ஒரு கடற்கரையின் இரவு…

This entry is part [part not set] of 17 in the series 20010219_Issue

சேவியர் தாசய்யன்


விாிந்த கடலின் ஓரம் பாய்ந்து பாய்ந்து
தேய்ந்து போன கரை…
உப்புக் கடலின் ஈரம் வினியோகிக்கும்
கட்டுக்குள் நிற்காத காற்று…

மனசு நனைகிறது…
என் மணல் மேனி முழுதும்
பல்லாயிரம் சுவடுகள்…

மாலைப் பொழுது விடியும் போது
விரல்களில் சுண்டல் பெட்டியுடனும்
நரம்புகளுக்குள் வற்றாத நம்பிக்கையுடனும்
தொடர் சுவடு விட்டுச் செல்லும்
சிறுவர்கள்…

விழிகளின் வெளிச்சத்தில்
நேசத்தின் நெருக்கம்
உணர்வுகளை நொறுக்கும் போது
காதுமடலில் சுடு சுவாசம் வீசும்
காதலர்கள்….

கால் தொடும் கடலலையின்
முதல் துளியையும்
நீள் கடலின் ஓரம் தட்டும்
கடைசிச் சொட்டையும்
ஓர்
ஈர நூல் தான் இழுத்துக் கட்டுகிறது
என்று கவிதை சொல்லும் கவிஞர்கள்…

கொட்டும் இருளிலும்
கைதட்டும் அலைகளின் சத்தத்திலும்
அமைதியைப் பிாித்தெடுக்கும்
வறுமைக் கோட்டுக்கு கீழும்
முதுமைக் கோட்டுக்கு மேலேயும் இருப்பவர்கள்…

எதிர்காலத்தை
இருளுக்குள் இளைப்பாற விட்டுவிட்டு
நிகழ்கால நிமிடங்களில்
மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில்
குறி சொல்லிக் கொண்டிருக்கும்
ஜாதகப் பட்சிகள்…

குடியிருப்புக்களில்
காற்று குற்றுயிராகிப் போனதால்
மணல் வெளியின் சந்தடியில்
சுவாசம் தேடும் சந்ததிகள்…

வயிற்றுக்குள் அமிலம் வளர்வதால்
அமுதசுரபி தேடித் தேடி
பிஞ்சுக் கரங்களில்
பருக்கைகள் விழக்காத்திருக்கும்
மணிமேகலைகள்…

அலுவலகக் கதவுகளும்
தொழிற்சாலை மதில்களும்
நிராகாித்த விரக்தியில்
மணலுக்குள் விழுந்த சர்க்கரையாய்
வாசல் தேடி மூச்சிரைக்கும்
இளைஞர்கள்…

இன்னும் இன்னும்….
யாராரோ
என் மேனியைத் தொட்டுக் கொண்டு
எனில் விட்டுச் சென்ற சுவடுகள்
நெருக்கமாய்
மிக மிக நெருக்கமாய்….

இரவுக் காவலர் பார்வைபட்டு
காதலர்கள் விலகிப் போக….

போர்வைகளின் பார்வை தேடி
மிச்ச கூட்டமும் வடிந்து முடிந்தபின்…
சில்லறை எண்ணி சிாித்தும் சிந்தித்தும்
சுண்டல் சிறுவர்கள் சிதறி மறைய…

என் தூக்கத்தைத் தின்று விட்டு
இரவு நிம்மதியாய்த் துயில
நிறுத்தாமல் பேசிக்கொண்டிருக்கும்
அந்த நீலக் கடல்…
நான் விழித்திருக்கும் நம்பிக்கையில்…

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்