எலக்ட்ரான் எமன்

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

கி. சீராளன்.


ரெண்டுபட்டு நின்றது உலகம்

பாயத் தயாராய் படைகள்

மூன்றாம் உலகப்போருக்கு

முன்னோட்டம்

தொடங்கிவிட்டது.

உயிர்களெல்லாம்

குப்பை காகிதங்களாய்

உருக்குலையப் போகிறது.

‘இறைவா,

மனித குலத்தைக் காப்பாற்று ‘

மண்டியிட்டு நின்றேன்.

‘நான் என்செய,

உங்கள் ஆயுதங்கள்,

உங்கள் விஞ்ஞானம்

உங்கள் சவக்குழி

எல்லாம் கைமீறியாயிற்று ‘

சொன்னார் கடவுள்.

‘நீயே சொல் ஒரு உபாயம்

உனக்கென மனம் இரங்கினேன் ‘

ஒதுங்கினார் எம்பெருமான்.

பட்டாசுக்கடை நெருப்பாய்

சிதறப் போகிறது வையம்,

லட்ச லட்சமாய்

துருப்புக்கள்

தற்கொலைக்குத் தயாராய்.

விஞ்ஞானிகள் குற்றவாளிக் கூண்டுகளில்,

என்ன உபாயம் சொல்வது….

ஒவ்வொரு பொத்தான் விசைக்கும்

ஆயிரமாயிரமாய்

சிதறப் போகும் உயிர்கள்.

பளிச்சிட்டதொரு யோசனை.

‘இறைவா,

இந்த மின்னணு

சாதனங்களை

செயலிழக்கச் செய்

போதும் ‘.

எலக்ட்ரான்களை மட்டும்

திரும்பப்பெற்றான் படைத்தவன்.

நின்று போனது

முதலில் செல்பேசிகளின் இரைச்சல்,

கணிணிகளின் கட்டமைப்பு,

செய்தி ஊடகங்களின் மொழி,

ஆயுதந்தாங்கிகளின் மூளை.

இயக்கம் மறந்துபோன தானியங்கிகள்,

நின்றுபோன வாகனங்கள்,

மிதிவண்டி மட்டும்

ஓடத் தகுந்ததாய்.

தொடர்புகள் விட்டுப்போய்

தனித்தனியே தளபதிகள்.

ஆணைகள் இன்றி

வீடுநோக்கி ஓடினர்

துப்பாக்கிமுனை வீரர்கள்.

இருள்வதற்கு முன்

மெழுகுவர்த்தி வாங்கப் போனேன்.

விடுதலைக் காற்று தவழ்ந்தது

அமைதி சூழ்ந்தது,

காலம்

எடிசனுக்கு முன்னால்

புரண்டு படுத்தது.

punnagaithozhan@yahoo.com

Series Navigation