எய்ட்ஸ் நோயைக்கட்டுப்படுத்த விபச்சாரத்தை சட்டப்படியான ஒரு தொழிலாக மாற்றுங்கள்!

This entry is part [part not set] of 12 in the series 20001112_Issue

மோகன்


விபச்சாரத்தை சட்டரீதியான ஒரு தொழிலாக மாற்றினால், பெருமளவு எய்ட்ஸ் போன்ற பாலுறவு நோய்கள் கட்டுப்படுத்தப்படலாம் என்று நான் கருதுவதன் விளைவு இந்தக் கட்டுரை.

விபச்சாரம் சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டால், விபச்சாரிகள் அரசாங்கத்தில் பதிவு செய்து கொள்வதும், இலவசமாக மருத்துவ உதவி பெறுவதும், இறுதிக்காலத்தில் பென்ஷன் போன்ற உதவிப்பணம் பெறுவதும் நிச்சயமாகும்.

விபச்சாரிகளிடம் செல்லும் மனிதர்களும், மருத்துவ ஆலோசனை பெறுவதும், ஆணுறைகளை அணிந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுவதும் நடக்கும்.

தொழிலில் இருக்கும் விபச்சாரிகள் மாதம் ஒரு முறையாவது மருத்துவ சோதனை செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்படுவதும் நடக்கும்.

விபச்சாரத்தை சட்டப்படியான ஒரு தொழிலாக அங்கீகரிப்பது என்பது நம் நாட்டில் இடதுசாரிகளாலும், வலதுசாரிகளாலும், காந்தீயவாதிகளாலும், காந்தீய எதிர்ப்புவாதிகளாலும், போலீஸாலும், குற்றவாளிகளாலும் அனைவராலும் எதிர்க்கப்படும் ஒரே விஷயம். இது ஒரு பக்கமெனில் விபசாரம் , இதைத் தேடிப் போகிறவர்களுக்கு வடிகால் என்பதால், சமூகத்தில் பிற பெண்மணிகள் தைரியமாய் நடமாடுகிறார்கள் என்றும் சிலர் சொல்வதுண்டு.

விபச்சாரம் பலகாரணங்களுக்காக நம் நாட்டில் எதிர்க்கப்படுகிறது.

1. இது பழங்காலத்திய பொட்டுக்கட்டும் தேவதாசி வழக்குமுறைக்கு புதிய பெயர் சூட்டுவது என்று சிலர் எதிர்க்கிறார்கள்.

தேவதாசி முறையில் பலநேரங்களில் தேவதாசியாகும் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக அந்தத் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டது தான் முக்கியமான எதிர்ப்பு விஷயமே தவிர, ஒரு பெண் தேவதாசியாகிறேன் என்று தானாக முன்வந்தால் அதில் யாருக்கும் எந்தவிதமான எதிர்ப்பும் இருக்கவேண்டிய அவசியமில்லை.

இன்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் பலபேர் ஏமாற்றப்பட்டு, கட்டாயப்படுத்தப்பட்டு, சினிமா ஆசையால் சென்னைக்கு ஓடிவந்து இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

விபச்சாரம் சட்டரீதியான தொழிலாக மாறினால், இவ்வாறு கட்டாயப்படுத்தப்படுவது குறையும். கட்டாயப்படுத்துவது கடுமையான தண்டனைக்குறிய குற்றமாக்கப்படவேண்டும்.

விபச்சார விடுதிகள் சட்டப்படியாக பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும் என்றும் அவைகள் அங்கு பணிபுரியும் மனிதர்களுக்கு சரியான ஊதியமும் பஞ்சப்படியும் பென்ஷனும் அளிக்கப்படவேண்டும் என்றும் சட்டப்படியாகும். இதனால் முதுமையில் பெண்கள் பாதுகாப்பான வாழ்வு வாழவும் ஏதுவாகும்.

2. விபச்சாரம் என்ற தொழிலை அங்கீகரிக்காவிட்டால் அது அதிகமாவது தவிர்க்கப்படும் என்று சிலர் வாதிடுகிறார்கள்.

விபச்சாரம் ஆரம்பகாலத்திலிருந்து பல விதங்களில் பல தோற்றங்களில் இருந்து வரும் ஒரு வழக்கம். இது இந்தியா உலக பொருளாதாரத்தில் இணையும் இந்த காலத்தில் இன்னும் அதிகமாகத்தான் வழி இருக்கிறதே தவிர குறைய வழி இல்லை.

உலக மக்கள் அனைவரும் வியாபார நிமித்தமாக இந்தியாவரும் வேளை, உலக வியாதிகளையும் இங்கு கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போகப்போகிறார்கள். இன்று இந்தியாவில் 3.5 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. எனவே நாம் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடப்போவதில்லை. இருப்பதை அங்கீகரிப்பது அதை ஊக்குவிப்பதாகாது. அது ஒரு தொழில். எந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும், மருத்துவ உதவியும், தொழில் பாதுகாப்பும், அதற்கான வரைமுறைகளை உருவாக்கித் தருவதும் சமூகத்தின், சமூகம் தனக்கு உதவி செய்ய உருவாக்கி வைத்திருக்கும் அரசாங்கத்தின் கடமை. பம்பாயில் காமாட்டிபுராவிலும், கிராண்ட் ரோடிலும் இது தொழிலாகத் தான் நடைபெற்று வருகிறது. ஆனால் இது தொழில் என்ற அங்கீகாரம் பெறாததால் , தாதாக்களின் கையிலும், பெரும் போக்கிரிகளின் கையிலும் சிக்கியுள்ளது. செக்ஸ் தொழிலாளர்கள் தேவை முடிந்தவுடன் அவர்கள் சுத்தமாகத் தூக்கியெறியப் படுகிறார்கள். அவர்களுக்கு பென்ஷன் , பிராவிடெண்ட் ஃபண்ட் போன்ற வசதிகள் இல்லாமல் அவர்கள் வயதான காலத்தில் மிகவும் சிரமப் படுகிறார்கள். அவர்களுக்கு இது போன்ற பாதுகாப்புக் கிடைத்தால் அவர்களின் வாரிசுகள் இந்தத் தொழிலுக்கு வருவதும் தவிர்க்கப் படலாம்.

3. விபச்சாரம் என்பது ஒரு கெட்ட வழக்கம். போதைபொருள் எல்லோரும் உபயோகிக்கிறார்கள் என்று அதை உபயோகிப்பதை சட்டரீதியாக ஆக்கமுடியாது என்று சிலர் வாதிக்கிறார்கள்..

விபச்சாரம் என்பது போதைப்பொருள் உபயோகம் போன்றதல்ல. சாராயம் குடிப்பதைக்கூட இதனோடு ஒப்பிடமுடியாது. மனக்கட்டுப்பாடும் உடல் கட்டுப்பாடும் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. சாராயமும், போதைப்பொருளும் வெளிப்பொருள்கள். உடலாசை என்பது மனிதனின் கூடப்பிறந்தது.

சாராயம் குடிப்பது, போதைப்பொருள் உபயோகம் என்பதை இதனோடு குழப்பி பிரச்னையை பெரிதாக்கி ஒழுக்க சீர்கேடு என்று பேச அவசியமில்லை. சாராயமும் போதைப்பொருளும் கொழுப்பெடுத்து செய்வது. இது வடிகால். அதிகம் அடக்கப்பட்ட ஆசைகள் மனிதரை மேலும் சீர்கெட வைக்குமே ஒழிய திருத்தாது.

4. பெரும்பாலான விபச்சாரத்தொழிலில் ஈடுபடுபவர்கள், நடைமுறைவாழ்க்கையில் விபச்சாரி என்ற பெயரோடு நடமாடுவதில்லை. இதுபோல பதிவு செய்துகொள்ள வேண்டுமென்றால் பெரும்பாலான விபச்சாரிகள் பதிவு செய்துகொள்ள முன்னுக்கு வரமாட்டார்கள். இது நிரந்தர பதிவேட்டில் தன் பெயர் வந்துவிடும் என்ற பயம், பின்னால் எந்தகாலத்திலும் சாதாரண வாழ்க்கை வாழ இயலாது என்ற பயமும் இவ்வாறு பதிவு செய்துகொள்வதை தடுக்கும். இரண்டாவது இவ்வாறு பதிவு செய்துகொண்டால் நாம் வருமான வரி கட்ட வேண்டிவரும் என்ற பயமும் இதனால் வர வாய்ப்புண்டு.

இன்றைக்கு சாதாரண கடை கண்ணிவைத்திருப்போருக்கும் கூட இந்த பயம் இருக்கிறது. வரி கட்டவேண்டிவரும் என்பதால் பதிவு செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். இதனால் அரசாங்க அதிகாரிகளிடம் லஞ்சம் ஊழல்தான் அதிகமாகுமே தவிர, அதிகாரிகளின் மிரட்டல்தான் அதிகமாகுமே தவிர குறைய வழியில்லை.

கடை கண்ணி வைத்திருப்பவர்களின் பிரச்னை வேறுமாதிரியானதென்றால் விபச்சாரிகளின் பிரச்னை வேறுமாதிரியானது. எனவே விபச்சாரிகள் பதிவு செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும், விபச்சாரிகள் தங்களைப் பற்றி விளம்பரம் செய்து கொள்ளலாம் என்றும், விபச்சார விடுதி (அரசாங்கம் ஒதுக்கி வைத்துள்ள இடங்களில்) நடத்தலாம் என்றும் அனுமதித்தாலே, பெருமளவு பிரச்னைகள் குறைய வாய்ப்புண்டு. பதிவு செய்வது சட்ட ரீதியாக அவர்கள் உரிமைகளைப் பாதுகாக்கத் தானே தவிர , பதிவேடு ரகசியமாய்த் தான் இருக்க வெண்டும். அப்படி ரகசியமாய் இது இருக்குமெனில் அது இந்தப் பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும்.

இவ்வாறு விபச்சாரத்தை சட்டரீதியான தொழிலாக மாற்றினால், விபச்சாரிகளும் பயமின்றி, சமூகத்திடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் உதவி கோரிப் பெற ஏதுவாகும். இன்று விபச்சாரிகள் தைரியமாக உதவி பெற முடியாமல் இருக்கிறது. இதனால் விபச்சாரிகள் எங்கிருந்தோ வரும் ஒரு வியாதியை எங்கெங்கொ பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

எய்ட்ஸ் பரவுவது பாலுறவு மூலம் மட்டும் அல்ல. எய்ட்ஸ் நோய் கொண்ட ஒருவர் சவரம் செய்த பிளேடை மற்றவர் பயன்படுத்தினாலும் இது வரும். விபத்துகாலத்தில் மற்ற ஒருவரின் இரத்தம் இன்னொருவருக்குக் கொடுக்கப்படுகிறது. இதன் மூலமும் எய்ட்ஸ் வரும். நான் பாலுறவில் கட்டுப்பாடானவன் என்று மத்தியதர குடும்பத்தினர்கள் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். இன்னும் என்ன என்னவெல்லாம் இடைப்பட்டு வியாதிகள் பரவும் என்பது நாம் இன்னும் அறியாதது. வருமுன் காப்பதே அறிவு.

முழுக்க முழுக்க எய்ட்ஸ் போன்ற பாலுறவு நோய்களை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாக இருக்கலாம். ஆனால், விபச்சாரத்தை சட்டரீதியானதாக ஆக்குவதன் மூலம் குறைக்கலாம் என்றால் அதை முயற்சித்துப் பார்க்க அஞ்சக்கூடாது.

இந்தத் தொழிலில் ஏற்கனவே, விருப்பமில்லாமலோ விரும்பியோ ஈடுபடும் பெண்கள் வேறு தொழிலைச் சுதந்திரத்துடன் தேடவும் இது வழி வகுக்கும். கல்வி பெற முயன்றால் அதற்கும் இதனால் வசதி கிடைக்கும். இவர்களைக் காப்பாற்ற நினைக்கும் தன்னார்வக் குழுக்களும் தெளிவான அடையாளத்துடன் இவர்களுக்குச் சரியான முறையில் உதவி புரிய இது ஏதுவாகும்.

Series Navigation

author

மோகன்

மோகன்

Similar Posts