லாததற்குக் காரணம் அந்நாளைய தமிழகத்தின் வறட்சி நிலையே காரணம் என்று ஊகிக்கலாம்.தமிழகம் எறக்குறைய ஒரு பாலைவனமாக இருந்திருக்கிறது. எங்கும் எதற்கும் ஒட்டகங்கள்தான் பயன்பட்டன. தமிழகப் பெண்டிர் நீண்டு கோணலாகிப் போன உடலோடு ஒட்டகங்களைபோல் காட்சியளித்திருக்கிறார்கள்.இருந்தாலும் அவர்களைக்கட்டிக் கொள்ள(கட்டிக்கொள்வது என்றால் திருமணம் செய்துகொள்வது என்றும் ஒரு பொருள் இருந்ததாக வேறொரு ஆராய்ச்சிக் குறிப்பில் நாம் முன்பே சுட்டிக்காட்டியிருந்ததை இங்கு நினைவு கொள்க.) மருத்துவர்கள்கூட போட்டி போட்டிருக்கிறார்கள்.அது பேராசையாக இருந்தும் அரசாங்கத்துக்குப் பயந்தோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அதை சின்ன ஆசை என்றே கூறிக்கொண்டார்கள். திருமணம் செய்துகொள்வதையே சின்ன ஆசை எனும் கவிஞர் பொிய ஆசை எதுவென கோடி காட்டாதது எம் போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கு வருத்தமே.

எதிர்கால ஆய்வுகள் :

இருபதாம் நூற்றாண்டின் தமிழக நிலை குறித்தும், தமிழாின் தனிப்பட்ட சமுதாய வாழ்க்கை நிலைகள் குறித்தும் ாஆசைா என்ற கவிதை நிறையவே சொல்ல ஆசைப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு சந்தேகாஸ்பதமான சூழலில் அக்காலத்திய இசையைப் பற்றியும் இக்கவிதை கூறியிருக்ககூடுமோ என்பதைக் கண்டறியும் அவாவில் மேலும் பல கூடங்களில் பலகட்ட் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சில இடைக்கால முடிவுகளும் எடுக்கப் பட்டுள்ளன. அக்காலத்திய சுப்ரமணியசுவாமியின் பாணியில் கூறுவதென்றால் அவற்றை அடுத்தமாத இறுதிக்குள் அரசாங்கத்திடம் அறிவிப்போம். ஒரு மாதத்திற்குள் அரசாங்கம் அம்முடிவுகளை ஏற்பதாக அறிவிக்காவிட்டால் அதற்கடுத்தமாத இறுதிக்குள் வேறெங்கு அம்முடிவுகளை அறிவிப்பது என்பதை மக்கள் மன்றத்தின் முன் அறிவிப்போம்.

தமிழ் வாழ்க. தமிழ் ஆசை வளர்க!

**

குறிப்பு:

‘சின்னச் சின்ன ஆசை ‘, ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ ‘ என்ற திரைப்படப் பாடல்கள் 1994 வாக்கில் தமிழகமெங்கும் மிகப் பிரபலமாக இருந்தவை.

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.