ஒரு அரசியல் பயணம்

This entry is part [part not set] of 18 in the series 20010729_Issue

கண்ணன்


சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் விற்பனை மையத்தின் கண்ணாடிகள் சாலையில் சென்ற ஊர்வலத்திலிருந்து எறியப்பட்ட கற்களால் சிதறின. பணியாளர்கள் காயமின்றி தப்பியது அவர்கள் அதிர்ஷ்டம். ஊர்வலம் ஒரு உள்ளூர் தாதாவின் பேரவைச் சடங்கு என்று பின்னர் அறிந்தேன். தாதாவின் பெயரை ஒரு வசதிக்காக மாஸ்டர் சுபராஜ் (இனி மா.சு.) என்று வைத்துக் கொள்வோம். இந்த தாதாவிற்கும் எங்களுக்கும் முன் விரோதம் – கல் விழுந்த பிறகுதான் அவருடைய இருப்பே எனக்குத் தெரியவந்தது – எதுவுமில்லை.

ஒரு சராசரி இந்தியக் குடிமகனைப் போல நான் போலீசில் புகார் செய்யவில்லை. இந்த விவேகம் எனக்கு இல்லாமல் போயிருந்தால் போலீசார் ‘நேரடி விசாரணைக்கு ‘ ஆட்டோவில் எங்களுடைய செலவில் வந்துவிட்டுப் போயிருப்பார்கள். FIR (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய மறுத்திருப்பார்கள். கொஞ்சம் காசும் பிடுங்கியிருப்பார்கள். மீதமிருந்த சில கண்ணாடிகளும் உடைந்திருக்கலாம்.

இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு, இரவு எங்கள் மையத்தின் அன்றாட மூடு விழா துவங்க இருந்தபோது ஒருவர் அவசரமாக உள்ளே வந்தார். உரிய கவனிப்பு நடந்து கொண்டிருந்தபோது மேற்பார்வையாளர் என்னிடம் இவர்தான் மா.சு. என்று கிசுகிசுத்தார். மேற்பார்வையாளரிடம் மா.சு.வை அணுகி கல்லெறியப்பட்டது பற்றி கேட்குமாறு கூறினேன். தாதாக்களின் அருகாமையில் உடல்நலக் குறைவு ஏற்படும் என்ற அச்சத்தில் நான் அருகே போகவில்லை.

மேற்பார்வையாளர் உயர் அதிகாரிகளை அணுகும்போது கடைபிடிக்கப்படும் உடல்மொழியுடன் முன்னேறி, குனிந்து, வாயைக் காதருகே எடுத்துச் சென்று, எங்கள் பிராந்திய மரபுபடி மா.சு.வின் காதிலிருந்து சுமார் ஆறு அங்குல இடைவெளியில், தயங்கி, விஷயத்தை – இருபக்கமும் நோட்டம் விட்டபடி – உரிய தொனியில் கிசுகிசுத்தார். அப்போது மா. சு.வின் கண்கள் வியப்பால் விரிந்தன. தீவிரமான முகபாவம் கொண்டார். பதட்டமான சிறு சைகைகள் வெளிப்பட்டன.

பின்னர் மையத்தை அடைத்துவிட்டு வெளியே வந்தபோது மேற்பார்வையாளர் அருகே வந்தார். “கேட்டேன். லிஸ்டில் நம்ம பெயர் கிடையாதாம். விசாரிப்பாராம்.” (Printer ‘s Devil என்பது இதுதானா ?) அங்கிருந்த யாருமே இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவில்லை. மா.சு. எங்கள் நிறுவனத்தை மதித்து முறையான ஒரு பதிலை வழங்கியிருப்பது பற்றிய ஒரு நிறைவு அவர்களுடைய பாவங்களில் வெளிப்பட்டது. எங்கள் ஊரின் நடைமுறை அரசியல் கலாச்சாரத்திற்கும் எனக்கும் ஒரு இடைவெளி இருப்பதாகத் தோன்றவே மா.சு.வைப் பற்றி தொடர்ந்து விசாரிக்கத் துவங்கினேன்.

மா.சு. ஒரு சாதி இளைஞர்களுக்கு அடிதடி வித்தைகளைக் கற்றுக் கொடுத்து ரெளடிகளாக பரிணமிக்கச் செய்து ஒரு பேரவையின் கீழ் அவர்களைத் திரட்டி ‘அரசியல் ‘ நடாத்தி வருகிறார். இந்தப் பேரவை ஒரு நாகரிகமான கட்சியுடன் (திராவிடக் கட்சிகள் அல்ல என்று வாசிக்கவும்) இணைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது பேரவை சில ஊர்வலங்களையும் நடத்தும். மா.சு.வின் வழிக்கு வராதவர்களின் சொத்துக்கள் உரிய முறையில் கவனிக்கப்படும். (மேற்படி பட்டியலை பிழையின்றித் தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பை நான் ஏற்கச் சித்தமாக இருக்கிறேன் என்பதை மா. சு.விடம் அறியத் தருவது எப்படி ?)

பின்னர் ஒரு வெளியூர் பயணத்திலிருந்து மீண்டு, ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ‘Elizabethீ திரைப்படத்தின் போஸ்டர் கண்ணில் பட்டது. இவ்வளவு முக்கியமான படம் இவ்வளவு விரைவாக எங்கள் ஊருக்கு வந்துவிட்டதே என்ற எண்ணத்தில், போஸ்டரில் குறிப்பிட்ட அரங்கு எங்கே இருக்கிறது என்று ஓட்டுனரிடம் ஆர்வத்துடன் விசாரித்தேன். (தியேட்டருக்குப் போகும் பழக்கம் கல்லூரி நாட்களோடு போய்விட்டது.) ஓட்டுனர் என் கேள்விகளுக்கு பதில் தராமல் ‘நீங்கள் அந்தப் படம் பார்க்க வேண்டாம் சார் ‘ என்றார். பிறகு அந்த அரங்கிற்கு நான் போகக்கூடாது என்றார். பேசப் பேச விஷயம் எனக்கு ஒருவிதமாகப் பிடிபடத் துவங்கியது. மதுரையிலிருந்து இங்கு ‘படம் ‘ பார்க்க வருவார்களாம். திரையரங்கின் உரிமையாளர் மா.சு.

னீ

மா.சு.வின் நடவடிக்கைகள் பற்றிய விசாரணையைத் தொடர்ந்தேன். இந்த ஒரு நபர் கமிஷனின் முன்னர் பெறப்பட்ட வாக்கு மூலங்களை இங்கு பதிவு செய்கிறேன்.

பதிவு ஒன்று : சாட்சி : ஒரு திரைப்பட அரங்கின் உரிமையாளர். அவர் கூறினார்:

‘மா. சு. பல நாட்கள் இரவு ஊரிலுள்ள எல்லா திரையரங்குகளுக்கும் தொலை பேசுவார். திரைப்படத் துறையின் இந்த நசிவு காலத்தில் அரங்குகள் அனேகமாக காலியாக இருக்கும். மா. சு. “என்னுடைய அரங்கு Houseful ‘ என்று கொக்கரிப்பார். ‘

பதிவு இரண்டு : சாட்சி : விடுதி உரிமையாளர்.

விடுதி தங்கியுடன் (பயணம் செய்பவர் பயணி, தங்கியிருப்பவர் தங்கி என்ற பொருளில்) ஒரு பிரச்சனை. ‘சீனில் ‘ மா.சு. நுழைந்தார். கட்டைப் பஞ்சாயத்து நடத்தி ‘பீஸ் ‘ ரூ.2000 கோரினார். உரிமையாளர் வக்கீலைத் தொடர்பு கொண்டார். வக்கீல் பணத்தை உடன் கொடுத்துவிட வேண்டும் என்றும் போலீசிடம் சென்றால் ரூ.5000 செலவாகும் என்றும் அறிவுறுத்தினார். பணம் கைமாறியது.

பதிவு மூன்று : சாட்சி : மாவட்ட விளையாட்டுக் குழு உறுப்பினர்.

போட்டிகள் முடிந்து பரிசு வழங்கும் தினத்தன்று மா. சு.வின் குழுவிற்கு சிறப்பிடம் உண்டு. மாவட்ட ஆட்சியாளர், காவல்துறை மேலதிகாரிகள் முன்னிலையில் மா.சு.வின் குழுவினர் சிலம்பாட்டம், கராத்தே போன்ற அடிதடி ஆட்டங்களை நிகழ்த்திக் காட்டுவார்கள்.

பதிவு நான்கு : சாட்சி : போலீஸ் ஏட்டு.

‘மா.சு. மிகவும் நல்லவர். கடந்த தீபாவளி அன்று மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி மா.சு.விற்கு விருந்தளித்தார். மா.சு.விற்கு கோட் சூட்டும் அவரது மனைவியாருக்குப் பட்டுச்சேலையும் வழங்கி நல்லுறவு வளர்த்துக் கொண்டார்.

மா.சு. எங்கள் மாவட்ட ஏட்டுகளுக்கு தினம் 10 ரூபாய் படி அளக்கிறார். அது படிப்படியாக உயர்ந்து உயர்ந்து உச்சம் வரைப் போகும். அரசு சம்பளம் வர சில நாட்கள் பிந்தினாலும் கிம்பளம் ஒழுங்காக வந்துவிடும். ‘

இது மா.சு.வின் பயணத்தின் ஒரு புள்ளி அல்லது திருப்புமுனை என்பதில் சந்தேகமில்லை. அரசியலில் அவருக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. அடி தடி குடி முதல் கூட்டிக் கொடுப்பது வரை அவசியமான அனைத்துத் திறன்களும் அவரிடம் குவிந்துள்ளன. விரைவில் அவர் சட்டமன்ற உறுப்பினராகவோ பாராளுமன்ற உறுப்பினராகவோ மலரலாம். அதற்கு மச்சம் வேண்டும். பண்ணையாரின் கவனமோ அம்மாவின் கடைக்கண்ணோ அவர் மீது பதிய வேண்டும். மா.சு.வின் பயணம் தமிழகத்தின் ஒரு சராசரி அரசியல் பயணம்.

அரசியலில் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் துவங்கிய இந்தப் பயணங்கள் இன்று கோட்டையையும் நீதிமன்றங்களையும் அதிகார வர்க்கத்தையும் ஆக்கிரமித்திருப்பதற்கான நிரூபணங்கள் எல்லாத் திசைகளிலும் காணக் கிடைக்கின்றன.

இந்தியா போன்ற ஒரு சிக்கலான சமூக அமைப்பில் ஜனநாயகமயமாதல் என்பது அரசியலிலும் கல்வியிலும் பெரும் கலக்கத்தை உருவாக்குகிறது. இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து, செழுமைப்படுத்தி வனைக்கும் ஆற்றல் நம்முடைய ஆளும் வர்க்கத்திடம் இல்லை. தங்கள் அதிகாரத்தை விட்டகலும் எதைப் பற்றியும் அவர்களுக்கு அக்கறை இல்லை. பின்னர் இந்த மனோபாவம் மத்திய தர வர்க்கத்தை எட்டுகிறது. மத்திய தர வர்க்கத்திற்கு இன்று அரசியலில் ஆர்வம் இல்லை என்பது தெளிவு. மத்திய தர வர்க்கத்தின் கவனத்தைப் பெறாத எதுவும் இந்தியாவில் சீரழியும் ((goes to the dogs) என்ற அஷிஸ் நந்தியின் கூற்று இன்றைய அரசியலின் எல்லா பக்கங்களிலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

அதிகார அமைப்பில் சமூகப் பொறுப்பற்ற சுயநல சக்திகளின் ஆதிக்கம் நிலவுவது ஒரு புறமிருக்க, மறுபக்கம் அரசியலில் அதிக பிரதிநித்துவத் தன்மை உருவாகிவருகிறது. இருந்து வரும் அதிகார அமைப்பின் சீரழிக்கும் முனைப்புகளை எந்த அளவிற்கு புதிய அடிமட்டத்திலிருந்து உருவாகிவரும் தலைவர்களால் எதிர்கொள்ள முடியும், தங்களுடைய மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி இயக்கமுடியும் என்பது வருங்காலத்தில் தெரியும்.

சமூகத் தளத்தில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிகள் ஒரு உச்சத்தை நோக்கி நகர்ந்தபடி உள்ளன. இதில் ஒரு இடையீடு செய்ய வேண்டிய கடமை நமது அறிவுஜீவிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் சமூகப் பணியாளர்களுக்கும் உண்டு. **

கண்ணன் காலச்சுவடு இதழின் ஆசிரியர் **

Series Navigation

கண்ணன்

கண்ணன்