ஏறத்தாழ சூரியக் கிரகக்குடும்பத்தைப் போன்றே இருக்கும் இன்னொரு சூரியக் குடும்பத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue


அறிவியலாளர்கள் இதுவரை கண்டறிந்த நட்சத்திரங்களிலேயே சூரியனையும் அதன் கிரகங்களையும் வெகுவாக ஒத்திருக்கும் ஒரு சூரியக் குடும்பத்தை கண்டறிந்துள்ளனர். இதிலும் வியாழன் போன்ற ஒரு பெரிய கிரகம், நம் சூரியனை சுற்றிவருகின்ற தொலைவில் அங்கும் சுற்றி வருவதைக் கண்டறிந்துள்ளனர்.

இதுவரை கண்டறியப்பட்டுள்ள சூரியனுக்கு வெளியில் இருக்கும் கிரகக் குடும்பங்களில் இதுவே மிகவும் நம் சூரியனை ஒத்ததாக இருக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள், இந்த வெளிசூரிய வியாழனுக்கும் அதன் சூரியனுக்கும் இடையே நம் சூரியனில் உள்ளது போல சிறிய கல்லாலான கிரகங்கள் பூமி செவ்வாய் போன்று அங்கும் இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

இந்த நட்சத்திரத்தின் பெயர் HD 70642 என்பது. இது வெறும் கண்ணால் பார்க்க மிகவும் நுண்ணியது. ஆனால் தெற்கு வானத்தில் பைனாக்குலரைக் கொண்டு காணலாம்.

95 ஒளி வருடங்கள் தொலைவில் இருக்கும் இந்த வாயு நிரம்பிய ‘வியாழன் ‘ அதன் மஞ்சள் குட்டி சூரியனின் (yellow dwarf) ஒளியில் மூழ்கி இருக்கிறது.

நம் வியாழனைப் போன்றே இதுவும் பல வண்ணங்களாலும் கோடுகளாலும் இதன் காற்று மற்றும் தட்பவெப்ப அடையாளங்களை கொண்டுள்ளது அறியப்படுகிறது. இதன் மேல் மீத்தேன் மேகங்கள் உருள்கின்றன. அதன் கீழ் அம்மோனியா படிகங்கள் உறைந்திருக்கின்றன.

இந்த வியாழன் போன்ற கிரகம் அதன் சூரியனிடமிருந்து 467 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உருண்டு செல்கிறது. (நம் வியாழன், சூரியனிடமிருந்து சுமார் 778 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது)

ஒற்றுமை அத்தோடு நிற்பதில்லை. இந்த வியாழன் தன்னுடைய சூரியனை 6 பூமி வருடங்களுக்கு ஒருமுறை சுற்றுகிறது. நம் வியாழன் 12 வருடங்கள் எடுத்துக்கொள்கிறது.

இந்த கிரகம், நியூ சவுத்வேல்ஸ் ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஆங்க்லோ ஆஸ்திரேலியன் வான்நோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது பிரான்ஸில் நடந்த ஒரு அறிவியலாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் நம் சூரியக்குடும்பத்தைப் போன்றே பல சூரியக் குடும்பங்களும் இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், அது போன்ற ஒரு சூரியக்குடும்பத்தைக் கண்டறியமுடியவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட சூரியக்குடும்பங்கள் எல்லாமும் வெவ்வேறு மாதிரியானவையாக வித்தியாசமாக இருந்தன.

கண்டுபிடிக்கப்பட்ட வெளிசூரியக் கிரகங்கள் இதுவரை வாயு பிரம்மாண்டங்களாக நீள்வட்டப் பாதையில் சுழல்பவையாக இருந்தன. இதற்கும் சூரியனுக்கும் நடுவில் மனிதர்கள் வசிக்கக்கூடிய தட்பவெப்பம் உடைய கிரகங்களுக்கான வாய்ப்புகள் குறைவு.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள் இந்த வியாழன் போன்ற கிரகம் வட்டப்பாதையில் சுற்றுவதாகவும் இது போன்று மற்ற வியாழன் போன்ற கிரகங்களைக் கண்டறிய ஊக்குவிப்பதாகவும் உள்ளது.

இன்னும் முயன்று இந்த வியாழனின் பாதைக்குள் இருக்கும் பூமி போன்ற கிரகங்களைக் கண்டறிவதும் அதில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறிவதற்கும் பெரும் ஊக்குவிப்பதாகவும் இருக்கிறது.

Series Navigation