என் மகள் N. மாலதி – (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 1

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

லலிதா



1950ம் ஆண்டு19 நாள் திங்கள் கிழமையன்று என் மகள் மாலதி, மாலை ஆறுமணிக்குப் பிறந்தாள். எங்கள் குடும்பத்தில் பாட்டியின் பெயர் தான் பேத்திக்கு வைப்பது வழக்கம். எனவே எங்கள் மாமியாரின் பெயர் வைத்தோம், வராஹ லட்சுமி, கோமதி என்று.

குழந்தையை கூப்பிட வேறு பெயர் வைக்கலாமென்று எண்ணும் போது என் தங்ககள் வைஜயந்திமாலா என்று வைப்போம் என்றனர். அப்போது வைஜயந்திமாலா படம் வாழ்க்கை ஓடும் சமயம். என் தாயார் தேவ லோகத்து புஷ்பம் மாலதி என்பது. கோபிகைப் பெண்களில் ஒருத்தி மாலதி என்பவள் எனவே, சினிமா பெயர் வேண்டாம் மாலதி என்று வைப்போம் என்றார். பிறகு எல்லோருமே மாலா மாலா என்றே அழைக்க ஆரம்பித்தோம்.

என் தாத்தா ஜாதகம் எழுதுவார். குழந்தை லக்ன சந்திப்பில் பிறந்திருக்கிறாளா என்ற சந்தேகம் இருக்கிறது. ஒன்பது நாள் தாண்டட்டும், பிறகு ஜாதகம் எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டார். அதே போல ஒன்பதாவது நாள் வயிறு உப்பி, குழந்தை ஒரே அழுகை. பிறகு பாட்டிமார் வைத்தியம் விளக் கெண்ணெயை வெற்றிலையில் தடவி, விளக்கில் சூடு காட்டி, ஒத்தடம் கொடுத்து, வெந்நீர் புகட்டி என்று ஏதேதோ செய்து குழந்தை தூங்கினாள்.

பிறகு அவளுக்கு அதிகமாக நோய் என்று வரவில்லை. சின்னக்குழந்தையாய் இருப்பாள். நல்ல சிவப்பாயிருப்பாள். அதிகம் பேச மாட்டாள். தனியாகவே விளையாடுவாள். தொந்தரவு செய்யமாட்டாள். மிகவும் குறைவாகத்தான் சாப்பிடுவாள். காரம் கூடாது. பருப்பு சாதம் , தயிர் சாதம், உப்புமா பிடிக்கும். இனிப்புக்கூட அதிகம் சாப்பிட மாட்டாள்.

சிறுவயது முதலே அவளுக்கு ஆடைகளில் விருப்பம் அதிகம். எந்தக் கலரும் பொருத்தமாக இருக்கும். நீலக்கலர் கவுனில் அவள் நடந்து வந்தது இன்னமும் என் கண் முன்னால் தெளிவாகத் தெரிகிறது. நீந்தி, தவழ்ந்து என்று எதுவும் செய்யவில்லை. உட்கார்ந்து, தானே பிடித்து எழுந்து தானே நடக்க ஆரம்பித்தாள் இரண்டு வயதில் தான் நன்றாகப் பேசினாள்.

மழலை அதிகம் கிடையாது. அதிகம் பேச மாட்டாள். நாலாவது வயதில் அருகிலிருந்த ஸ்கூலில் சேர்த்தோம். விஜயதசமியில். அவளது இரண்டாவது வயதில் நாங்கள் பனாரஸ் போனோம். என் தங்கைக்கு அங்கு விவாகம் நடந்தது. அப்போது, அவள் தந்தையுடன் கங்கையில் குளிப்பாள். அவருக்கு நன்றாக நீந்தத் தெரியும். மாலாவும் கூடப்போய் குளித்துவிட்டு வருவாள். நல்ல கோடை காலமானதால் எத்தனை முறை குளித்தாலும் அலுக்காது.

பசி எடுத்த பிறகுதான் தந்தையும், மகளும் வீடு திரும்புவார்கள். எப்போதுமே அப்பா பெண்தான் அவள். அவர் சொன்னால் கேட்டுக் கொள்வாள். யாரிடமுமே எதிர்த்துப் பேச மாட்டாள். இரண்டு தாத்தா, பாட்டிகளிடமும் அத்தை, சித்திகளிடமும் மிகவும் பிரியமாக பழகுவாள்.

பள்ளிக்கூடம் போக ரொம்பவும் படுத்துவாள். அழுது, அழுது ஜுரமே வந்து விடும். கொண்டுபோய் விட்டுவிட்டு அழுவது தாங்காமல் திரும்ப அழைத்து வருவோம். முதல் நாள் இரவே நாளை ஸ்கூல் லீவு என்பாள். சரி போக வேண்டாம் என்றால்தான் தூங்குவாள். என்னை அம்மா என்று கூப்பிட மாட்டாள். என் தங்கைகளைப்போல லலிதா என்றுதான் கூப்பிடுவாள்.
‘லலிதா ஸ்கூலுக்குப்போகணுமா? என்று கேட்டபடியே காலையில் எழுவாள். பல் தேய்க்க, குளிக்க, டிபன் சாப்பிட எல்லாவற்றிற்கும் நேரமாக்குவாள். மணி ஆகிவிட்டால் போக வேண்டாம் என்று யாராவது சொல்லுவார்களா என்று எதிர்பார்ப்பாள்.

ஞாயிற்றுக் கிழமை என்றால், குஷி. ஸ்கூல் போக வேண்டாம். அப்பாவும் ஆபீஸ் போகவேண்டாம். பொம்மை பிஸ்கட் வேண்டுமென்று குதித்துக் கொண்டு போய் வாங்கி வருவாள். குதிரையைத் திங்கட்டுமா? காக்காயைத் திங்கட்டுமா என்று சொல்லி சாப்பிடுவாள். 56 ஆம் வருடம், இரண்டாம் வகுப்பில், மாலாவை, திருவல்லிக்கேணி, பெல்ஸ்ரோட் கார்ப்பரேஷன் பள்ளியில் சேர்த்தோம். அப்போது கூட பரீட்சை எழுதி பேப்பரை வீட்டிற்கு எடுத்து வந்து விட்டாள். உடனே ஓடிப்போய் டீச்சரிடம் கொடுத்து விட்டேன். ஏதோ விழா என்று குழந்தைகளைக் கூட்டிப்போனார்கள் பள்ளியில். இரவு எட்டு மணி ஆகியும் குழந்தைகள் வரவில்லை. எல்லோருமே தவித்துப் போய்விட்டோம். பிறகு குழந்தைகள் வாடித் துவண்டு வந்தார்கள். டிரைவருக்கு உடல் நலமில்லாமல் போய் விட்டதால், வேறு டிரைவர் ஏற்பாடு செய்ய நேரமாகி விட்டதாம்.

இரண்டாம் வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்த பிறகுதான் மாலாவுக்கு அதிக மார்க் எடுக்க வேண்டும், ராங்க் எடுக்க வேண்டும் என்பது புரிய ஆரம்பித்தது. பிறகு ஜுரம் என்றால் கூட லீவு எடுக்க மாட்டாள். நேரம் தப்பமாட்டடள். பாடங்களை உடனே படித்து எழுதித் தானே தயார்படுத்திக் கொள்வாள். கல்யாணம் ஆகும் வரை தலை வாரிப் பின்னிவிடுவது நான்தான். தானே பின்னிக்கொள்ள வராது.

ஒன்பது வயதில் தானாகவே சிறுவர் நிகழ்ச்சிக்காக ஆல் இண்டியா ரேடியோவுக்கு விண்ணப்பித்து, ரேடியோ அண்ணா என்ற ஐய்யாசாமி என்பவரிடம் சேர்ந்தாள். சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை போய்வருவாள். குரல் டெஸ்டில் பாஸாகி, நிகழ்ச்சி நிரல் படிக்க அவளுக்கு இடம் கிடைத்தது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அந்த மாதம் நான்கு சனிக்கிழமை என்றால், நூறு ரூபாய்க்கு செக் வரும். ஐந்து சனிக்கிழமை என்றால் நூற்றி இருபத்தி ஐந்து ரூபாய்க்கு செக்கும் வரும். தந்தையின் பெயரில் தருவார்கள். அதை பாங்கில் மாற்றிக் கொள்வோம்.
அப்போது ஒருமுறை குழந்தைகள் பாட்டு ஒன்று எடுக்க ஒரு சினிமாவில், ரேடியோவில் குழந்தைகள் நிகழ்ச்சியில் பாடும் சிறுவர்களைப் பாடவைத்து எடுத்தார்கள். அதில் மாலாவும் பாடி இருப்பது இப்போது கேட்டாலும், எனக்கு அவளின் குரல் தனியாக ஒலிப்பது போல தோன்றும்.

“ ஆத்தோரம் மணலெடுத்து,
அழகழகா வீடு கட்டி,
தோட்டமிட்டுச் செடிவளர்த்து
ஜோராகக் குடியிருப்போம்.

பத்துவிரல் மோதிரமாம்
பவழமணி மாலைகளாம்,
எத்தனையோ கனவுகளாம்
எவ்வளவோ ஆசைகளாம்.”

என்ற பாடல் அது. குழந்தைகளுக்கு இனிப்பும் பழச்சாறும் கொடுத்தார்கள் என்று பெருமையோடு கூறினாள். அந்தப் பாட்டு பிரசித்தமான போது நானும் பெருமையாக சொல்லிக் கொள்வது உண்டு.

திருவல்லிக்கேணி பெல்ஸ்ரோடு லைப்ரரியில் மாலா படிக்காத புத்தகம் இல்லை. எப்போது அங்கேயே இருப்பாள். பாடங்களை ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்த பின், அவள் படிப்பதிலேயே நேரத்தை செலவு செய்வாள். குறிப்பிட்டாற்போல ஒரிரண்டு தோழிகள்தான் அவளுக்கு.

2

ஜார்ஜ் டவுனில் மறை மலை படிப்பகத்திலும் அபூர்வமான புத்தகங்களை மாலா படித்தாள். தமிழில் அவளுக்கு ஆர்வம் அதிகம். அவள் தந்தையின் விருப்பத்திற்கு மதிப்பளித்து விஞ்ஞானம் படிக்கச் சேர்ந்தாள். தன் விருப்பம் என்று இருந்தால் தமிழே படித்திருப்பாள். பள்ளியின் படிக்கும் போதே கதைப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு வருடம் தவறாமல் முதல் பரிசுகள் பெற்றாள். மூன்றாவது மொழியாக ஹிந்தி படித்து அதிலும் பரிசுகள் பெற்றிருக்கிறாள். தனியார் பத்திரிகை ஒன்றில் (அம்மா என்று பெயர்) அட்டைப் படத்திற்கு கதை எழுதி முதல் பரிசு பெற்றாள். வெள்ளிக்கோப்பையும் வந்தது.

ஜார்ஜ் டவுனில் காளிகாம்பாள் கோவிலில் ‘கதிர்காமன் திருப்புகழ் சபை’ என்று குழந்தைகளுக்கு திருப்புகழ் கற்பித்து வருகிறார்கள். அதில் சேர்ந்து குழந்தை களுடன் நடந்த போட்டிகளில் நிறைய பரிசுகள் வாங்கி இருக்கிறாள். அதே போல, பாட்டியுடன் தொடர்ந்து சிவானந்த விஜயலட்சுமி, அனந்தராம தீட்சதர் ஆகியோரின் கதாகாலஷேபங்களுக்கும் சென்று வந்ததில் புராணங்களில் ஈடுபாடு அதிகம் ஏற்பட்டது.

பள்ளியில் நடந்த விழாவில் “காரைக்கால் அம்மையார்” கதையை வெகு சுவையாக சொன்னாள். மேடையில் முன் அனுபவம் இல்லாமல் சொன்னால் கூட அது மிகவும் நன்றாக இருந்தது என்று மற்றவர்கள் சொன்னதாக கூறினாள். கண்ணதாசன் கவிதைகளைப் படித்து எனக்கும் விளக்குவாள்.

நான் கதைகளைப் பாடிப்பேன். கவிதை பாஷை புரியாது. அவள் சொல்லுவதை அனுபவிக்க, நானும் படிக்கத் தொடங்கினேன். காலேஜ் மாகசீன்களில் ‘நிர்மலாவின் முத்துமாலை’ என்ற கதையை பிரிடென்சி காலேஜ், 1967,68 தாவர இயல் மாணவியாக எழுதி இருந்தாள். எனக்கு பெருமையாக இருந்தது.

அவள் கல்லூரியில் படிக்க ஆரம்பித்த பிறகு, படிக்க வீட்டில் வசதி போதாது என்றோ, மற்ற பெண்களைப் போல உடைகள் வாங்கித் தரவில்லை என்றோ வேறு தேவைகள் பற்றியோ எதுவுமே கேட்டதில்லை. சிக்கமான வாழ்க்கைக்கே பழகி விட்டாள்.

புருஷன் வீட்டில்தான் காபி, டீ குடிக்கப் பழகினாள். செருப்பு கூட அதிகம் தேயாது. அப்பாவிடமிருக்கும் பேனாதான் பிடிக்கும். நன்றாக எழுதும் என்று சொல்லிப் பிடுங்கிக் கொள்வாள். பி.எஸ்.ஸி முடித்தபிறகு எம்.எஸ்.ஸியில் சேர்க்க வேண்டும் என்பது தந்தையின் ஆசை. இரண்டு முறை மெடிகல் சேர்க்க முயற்சித்தும் கிடைக்கவில்லை. எனக்கோ பெண்ணைப் படிக்க வைத்துவிட்டு நாளை கல்யாணம் செய்ய படித்த மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே என்ற பயம்.

அப்போது என் மாமனார் சொன்னார், மாலா! உன் அப்பா ஏழை. படிக்க ஆசை இருக்கிறது என்றால் படி. ஆனால், படித்த பையன்தான் வேண்டும் என்று சொல்லக் கூடாது. அப்பா பார்க்கும் பையனை நீ மணமுடிக்க வேண்டும் என்றார். மாலாவும் ஒப்புக்கொண்டாள்.

எம்.எஸ்.ஸி அதே காலேஜில் கிடைத்தது. படித்து முடிக்கும் முன்பே திருமணம் கூடி வந்தது. நிச்சயமான பிறகு ரிசல்ட் வந்தது. தம்பதிகளாக கான்வகேஷனுக்கு சென்றனர். அதை போட்டோவும் எடுத்துக் கொண்டனர். அவர் ரயில்வே அதிகாரி. பெங்களூரில் குடித்தனம் வரும்போதே மாலா போஸ்டலில் விண்ணப்பம் செய்திருந்தாள். உடனே வேலையும் கிடைத்தது.

என் மகள் ஒரு தோழி போல எனக்கு. தான் பார்த்த சினிமாக் கதைகளும், தான் படித்த கதைகளைப் பற்றியும் விவரமாகச் சொல்வாள். பின்னாளில் யாரிடமோ சொல்லும் போதுதான் ‘என் அம்மா பாவம் எப்போதும் வேலை, வேலை என்று எதையோ செய்து நாளைக் கழிக்கிறாள். அவளால் கிரியேட்டிவாக எத்தனையோ செய்ய முடியும் என்று புரிந்து கொள்ளாமல் இருக்கிறாள் என்று சொன்னாள். என்ன செய்யச் சொல்கிறாள் என்று எனக்குத்தான் புரியவில்லை.

படித்த படிப்புக்கான வேலை செய்தால் ஒரு லெக்சரராகச் சேர்ந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் எண்ணினோம். ரயில்வேயில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மாற்றல் வரும், போஸ்டல் என்றால் மாற்றிக் கொள்ள வசதியாக இருக்கும் என்று கிளார்க் வேலையில் சேர்ந்துவிட்டாள். புதிய மனிதர்கள் சீதோஷ்ணநிலையே மாறுபட்ட புதிய ஊர், படிக்காத பழகாத வேலை, அடுப்படி, பழகாத சமையல் என்று பெங்களூர் மாலாவை பயமுறுத்தி விட்டிருக்கும். எதுவுமே எங்களிடம் சொல்லவில்லை.

மைசூரில் டிரெயினிங் என்று இரண்டு மாதம் ஹாஸ்டலில் தங்கியபோதே சற்றுக் கன்னடம் கற்றுக் கொண்டாள். பிறகு தமிழ் உறவினகள் அக்கப்பக்கத்தில் இருந்த குவாட்டர்ஸில் குடி வந்த போது சின்ன மாமியார் உடனிருந்து கவனித்துக் கொண்டதால் சற்று எங்களுக்கு அழுத்தமில்லமல் இருந்தது. கருத்தரித்த பிறகு அவரின் உறவினர்கள் மாறிமாறி உதவிக்கு வந்து போனார்கள். எட்டாம் மாதம் சென்னைக்கு வந்து வளைகாப்பு, சீமந்தம் செய்த பின், ஒன்பதாம் மாதமே பெண் குழந்தையைப் பெற்றாள். குழந்தைக்கு மூன்றாம் மாதமே திரும்ப பெங்களூர் சென்று வேலைக்குச் சென்று விட்டாள். உதவிக்கு குழந்தயைப் பார்த்துக்கொள்ள என்று ஒருவர் மாற்றி ஒருவர் ஓரகத்தி, நாத்தனார், சின்ன மாமியார், தாயாகிய நான் என்று சென்று வந்தோம்.

குழந்தைக்கு ஏழெட்டு மாதம் ஆன பின்னால் ,சென்னையிலேயே ஓரகத்திக் மைத்துனரிடம் குழந்தையை விட்டு விட்டு, பெங்களூரில் வேலை செய்து வந்தாள். சனி, ஞாயிறு சென்னை வந்து போவது என்ற வழக்கம் கொண்டாள். மறுபடி ஏழெட்டு மாதம் ஆனபோது தன்னுடனேயே குழந்தையை வைத்துக் கொள்ளுவதே நல்லது என்று திரும்ப அழைத்து வந்து வேலைக்கு ஆள் வைத்துக் கொண்டு குழந்தைய விட்டுச் செல்வது என்று ஆரம்பித்தாள்.

மறுபடியும் பெரிய குவாட்டெர்ஸ் கிடைத்து. அதில் குடியேற வேண்டி வந்த போது தனியாக குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுச் செல்ல முடியவில்லை. ஸ்கூலில் சேர்க்கவும் வேண்டி வந்ததால் கொண்டுபோய் விட்டு கூட்டிக் கொண்டு வருவது போன்றவற்றையும் செய்து கொண்டு வேலைக்கும் சென்று வருவது என்பது மிகவும் கஷ்டமாயிற்று. எங்களுக்கும் (மாலாவின் தாய், தந்தையாகிய) சென்னையை விட்டு வருவது என்பது நல்லது என்று தோன்றிய தால் பெங்களூர் வந்து மாலாவுடன் தங்குவது என்று தீர்மானித்து வந்தது குழந்தைக்கு உதவியாற்று.

3

பெற்றோரை தன்னுடன் கூட்டி வந்துவிட்டாளே என்று தன் புருஷன் வீட்டார் எண்ணக்கூடாது என்று எண்ணி அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொண்டு சற்றும் அவர்கள் மரியாதை குறையாதபடி செய்ய வேண்டிய விஷயம், கலந்து கொள்ள வேண்டிய தருணம், பேசவேண்டிய சமயம் என்று நிதானமாக நடந்து கொண்டாள். நல்ல பெயரும் எடுத்தாள்.

1976-77 இருக்கும். காஷ்மீர் போய்வர ஒரு குழுவாக ஏற்பாடு செய்தார்கள். மாலா ஜூனியர் அக்கௌண்ட்ஸ் பரீட்சை எழுதத் தீர்மானித்திருந்தாள். பரீட்சையும் காஷ்மீர் கிளம்புதலும் ஒரே சமயத்தில் வந்த போது, மாலாவின் அப்பா பரீட்சையை எழுது அடுத்த ஆண்டு காஷ்மீர் செல்லலாம் என்றார். கணவனோ, அடுத்த முறை பரீட்சையை எழுது காஷ்மீர் வா என்றார். மாலா எதுவும் தீர்மானிக்க வில்லை. ஆபீஸ் சென்று வந்தாள். படிக்கக் கூட லீவு எடுக்க வில்லை.

திடீரென காஷ்மீர் ஏற்பாடு ரத்தாகி விட்டது. மூன்றே நாட்களில் பரீட்சை எழுதிவிட்டு புருஷனும் மனைவுயுமாக தனிப்பட்ட முறையில் காஷ்மீர் போய் வந்தார்கள்.

பரீட்சையும் பாஸாகி விட்டது. திருப்பதி போய் வந்தார்கள். தனது முப்பதாவது வயதில் மாலா கிருஷ்ணராஜபுரத்தில் ஜூனியர் அக்கவுண்ட் ஆபீஸராக பதவியில் சேர்ந்தாள்.

அங்கு பாக்டரியில் வேலை செய்பவர்கள் கூட பழகுவாள். அவள் மனதில் பதிந்த சில விஷயங்களை யஷ்வந்த்பூரிலிருந்து கிருஷ்ணராஜபுரம் வரை கம்பனி பஸ் பிரயாணம்பற்றி ஒரு நாவல் 230 பக்கத்தில் ஒரே மதத்தில் எழுதியிருக்கிறாள். டி.வி.யில் மெகாத் தொடராக வர அந்நாவல் நன்றாக இருக்கும்.

அவள் மகள் சாந்தினிக்கு என்ன ஆசையென்றாலும் உடனே செய்து தர மாலா மறுக்கவே மாட்டாள். குழந்தையும் மிகச் சமர்த்து. தாத்தா, பாட்டியிடம் ஒட்டிக் கொண்டு பெற்றோரை அதிகம் தொந்தரவு செய்ய மாட்டாள். சின்ன விஷயங்களை அம்மாவிடம் சொல்வாள். பெரிய விஷங்களுக்கு அப்பாவிடம் போவாள்.

கிருஷ்ணராஜபுரத்தில் எல்லோரும் சேர்ந்து வீட்டு மனை வாங்குகிறார்கள் என்று தானும் ஒரு இடம் வாங்கிப் போட்டாள். குவாட்டெர்ஸில் வசிப்பதால் வீட்டு வாடகை அலவன்ஸ் கிடைப்பதில்லை. சொந்த வீட்டில் வசித்தால் கிடைக்கும் என்று தெரிந்தது. உடனே கடன் வாங்கி சிறியதாக ஒரு வீடு கட்டிவிட வேண்டும் என்று கணவனும் மனைவியும் தீர்மானித்து ஒரு காண்ட்ராக்டரிடம் பேசினார்கள். முதலில் சுலபமாகப் பேசிய காண்டிராக்டர், வீட்டையும் முழுவதும் பெரியதாக கட்ட வைத்து, தண்ணீர் எடுக்க கிணறு என்று தொடங்கி போர்வெல் போட ஆரம்பித்து அதில் தண்ணீர் வராமல் 25 ஆயிரம் நஷ்டமான போது இருவரும் அதிர்ந்து போனார்கள்.

மறுபடி பிரார்த்தனைகள் வேண்டுதல்கள் செய்து கொண்டு கார்ஷெட் என்று தீர்மானித்திருந்த இடத்தில் கிணறு தோண்ட, நல்ல தண்ணீர் கிடைத்தது. எப்படி எப்படியோ நகைகளை விற்று, கடன்களை வாங்கி, வீடு என்று நுழைந்துவிட்ட பிறகு சாந்தினிக்கு உடல் நலம் சரியில்லாமல் போகத் துவங்கியது. டாக்டர் அங்கிருக்கும் பார்த்தினீயச் செடிகள் காற்று அவளுக்கு அலர்ஜீ என்றார். என்ன செய்வது?

காயத்ரி நகரிலொரு சிறிய போர்ஷன் பார்த்து சாந்தினியுடன் மாலாவும் கணவரும் அங்கு வசித்தனர். வாரம் ஒரு முறை வந்து எங்களை சொந்த வீட்டில் பார்த்துவிட்டு சொல்வார்கள். அலைச்சல்தான். பெரிய வீட்டைக் கட்டிவிட்டு வசிக்க முடியவில்லை. தனியாக இருந்தால் அக்கம் பக்கம் வீடுகள் வராததால் வாடகைக்கு விடுவதும் கஷ்டம். அத்துடன் சாமான்கள் அதிகமானதால் பெரிய வீடு பார்க்க வடகை அட்வான்ஸ் அதிகமாகும்.

சாந்தினிக்கு மெடிகல் சீட் கிடைத்தது எங்களுக்கு மிகப் பெரிய வெற்றியாகத் தோன்றியது. மாலாவும் மிகவும் பெருமைப்பட்டாள். 91ல் அவள் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்து அவரை ஆஸ்பத்திர்யில் சேர்த்தபோது மறுபடியும் எங்களைத் தனியாக கே. ஆர். புரம் அனுப்ப சம்மதிக்கவில்லை. ஆஸ்பத்திரி அருகிலேயே வீடு பர்த்துக் கொண்டு எல்லோரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தோம்.

சாந்தினிக்கு படிக்க வசதி வேண்டும்; மற்றும் சாமான்களும் அதிகமாகி விட்டதால் சுப்ரமணிய நகரில் பெரிய வீடாகப் பார்த்து வசதியாக இருக்க அங்கு குடியேறினோம். சாந்தினி டாக்டர் படிப்புக்கு சேர்ந்த பிறகு மாலா பத்திரிகையிலெழுத ஆரம்பித்தாள். முதன்முதலில் படிப்பைப் பற்றி கட்டுரை எழுதி மங்கையர்மலரில் வெளிவந்தது. பிறகு கல்கியில் ‘ஆயிரங்காலத்துப் பயிர்’ என்றொரு சிறுகதை வந்தது. அதற்குப்பின் கவிதைகள் நிறைய எழுதுவாள். கட்டுரைகள் அடுத்தடுத்து மங்கயர் மலரில் வெளிவந்தன. ‘கதைகள் நிறைய வருகிறது. கட்டுரைகள் எழுதுவது சிலரேதான், நீங்கள் எழுதுங்கள் நான் பிரசுரம் செய்கிறேன்’ என்று அப்போதைய ஆசிரியர் மஞ்சுளா ரமேஷ் உற்சாகப் படுத்துவார்.

பெரிய வீட்டுக்கு வந்த பிறகுதான் ‘வீடு’ என்ற கட்டுரை எழுதினாள் அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெங்குவின் வெளியீடாக அம்பையின் தொகுப்பில் வாந்துள்ளது. அவள் எழுதுவதைப்பற்றி அவள் அப்பாவிற்கும், கணவருக்கும் மிக்க மகிழ்ச்சி. எனக்கோ கேட்கவே வேண்டாம். 95ல் தனது 74 வது வயதில் மாலாவின் தந்தை மறைந்துவிட்டார். பெண்கள் கருமம் செய்வதில்லை என்பதை மறுத்து, கேரளாவில் ஒரு இடத்தில் பெண்களும் கருமம் செய்கிறார்கள் என்று அறிந்து அங்கு சென்று மாலாவே கருமமும் செய்து விட்டு வந்தாள்.

பல பெரிய மனிதர்களைப் பேட்டி எடுத்து எழுதி வந்தாள். ரயில்வே பெண் அதிகாரி விஜயலட்சுமியச் சந்தித்து எழுதினாள். விமர்சகர் சுப்புடுவைச் சந்தித்து எழுதினாள். கடம் வாசிக்கும் சுகன்யா ராமகோபாலையும் பேட்டி எடுத்திருக்கிறாள்.
கணவன் ரிடையர் ஆகுமுன் மகளுக்குத் திருமணம் செய்விக்க ஆசைப்பட்டு, டாக்டர் பையனாகத் தேடி 96ம் வருடம் திருமணமும் செய்வித்தாள். ஆறு மாதம் ஆனபின்னால்தான் அவளின் டாக்டர் படிப்பு முடிந்தது. பின் ஜூனில் டில்லியில் பெண் குடித்தனம் தொடங்கினாள். சாந்தினி டெல்லி போனபின் கணவர் ரிடையர் ஆனபின் மாலாவின் ஆபீஸ் குவாட்டர்ஸ் காவல் பைரபெந்திராவில் கிடத்து வீடு மாற்றப்பட்டது.
4

மாலா எந்த ஒரு விஷயத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றாலும் அதைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு, குறிப்புகள் எடுத்துக் கொண்டுதான் எழுதுவாள். ஐந்தாம் வகுப்பில் குரு கோவிந்த்சிங் பற்றி எழுதச் சொன்னார்கள். லைப்பரரியிலிருந்து அவர்பற்றிய புத்தகங்கள் படித்து, குறிப்பு எடுத்துக் கொண்டு கட்டுரை எழுதி, பரிசும் வாங்கினாள்.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னால் பெரிய புராணம் பற்றி கட்டுரை எழுதச் சொல்லி ஏதோ பத்திரிகையில் போட்டி வைத்திருந்தார்கள். ஒருமாதம் முழுவது பிரயாசைப்பட்டு படித்து மிகப் பெரிய கட்டுரை எழுதினாள். பரிசு வரவில்லை. ஆனால் வீடு பூராவும் பெரிய புராணம் புத்தகங்கள். எனக்கும் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. மனதிற்கு சந்தோஷம்.

திருப்பாவை உபன்யாசம் செய்வாள். பலருடைய புத்தகங்களை வாங்கி வித்தியாசங்களை உள்வாங்கி கிரஹிப்பாள். வைணவம் பற்றித் தெரிந்து கொள்வாள். பழைய சம்பிரதாயங்கள் பற்றி விசாரிப்பாள். ஒரு அடி செய்யுளுக்கு நான்கு பக்கங்கள் எழுதுகிறாளே என்று தோன்றும்.கிளைக்கதைகளுடன் ஒரு மணிநேரம் வரை சொல்லுவாள்.

சந்தியாவந்தனம் செய்வது முக்கியம் என்பது பற்றி பூணூல் போட்ட பையனுக்கு உபன்யாசம் செய்ய, ஒரு நண்பரின் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தனர். மாலா போய் சந்தியாவந்தனத்தின் மகிமை பற்றிச் சொன்னபோது, நாடகம், கச்சேரி என்று வைத்து எல்லோரும் போர் அடிப்பார்கள். நீங்கள் உபயோகமான நல்ல விஷயத்தைச் சொல்லச் சொல்கிறீர்கள் . வளரும் பிள்ளைகளுக்கு நல்ல பாடம், பெற்றோருக்கும் குழந்தை நல்லபடி செய்து நல்ல புத்தியையும், ஆயுளையும் பெற ஊக்குவிக்க உதவும் என்றார்கள்.

சந்தியாவந்தனம் பற்றி மாலாவின் கட்டுரை ஒரு பத்திரிகையில் கூட வந்தது. சின்ன வயதில் ‘அயிகிரி நந்தினி’ மனப்பாடம் செய்து அனந்தராம தீட்சதர் கையால் பஞ்சரத்னமாலை என்ற புத்தகம் பரிசாக வாங்கியிருக்கிறாள். அந்த ஆசீர்வாதம்தான், அவளுக்கு தெய்வநம்பிக்கையும், சிறப்பான தெய்வ வழிபாடும் வந்திருக்கிறது என்று தோன்றும். ஒரே மாதத்தில் ராகத்துடன் சௌந்தய லஹரி கற்றாள். சென்னையில் சிறு வயதில் கற்ற திருப்புகழ் வகுப்பிலேயே அபிராமி அந்தாதி, கந்தர் அனுபூதி, கந்தசஷ்டிக்கவசம், கந்தரலங்காரம் போன்றவை மனப்பாடம் செய்துவிட்டாள். பஸ் ஸ்டாண்டில் நிற்கும்போதும் தனி வழிக்குத் துணை வேலன் திருப் பாதங்களே என்றுதான் அவள் வாய் முணுமுணுக்கும்.

ஆபீஸ் டிரெயினிங் என்று திருவனந்தபுரம், கல்கத்தா, டில்லி, மைசூர் பதின¨ந்து நாள், இரண்டு மாதம், என்று போய் வருவாள். அங்கங்கு கிடைக்கும் ஆகாரம் வசதியை அனுசரித்து நடந்து கொள்வாள். தினமும் போன் செய்து வீட்டு நிலவரம் பற்றி அறிந்து கொள்வாள்.

ஒருவருடம் ஒன்றரை வருடம் டும்கூரில் வேலை செய்து வந்தாள். தினமும் பஸ்ஸிலும், டிரெயினிலும் போய் போய் வருவாள். காலை ஏழரை மணிக்குப் புறப்பட்டால், இரவு எட்டு மணிக்கு வீடு திரும்புவாள். டிரெயினிலேயே கதை எழுதினேன், கட்டுரை எழுதினேன் என்பாள்.

‘வரிக்குதிரை’ என்ற பெயரில் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டாள். அதற்கு ஸ்டேட் பாங்க் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது. லைப்ரரி ஆர்டரும் கிடைத்தது. கைச்செலவில்லாமல் போயிற்று.

‘தணல் கொடிப் பூக்கள்’ என்ற கவிதை தொகுப்பு வெளியிட்டாள். உடனேயே, ‘மரமல்லிகைகள்’ என்ற கவிதைத்தொகுப்பும் வெளி வந்தது. அவளின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று ‘அநாமதேயக் கரையில்’ என்று சந்தியா பதிப்பகம் பிரசுரம் செய்தது. எளிமையாக்கி உரை எழுதிய திருப்பாவையை ‘உயர் பாவை’ என்று வெளியிட்டதும் சந்தியா பதிப்பகம்தான். அவர்களுக்கு அந்த புத்தகங் களுக்கு லைப்ரரி ஆர்டர் கிடைத்துவிட்டது. அது மகிழ்ச்சியைத் தந்தது. மங்கையர் மலரில் ‘என் கணவர்’ என்று ஒரு நகைச்சுவைக் கதை எழுதி இருந்தாள். அதைப் பார்த்த கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம், அவர்கள் தயாரிக்கும் சின்னத்திரை சீரியல்களுக்கு எழுதித்தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ‘அல்லி தர்பார்’ ‘ரமணி- ரமணி’ ஆகிய சீரியல்களுக்கு சில பாகங்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறாள். அதில் அவள் பெயரும் இடம் பெற்றது திரையில். பிறகு ஐந்து நாட்கள் அரை மணி நேரம் வரும் தொடர் ஒன்றுக்கும் மாலா கதை எழுதிக் கொடுத்தாள். அது ’இரு முகங்கள்’ என்ற தலைப்பில் பாலசந்தர் டைரக்ஷ்னில் 5 நாட்கள் ராஜ் டி.வியில் வந்தது. எல்லாவற்றையும் ஒளிப்பதிவு செய்து வைத்திருக்கிறோம்.

தங்கர் பச்சான் எடுத்த அழகி திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதி பரிசு வங்கினாள். ஆயிரம் ரூபாயும், ஒரு வெள்ளி ஊஞ்சலில் நடுவில் விநாயகர், ஒரு புறம் லட்சுமி மற்றொரு புறம் சரஸ்வதி என்று ஆடும் நன்றாக இருக்கும். அதையும் தங்கர் பச்சானின் கைகளால் வாங்கினாள்.

நவராத்திரி கொலு வைக்க அவளுக்கு மிகவும் பிடிக்கும். அவள் மகள் சாந்தினிக்கும் பிடிக்கும். அவள் விளையாட்டு பொம்மையில் தான் தொடங்கினாள். பிறகு பாட்டியின் பழைய பொம்மைகள், திருவனந்த புரத்திலிருந்து கதக்களி நாட்டிய பொம்மைகள், ஜெய்பூர் நாட்டியசெட், ஸதாராவிலிருந்து சிவாஜி தர்பார், மதுரையிலிருந்து மீனாட்சி , பிள்ளையார் பட்டியிலிருந்து பிள்ளையார் என்று அந்தந்த இடங்களிலிருந்து பொம்மைகள் வாங்கி சேகரித்தாள். பத்து படிகள் வைக்க ஸ்டாண்ட் ஆர்டர் கொடுத்து ஸ்டீல் ஸ்டாண்ட் செய்து பத்திரிகை அடித்து சிநேகிதர்கள், உறவினர்கள் என்று எல்லோருக்கும் கொடுத்து பத்து நாட்களும் விதம்விதமாக தின்பண்டங்கள் செய்து என்று மிகவும் சந்தோஷப்படுவாள். வெள்ளிக்கிழமைகளில் சௌந்தர்ய லஹரி பிரதட்சனை செய்து நமஸ்காரங்கள் செய்து தாம்பூலங்கள் கொடுப்பாள்.

பெண் குழந்தைகளுக்கு மட்டுமே நவராத்திரியில் பரிசுகள் கொடுக்கப்படுவதால், ஆண் குழந்தைகள் வருந்துவார்கள் என்று அவர்களுக்கும் பேனா, பென்சில். விளையாட்டுப் பொருள்கள் வாங்கித்தருவாள். பெண்குழந்தைகளுக்கு மாலை, காதுத்தோடு, வலையல், மருதாணி, பாவாடை, சட்டை , கவுன் என்று எல்லாம் வாங்கிக் கொடுப்பாள். சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, ரவிக்கை என்று கொடுப்பாள். அவளுக்கு போனஸ் வந்ததென்றால் ஜாலியாக செலவு செய்வாள். ஆங்கில புதுவருடத்திற்கு குழந்தையாயிருக்கும் போது மகள் சாந்தினி நம் வீட்டிலும் ஸ்டார் கட்ட வேண்டும் என்றாள். எனவே வருடா வருடம், ஸ்டார்கட்டி கேக் வெட்டி புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடுவாள். புதுவருடப் பிறப்பன்று ஹோட்டலில் போய் அவர்களுக்கு பிடித்தமான் உணவு உண்பதும் வழக்கமாக் கொண்டிருந்தனர்.

5

மாலா கம்ப்யூட்டர் எப்போது கற்றாள் என்றே தெரியவில்லை. ஒருநாள் கம்ப்யூட்டர் வீட்டிற்கு வந்து சேர்ந்த்து, பிரிண்டருடன். அதில் அவள் வெகு இயல்பாக டைப் செய்து பத்திரிகைகளுக்கு விஷயங்களை அனுப்பினாள். நண்பர்களுக்கும் அனுப்புவாள்.

ஸதாராவில் இருந்தபோது, தமிழ் பத்திரிகைகளைக் கம்ப்யூட்டரில் படித்து விடுவாள். முக்கியமானவற்றை என்னையும் படிக்கச் சொல்வாள். திண்ணையில் நிறைய கதைகள் கட்டுரைகள் எழுதியிருக்கிறாள். ஒரு முறை போட்டியில் அவள் கதைக்கு ரூபாய் 2000/- பரிசும் வந்தது.

அமுத்சுரபியிலும் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறாள். அவள் பேட்டியும் வந்தது. ஸதாராவிலிருந்தபோது ‘பெண்ணே நீ” பத்திரிகையில், தொடராக ஆறு மாதம் கட்டுரைகள், கதைகள் இலக்கியம் பற்றி எழுதி வந்தாள்.

பல இலக்கிய கூட்டங்களுக்கு மிகவும் சிரமப்பட்டுப் போய்வருவாள். ஆபீஸில் லீவு எடுப்பது கூட கஷ்டமாக இருக்கும். சதாராவிலிருந்தபோது பூனா போய் ரயிலேறுவதும் கஷ்டம், ரயிலில் ரிசர்வேஷன் கிடைப்பதும் கஷ்டம். திரும்பி வருவதும் கஷ்டம்.

ஆனாலும், ஆர்வத்தினால் சமாளித்துக் கொண்டு பாண்டிச்சேரி, சென்னை, ஹைதராபாத், பம்பாய் என்று பல கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறாள்.
ஒருமுறை இது போன்ற பிரயாணத்தின் போது பல பொருட்கள், சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் களவு போய் விட்டன. அதன் பின் பயணம் சற்றே குறையலாயிற்று. நகைகள் அணியவே பயமாகி விட்டது. (இந்த நிகழ்வின் போது மாலதியின் கழுத்தில அணிந்திருந்த பத்து சவரன் தாலி, (தாலி கல் வைத்து வேலைப்படுகளுடன் அழகாக இருக்கும்) அதுவும் போய்விட்டது.)

சதாராவில் அவளை எல்லோரும் ‘சி.ஏ.ஓ மேடம்’ என்று மரியாதையுடன் அழைப்பர். ஜி. எம் அவர்களே மாலா ஆபீஸ் வர போக கார் அனுப்புவார். வெளியில் லீவு நாட்களில் செல்லவும் வண்டி உண்டு.

அங்குள்ள தமிழ் மக்கள் மிக இனிமையாகப் பழகுவார்கள். மூன்று வருடங்கள் அங்கு வசித்தபோது பல அனுபவங்கள் கிடைத்தன. பண்டரீபுரம், கோல்ஹாப் பூர், சில ஜோதிர் லிங்கங்கள் தரிசிக்கப் போய் வந்தார்கள், மாலாவும் அவள் கணவரும். சீரடி, நாசிக், பஞ்சவடி போனார்கள். பக்கத்திலிருந்த மஹா பலேஸ்வரம் என்ற மலையிலும் மிக அற்புதமான இயற்கைக் காட்சிகள் கண்டோம்.

சதாரா போகுமுன்பே மாலாவின் கணவருக்கு ஒரு முறை வயிற்றில் ஆபரேஷன் ஆகியிருந்தது. சதாராவிலிருந்து சென்னை போயிருந்தபோது திடீரென்று வயிற்றில் வலி வந்து போன் செய்தார். மாலா பிலிம் பெஸ்டிவல் நடக்கும் போது அதில் கலந்து கொண்டு, படங்கள் பற்றி விமர்சனம் எழுதுவது வழக்கம். கணவரிடமிருந்து போன் வந்த போது கேரளாவின் பெஸ்டிவல் பார்க்க ரிசர்வ் செய்திருந்தாள். உடனே அதைக் கான்சல் செய்துவிட்டு •பிளைட் பிடித்து சென்னை சென்றாள். வயிற்றில் ஆபரேஷன் செய்ய வேண்டி வந்ததால் 3 மாதங் கள் லீவு எடுத்துக்கொண்டு அங்கேயே தங்கி அவள் கணவரைக் கவனித்துக் கொண்டாள். அவள் மகள் சாந்தினி அமெரிக்காவில் இருந்ததால் வர முடிய வில்லை.

மாலாவின் மைத்துனர்கள், நாத்தனார் எல்லோருமே சென்னை வாசிகள். அவர்கள் மிகவும் உதவியாக இருந்ததால் உடல் நலம் பெற்று இருவரும் திரும்பினார்கள். சங்கராந்தி சமயம் வயிற்றில் நெட் வைத்துத் தைத்திருந்தது விட்டு விட்டது. மறுபடியும் வலி ஏற்பட்டு மறுபடியும் இருவரும் •பிளைட்டில் சென்னை சென்றனர். அதே டாக்டரிடம் மறுபடியும் நெட்டைப் பிரித்து, திரும்ப நெட் வைத்துத் தைத்து, என்று ஆஸ்பத்திரியில் ஒரிரு மாதம் அவர். லீவு எடுத்தாள். பிறகு அவர் மாத்திரம் வாரத்தில் இரண்டு முறை செக்கப் என்று தங்கை வீட்டில் தங்கிப் பார்த்துக் கொண்டார். மாலா சதாராவில் வேலைக்குச் சென்றாள்.

அலைச்சலும் மன உளைச்சலும் மிகவும் வேதனை அளித்தது. மறுபடியும் அவள் கணவர் ஊர் திரும்பிய பிறகுதான் சமாதானம் ஆயிற்று. மாலா அவள் கணவர் இருவரும் மகளைக் காண அமெரிக்கா செல்ல ஏற்பாடு நடந்தது. மாலாவின் கணவர் பெங்களூரிலேயே பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்து கொண்டு விட்டார். தனக்கும் மாலா செய்து கொண்டாள். சுலபமாகக் கிடைத்து விட்டது.

Series Navigation