எல்லாவற்றுக்குமாய்…

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

எஸ் ரமேஷ்


காலமற்ற எழிலில் விளக்கு கம்பமொன்றைக் கண்டேன்
வேறெதையும் செய்யவொண்ணா தவிப்பில்
ஒவியம் புனையத் தகித்தது மனம்
குட்டி இளவரசனின் விளக்கேற்றுபவன்
மறித்தான் ஒரு சலனத்தில்
ஆள்புகா காடுகள் அனுப்பி வைத்த தாளும்
ஆதி மனிதன் மீட்டெடுத்த கரிக்கோலும்
எல்லையற்ற வெளியில் ஊடி உரசி
புணர உருக்கொண்டது ஓவியம்
‘வான்கோ வளர்த்தெடுத்த வடிவ ‘மென்றனர் நண்பர்கள்
குப்பைக் கூடைக்கு கர்பமாகிப் போனது முதல் ஓவியம்
யாருக்கும் எதையும் நினைவுறுத்தா மறு ஓவியமோ
பொம்மலாட்டக் கயிற்றின் ஒரு முனையை காட்டித்தர
இருள் மயங்கும் மறுமுனையில் சந்ருவும், அமராவதி சிற்பங்களும்
குப்பைக் கூடைக்குள் அடக்கம் செய்யப்பட்டது இம்முறையும் ஓவியம்…
நான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விளக்கு கம்பத்தைப் பார்த்திருக்க
பாவனைகளால் இருளில் தடவிடும் ஓவியங்கள்!
யாவற்றுக்கும் மேலாய்
எல்லாவற்றுக்குமாய் ஒளிர்ந்து கொண்டு விளக்கு.

subramesh@hotmail.com

Series Navigation