ஐயா சொன்னது

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

அ.முத்துலிங்கம்


நாங்கள் அப்போது இலங்கையில் மவுண்லவினியா என்னும் இடத்தில் குடியிருந்தோம். அது தலைநகரத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்ததால் அங்கே கொழும்பில் இருந்த வசதிகள் கிடையாது. உதாரணம், குழாய் தண்ணீர் இல்லை; கிணற்று தண்ணீ£ர்தான். அவரவர் வீடுகளில் கோழிகளும், ஆடுகளும் வளர்த்தார்கள். பின்னாலே வாழைத்தோட்டம் போட்டார்கள். முன்னாலே ஈரப்பிலா மரத்தையும், கறிவேப்பிலை மரத்தையும் ஒருவரும் நடவில்லை; அவை தானாகவே வளர்ந்தன.
நாங்கள் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டு சொந்தக்காரர் ஒரு சிங்களவர், பெயர் பீரிஸ். அவர் எப்போதும் தலையிலே ஆமை ஓட்டினால் செய்த ஒரு வளைந்த சீப்பை அணிந்திருப்பார். ஏதோ தலையை சீவும்போது பாதியிலே அவசர வேலை ஒன்று வந்து வெளிக்கிட்டதுபோல அதை உச்சியிலே குத்தி வைத்திருப்பார். தலையை சீவி முடித்து அவர் சீப்பை கழற்றியதே இல்லை. மிகவும் நல்ல மனுஷர். நாங்கள் அவ்வப்போது சந்திப்பது கிணற்றடியிலேதான். வீட்டின் சொந்தக்காரரும் நாங்களும் அதை பொதுவாகப் பாவித்தோம். போமஸ்துதி என்பார், தொடர்ந்து புன்சிரிப்பு. அவருக்கு தமிழ் தெரியாது. எனக்கு சிங்களம் தெரியாது. அது வசதியாக இருந்தது.
ஒரு ஞாயிறு மதியநேரம். இது நடந்து இப்போது சரியாக ஐம்பது வருடமாகிறது என்றாலும் எனக்கு நாள் ஞாபகமிருக்கிறது. அது பின்னாளில் பிரபலமாகப்போகும் ஒரு ஞாயிற்றுக்கிழமை. நான் கிணற்றடியில் நின்றபோது சுனிதா வந்தாள். வீட்டுக்காரரின் மகள். வயது பதினாலு இருக்கும். அவள் இடை எந்த நேரமும் பூவரசங்கம்பு போல ஆடிக்கொண்டிருக்கும். கண்கள் நேராகப் பார்க்காமல் ஓரமாகப் பார்க்கும். அன்று அவள் ஓரமாகக்கூட பார்க்கவில்லை. யாரோ முன்பின் தெரியாத ஆளைப் பார்ப்பதுபோல வாளியை தூக்கிக்கொண்டு தன் முறைக்காக காத்து நின்றாள். வழக்கமாக நல்ல ஒரு புன்சிரிப்பை வெளியே விடுவாள். அன்று அதுவுமில்லை. நான் கிணற்றுக் கயிற்றையும் வாளியையும் கொடுத்தபோது வெடுக்கென்று பற்றிக்கொண்டு தலையை திருப்பினாள். அப்பொழுதே எனக்கு விசயம் புரிந்திருக்கவேண்டும். என்னுடைய மூளை அந்த நாட்களிலும் மந்தகதியிலேயே வேலை செய்தது.
பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்தபோது தனிச் சிங்களச் சட்டத்தை கொண்டுவந்தார். தமிழ் கட்சிகள் இதை எதிர்த்து வவுனியாவில் மாநாடு நடத்தியது சிங்களவர்களுக்கு பிடிக்கவில்லை. பொலநறுவ ரயில் நிலையத்தில் சிங்களவர்கள் ரயில் வண்டிக்குள் புகுந்து தமிழர்களைத் தாக்கினார்கள். அதைத் தொடர்ந்து ஹிங்குராகொட என்னும் ஊரில் சிங்கள காடையர்கள் எட்டு மாதக் கர்ப்பிணியான ஒரு தமிழ் பெண்ணை வெட்டிக் கொன்றார்கள். 1958ம் ஆண்டு மே மாதம் அந்த ஞாயிறு இரவு கலவரம் மெல்ல மெல்ல ஊர்ந்து கொழும்புக்கு வந்தது. அது சுனிதாவுக்கு தெரிந்திருந்தது. எனக்கு தெரியவில்லை.
இரவு பத்து மணி இருக்கும். பலவிதமான செய்திகள் வரத் தொடங்கின. வீதிகளில் சனங்கள் உரத்துக் கூவிக்கொண்டு கூட்டம் கூட்டமாக ஆர்ப்பாட்டம் செய்தவாறு சென்றார்கள். ஆட்களின் ஓலமும் தூரத்திலிருந்து வந்தது. நாங்கள் இருந்த பகுதியில் எல்லாம் சிங்களவர்கள்தான். மூன்றே மூன்று தமிழ் குடும்பங்கள். அவையும் துரத் தூர இருந்தன. ஏதோவொரு வீட்டை உடைக்கும் சத்தம் காற்றிலே வந்தது. கூக்குரல்கூட பக்கத்தில் ஒலிப்பது போல துல்லியமாகக் கேட்டது.
அண்ணர் என்னைப் பார்த்து பக்கத்து வீட்டில் போய் பீரிஸை அழைத்துவரச் சொன்னார். நான் அவர்கள் வீட்டுக்குப் போய் கதவை தட்டினேன். அந்த நேரத்தில் எனக்கு கொஞ்சம் கை நடுங்கியது உண்மை. உள்ளே பெரிய சிரிப்பும், ஆரவாரமுமாக ஒரே சத்தம். அவர்கள் உள்ளே போட்ட கும்மாளத்தில் நான் கதவு தட்டிய சத்தம் எனக்கே கேட்கவில்லை. மறுபடியும் கதவைத் தட்டப் போனபோது சுனிதா படீரென்று கதவை திறந்தாள். ஏதோ அடக்கமுடியாத நகைச்சுவைக்கு விழுந்து விழுந்து சிரித்தவள் அப்படியே எதிர்பாராமல் என்னைக் கண்டு சிரிப்பை பாதியில் நிறுத்தினாள். பெரிய ஆரவாரமும் கும்மாளமும் திடீரென்று நின்று நிசப்தம் உண்டாகியது செயற்கையாக பட்டது. நான் வந்த காரியத்தை பீரிஸிடம் சொன்னேன். அப்பொழுதுதான் அவருக்கு நாங்களும் அங்கே இருக்கிறோம் என்பது ஞாபகம் வந்ததுபோல திடுக்கிட்டார். உடனேயே தன் வளைந்த சீப்பை எடுத்து ஒரு கிரீடத்தை அணிவதுபோல நிதானமாக தலையிலே சூட்டிக்கொண்டு என் அண்ணரைப் பார்ப்பதற்காக வந்தார்.
அண்ணர் பீரிசுக்கு நிலைமையை விளங்கப்படுத்தினார். எந்த நேரமும் எங்கள் வீடு தாக்குதலுக்கு உள்ளாகலாம். எங்கள் உயிரையும் உடமைகளையும் அவர்தான் பாதுகாக்கவேண்டும் என்றார். பீரிஸ் அப்பொழுதுதான் தன் நினைவுக்கு வந்தவர்போல ஒரு புது மனிதராக மாறினார். எங்கள் பாதுகாப்புக்கு தான் உத்திரவாதம் என்றார். அவர் திரும்ப வீட்டுக்கு போகவில்லை. ஒரு நாற்காலியை எடுத்து வீட்டுக்கு வெளியே போட்டு அன்றிரவு முழுக்க அங்கேயே தங்கினார். தூங்கவே இல்லை. உள்ளே நாங்களும் தூங்காமல் விடிவதற்காக காத்திருந்தோம். அடுத்த நாள் காலை அந்த மூன்று தமிழ் குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் வீடு உடைந்து சிதிலமாகிவிட்டது என்றார்கள். ஒரு குடும்பத்து ஆட்கள் இரவோடு இரவாக மறைந்துவிட்டார்கள். எஞ்சியது நாங்கள் மட்டும்தான்.
ஒரு பொலீஸ் வாகனத்தில் எங்களையும் இன்னும் சில தமிழ் குடும்பங்களையும் அகதி முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரேயொரு பெட்டிதான் எடுத்துவரலாம் என்று கட்டளை. அந்த வீட்டில் நான், அண்ணர், மச்சாள், தங்கச்சி, தம்பி என்று பலரும் இருந்தோம். எங்கள் உடமைகளில் எதை பெட்டியில் அடைப்பது எதை விடுவது என்பது தெரியவில்லை. நான் உடுத்த உடுப்போடு புறப்பட்டேன். என் பங்குக்கு ஒரேயொரு புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டேன். அந்த வீட்டுக்கு திரும்பி வருவோம் என்பது நிச்சயமில்லை. அடுத்தவேளை உணவு எப்போது, எங்கேயிருந்து வரும் என்பதும் தெரியாது.
அகதி முகாமில் 2000 பேர்வரை இருந்தார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் பல முகாம்கள் இருந்தன என்று பின்னர் கேள்விப்பட்டேன். இப்பொழுது சரியாக ஐம்பது வருடங்கள் கழித்து நினைத்துப் பார்க்கும்போது அந்த முகாமில் நடந்தது ஒன்றும் எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் ஒரேயொரு காட்சி நினைவுக்கு வருகிறது. இத்தனை வருடங்கள் கழித்தும் அது நினைவில் நின்றதால் அது முக்கியமானதாகத்தான் இருக்கவேண்டும். ஒரு கறுத்த பெண்மணி, பெரிய உடம்பு, வயது நாற்பது இருக்கலாம். கால்களை அகட்டி நீட்டி முழங்கால் மட்டும் சேலையை சிரைத்து உட்கார்ந்திருப்பார். அவருக்கு பக்கத்திலே ஒரு முழுப்போத்தல் நிறைய நல்லெண்ணெய் இருக்கும். அதை அவர் தலையிலே தேய்த்து ஆற அமர முடியை சீவி வாரி இழுப்பார். எல்லோரும் அவரை அதிசயமாகப் பார்ப்பார்கள். ஒரேயொரு பெட்டிதான் அவரும் எடுத்து வந்திருந்தார். அவருக்கு ஒரு போத்தல் நல்லெண்ணெய் மிகவும் முக்கியமானதாகப் பட்டிருக்கவேண்டும். தலைவாரி முடித்ததும் நிரைக்கு ஆட்கள் வந்து கையை நீட்டி பிச்சை எடுப்பது போல அவரிடம் நல்லெண்ணேய் வாங்கிக்கொண்டு போய் உச்சியில் தேய்ப்பார்கள்.
அன்று ஒரு தொண்டு நிறுவனம் அகதிகளுக்கு இலவசமாக உடைகள் கொடுத்தது. ஏதோவொரு வெளிநாட்டில் யாரோ போட்டு முடித்த உடைகள்தான். அதற்காக ஆட்கள் சண்டைபோட்டு ஒருவர் மேல் இன்னொருவர் ஏறி நின்று பெற்றுக்கொண்டார்கள். எனக்கு நாலு சைஸ் பெரிசான இரவு ஆடை மேல்சட்டை மட்டுமே கிடைத்தது. கீழ் கால்சட்டை யாருக்கு போனதோ தெரியாது. அதனுடைய கடைசி பட்டன் என் கைகளுக்கு எட்டாது. அவ்வளவு தூரத்தில் கிடந்தது. மிகச் சந்தோசமாக அதை நான் பகலிலும், இரவிலும் அணிந்துகொண்டேன். ஒரு வாரம் கழித்து எங்களை கப்பல் வழியாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார்கள். அரசாங்கத்தால் ரயில் பயண பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுக்க முடியவில்லை.
நாலு நாள் கப்பல் பயணம். எங்கே போகிறோம் என்று யாராவது கேட்டால் எங்கள் தேசத்துக்கு என்று பதில் சொன்னோம். அது ஓர் எண்ணெய் கப்பல். நடக்கும்போது ஆட்கள் அடிக்கடி வழுக்கி விழுந்தார்கள். மணமோ சொல்ல முடியாது. ஆட்களின் வேர்வை மணம். கடல் மணம். எண்ணெய் மணம். அத்துடன் பலர் தலை சுற்றி வாந்தியெடுத்ததால் அந்த மணமும் சேர்ந்துகொண்டது. வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத ஒரு கலவையான மணம். சனங்கள் ஆடு மாடுகள்போல கிடைத்த இடங்களில் படுத்துக்கொண்டார்கள். ஒருவர் படுத்து எழும்பியதும் வேறு ஒருவர் அந்த இடத்தைப் பாய்ந்து பிடித்துக்கொண்டார்.
இவ்வளவும் நடக்கும்போது நான் என்பாட்டுக்கு எஞ்சின் சத்தம் காதை செவிடாக்கும் ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்து நான் கொண்டுவந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் புத்தகம் Daniel Defoe என்பவர் எழுதிய Robinson Crusoe. அது ஞாபகத்தில் இருப்பதற்கு காரணம் என்னுடைய அந்தச் சூழலுக்கு அது அப்போது மிகவும் பொருந்தியிருந்தது. இந்த நாவலை Robert Knox எழுதிய இலங்கை வராலாற்று குறிப்பில் இருந்து திருடி எழுதியதாக பின்னாளில் படித்ததுண்டு. அப்போது அது எனக்கு தெரியாது. ரொபோர்ட் நொக்ஸ் என்ற வெள்ளைக்காரன் கண்டி அரசனிடம் பிடிபட்டு 19 வருட காலம் சிறைத்தண்டனை அனுபவித்தவன். பின்பு எப்படியோ தப்பித்து ஓடிப்போய் தன் அனுபவங்களை புத்தகமாக எழுதினான்.
இந்த நாவலில் வரும் ஒரு சம்பவம் அப்பொழுது நான் அனுபவித்த தனிமைக்கு பொருத்தமானதாக அமைந்தது. குரூசோ ஓர் ஆளில்லாத தீவில் பல ஆண்டுகள் தனியாக சீவிக்கிறான். அவனுக்கு விலங்குகள், பாம்புகள், பறவைகள், பூச்சிகள் என்று எதற்கும் பயமில்லை. ஒரு நாள் கடற்கரையில் மனிதக் காலடியைக் கண்டு திடுக்கிடுகிறான். பீதி பிடித்து என்ன செய்யலாம் என்று தெரியாது நடுங்குகிறான். அப்போது எனக்கு ஓர் உண்மை துலங்கியது. மனிதனுடைய உண்மையான் எதிரி இன்னொரு மனிதன்தான். நாங்கள் இரண்டாயிரம் பேர் ரயிலில் போக முடியாமல் கப்பலில் போவதற்கு காரணம் இன்னொரு மனிதனிடம் எங்களுக்கிருந்த அச்சம்தான்.
மத்தியான நேரத்தின்போது ஒரு தட்டை ஏந்தி வைத்துக்கொண்டு மறியல் கைதிபோல வரிசையில் நிற்கவேண்டும். என் முறை வந்தது. இரண்டு கரண்டி சோற்றை எண்ணி என் தட்டில் போட்டான் அந்த வெள்ளைக்கார இளைஞன். சரியாக அந்த நேரம் பார்த்து பருப்பு அண்டாவில் பருப்பு முடிந்துவிட்டது. கொஞ்சம் பொறு என்று சைகை காட்டிவிட்டு அவன் உள்ளே போனான். நான் நீட்டிய கையோடு யாரோ ஒருவர் போட்டு முடித்த நீளமான இரவுச் சட்டையை அணிந்துகொண்டு நெடுநேரம் அங்கே நின்றேன். அப்பொழுது நான் எனக்குச் சொல்லிக்கொண்டேன். ‘இந்த நாளை நன்றாக ஞாபகம் வை. உன் வாழ்நாளில் இதுவே ஆகக் கீழேயான தருணம். இனிமேல் இப்படி ஒரு தருணம் உன் வாழ்க்கையில் வராமல் பார்த்துக்கொள்.’
நாங்கள் யாழ்ப்பாணத்து ஆதித் துறைமுகமான பருத்துத்துறையில் போய் இறங்கியபோது எங்களை வரவேற்க பெரிய கூட்டம் கூடியிருந்தது. ஏதோ போரிலே வென்று எங்கள் நாட்டுக்கு நாங்கள் திரும்புகிறோம் என்பதுபோல எங்களுக்கு வீரத் திலகமிட்டு மரியாதை செய்தார்கள். யாழ்ப்பாணதில் ஒருமாத காலம் தங்கியிருந்தோம். நிலமை சீரானபோது திரும்பவும் புறப்பட்டோம். என்னுடைய படிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. ஐயா அதை விரும்பவில்லை. ‘எதற்காக திரும்பவும் போகிறீர்கள். ஒரு முறை அடித்து ருசி கண்டவன் நிப்பாட்டமாட்டான். மீண்டும் அடிப்பான். நீங்கள் திரும்பவும் இந்த நாட்டுக்குத்தான் வரவேண்டும். இது பாதுகாப்பான நாடு. இதை ஒருவரும் எங்களிடமிருந்து பறிக்கமுடியாது.’
32 வருடங்களுக்கு பிறகு, 1990ம் ஆண்டு கேர்ணல் கிட்டு சுவிட்சர்லாந்தில் என்ன பேசுவார் என்பது எனக்கு அப்போது தெரியாது. ஒரு கூட்டத்தின் முடிவில் வெள்ளைக்கார நிருபர் ஒருவர் எதிர் கேள்வி போட்டு கிட்டுவை மடக்கினார். ‘ நீங்கள் தமிழ் ஈழம், தமிழ் ஈழம் என்று சொல்லி பேசுகிறீர்கள். இந்த தமிழ் ஈழம் எங்கே இருக்கிறது. இதன் எல்லைகள் என்ன?’
கிட்டு ஒரு கணம் திகைத்துவிட்டார். சிறிது அவகாசம் எடுத்து தன்னை மீட்டுக்கொண்டு அவர் இப்படி பதிலளித்தார்.
‘இலங்கைத் தீவின் வரை படத்தையும் சிறிது வண்ணக்கலவையையும் ஒரு தூரிகையையும் கையிலே எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கையில் எந்தெந்த பகுதிகளில் குண்டுகள் விழுகின்றனவோ, எந்தெந்த பகுதிகளில் பீரங்கி வெடித்து அழிவுகள் நடக்கின்றனவோ, அந்தந்த இடங்களை எல்லாம் வரைபடத்தில் வண்ணம் தீட்டுங்கள். முடிவில் வண்ணம் பூசப்பட்ட அந்தப் பகுதிதான் தமிழ் ஈழம். அதுதான் எங்கள் எல்லைகள்.’
கிட்டு சொன்னதையும், ஐயா 50 வருடங்களுக்கு முன்னர் சொன்னதையும் சேர்த்து இப்போது யோசித்துப் பார்க்கிறேன். ஐயா கூறியதில் ஒன்று பொய்த்தது. ஒன்று உண்மையானது. சிங்களவர்கள் தொடர்ந்து அடிப்பார்கள் என்பது உண்மையானது. ஆனால் எங்கள் நாடு பாதுகாப்பானது என்பது பொய்த்தது. உலகிலேயே மிகவும் அபாதுகாப்பான நாடாக அது மாறிவிட்டது.

யாரோ போட்டு முடித்து தானமாகக் கிடைத்த இரவுச் சட்டையை நான் பல வருடங்களாக பல தேசங்களுக்கும் ஒரு ஞாபகத்துக்காக காவித் திரிந்தேன். ஒரு காலத்தில் நான் வளர்ந்து பெரியவனாகி அந்த உடையை நிரப்புவேன் என்று நினைத்தேன். அது நடக்கவே இல்லை. அந்த உடையும் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு மாறும் இடைவெளியில் எங்கோ எப்போதோ ஏதோ ஒரு தருணத்தில் என்னை விட்டு நீங்கியது.

END

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்