ஐூலியாவின் பார்வையில்….

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

என் எஸ் நடேசன்


ஐூலியா சொன்ன அந்த வார்த்தைகள். அவள் அறையை விட்டு வெளியேறிய பின்பும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. “You are a arrogant man”. அந்த மென்மையான இதழ்கள் உதிர்த்த கடினமான வார்த்தைகள்.

மேசையின் கீழிருந்த தனது ஹான்ட் பாக்கை இழுத்த வேகத்தில் தனது செல்ல நாய் றோசியையும் அழைத்தவாறு அவள் வெளியேறினாள். சுமார் ஆண்டு கால நட்புக்கு அவளே முற்றுப்புள்ளி வைத்தாள்.

நட்பு இனிமையானது. ஆனால் முறிவோ கொடுமையானது என்பதை அனுபவபூர்வமாக உணர்வதற்கு அந்த சம்பவம் தான் காரணமானது. நடந்தது என்ன ?

மெல்பேண் நகரின் மத்தியில் உள்ள மிருக வைத்தியசாலையில் நான் பணியாற்றும் காலத்தில் எனக்கு அறிமுகமானவள் தான் ஐூலியா. அவளது செல்லப்பிராணி றோஸி. றோசிக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் போதெல்லாம் ஐூலியா அதனையும் அழைத்துக் கொண்டு என்னிடம் தான் வருவாள். அவளைப் பொறுத்தவரையில் நான் கைராசிக்காரனாக இருக்க வேண்டும்.

ஒருநாள் எனக்கு உதவியாகப் பணியாற்றும் நர்ஸ் சுகவீனம் காரணமாகக் கடமைக்கு வரவில்லை. தனியாகத் தவித்துக் கொண்டிருந்த எனக்கு ஐீலியாவின் வரவு உற்சாகமளித்தது. ஏற்கனவே அறிமுகமாகியிருந்த அவளை புன்முறுவல் பூக்க வரவேற்றேன்.

“றோஸிக்கு ஊசி போட வேண்டும்“ என்றாள்.

“அதற்கென்ன போடலாமே“

“எங்கே உங்கள நர்ஸ் ?“

“அவளுக்குச் சுகமில்லையாம். வரவில்லை.“

“நான் உதவி செய்யட்டுமா ?“

“உனக்கு நர்ஸ் வேலை தெரியுமா ?“

““முடிந்தவரை செய்வேன்““ எனச் சொல்லிவிட்டு எனது பதிலுக்கும் காத்திராமல் கிளினிக்கைச் சுத்தப்படுத்தி ஒழுங்கு செய்தாள். ஒரு நர்சுக்கான அனுபவம்

இல்லாவிடினும் குறைந்த பட்சம் நாய், பூனைகளைப் பரிசோதிக்க உதவுவாள் என்ற நம்பிக்கையுடன் அவளது உதவிகளை ஏற்றுக்கொண்டேன். முற்பகலில் வந்தவர்களின் செல்லப்பிராணிகளைப் பரிசோதிப்பதற்கு ஐூலியா உதவியாக

இருந்தாள். எதுவிதப் பிரச்சினையும் இல்லாமல் முற்பகல் பொழுது கழிந்தது. நண்பகலுக்குப் பின் நடுத்தர வயதான மாது ஒருத்தி தனது சிறிய ““பப்பியோன்““ ரக நாயைக் கொண்டு வந்தாள். அதனது வாலின் அடிப்பகுதியில் ஒரு காயம் இருப்பதாகச் சொன்னாள்.

நாயைப் பரிசோதித்தேன். அதன் உடலில் தெள்ளுகள் ஊர்ந்து கொண்டிருந்தன. நாய்க்குரியவளிடம் அதனைச் சுட்டிக்காட்டி ““இந்தக் காயம் தெள்ளுகளினால் ஏற்படும் அலர்ஐியைப் போக்குவதற்கு நாய் கடிப்பதனால் ஏற்படுகிறது. என விளக்கிவிட்டு ““அலர்ஐிக்கு ஊசிபோடுகிறேன்“இந்த மருந்தைத் தெள்ளுகள் நீங்கப் பாவிக்க வேண்டும்““ என்றேன்.

அதுவரையில் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஐூலியா திடார் எனத், தெள்ளுக்கு ““ரீறி““ ஒயில் போடலாம் என்றாள்.

““பேசாதே““ எனக் கண்ணால் சைகை செய்துவிட்டுச் ““சாதாரண புண்ணாக

இருந்தால் ““ரீறி““ ஒயில் போடலாம். ஆனால் இது அலர்ஐியால் வந்தது என்று சற்று, கோபமாகச் சொன்னேன்.

ஐூலியாவின் முகம் வாடிவிட்டது. எமக்கிடையே மூண்ட மெளனயுத்தத்தை நாயைக் கொண்டு வந்த பெண் புரிந்து கொண்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட நாய்க்கு ஊசியும் போட்டு, தெள்ளுக்கு மருந்தும் கொடுத்து அனுப்பினேன்.

““ஐூலியா! இவர்கள் பணம் செலுத்தி ஆலோசனைக்கு வருகிறார்கள். இவர்களிடம் நீ ஆலோசனை செய்வது முறையல்ல, மேலும் விஞ்ஞான ரீதியில் ““ரீறி““ ஒயில் வேலை செய்யும் என்பதற்கு ஆதாரமில்லை என்றேன்.

“அப்படியானால் இதைப்பற்றி முன்பே கூறியிருக்க வேண்டும்.“

““நான் சொன்ன விடயங்கள் ““கொமன் சென்ஸ““ ஆனவை.““

“You are a arrogant man” எனக் கூறிவிட்டு வெளியேறினாள்.

8888

ஆறு வருடங்களுக்கு முன்பு எனது சிகிச்சை அறையிலுள்ள சிறிய மைக்ரோ போனில் ““ஐூலியா ஐிப்ஸ்““ எனக் கூறினேன்.

கறுப்பு நிற ““ரொட்வீலர் நாயுடன் பெண்ணொருத்தி என் அறைக்குள் நுழைந்தாள்.

அவுஸ்திரேலிய மரபுப்படி நலம் விசாரித்தேன். ““நான் நலம். ஆனால் றோஸி மாத்திரம் மூன்று காலில் நடக்கிறது.““

ஜம்பது வயதைத் தாண்டியிருந்தாலும் எலிசபெத் டெய்லரை நினைவுக்குக் கொண்டுவரும் முகவெட்டு, வட்டமான முகம். கண்களின் கீழ் இரு மடிப்புகள் தெரிந்தாலும் நீலக் கண்மணிகள் ஊடுருவிப் பார்க்கும் தன்மை கொண்டவை. அணிந்திருந்த உடைக்களில் சமூக எதிர்ப்புணர்வு தெரிந்தது.

““என்ன நடந்தது ?““

““போர்ட் மெல்பண் கடற்கரையோரத்தில றோஸியுடன் வோக்கிங் போய்க் கொண்டிருந்த பொழுது திடாரென எதிர்பாராத விதமாகக் குறுக்கே ஓடிய முயல் குட்டியொன்றைத் துரத்திக் கொண்டு ஓடிய றோஸி ஒரு கற்பாறையில் மோதுண்டு விழுந்தது.““

மூன்று நாட்களுக்கு முன் நடந்த

இச் சம்பவத்தில் ஒரு கால் வீங்கிவிட்டது. நாயைப் பரிசோதனை மேசையில் கிடத்தி விட்டுப் பார்த்தேன். ஒரு முழங்காலில் சவ்வு அறுந்திருப்பது தெரிந்தது.

““றோஸியின் முழங்கால் மூட்டிலுள்ள Anterior Cruciate Ligament அறுந்துவிட்டது. சத்திர சிகிச்சையின் மூலம் தான் குணப்படுத்த முடியும். உதை பந்தாட்ட விளையாட்டு வீரர்களுக்கும் இப்படிச் சவ்வு அறுந்துவிடுவது வழக்கம்.““ என்றேன்.

““றோஸி உதைபந்தாட்டம் விளையாடவில்லை““ என்று சிரிித்தவாறு சொன்னாள்.

பலமணி நேரமும் அதிக பணமும் விரயமாகும் இந்த சத்திர சிகிச்சையைப் பற்றி

இவளுக்கு எப்படி விளக்குவது என்று யோசித்தேன். பின்னர் எனது வலது காலைக் கதிரையில் வைத்து முழங்கால் மூட்டில் சவ்வுகள் அமைந்துள்ள விதத்தை விளங்கப்படுத்தினேன்.

இதைச் சரிப்படுத்தாது விட்டால் றோஸியால் நடக்க முடியாது என்றும் சொன்னேன். அவள் ““களுக்““ எனச் சிரித்தாள். எனது முழங்காலை உதராணம் காட்டிக் கூறியதைக் கேட்டு அவள் சிரிக்கிறாள் எனத் தெரிந்தவுடன் அசட்டுப் புன்னகை நெளியச் சங்கடத்துடன் காலைக் கீழே வைத்தேன். சத்திர சிகிச்சைக்காக அவளிடம் சம்மதக் கையொப்பம் வாங்கிக் கொண்டு மறுநாளே சத்திர சிகிச்சையும் செய்துவிட்டேன்.

இரண்டு மாதத்தில் ““றோஸி““ நான்கு கால்களில் நடக்கும் என உறுதியளித்தேன். குறிப்பிட்ட காலத்தில் ““றோஸி““ நடக்கவில்லை. மீண்டும் மயக்க மருந்து கொடுத்து X Ray எடுத்துப் பார்த்தேன். குறிப்பிட்ட காலில் எதுவிதக் கோளாறும் தெரியவில்லை. எனது சக வைத்தியர்களின் அபிப்பிராயத்தையும் கேட்டேன். மற்றவர்களாலும் எதுவித முடிவுக்கும் வரமுடியவில்லை.

ஐூலியா கவலையுடன் ““இனி என்ன செய்வது ?““ எனக் கேட்டாள். ““நான் உங்கள் றோஸிக்கு “Accupuncture“ சிகிச்சை செய்கிறேன். அதற்கு நீங்கள் பணம் தரவேண்டியதில்லை““ என்றேன்.

“ ‘Accupuncture ‘ பயன் தருமா ?““ அவள் அப்பாவியாகக் கேட்டாள்.

“ ‘Accupuncturte ‘ சீன சிகிச்சை முறை.. இது நான்காயிரம் வருடகாலமாக அங்கு பிரயோகிக்கப்படுகிறது. உடலில் “மெரிடியன்“ எனப்படும் பகுதிகளினுாடாக ஒரு சக்தி பாய்கிறது. இந்த “மெரிடியன்“ களில் 365 புள்ளிகள் உண்டு.

இந்தப் புள்ளிகள் உடலின் அங்கங்களை ஆளுமை செய்கிறது. இப்புள்ளிகளில் ஊசிகளை மென்மையாகச் செலுத்துவோம்.““ என்று ஒரு விரிவுரையே நடத்தினேன்.

எந்தவொரு விடயத்திலும் informed consent எடுக்கவேண்டியது முக்கியமாக உள்ள காலத்தில் வாழ்கிறோம். அக்கியூபங்சர் படித்திருந்தாலும் முதல் முறையாக ஐூலியாவின் றோஸிக்குத் தான் அந்த சிகிச்சை முறையைப் பிரயோகித்தேன். றோஸியும் அந்த ஊசிகளை அமைதியாக ஏற்றுக் கொண்டது. மிக வேகமாக றோஸியின் காலில் முன்னேற்றம் தென்பட்டது. இந்தச் சிகிச்சை முறையால் வியக்கத்தக்க முறையில் றோஸி நான்கு கால்களிலும் நடக்கத் தொடங்கியது.

இந்தச் சிகிச்சையின் போது ஐூலியாவுடன் பல விடயங்களையும் பேசுவேன். எமது உரையாடல்களில் இருந்து ஐூலியா ஒரு இலக்கிய ஆர்வலர் என்பதும், ஓவியங்கள் வரைபவர் என்பதும் தெரிய வந்தது. விக்கிர சேத்தையும், சல்மன் ருஷ்டியையும் பெயரளிவில் அறிந்திருந்த எனக்கு அவள், அவர்களது புத்தகங்களைப் பற்றி விளக்கினாள். அவளது துாண்டுதலின் பேரில் விக்கிரம் சேத்தின் “ A Suitable Boy ‘ வாங்கிப் படிக்க முயன்றேன். அரைவாசிக்கு மேல் படிப்பதற்கு எனக்குப் பொறுமை இருக்கவில்லை. றோஸியின் கால்களைக் குணப்படுத்தியதற்கு நான் எதுவித கட்டணமும் அறவிடவில்லை, என்பதனாலோ என்னவோ ஐூலியா, தன் கைப்பட வரைந்த அழகான ஓவியமொன்றை எனக்குப் பரிசளித்தாள். அந்த ஓவியம்

இன்றும் எனது வீட்டின் சுவரை அலங்கரிக்கிறது.

ஆங்கில இலக்கியத்திலும், அக்யூபங்கரிலும் என்னைத் தற்செயலாக ஈடுபடத் துாண்டிய ஐூலியாவும், றோஸியும் என்னால் மறக்க முடியாதவர்கள்.

இலக்கிய உணர்வும், ஓவிய ஆற்றலும் நிரம்பிய கலையுள்ளமான ஐூலியாவிடம் ““உனக்கு ““கொமன் சென்ஸ““இல்லை என்று நான் கூறியது கடுமையான சொற்பிரயோகமா ? என்பதை இன்றும் நான் எனக்குள் விவாதித்துக் கொண்டிருக்கிறேன்.““

அவள் என்னை சுய விமர்சனத்திற்கு உட்படுத்திவிட்டாள்.

—-

என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்